மெய்க் காட்டிட்ட படலம் | Mei Kaatita Padalam Story

மெய்க் காட்டிட்ட படலம் (Mei Kaatita Padalam) இறைவான சொக்கநாதர் தனது அடியவரான சுந்தர சாமந்தனுக்காக சேனை வீரராக வந்து படை பலத்தைக் காட்டியதை விளக்கிக் கூறுகிறது.
சுந்தர சாமந்தனின் சிவத்தொண்டு, சொக்கநாதர் சிவகணங்களோடு பெரும்சேனைகளாக உருவெடுத்து மதுரைக்கு வந்து சுந்தர சாமந்தனின் துயரைப் போக்கியது, குலபூடண பாண்டியன் உண்மையை அறிந்தது ஆகியவை இதில் விளக்கப்பட்டுள்ளன.
மெய்க் காட்டிட்ட படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பதாவது படலமாக அமைந்துள்ளது.

சுந்தர சாமந்தனும், குலபூடண பாண்டியனும்
அனந்தகுண பாண்டியனின் மகனான குலபூடண பாண்டியனின் ஆட்சியில் சுந்தர சாமந்தன் என்றொரு சேனாதிபதி இருந்தான். அவன் சொக்கேசரிடம், அவருடைய தொண்டர்களிடமும் நீங்காத பக்தி கொண்டு இருந்தான்.
அப்போது சேதிராயன் என்பவன் வேடுவர்களின் தலைவனாக இருந்தான். அவன் பல வெற்றிகளைக் கொண்ட செருக்கால் குலபூடண பாண்டியனிடம் பகைமை கொண்டு பாண்டிய நாட்டின் மீது படையெடுக்க எண்ணினான்.
இச்சேதியை குலபூடண பாண்டியன் அறிந்தான். தனது சேனாதிபதியான சுந்தர சாமந்தனிடம் “நீ நமது நிதி அறையினைத் திறந்து வேண்டுமளவு பொருள்களை எடுத்துக் கொண்டு புதிதாக சேனைப் படைகளை திரண்ட வேண்டும்” என்று கட்டளையிட்டான்.

சுந்தர சாமந்தனின் சிவதொண்டு
சுந்தர சாமந்தனும் நிதி அறையினைத் திறந்து தனக்கு வேண்டுமளவு பொருட்களை எடுத்துக் கொண்டான். அப்பொருட்களைக் கொண்டு சிவபெருமானுக்கு திருக்கோவிலும், ஆயிரங்கால் மண்டபமும் எடுத்தான்.
சிவனடியார்களுக்கு திருஅமுது செய்வித்து எஞ்சியவற்றை உண்டு வாழ்ந்து வந்தான். இச்சேதியை ஒற்றர் மூலம் குலபூடண பாண்டியன் அறிந்தான்.
சிறிது காலம் கழித்து அரண்மனைக்கு திரும்பி புதிய சேனைப் படை வீரர்களை வரவழைக்க பொய் ஓலைகளை எழுதி அனுப்பினான். ஆறுமாத காலம்வரை எந்த படைவீரர்களும் பாண்டிய நாட்டுக்கு வரவில்லை.
ஒருநாள் குலபூடண பாண்டியன் சுந்தர சாமந்தனிடம் “நாளை சூரியன் மறையும் முன்னர் ஓலைவிடுத்த சேனைப்படை வீரர்கள் அனைவரையும் மதுரைக்கு அழைத்து வரவேண்டும்” என்று கட்டளை பிறப்பித்தான்.

