வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் | White Elephant Story in Tamil
வெள்ளை யானை சாபம் (Thiruvilaiyadal White Elephant Story) தீர்த்த படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் இரண்டாவது படலம் ஆகும்.
திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சியம்மை பராசக்தி பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றிச் சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பாடும் படி கூறியமையால் இந்நூலைப் பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது. பரஞ்சோதி முனிவர் திருமறைக்காடு (வேதாரணியம்) எனும் ஊரில் மீனாட்சி சுந்தர தேசிகர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். மதுரையில் சற்குருவை ஏற்று சைவ சந்நியாசம் பெற்றார்.
இப்படலம் ஆணவச் செயலால் சாபம் அடைந்த இந்திரனின் வாகனமான வெள்ளை யானையின் சாபத்தை போக்கிய சிவனின் கருணைமிகுந்த திருவிளையாடலைப் பற்றிக் கூறுகிறது.
பெரிய இடங்களில் பணிபுரிபவர்கள் ஆணவத்துடன் நடந்து கொண்டால் என்ன நேரிடும் என்பதையும், வெள்ளை யானை உண்டாக்கிய இந்திரேச்சுவரை வழிபட கிடைக்கும் பலன்களையும் பற்றி இப்படலத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
இப்படலக்கதை இதற்கு முந்தைய படலமான இந்திரன் சாபம் தீர்த்த படலத்துடன் தொடர்பு உடையது.
வெள்ளை யானைக்கு சாபம் ஏற்பட்ட விதத்தையும், அச்சாபத்தை இறைவன் நீக்கிய விதத்தையும் இனி பார்ப்போம்.
இந்திரன் தேவலோகத்திற்கு வருதல்
விருத்தாசூரனை அழித்து அதனால் உண்டான பிரம்மகத்தி தோசத்தை சொக்கநாதரின் அருளினால் தேவேந்திரன் நீங்கப் பெற்றான்.
சோமசுந்தரரின் ஆணையை ஏற்று தேவேந்திரன் இந்திரலோகத்துக்கு மகிழ்ச்சியுடன் திரும்பினான்.
இந்திரனை தேவர்கள், அவனின் வாகனமான வெள்ளை யானை ஐராவதம் உட்பட அனைவரும் அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
தேவர்கள் அனைவரும் இந்திரனுக்கு வாழ்த்துக்களையும், பொன்னாலாகிய பரிசுகளையும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
துர்வாச முனிவர் இந்திரனுக்கு பரிசு வழங்கல்
காசி மாநகரில் துர்வாசர் என்னும் மாமுனிவர் தன் பெயரால் லிங்கத்திருமேனியை நிறுவி அதனை தினந்தோறும் வழிபட்டு வந்தார்.
ஒருநாள் துர்வாசர் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவனார் தன் திருமுடியில் இருந்து பொன்னிறமான மணம் வீசும் தாமரை மலரினை துர்வாசகருக்கு கொடுத்தருளினார்.
துர்வாசரும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். பின்னர் அம்மலரை எடுத்துக் கொண்டு இந்திரனுக்கு அம்மலரினை பரிசாக தரும் நோக்கில் தேலோகத்திற்கு விரைந்தார்.
அப்போது இந்திரன் வெள்ளை யானையான ஐராவதத்தின் மீது ஏறி தேவலோகத்தில் பவனி வந்து கொண்டிருந்தான். தேவ மகளிர் மகிழ்ச்சியுடன் பாட்டிசைத்து ஆடிக் கொண்டு அவன் முன்னால் சென்று கொண்டிருந்தனர்.
வெள்ளை யானையான ஐராவதம் தேவர்களின் தலைவனான இந்திரனை சுமந்து கொண்டு செல்வதை பெருமையாக எண்ணி ஆணவத்துடன் ஊர்வலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தது.
துர்வாசர் தேலோகத்தை அடைந்தார். தேவலோகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கண்டதும் துர்வாசர் மிகுந்த மகிழ்ச்சி கொண்டார். இறைவனான சிவபெருமான் தனக்கு கொடுத்த மணம்மிக்க தாமரை மலரினை தன்னுடைய பரிசாக இந்திரனுக்கு துர்வாசர் கொடுத்தார்.
