கண்ணன் கதைகள் – 48
ராஸக்ரீடை
குருவாயூரப்பன் கதைகள்
கோபியர்கள் மிகுந்த ஆனந்தமாக யமுனைக்கரையில் கண்ணனுடன் விளையாடினார்கள். தலையில் மயில் பீலியுடனும், காதுகளில் மீன் குண்டலங்களும், கழுத்தில் முத்து மாலைகளும், வனமாலையும் அசைய, பீதாம்பரமும், ஒட்டியாணமும், ரத்தினங்கள் இழைக்கப்பட்ட கொலுசுகளும் அணிந்து, வாசனைப் பொடிகள் முதலியவற்றால் மணம் வீசும் சரீரத்துடன், அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணன் அனைவரின் மனம் மயங்கும்படியான அழகுடன் விளங்கினான். அப்போதே, மார்புக்கச்சைகளை இறுக்கிக் கட்டிக்கொண்டு, தங்களை அணிகலன்களால் அலங்கரித்துக் கொண்டு கோபியர்கள் அவனைச் சுற்றி வட்டமாய் நின்றார்கள். கிருஷ்ணனும் அப்பெண்களுக்கிடையில், (இரு கோபிகைகளுக்கிடையில் ஒரு கிருஷ்ணன், இரு கிருஷ்ணனுக்கு இடையில் ஒரு கோபிகை) நின்று கொண்டு, நர்த்தனம் செய்துகொண்டு, தனது யை ஆரம்பித்தான்.
நாரதர் கிருஷ்ணனுடைய ராஸக்ரீடையின் அழகைக் கூறக் கேட்ட தேவர்கள், தேவ மங்கையருடன் வேகமாய் வந்து ஆகாயத்தில் சூழ்ந்து நின்றனர். கண்ணனின் புல்லாங்குழலிலிருந்து இனிய ஓசை உண்டானது. அழகிய ஸ்வரங்களுடன், சிறப்பான ராகங்களுடன், மனோகரமான ஆலாபனங்களுடன் இனிமையான இசை உண்டானது. இசைக்கு ஏற்றவாறு அவனுடைய கால்கள் தாளமிட்டன. கைவளைகள் ஒலியெழுப்பின. இடுப்பிலுள்ள ஆடைகள் அசைய, தாமரை போன்ற கைகளைத் தோளில் வைத்துக் கொண்டிருக்கும் இந்த ராஸக்ரீடையின் காட்சி மிக்க மனோகரமாய் இருந்தது. இனிமையான இசையை மேல் ஸ்தாயியில் பாடிக்கொண்டு, பின்னணிக் கொத்து என்ற நடனம் ஆரம்பித்தது. நடனத்தின் அசைவின்போது, அனைவரும் அணிந்திருந்த ஆபரணங்கள் இடம் மாறி நகர்ந்து மிக அழகாய் இருந்தது. தேவர்கள் பூமாரி பொழிந்து, மனம் மயங்கினர். தேவமங்கையரும் மனம் மயங்கினர். வியர்த்துக் களைத்த அழகான கோபிகை ஒருத்தி, சோர்வுடன் நடனம் செய்ய முடியாமல், கிருஷ்ணனுடைய தோளைப் பிடித்துக் கொண்டு தொங்கினாள். முன் நெற்றிக்குழல்கள் கலைந்த ஒரு கோபிகை மயிர்க்கூச்சலுடன், சந்தன மணம் வீசும் அவனுடைய கைகளை முத்தமிட்டாள். அதிர்ஷ்டசாலியான ஒரு கோபிகை, குண்டலங்கள் ஆடும் தன்னுடைய கன்னத்தை, அவனுடைய கன்னங்களுடன் இணைத்து, அவன் வாயிலிருந்து தாம்பூலத்தைப் பெற்று, அதை உறிந்து சுவைத்தாள். அப்பெண்கள், நர்த்தனத்தின் போது, பல வித சுகமான நிலைகளை அடைந்தார்கள். பாட்டு நின்றது. வாத்தியங்களும் ஓய்ந்தன. பிரும்மானந்த ரஸத்தில் மூழ்கிய கோபிகைகள் மட்டும் ஆடிக்கொண்டிருந்தனர். அவர்கள், மேலாடை கலைந்ததையோ, ரவிக்கை அவிழ்வதையோ, கச்சத்தின் முடிச்சு அவிழ்வதையோ அறியவில்லை. வானில் நட்சத்திரக் கூட்டமும் நின்று விட்டன. கிருஷ்ணன், அகில உலகங்களையும் பிரும்மானந்த ரஸத்தில் மூழ்கச் செய்து, தனது ராஸலீலையை முடித்தான். நடனமாடியதால் உண்டான வியர்வைத் துளிகளுடன் கோபிகைகள் மனம் மயங்கி நின்றிருந்தனர். அங்கு, எத்தனை கோபிகைகள் இருந்தார்களோ அத்தனை கிருஷ்ணனாக வந்து அவர்களைக் களிக்கச் செய்தான்.
மிகவும் அழகான சரீரமுள்ளவர்களும், சோர்வை அடைந்தவர்களுமான அப்பெண்களோடு விளையாடினான். அக்காட்டில், மந்தமாருதம் வீசும் போது வந்த பூக்களின் வாசனையால் அப்பெண்கள் மயங்கி நின்றார்கள். யோகிகள் மட்டுமே அடையக்கூடிய பரமானந்த வெள்ளத்தில் அப்பெண்கள் மூழ்கினார்கள். இந்த கோபிகைகள் மிகுந்த பேறு பெற்றவர்கள், இவர்களால் நாம் ராஸக்ரீடையைக் காணும் பாக்கியம் பெற்றவர்கள் ஆனோம் என்று ப்ரம்மா, பரமசிவன், தேவர்கள் யாவரும் அதிசயித்தார்கள்.