பலகை இட்ட படலம் | Paana pathirar story – Thiruvilaiyadal
பலகை இட்ட படலம் (Paana pathirar story) இறைவனான சொக்கநாதர் கடும் மழையிலும் யாழிசைத்து பாடிய பாணபத்திரனைப் பாராட்டி பொன்னலாகிய பலகையை பரிசளித்ததை விளக்குகிறது. பாணபத்திரனின் இசை வழிபாடு, இறைவனார் பாணபத்திரரை சோதிக்க விரும்பியது, கடும்மழையிலும் பாணபத்திரர் இசைவழிபாடு செய்தது, இறைவனார் அவருக்கு பொன்னினாலான பலகையை பரிசளித்தது ஆகியவை இப்படலத்தில் கூறப்பட்டுள்ளன.
பலகை இட்ட படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி மூன்றாவது படலமாக அமைந்துள்ளது.
பாணபத்திரரின் இசை சேவை
பாணபத்திரரின் வறுமையைப் போக்க இறைவனான சொக்கநாதர் சேரமானுக்கு திரைச்சீலையில் (திருமுகம்) பாடல் எழுதி கொடுத்து சேரமானிடம் பொருள் பெற்றுத் தந்தார்.
அதன் பின்னர் பாணபத்திரர் பகலில் வழிபாடு நடத்தியதோடு இரவிலும் திருகோவிலுக்குச் சென்று இசைபாடி வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டார்.
எந்த நிகழ்வுகள் நடந்தாலும் திருகோவிலுக்கு இரவில் சென்று வழிபடுவதை பாணபத்திரர் நிறுத்தவில்லை. இறைவனார் பாணபத்திரரின் இசைசேவையை உலகுக்கு எடுத்துக்காட்ட விரும்பினார்.
ஒருநாள் பாணபத்திரர் இரவு நேர வழிபாட்டிற்கு செல்லும் நேரத்தில் புயல் காற்று வீசியது. இடி மின்னலுடன் கடுமையாக மழை பெய்தது.
பாணபத்திரரோ கடும் மழையையும் பொருட்படுத்தாது இரவு வழிபாட்டிற்கு திருகோவிலுக்குச் சென்றார்.
மழையில் நனைந்ததால் குளிரால் பாணபத்திரரின் உடல் நடுங்கியது. பாணபத்திரர் மழை, இடி மின்னல் புயல் காற்று என எதனையும் பொருட்படுத்தாது யாழினை மீட்டி பாடத் துவங்கினார். அவரது பாடல் எலும்பினையும் உருக்கும் வண்ணம் இருந்தது.
பலகை இடுதல்
கடும் சூழலிலும் விடாது முயற்சி செய்து இசை பாடிய பாணபத்திரரின் இசையினால் கவரப்பட்ட இறைவனார் “பாணபத்திரா, இதோ இந்த பலகை உனக்கே உரியது. இதன் மேல் நின்று பாடுக” என்று வானிலே திருவாக்கு அருளினார்.
வானத்திலிருந்து பொன்னலாகிய நவமணிகள் பதித்த பலகை ஒன்று பாணபத்திரரின் கையினை அடைந்தது.
உடனே பாணபத்திரனும் இறைவனின் ஆணையின்படி பலகையின் மீது நின்று பாடினார். வழிபாட்டினை முடித்துக் கொண்டு அவர் பலகையுடன் வீட்டிற்கு திரும்பினார்.
பொழுது விடிந்ததும் இறைவனார் பாணபத்திரருக்கு பரிசளித்த பலகை பற்றி அறிந்த வரகுண பாண்டியன் மிக்க மிகழ்ச்சி கொண்டான்.
அவன் பாணபத்திரருக்கும், திருக்கோவிலுக்கும் பல பொருட்களை பரிசாகக் கொடுத்தான்.
அந்நாள் முதல் பாணபத்திரர் திருகோவிலுக்குச் சென்று நான்கு காலங்களிலும் பாடி மகிழ்ந்து வாழ்ந்து வந்தார். சிலகாலம் சென்ற பின் வரகுண பாண்டியன் சிவப்பேறு பெற்றான்.
பலகை இட்ட படலம் கூறும் கருத்து
எத்தகைய கடும் சூழலிலும் விடாமுயற்சி செய்து செயல்களை நேர்த்தியாக செய்பவர்கள் அதற்கான பலனை கட்டாயம் பெறுவார்கள் என்பதே பலகை இட்ட படலம் கூறும் கருத்தாகும்.