கண்ணன் கதைகள் – 24
திட நம்பிக்கை
ஒரு கிராமத்தில் திருவிழா. அங்கிருந்த கிருஷ்ணன் கோவிலில், ‘கண்ணன் பெருமை’ என்ற தலைப்பில் உபன்யாசம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அப்போது திருடன் ஒருவன் ஊருக்குள் வந்தான். அனைவரும் உபன்யாசம் கேட்கச் சென்றுவிட்டதால், திருட ரொம்ப சௌகர்யமாகப் போய்விட்டது. ஒவ்வொரு வீடாகத் தேடியும் விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் சிக்கவில்லை. சரி, உபன்யாசத்தில் நிறைய கும்பல் இருக்கும், அதனால் அங்கு சென்றால் பணம் திருடலாம் என்று நினைத்து, கதை நடக்கும் இடத்திற்குச் சென்றான்.
உபன்யாசகர், கண்ணனுடைய பெருமையைக் கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். பொன்னில் கோர்த்த ஐம்படைத்தாலி, அழகிய ரத்தினங்களாலும், வைரங்களாலும் ஆன ஆபரணங்கள், ஹாரம், வளை, தங்க அரைஞாண், மாணிக்கமும், முத்தும் கோர்த்து செய்யப்பட்ட வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை அணிந்து கண்ணன் வரும் அழகை வர்ணித்துக் கொண்டிருந்தார்.
திருடனுக்கு ஏக சந்தோஷம். அவனுக்குக் கண்ணனைப் பற்றியெல்லாம் தெரியாது. சரியான பணக்காரப் பையன் போலிருக்கிறது என்று நினைத்து, கதை முடிந்ததும் அவரிடம் அவனைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று பொறுமையாகக் காத்திருந்தான்.
கதை முடிந்தது, கும்பல் கலைந்தது, உபன்யாசகரிடம் சென்று, “அந்தப் பையன் யார், எங்கிருக்கிறான், சொல்லாவிட்டால் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டினான். கண்ணனைப் பற்றிக் கூறியதை உண்மையென்று நினைத்துக் கேட்கிறான் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. சட்டென்று, தூரத்தில் தெரிந்த பூஞ்சோலையைக் காட்டி, அங்கேதான் அவன் விளையாட வருவான் என்று சொன்னார்.
திருடனும் அவர் சொன்னது உண்மையென்று நம்பி, அந்தப் பூஞ்சோலைக்குச் சென்று கண்ணனிடம் திருடுவதற்காகக் காத்திருந்தான். அவன் நினைவு முழுவதும் கண்ணனைப் பற்றியே இருந்தது. சிறிது நேரத்தில் கண்ணன் வந்தான். உபன்யாசகர் சொன்னபடி எல்லா நகைகளும் போட்டுக் கொண்டிருந்தான். சின்னப் பையனாக இருந்ததால், மிரட்டாமல்,”குழந்தையே! உன் நகையெல்லாம் எனக்குத் தருகிறாயா?” எனக் கேட்டான். குழந்தையும் அனைத்தையும் கழற்றிக் கொடுத்தது!!!! எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு உபன்யாசகரை தேடிச் சென்று நன்றி சொன்னான். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. “நீங்கள் சொன்னமாதிரியே அந்தப் பணக்காரப் பையன் ரொம்ப அழகு, கேட்டவுடன் எல்லா நகையையும் கழற்றிக் கொடுத்துவிட்டான்” என்று சொன்னான்.
அவரால் நம்ப முடியவில்லை. “உண்மையாகச் சொல்கிறாயா?” என்று கேட்டார். “வாருங்கள், காட்டுகிறேன்” என்று கூறி, அவரை அழைத்துக் கொண்டு அந்தப் பூஞ்சோலைக்குச் சென்றான். அவரிடம், “அங்கே பாருங்கள்! அவன் விளையாடிக் கொண்டிருக்கிறான்” என்று காட்டினான். அவருக்கு ஒன்றும் தெரியவில்லை, ஆனால் சிரிப்பு மட்டும் கேட்டது.
இத்தனை நாள் கண்ணனின் திவ்ய ரூபத்தைக் கதையாகச் சொல்லும் எனக்கு அவன் தெரியவில்லையே! இந்தத் திருடனுக்குக் காட்சி அளித்திருக்கிறானே! என்று கண்ணீர் விட்டார். வருந்தும் அவரைக் கண்டு கண்ணன் கருணை கொண்டான். “அந்தத் திருடனின் கையைப் பிடித்துக்கொள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அவ்விதமே பிடித்துக் கொண்டு நோக்கினார். கண்ணன் அவர் கண்களுக்குத் தெரிந்தான். உபன்யாசகர், “உன் கதையைச் சொல்லும் எனக்குக் காட்சி தராமல், திருடனுடைய கையைப் பிடித்ததும் காட்சி அளிக்கிறாயே! கண்ணா, இது நியாயமா?” என்று கண்ணனிடம் கேட்டார்.
அப்போது மாயக்கண்ணன்,” நீ இவ்வளவு காலம் என் கதையைக் கூறினாலும், நான் வருவேன் என்று நம்பவில்லை, ஆனால், இந்தத் திருடன் நான் வருவேன் என்று திடமாக நம்பினான். அதனால் அவன்முன் வந்தேன். இறை சிந்தனையில் பற்றுடன், இதயத்தின் ஆழத்திலிருந்து மிகுந்த நம்பிக்கையுடன் பிரார்த்தித்தால், என்னைத் தரிசிப்பது உறுதி” என்று கூறிவிட்டு மறைந்தான். திருடனும், திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு கிருஷ்ண பக்தன் ஆனான்.