துர்வாச முனிவரின் சாபம்
தேவர்களின் வாழ்த்துமழையில் நனைந்திருந்த இந்திரன் தன்னிலை மறந்திருந்தான். அதனால் துர்வாசர் அளித்த பரிசினை அலட்சியமாக வெள்ளை யானையின் மீது வைத்தான்.
ஆணவம் நிறைந்திருந்த வெள்ளை யானை இந்திரன் வைத்த தாமரை மலரினை தனது துதிக்கையால் எடுத்து காலில் போட்டு மிதித்து நசுக்கியது. இந்நிகழ்ச்சிகளைக் கண்ட துர்வாச முனிவருக்கு கோபம் ஏற்பட்டது.
பின் அவர் இந்திரனை நோக்கி “ இறைவனான சிவபெருமான் கருணைமிகுந்து மணம் மிகுந்த தாமரை மலரினை எனக்கு கொடுத்தார்.”
சொக்கநாதரின் அருளினால் உனக்கு ஏற்பட்ட பிரம்மகத்தி தோசம் நீங்கப்பெற்று புதுப்பொலிவுடன் சொர்க்கலோகத்துக்கு நீ திரும்பிய செய்தியை நான் அறிந்தேன்.
அதனால் இறைவனின் அருட்பிரசாதமான தாமரை மலரினை உனக்கு பரிசாக கொடுப்பதற்காக நான் இங்கு வந்தேன். ஆனால் நீ தன்னிலை மறந்து அம்மலரின் பெருமைகளை அறியாது உன் யானையிடம் தந்தாய்.
“ஆதலால் உன் தலை எதிர் காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவனின் சக்கரப்படையால் சிதறடிக்கப்படும்.” என்று கூறினார்.
மேலும் அவர் வெள்ளை யானையை நோக்கி “இந்திரன் உன் மீது வைத்த இறைவனின் கருணையால் கிடைத்த தாமரை மலரினை அதன் பெருமை அறியாது உன் கால்களால் நசுக்கினாய்.
ஆதலால் உன் நான்கு கொம்புகளுடன் வெள்ளை நிறமும் நீங்கி, பலமும் போய் கருமை கொண்ட காட்டு யானையாக மாறுவாய்” என்று இருவருக்கும் சாபம் கொடுத்தார்.
சாபத்தை போக்க இந்திரன் வேண்டுதல்
துர்வாசரின் சாபத்தை கேட்டதும் இந்திரன் தன்னிலைக்கு வந்தான். தன்னுடைய ஆணவச் செயலால் மறுபடியும் சாபம் பெற நேர்ந்ததை எண்ணி வருந்தினான்.
துர்வாசரிடம் “ஐம்புலன்களையும் வென்ற முனிவரே தாங்கள் பரிசாக அளித்த தாமரை மலரின் பெருமைகளை அறியாது அதனை தவறாகப் பயன்படுத்தி விட்டேன். எங்களுடைய தவறான செயலினை மன்னியுங்கள். எனக்கும், எனது வெள்ளை யானைக்கும் கொடுத்த சாபத்தினை மாற்றி அருளுங்கள்” என்று இந்திரன் வேண்டினான்.
இந்திரன் மற்றும் வெள்ளை யானையின் இச்செயலால் துர்வாசர் மனம் மாறினார். அவர் அவர்களிடம் “இறைவனின் அருளினை மதியாது நடந்த உங்களது செயல் குற்றமானது. அதற்கு நிச்சயம் தண்டனை உண்டு.
ஆதலால் சாபத்தினை உங்களுக்கு மாற்றித் தருகிறேன். அதாவது உனக்கு தலையளவு கொடுத்த தண்டனை முடியளவாக மாறட்டும். ஆணவச்செருக்கினை உடைய வெள்ளை யானை அறிவிழந்து காட்டு யானையாகி நூறாண்டு கழிந்தபின் இறைவனின் கருணையால் மீண்டும் வெள்ளை யானையாக மாறும்” என்று கூறி அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
முனிவரின் சாபத்தால் வெள்ளை யானை அறிவிழந்து கருமை நிறம் கொண்ட காட்டு யானையாக மாறி தேவலோகத்தைவிட்டு பூலோகத்திற்குச் சென்றது.
