உலவாக்கிழி அருளிய படலம் | Ulava Kizhi Aruliya Padalam Story
உலவாக்கிழி அருளிய படலம் (Ulava Kizhi Aruliya Padalam Story) இறைவனான சொக்கநாதர் மதுரையில் மக்களுக்கு ஏற்பட்ட பசித்துயரினைப் போக்க உலாக்கிழியை குலபூடண பாண்டியனுக்கு வழங்கியதை பற்றி கூறுவதாகும்.
உலவாக்கிழி என்பது பணமுடிப்பாகும். உலவாகிழியிலிருந்து பணத்தை எடுக்க எடுக்க குறையாமல் இருக்கும்.
குலபூடண பாண்டியனின் அகந்தை, மதுரை மக்களின் பசித்துயர், இறைவனார் உலவாக்கிழி வழங்கி பாண்டியனின் குற்றத்தை எடுத்துக் கூறியது ஆகியவை இப்படலத்தில் விளங்கப்பட்டுள்ளன.
உலவாக்கிழி அருளிய படலம் திருவிளையாடல் புராணத்தில் கூடல் காண்டத்தில் முப்பத்தி ஒன்றாவது படலமாக அமைந்துள்ளது.
குலபூடண பாண்டியனின் அகந்தை
குலபூடண பாண்டியன் சிவபக்தியில் சிறந்தவனாக இருந்தான். தன்நாட்டு மக்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தான். இதனால் அவனுக்கு தன்னைவிடச் சிறந்தவன் யாரும் இல்லை என்ற அகந்தை உருவானது.
இதனால் இறைவனார் குலபூடண பாண்டியனின் அகந்தை அளித்து அவனுக்கு நற்கதி அளிக்க எண்ணினார். குலபூடண பாண்டியனின் அகந்தை காரணமாக மதுரையில் மழை பொய்த்தது.
தண்ணீர் இல்லாமல் பயிர்கள் சரிவர விளைச்சலைத் தரவில்லை. இதனால் மதுரை மக்களை பசித்துயர் வாட்டியது.
இறைவனார் உலவாக்கிழியைக் கொடுத்தல்
இதனைக் கண்ட குலபூடண பாண்டியன் திருக்கோவிலை அடைந்து இறைவனிடம் “நான் தவறாது சிவவழிபாட்டினை மேற்கொண்டு வருகிறேன்.
மக்களையும் நல்ல முறையில் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறேன். ஆனால் மதுரையில் மழைப்பொழிவு குறைந்ததால் பயிர்கள் சரிவர விளையவில்லை. மக்கள் பசியால் வருந்துகின்றனர்.
ஆதலால் தாங்கள் எங்களுக்கு நல்வழி காட்டுங்கள்” என்று மனமுருக வேண்டினான். பின் அரண்மனையை அடைந்து பணிகளைக் கவனித்து இரவில் தூங்கச் சென்றான். தூக்கத்திலும் குலபூடண பாண்டியன் இறைவனை வேண்டினான்.
அவனது கனவில் தோன்றிய இறைவனார் “குலபூடண பாண்டியா, இதோ இந்த உலவாக்கிழியைப் பெற்றுக் கொள். இதிலிருந்து அள்ள அள்ளக் குறையாத பொற்காசுகளை எடுத்து மதுரை மக்களின் துயரினைப் போக்கு.” என்று கூறினார்.
கண் விழித்த குலபூடண பாண்டியன் தன் கையில் உலவாக்கிழி இருப்பதைக் கண்டான்.
இறைவனாரின் விளக்கம்
உலவாக்கிழியை பார்த்ததும் குலபூடண பாண்டியனின் மனதில் மழை இல்லாமல் போனதற்கான காரணம் மற்றும் மக்களின் துயர் எதற்கு ஏற்பட்டது என்ற எண்ணம் ஏற்பட்டது. பின்னர் களைப்பில் மீண்டும் தூங்கினான்.
அப்போது அவன் கனவில் தோன்றி சோமசுந்தரர் “குலபூடண பாண்டியா, நீ என்னை காலந்தவறாமல் வழிபடுகிறாய். உன் மக்களை நன்கு பாதுகாக்கிறாய்.
ஆனால் உனக்கு உன்னைவிட சிறந்த பக்தன் உலகில் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அந்த அகந்தையே மதுரையில் மழை இல்லாமல் போனதற்கும், மக்களின் துயருக்கும் காரணம் ஆகும். உன்னுடைய அகந்தையால் உன்னுடைய மக்களும் துன்பமடைந்தனர்” என்று கூறினார்.
குலபூடண பாண்டியன் கண்விழித்து தன்னுடைய தவறிற்கான காரணத்தை அறிந்ததும் அவனுடைய அகந்தை அழிந்தது. உலவாக்கிழியில் இருந்த பொற்காசுகளை எல்லோருக்கும் வழங்கினான்.
பின்னர் மதுரையில் மழை பொழிந்து மக்களின் துயர் நீங்கியது. இறுதியில் குலபூடண பாண்டியன் இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தான்.
உலவாக்கிழி அருளிய படலம் கூறும் கருத்து
அகந்தை என்றைக்கும் துயரினைக் கொடுக்கும். ஆதலால் தான் சிறந்தவன் என்ற அகந்தை யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதே உலவாகிழி அருளிய படலம் கூறும் கருத்தாகும்.