மலயத்துவசனை அழைத்த படலம் | Thiruvilaiyadal Malaiyathuvasanai story tamil

மலயத்துவசனை அழைத்த படலம் ( Thiruvilaiyadal Malaiyathuvasanai story tamil) இறைவனான சுந்தர பாண்டியன் மீனாட்சியின் அன்னையான காஞ்சன மாலை கடலில் நீராட மீனாட்சியின் தந்தையான மலயத்துவசனை அழைத்ததைப் பற்றி குறிப்பிடுகிறது. இதில் கடலில் நீராட வேண்டிய விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

வீடுபேற்றினை அடைய விரும்பிய காஞ்சன மாலை கடலில் நீராட, அவளின் கணவனான மலயத்துவச பாண்டியனை அழைத்த விதத்தையும், அவர்களுக்கு வீடுபேறு வழங்கியதையும் இப்படலம் விளக்கிக் கூறுகிறது. இப்படலம் ஏழுகடல் அழைத்த படலத்தின் தொடர்ச்சி ஆகும்.
மலயத்துவசனை அழைத்த படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் பத்தாவது படலம் ஆகும்.

உயர்ந்தவனாயினும் தன்னுடைய மாமனாருக்கு தரவேண்டிய மரியாதைகளை இப்படலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இனி இப்படலம் பற்றிப் பார்ப்போம்.
மீனாட்சி கடலில் நீராட தனது தாயை அழைத்தல்
வீடுபேறு அடைய விரும்பிய காஞ்சன மாலை கௌதம முனிவரின் வழிகாட்டுதலின்படி கடலில் நீராட விருப்பம் கொண்டாள். இதனை மீனாட்சி மூலம் அறிந்த சுந்தர பாண்டியனார் காஞ்சன மாலைக்காக ஏழுகடல்களையும் மதுரைக்கு வருவித்தார்.
இச்செய்தியை காஞ்சன மாலைக்கு தெரிவித்த மீனாட்சி காஞ்சன மாலையை கடலில் நீராட அழைத்தார். மீனாட்சியும், சுந்தர பாண்டியனாரும் கடலின் அருகே வந்தமந்தனர்.
கடலின் நீராட்ட விதிமுறைகளை முனிவர்கள் கூறுதல்
மீனாட்சியின் அழைப்பினை ஏற்று காஞ்சன மாலை கடலில் நீராட கடலின் அருகே வந்தாள்.
அங்கு கூடியிருந்த முனிவர்களிடம் “கடலில் நீராடுவதற்கு ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா?” என்று வினவினார். அதற்கு அவர்கள் “காஞ்சன மாலையே, கணவனுடைய கை, மகனுடைய கை, பசுவினது கன்றின் வால் இம்மூன்றில் ஏதேனும் ஒன்றினை கையினால் பற்றிக் கொண்டு நீராடுதலே முறை” என்று கூறினர்.

காஞ்சன மாலையின் மனவருத்தம்
முனிவர்கள் கூறியதைக் கேட்ட காஞ்சன மாலை ‘எனக்கு தற்போது கணவனும் இல்லை; மகனும் இல்லை. நான் கன்றின் வாலினைப் பிடித்து கடலில் நீராடுவேன்’ என்று மனதிற்குள் எண்ணி வருத்தம் கொண்டாள்.
பின் தன்னுடைய மனவருத்தத்தினை மீனாட்சியிடம் தெரிவித்து கன்றின் வாலினைப் பற்றி கடலில் நீராடப் போவதைத் தெரிவித்தாள்.
தாயின் மனவருத்தத்தைக் கேட்ட மீனாட்சி சுந்தர பாண்டியனாரிடம் சென்று “நீங்கள் என் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற ஏழுகடல்களையும் மதுரைக்கு வரவழைத்தீர்கள். தற்போது கடலில் நீராட கணவனும், மகனும் இல்லாத என் தாய் கன்றின் வாலினைப் பற்றி நீராடப் போவதாக கூறுகிறாள். தாங்கள் இதில் ஏதேனும் அவளுக்கு உதவ முடியுமா?” என்று வருத்தத்துடன் கேட்டாள்.

