ஏழுகடல் அழைத்த படலம் | Thiruvilaiyadal Seven Sea story Tamil
ஏழுகடல் அழைத்த படலம் (Thiruvilaiyadal Seven Sea story Tamil) இறைவனான சுந்தரபாண்டியனார் மீனாட்சியின் அன்னையான காஞ்சன மாலைக்காக ஏழுகடல்களை வரவழைத்ததைப் பற்றிக் கூறுகிறது. இதில் வீடுபேறினை அடைய செய்ய வேண்டிய செயல்கள் விளக்கப்பட்டுள்ளன. வீடுபேற்றினை அடைய விரும்பிய காஞ்சன மாலைக்காக சுந்தர பாண்டியனார் மதுரையில் ஏழுகடல்களையும் கிணற்றில் எழுந்தருளிய திருவிளையாடலை பற்றி இப்படலம்
விளக்குகிறது. ஏழுகடல் அழைத்த படலம் திருவிளையாடல் புராணத்தில் மதுரைக் காண்டத்தில் ஒன்பதாவது படலமாகும். இனி இப்படலத்தைப் பற்றிப் பார்ப்போம்.
கௌதம முனிவரின் வருகை
சுந்தரபாண்டியனார் மதுரையின் அரசுப் பொறுப்பை ஏற்று ஆட்சி செய்து கொண்டிருக்கும் காலத்தில் கௌதம முனிவர் மதுரைக்கு வந்து சுந்தரபாண்டியனாரைச் சந்தித்தார்.
பின் அவர் மீனாட்சியின் தாயான காஞ்சன மாலை தங்கி இருந்த அரண்மனைக்கு வருகை தந்தார். காஞ்சன மாலையும் கௌதம முனிவரை வரவேற்று உபசரித்து அவரை தகுந்த ஆசனத்தில் அமர்த்தினாள்.
காஞ்சன மாலை கௌதம முனிவரிடம் “தவத்தில் சிறந்தவரே, என் மகளான தடாதகைக்கு சிறந்த முறையில் திருமணம் முடிந்து ஆட்சி பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
ஆதலால் பிறவா நிலையாகிய வீடுபேற்றினை அடையக் கூடிய வழியினை எனக்கு கூறுங்கள்” என்று கேட்டாள்.
அதற்கு கௌதம முனிவரும் “காஞ்சன மாலையே நீ செய்த தவத்தின் காரணமாக உலகத்தின் அம்மையான மீனாட்சியை மகளாகவும், இறைவனான சிவபெருமானை மருமகனாகவும் பெற்று உள்ளாய்.
உனக்கு வழிகாட்டும் தகுதி எனக்கு இல்லை. இருப்பினும் வீடுபேற்றினை அடையக் கூடிய வழியை நீ கேட்டதால் உனக்கு நான் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
மானதம், வாசிகம், காயகம் என மூன்று வழிகளில் வீடுபேற்றினை அடையலாம். தருமமும், தானமும் செய்தல், பிறஉயிர்களுக்கு இரங்கல், பொறுமை காத்தல், உண்மை கூறல், ஐம்பொறிகளையும் அடக்கி ஆளல், இறைவனை தியானம் செய்தல் ஆகியவைகளான மானதம் என்னும் முதல்வழி ஆகும்.
நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தை கூறுதல், இறைவனின் துதிப்பாடல்களைப் பாடுதல், வேதநூல்களைப் படித்தல், யாகங்கள் செய்தல், திருக்கோவிலை வலம் வருதல் ஆகியவைகளான வாசிகம் என்னும் இரண்டாவதுவழி ஆகும்.
சிவபெருமானின் ஆலயங்களுக்கு சென்று வணங்குதல், ஆலயத்திருப்பணி செய்தல், தலயாத்திரை செல்லல், தீர்த்தங்களில் நீராடுவது ஆகியவைகள் காயகம் என்னும் மூன்றாவது வகையாகும். தீர்த்தங்களில் நீராடுவது என்பதில் கடலில் நீராடுவது மிகவும் நல்லது” என்று கூறிச் சென்றார்.
மீனாட்சியம்மை இறைவனை வேண்டுதல்
கௌதம முனிவரின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்ட காஞ்சன மாலை கடலில் நீராட விருப்பம் கொண்டாள். ஆதலால் தன்னுடைய விருப்பத்தை தன் மகளான மீனாட்சியிடம் கூறினாள்.
மீனாட்சியும் சுந்தரபாண்டியனாரிடம் சென்று “கௌதம முனிவரின் வழிகாட்டுதலின்படி பிறவா நிலையாகிய வீடுபேற்றினை அடைய என் தாயான காஞ்சன மாலை கடலில் சென்று நீராட விரும்புகிறாள். ஆனால் மதுரையிலோ கடல் இல்லை. இதற்கு தாங்கள்தான் வழிகாட்ட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தாள்.
இறைவனார் ஏழுகடல்களையும் அழைத்தல்
மீனாட்சியின் கோரிக்கையை கேட்ட சுந்தரபாண்டியனார் “மீனாட்சி நீ கவலை கொள்ள வேண்டாம். உன் தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற ஏழுகடல்களையும் மதுரையில் எழுந்தருளச் செய்கிறேன்” என்று கூறி ஏழுகடல்களையும் மதுரையில் எழுந்தருளச் செய்தார்.
ஏழுகடல்களும் இறைவனின் ஆணைப்படி ஆர்ப்பாரித்து மதுரையின் எழுந்தருளின. ஏழுகடல்களும் மக்களின் கண்களுக்கு தெரியவில்லை. ஆனால் கடலின் பேரிரைச்சலினை மட்டும் மக்கள் கேட்டனர்.
கண்ணுக்குத் தெரியாத கடல்களின் பேரிரைச்சல் கேட்ட மதுரை நகர மக்கள் நடுக்கி சுந்தரபாண்டியனாரிடம் சென்று அச்செய்தியைத் தெரிவித்தனர்.
சுந்தர பாண்டியனாரும் ஏழுகடல்களையும் மதுரையில் மீனாட்சி கோவின் கீழ்புறத்தில் உள்ள ஒரு கிணற்றுக்குள் செல்ல ஆணையிட்டார்.
ஏழுகடல்களும் கிணற்றினுள் எழுந்தருளின. பின்னர் மக்கள் கடலின் பேரிரைச்சலைக் கேட்கவில்லை. மதுரையில் ஏழுகடல்களும் எழுந்தருளியதன் விளைவாக மீனாட்சிஅம்மன் கோவில் கிழக்குகோபுரத்திற்கு எதிரே உள்ள புதுமண்டபத்தை கடந்தால் வரும்தெருவானது எழுகடல் தெரு என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
ஏழுகடல் அழைத்த படலத்தின் கருத்து
கடலில் நீராடுவது உடலுக்கும் உள்ளத்திற்கும் உறுதியைத் தருவதோடு வீடுபேற்றினையும் அளிக்கும் என்பதே ஏழுகடல் அழைத்த படலத்தின் கருத்தாகும்!