விடை இலச்சினை இட்ட படலம் | Chola King story Thiruvilaiyadal
விடை இலச்சினை இட்ட படலம் (Chola King story) இறைவனான சொக்கநாதர் தன்பக்தனான சோழனுக்காக திருகோவிலைத் திறந்து தரிசனம் தந்து மீண்டும் கோவிலை அடைத்து இடப முத்திரை இட்டதைப் பற்றிக் கூறுகிறது.
சொக்கநாதரைத் தரிக்க சோழனுக்கு ஏற்பட்ட ஆவல், இறைவனார் சோழனை அழைத்து சொக்கநாதரை தரிசிக்க செய்தது, திருகோவின்வாயிலில் இடபமுத்திரை இட்டது, அதனை பாண்டியனுக்கு அறிவித்தது ஆகியவை இதில் விளக்கப்பட்டுள்ளன.
விடை இலச்சினை இட்ட படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பத்து நான்காவது படலமாக அமைந்துள்ளது.
சோழனின் ஆவல்
குலபூடண பாண்டியன் மதுரையை ஆட்சி செய்த போது, காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு காடு வெட்டிய சோழன் என்னும் அரசன் சோழ நாட்டை ஆட்சி செய்தான்.
அடர்ந்த காடுகளை திருத்தி மக்கள் வசிக்கும் இடமாக மாற்றியதால் அவன் காடு வெட்டிய சோழன் என்று அழைக்கப்பட்டான். அவன் சிவபக்கதனாகத் திகழ்ந்தான்.
அவனுக்கு மதுரையில் அங்கயற்கண் அம்மையுடன் அருள்புரியும் சொக்கநாதரை வழிபட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
நாளுக்கு நாள் சோழனின் ஆவல் அதிகரித்துக் கொண்டே சென்றது.சொக்கநாதர் சோழனுக்கு தரிசனம் தரவிருப்பம் கொண்டார்.
ஒரு நாள் சோழனின் கனவில் சித்தரின் வடிவில் தோன்றிய சொக்கநாதர் “சோழனே நீ மாறுவேடம் கொண்டு யாருடைய துணையும் இன்றி மதுரை வந்து அங்கயற்கண் அம்மை உடனுறை சொக்கநாதரைத் வழிபாடு மேற்கொள்வாயாக” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
உடனே காடு வெட்டி சோழன் விழித்தெழுந்தான். பகைநாடான பாண்டிய நாட்டுக்கு எவ்வாறு சென்று சொக்கநாதரை வழிபடுவது என்று எண்ணிக் கொண்டிருந்த தனக்கு மாறுவேடத்தில் வருமாறு சித்தர் கூறியதை கேட்டு பெரும் மகிழ்ச்சி கொண்டான்.
அன்று இரவே மாறுவேடம் பூண்டு சொக்கநாதரையும், அங்கையற் கண்ணியையும் வழிபாடு மேற்கொள்ள ஆவலுடன் மதுரை நோக்கி புறப்பட்டான் சோழன்.
சோழன் சொக்கநாதரை வழிபடல்
சோழன் பல்வேறு நாடுகளையும், ஆறுகளையும், மலைகளையும் தாண்டி இறுதியில் மதுரை நகரின் வடக்கு எல்லையான வைகை ஆற்றினை அடைந்தான்.
அப்போது வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடியது. ஆதலால் சோழன் “பாண்டியன்தான் நம் பகைவன் என்று கருதினால், இவ்வைகையும் நம்மை சொக்கநாதரை வழிபட விடாமல் தடுத்து நம்மை பகைக்கிறதே” என்று எண்ணினான்.
அப்போது சொக்கநாதர் சித்தர் வடிவில் சோழன் இருக்கும் இடத்தை அடைந்தார். “வாருங்கள் நாம் இருவரும் வைகையைக் கடந்து திருகோவிலுக்குச் செல்லுவோம்” என்று சோழனை அழைத்தார்.
கனவில் கண்ட சித்தமூர்த்தி நேரில் வரக்கண்ட சோழன் ஆச்சர்யம் அடைந்தான். சித்தமூர்த்தி வைகையை நோக்க வைகையில் வெள்ளம் குறைந்தது. சோழன் பெருத்த ஆச்சர்யத்துடன் சித்தமூர்த்தியைப் பின் தொடர்ந்து சென்றான்.
சித்தமூர்த்தி வடக்கு மதில் வாயிலை திறந்து கொண்டு சோழனை உள்ளே அழைத்துச் சென்றார். திருக்கோவிலை அடைந்த சோழன் அங்கையற்கண் அம்மையையும், சொக்கநாதரையும் மனங்குளிர வழிபாடு மேற்கொண்டான்.
அவனுக்கு சொக்கநாதரைப் பிரியமனமில்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தான். சோழனை பார்த்த சித்தமூர்த்தி “சோழனே நீ இங்கிருப்பதை பாண்டியன் அறிந்தால் உனக்கு துன்பம் உண்டாகும். ஆதலால் நீ இப்போது காஞ்சியை நோக்கி உன்னுடைய பயணத்தை ஆரம்பிப்பது நல்லது” என்று கூறினார்.
பின்னர் சோழனை அழைத்துக் கொண்டு வடக்கு வாசல் வழியாக சென்று வைகையின் வடகரையை அடைந்தார். பின்னர் சோழனிடம் “உனக்கு நல்ல துணை கிடைக்கப் பெற்று செல்லக் கடவாய்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
பின்னர் திருகோவிலை அடைத்த சித்தமூர்த்தி வடக்கு வாயிற்கதவினை மூடி அதில் இடபக்குறியை இட்டு கோவிலினுள் புகுந்தார்.
பாண்டியன் உண்மையை அறிதல்
மறுநாள் காலையில் வடக்கு வாயிற்கதவில் இடப முத்திரையும், ஏனைய கதவுகளில் மீன் முத்திரையும் இருப்பதைக் கண்ட காவலர்கள் குலபூடண பாண்டியனிடம் இதுபற்றித் தெரிவித்தனர்.
இதனை அறிந்த குலபூடண பாண்டியன் சொக்கநாதரிடம் முறையிட்டு வேண்டினான்.
இரவில் குலபூடண பாண்டியனின் கனவில் தோன்றி சொக்கநாதர் “உன்னைப் போலவே காடுவெட்டிச் சோழனும் என்னுடைய பக்தன். அவன் எம்முடைய தரிசனம் வேண்டினான்.
அவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற மாறுவேடத்தில் அவனை வரச்செய்து திருக்கோவிலின் வடக்கு வாயிற்வழியின் மூலமாக உட்செல்லச் செய்து, வழிபாடு மேற்கொள்ளச் செய்து காஞ்சிக்கு திருப்பி அனுப்பினோம்.
இறுதியில் வடக்கு வாயிற்கதவிற்கு இடப இலச்சினை இட்டு மூடினோம். சோழனின் பக்தியை எடுத்துரைக்கவே இவ்வாறு செய்தோம்” என்று கூறினார்.
இதனைக் கேட்டதும் குலபூடண பாண்டியன் விழித்தெழுந்தான். இது சோமசுந்தரரின் திருவிளையாடல் என்று அனைவருக்கும் அறிவித்தான்.
பின்னர் தனது மகனான இராஜேந்திர பாண்டியனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு சிவப்பேறு பெற்றான்.
விடை இலச்சினை இட்ட படலம் கூறும் கருத்து
இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன் என்பதே விடை இலச்சினை இட்ட படலம் கூறும் கருத்தாகும்.