மலயத்துவச பாண்டியனின் வருகை
மீனாட்சி கூறியதைக் கேட்ட சுந்தரபாண்டியனார் மலயத்துவசனை மனதில் நினைத்தார். மலயத்துவசனும் அவ்விடத்திற்கு வருகை புரிந்தான்.
பின் “பெண் பிள்ளையைப் பெற்றதால் நான் பெற்ற பயன் இது” என்று கூறி உலகத்திற்கு இறைவனான சுந்தர பாண்டியனாரை வணங்க முற்பட்டான்.
இதனைக் கண்ட சுந்தர பாண்டியனார் “தங்களுடைய மகளை மணந்ததால் நீங்கள் எனக்கு மாமன் முறை. மாமன் என்பவர் தந்தைக்கு சமமானவர். ஆதலால் என்னை நீங்கள் வணங்குதல் மரபன்று. அன்பு நிறைந்த மனைவியோடு தீர்த்தத்தில் ஆழ்ந்து நீராடுங்கள்” என்று கூறி மலயத்துவசனை ஆரத் தழுவினார்.
தன் தந்தையைக் கண்டு உவகை கொண்ட மீனாட்சி அன்பினால் மலயத்துவசனை கட்டி அணைத்துக் கொண்டாள். மலயத்துவசன் “உன்னுடைய திருமணத்தை நான் காண இயலவில்லை. ஆனால் இன்று உங்களிருவரையும் கண்டு என் உள்ளம் பேரானந்தத்தில் திளைக்கிறது” என்று கூறினான். காஞ்சன மாலையும் தன்னுடைய கணவனுக்கு அருகில் சென்று வணங்கினாள்.
மலயத்துவசனுக்கும், காஞ்சன மாலைக்கும் இறைவன் அருள் புரிதல்
பின் காஞ்சன மாலை மலயத்துவசனின் கையினை பற்றிக் கொண்டு ‘நமசிவாய’ என்னும் திருவைந்தெழுத்தை உச்சரித்தபடி கடலில் நீராடினாள்.
கடலில் நீராடி கரையேறிய காஞ்சன மாலையும், மலயத்துவசனும் இறைவனின் திருவருளால் பந்த பாசம் ஒழித்து மீண்டும் பிறவாமை என்னும் வீடுபேற்றினைப் பெற்றனர்.
பின் சிவலோகத்தில் இருந்து வந்த தேவவிமானத்தில் அவ்விருவரும் ஏறினர். அங்கிருந்தோர் ‘அரஅர’ என்று துதிக்க தேவவிமானம் மேலெழும்பி சிவலோகத்தை நோக்கிச் சென்றது.
இதனைக் கண்ட தடாதகை சுந்தர பாண்டியனாரிடம் சென்று “என்னுடைய தாய் நீராட விரும்பிய கடல் ஒன்றே. ஆனால் தாங்கள் ஏழுகடலையும் மதுரைக்கு வரவழைத்தீர்கள். பின் தந்தையையும் வரழைத்து தாய்தந்தையரை நீராடச் செய்து இறுதியில் சிவலோகப் பதவியையும் அளித்தீர்கள். இனி எனக்கு எந்தவித துன்பமும் ஏற்படப்போவதில்லை” என்று கூறினார். சுந்தர பாண்டியனாரும் மீனாட்சியின் கருத்தினைக் கேட்டு மகிழ்ந்தார்.

மலயத்துவசனை அழைத்த படலம் கருத்து
எவ்வளவு உயர்ந்தோர் ஆயினும் தனக்கு பெண் கொடுத்த மாமனாரை தந்தைக்கு சமமாக மதித்து நடத்தல் வேண்டும்.
மனைவியின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவது கணவனின் கடமை ஆகும்.