கண்ணன் கதைகள் – 29
சகடாசுர வதம்

குழந்தை கண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான். அவன் பிறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. குப்புறக் கவிழ்ந்து கொள்ள ஆரம்பித்தான். யசோதை, அதைக் கொண்டாட ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தாள்.

இதற்கிடையே கம்ஸன் அனுப்பிய சகடாசுரன் என்ற மற்றொரு ராக்ஷஸன், வண்டியின் உருவெடுத்து, கோகுலத்தில் யசோதையின் வீட்டிற்கு அருகே. குழந்தையைக் கொல்வதற்காகக் காத்திருந்தான்.

விழாவிற்கு, யசோதையும் நந்தகோபரும், கோகுலத்தில் உள்ள அனைவரையும் அழைத்திருந்தார்கள். யசோதை, குழந்தையை நன்கு குளிப்பாட்டி, அலங்கரித்து விட்டாள். குழந்தைக்குத் தூக்கம் கண்ணைச் சொருகியது. அதனால், அருகில் இருந்த அந்தப் பெரிய வண்டியின் அடியில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து, சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் கண் விழித்த குழந்தை கண்ணன் ஆழ ஆரம்பித்தான். வேலையின் மிகுதியாலும், கூடியிருந்தவர்களின் பேச்சு சத்தத்தாலும் யசோதைக்கு, குழந்தையின் அழுகைக் குரல் கேட்கவில்லை. குழந்தை கால்களை வேகமாக உதைத்துக் கொண்டு அழுதது. அப்போது, அருகே மரங்கள் முறியும் சப்தமும், குழந்தையைப் பார்த்துக் கொள்ள நியமித்திருந்த இடைச்சிறுவர்களின் கூக்குரலும் கேட்டது. அந்தப் பெருஞ்சத்தத்தைக் கேட்டு, இடைப்பெண்கள் உடல் குலுங்க ஓடி வந்தனர். அங்கே, வண்டி முறிந்து கிடக்க, அதன் நடுவே குழந்தையைக் கண்டனர்.

பெரியோர்களும், இடையர்களும், நந்தகோபனும், குழந்தைக்கு என்ன நேர்ந்ததோ என்று பயந்து ஓடி வந்தனர். யசோதை குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சமாதானம் அடைந்தனர். “இந்த வண்டி எப்படி முறிந்தது? ஒன்றும் புரியவில்லையே”! என்று அதிசயித்தனர். அப்போது, கண்ணனைப் பார்த்துக் கொள்ள நியமித்திருந்த இடைச்சிறுவர்கள், “இக்குழந்தை பால் சாப்பிட அழுதுகொண்டு காலை உதைத்துக் கொண்டது, அதன் கால் பட்டு இந்த வண்டி உடைந்தது, நாங்கள் பார்த்தோம்” என்று கூறினார்கள். “குழந்தையின் கால் பட்டு வண்டி முறியுமா? இருக்காது” என்று இடையர்கள் அதை நம்ப மறுத்தனர். பூதனையின் முடிவை நேரில் கண்டிருந்த சிலர் அப்படியும் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர். இவ்வாறு, வண்டியின் உருவில் வந்த சகடாசுரன், கண்ணனால் வதம் செய்யப்பட்டதால், ஸத்வவடிவான பரந்தாமனுடன் ஐக்யமடைந்துவிட்டான். அவனுடைய உடலின் சிறு பாகம்கூட அங்கு காணப்படவில்லை!!!

தாமரைப் பாதங்களில் காயம் பட்டதா? பிஞ்சுக் கைகளில் அடி பட்டதா? என்று இடைப்பெண்கள் கண்ணனைத் தூக்கித் தடவிப் பார்த்தனர். அந்தக் குழந்தைதான் ‘ஹரி’ என்று அறியாமல், ” உலகத்தைக் காக்கும் ஹரியால் என் குழந்தை காக்கப்பட்டது” என்று கூறிய நந்தகோபர், மயிர்க்கூச்சலுடன் குழந்தையைத் தூக்கித் தழுவிக் கொண்டார். பிறகு வேதமறிந்தவர்கள் குழந்தையை ஆசீர்வதித்தார்கள். கண்ணனும் தனது லீலைகளால் கோகுலத்தை மகிழ்வித்தான்.

Leave a Comment