திருமுகம் கொடுத்த படலம் | Panna pathar story in thiruvilaiyadal

திருமுகம் கொடுத்த படலம் (Panna Pathar Story) இறைவனான சொக்கநாதர் பாணபத்திரனின் வறுமையைப் போக்க சேரமானுக்கு திருமுகம் எழுதி பாணபத்திரனுக்கு சேரமான் பொருளுதவி செய்ததை பற்றிக் கூறுகிறது.

திருமுகம் என்பது திரைச்சீலையில் (துணியில்) பாட்டு வடிவில் எழுதிய கடிதம் ஆகும்.
பாணபத்திரருக்கு ஏற்பட்ட வறுமை, இறைவனார் வறுமையைப் போக்குதல், பாணபத்திரரிடம் திருமுகத்தை இறைவனார் கொடுத்தது, திருமுகத்தினைப் பார்த்து சேரமான் பாணபத்திரரின் வறுமையைப் போக்குதல் உள்ளிட்டவை இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன.
திருமுகம் கொடுத்த படலம் திருவிளையாடல் புராணத்தில் கூடல் காண்டத்தில் நாற்பத்தி இரண்டாவது படலமாக அமைந்துள்ளது. திருமுகம் கொடுத்த படலம் விறகு விற்ற படலத்தின் தொடர்ச்சி ஆகும்.

பாணபத்திரருக்கு ஏற்பட்ட வறுமை
சொக்கநாதரின் திருவருளால் தற்பெருமை மிக்க ஏகநாதனை புறமுதுகிட்டு ஓடச் செய்து பாணபத்திரர் வரகுண பாண்டியனின் அவையிலிருந்து வெளியேறி சொக்கநாதர் முன்னர் மட்டும் யாழிசைத்து பாடி வந்தார்.
வேறுஏதும் வேலை செய்யாததால் பாணபத்திரரின் செல்வவளம் குன்றி உணவுக்கே மிகவும் வருந்தினார்.
இறைவனான சொக்கநாதர் பாணபத்திரரின்மீது இரக்கம் கொண்டு வரகுணபாண்டியனின் கருவூலத்திலிருந்து நாள்தோறும் பொற்காசு, மணிகள், பொன்னாலான கைபிடிகள உள்ளிட்ட விலைவுயர்ந்த பொருட்களிலிருந்து ஏதேனும் ஒன்றைக் கவர்ந்து கொடுத்து வந்தார்.
பாணபத்திரரும் அதனைப் பெற்று உருக்கி விற்று அதனைக் கொண்டு தன்னுடைய வறுமையைப் போக்கி மற்றவர்களுக்கும் உதவி வந்தார்.
நாளடைவில் இறைவனார் பாண்டியனின் கருவூலத்திலிருந்து எடுத்து பாணபத்திரருக்கு பரிசளிப்பதை நிறுத்தி விட்டார். இதனால் பாணபத்திரர் மீண்டும் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தார்.
இந்நிலையில் பாணபத்திரரின் இறைபக்தியை உலகுக்கு எடுத்துக்காட்ட திருவுள்ளம் கொண்டார்.

திருமுகம் கொடுத்தல்
இறைவனார் மதிமலி புரிசை என்னும் தொடக்கத்தை உடைய திருமுகப்பாசுரம் ஒன்றை எழுதிக் பாணபத்திரர் தூங்கும்போது அவனருகில் வைத்துவிட்டு “பாணபத்திரா, உன்னுடைய வறுமையை நீக்கும் பொருட்டு வரகுணனின் கருவூலத்திலிருந்து பொருட்களைக் கவர்ந்து உமக்குப் பரிசளித்தோம்.
பாண்டியன் இச்செய்தியை அறிந்தால் அது தவறாகிப் போகிவிடும். களவுபோனதை பாண்டியன் கண்டறிந்தால் பொன்னறை காவலர்களுக்கு தண்டனை கிடைக்கும்.
ஆதலால் சேரமானுக்கு ஓலை ஒன்றினைத் தருகின்றோம். அவன் நம்மிடம் அன்பு பூண்டவன். நீ அதனை அவனிடம் அளித்து வேண்டும் பொருள் பெறுவாயாக.” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

துயில் நீங்கி எழுந்த பாணபத்திரர் ஆடிப்பாடி மகிழ்ந்தார். தான் பெற்ற பாசுரத்தை எடுத்துக் கொண்டு இறைவனை வணங்கி மலை நாட்டினை நோக்கிப் பயணித்தார்.
அங்கே திருவிஞ்சைக்களம் என்ற திருத்தலத்தில் தண்ணீர்ப்பந்தலில் தங்கினார்.
பின்னர் இறைவனார் சேர மன்னான பெருமான் நாயனாரின் கனவில் தோன்றி “மன்னனே, நம் அடியவன் பாணபத்திரன் உன்னைக் கண்டு பொருள்பெறும் நோக்கில், நம்முடைய திருமுகம் பெற்று மலைநாட்டினை அடைந்துள்ளான். அவனுக்கு வேண்டும் பொருள் கொடுத்தனுப்புக” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இதனைக் கேட்ட சேரமன்னர் விழித்தெழுத்து தன்னுடைய வீரர்களை நாலாபுறமும் பாணபத்திரரைத் தேடுமாறு அனுப்பினார். அவர்கள் பாணபத்திரரைக் கண்டறிந்து சேரமானுக்கு அறிவித்தனர்.

உடனே சேரமன்னர் புறப்பட்டு சென்று பாணபத்திரரை எதிர்கொண்டு அழைத்தார். பாணபத்திரர் சேரமானிடம் இறைவன் கொடுத்த திருமுகத்தைக் கொடுத்தார். சேரமான் அதனை வாங்கி கண்களில் ஒற்றி தலைமேல் வைத்துக் கூத்தாடினார்.
பின்னர் பாணபத்திரரை யானையின் மீது அமரச்செய்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.
அரண்மனையில் பலவித உபச்சாரங்கள் செய்து கருவூலத்தைத் திறந்து காட்டி “எம் பெருமானுடைய தொண்டனே, இப்பொருள்கள் யாவற்றையும் நீ கைக்கொண்டு செல்லுக” என்று கூறினார்.

உடனே பாணபாத்திரர் சேரனை வணங்கி “நீர் தருவதே போதும்” என்று கூறினான்.
உடனே சேரமான் பொருளை வாரிவாரி வழங்கினார். பாணபத்திரர் அவற்றை ஏற்க மறுத்து தனக்கு வேண்டியவற்றை மட்டும் எடுத்துக் கொண்டார்.
சேரனை வணங்கி தன்நாட்டினை அடைந்து சோமசுந்தரக்கடவுளை வணங்கினார். தான் கொண்டு வந்த பொருட்களை வறியவர்களுக்கும், நலிந்தவர்களுக்கும் கொடுத்து தன் சுற்றத்தாரோடு இனிது வாழ்திருந்தார்.

திருமுகம் கொடுத்த படலம் கூறும் கருத்து
தன்னலமற்ற இறைவனின் தொண்டர்கள் இறைவனால் காப்பாற்றப்படுவர் என்பதே திருமுகம் கொடுத்த படலம் கூறும் கருத்தாகும்.