காட்டு யானை பழைய வடிவம் பெறுதல்
காட்டு யானையாக மாறிய ஐராவதம் பூலோகத்தில் உள்ள காடுகளில் சுற்றித் திரிந்தது. இறுதியில் கடம்ப வனத்தில் புகுந்தது. கடம்ப வனத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தினையும், சொக்கநாதரையும் கண்டது.
அப்போது அது சாபம் பெற்று நூறுஆண்டுகள் கழிந்திருந்தது. தான் யார் என்பதினை அறிந்து பொற்றாமரைக் குளத்தில் இறங்கி நீராடியது. உடனே காட்டு யானை வடிவம் நீங்கி மீண்டும் வெள்ளை யானையாக மாறியது. பின் பொற்றாமரை தீர்த்தத்து நீரினைக் கொண்டு சொக்கநாதரை அபிசேகம் செய்து பொற்றாமரையால் சொக்கநாதரை வழிபட்டது.
சொக்கநாதரின் திருவருள் வெள்ளை யானையின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த சொக்கநாதராகிய சோமசுந்தரர் வெள்ளை யானைக்கு காட்சி தந்தார். அவர் வெள்ளை யானையிடம் “நீ இங்க வந்த காரணம் என்ன? உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.
அதனைக் கேட்ட வெள்ளை யானை ஆவணத்தால் தான் சாபம் பெற்றதையும் தற்போது சொக்கநாதரின் அருளால் சாபம் நீங்கப் பெற்றதையும் கூறி ஆணவம் இல்லாமல் பணிந்து வணங்கியது.
பின் அது இறைவனாரிடம் “தங்களுக்கு கூரையாக அமைந்திருக்கும் இவ்விமானத்தினை தாங்கும் எட்டு யானைகளோடு நானும் ஒன்பதாவது யானையாகி இவ்விமானத்தை தாங்கி தங்களைப் பிரியாது இருக்க வேண்டும்.” என்று வேண்டியது.
அதற்கு சொக்கநாதரும் “இந்திரன் என்னிடம் மிகுந்த அன்பு பூண்டவன். ஆதலால் அவனை நீ சுமப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும்” என்று கூறி பல வரங்களை அருளினார்.
பின்னர் வெள்ளை யானை சோமசுந்தரருக்கு மேல்திசையில் ஐராவத தீர்த்தத்தையும், ஐராவதேச்சுரர் லிங்கத்திருமேனியையும், ஐராவத விநாயகப்பெருமானையும் உருவாக்கி வழிபட்டு வந்தது.
இந்திரன் தனது வெள்ளை யானையின் சாபம் நீங்கப் பெற்றதை அறிந்து அதனை அழைத்துவர தேவர்களை அனுப்பினான். அவர்களிடம் அந்த யானை “வருவேன்” என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டது.
பின் சொக்கநாதருக்கு கீழ்திசையில் ஐராவதநல்லூர் என்ற ஊரினை உருவாக்கியும், அவ்வூரில் இந்திரேச்சுரர் என்ற லிங்கத்தை உண்டாக்கியும் வழிபட்டு வந்தது.
இந்திரன் மீண்டும் தேவர்களை அனுப்பி ஐராவதத்தை அழைத்து வரச் சொன்னான். வெள்ளை யானையும் இந்திரனின் வேண்டுகோளை ஏற்று தேவலோகம் சென்றது.
வெள்ளை யானை உண்டாக்கிய ஐராவதேச்சுரரை வழிபட தீவினைகள் நீங்கப் பெறுவர். மேலும் இந்திரேச்சுவரரை வழிபட இம்மையில் எல்லா வளங்களும் பெற்று மறுமையில் இந்திரப் பதவி பெற்று இறுதியில் வீடுபேற்றினைப் பெறுவர்.
வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் சொல்லும் கருத்து
உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் தன்னிலை மறந்து ஆணவச் செயல்களில் ஈடுபடக் கூடாது