சேனைபடையுடன் இறைவனாரின் வருகை
அரசனின் கட்டளையை கேட்ட சுந்தர சாமந்தன் அதற்கு சம்மதம் தெரிவித்தான். பின்னர் திருக்கோவிலை அடைந்து “எம்பெருமானே, அரசன் அளித்த நிதியினைக் கொண்டு சிவதொண்டு செய்துவிட்டேன். இனி எப்படி பெரும் சேனைகளை நாளை திரட்டிக் காண்பிப்பது?” என்று விண்ணப்பம் செய்தான்.
அதற்கு இறைவனார் “நாளைக்குச் சேனைவீரர்களோடு நாமும் வருவோம். நீ பாண்டியனின் அவைக்குச் சென்று என் வரவை எதிர்பார்ப்பாயாக” என்று திருவாக்கு அருளினார்.
மறுநாள் சோமசுந்தரர் தமது சிவகணங்களை வேலேந்திய படைவீரர்களாகவும், தாமும் ஒருகுதிரை வீரனாக கோலம் பூண்டார். தன்னுடைய இடப ஊர்தியை குதிரையாக்கி அதன்மேல் ஏறி தன் பரிவாரம் சூழ ஒற்றைச் சேவகராய் மதுரையை நோக்கி எழுந்தருளினார்.
சேனையின் வரவினைக் கண்ட சுந்தர சாமந்தன் குலபூடண பாண்டியனின் முன்சென்று வணங்கி சேனைகளின் வரவு பற்றி தெரிவித்தான்.
குலபூடண பாண்டியனும் மனம் மகிழ்ந்து கடைவாயில் வந்து அங்கிருந்த மண்டப அரியணையின் மீது வீற்றிருந்து சேனைப் பெருக்கத்தின் சிறப்பினை நோக்கினான்.

இறைவனாரை பாண்டியன் உணர்தல்
சுந்தர சாமந்தன் அணிவகுத்து நின்ற ஒவ்வொரு பகுதியினரையும் காட்டி அவர்கள் எந்த நாட்டினைச் சார்ந்தவர்கள் என்று வரிசைபட மெய்க் காட்டிக் கூறினான்.
முடிவில் பாண்டியன் ஒற்றைச் சேவகராய் நின்ற சோமசுந்தராக் கடவுளைக் காட்டி “அவர் யார்?” என்று கேட்டான். அதற்கு சுந்தர சாமந்தன் “இச்சேனைப் பெருக்கத்துள் அவரை யார் என்று அறிந்து எவ்வாறு கூறுவேன்?” என்றான்.
உடனே பாண்டியன் “அவரை அழைத்து இங்கு வருக” என்று கூறினான். சேவகரும் தன்அடியவரான சுந்தர சாமந்தனுக்காக பாண்டியனின் அருகே வந்தார்.
பாண்டியன் மகிழ்ந்து அவருக்கு நவமணிகளையும், பொன்னாடைகளையும் பரிசளித்தான். அதனைப் பெற்ற சோமசுந்தரர் தம் சேனை வெள்ளத்தில் புகுந்து மறைந்தார்.
அப்போது அரசன் முன் ஒற்றன் ஒருவன் வந்து “அரசே சேதிராயன் வேட்டைக்குச் சென்றபோது புலியால் அடித்து கொல்லப்பட்டு இறந்தான்” என்று கூறினான்.
அதனைக் கேட்ட பாண்டியன் சுந்தர சாமந்தனுக்கு நிறைய பரிசுகளை வழங்கினான். பின் “இந்த சேனைகளை அந்தந்த நாட்டிற்கு அனுப்பி வை” என்று கூறினான். சோமசுந்தரர் மனித வேடம் கொண்ட வீரர்களாகிய சிவகணங்களோடு மறைந்தருளினார்.
நடந்தவைகளை சுந்தர சாமந்தன் விளங்கிய பின், குலபூடண பாண்டியன் சேனையாகவும், ஒற்றை வீரராகவும் வந்தது சிவகணங்கள் மற்றும் சொக்கநாதர் என்பதை அறிந்து கொண்டான்.
உடனே அவன் சுந்தர சாமந்தனிடம் “உனக்கு மதுரையில் வீற்றிருக்கும் சோமசுந்தரக் கடவுள் எளிதில் வந்து அருளினார் என்றால் எனக்கு அக்கடவுள் நீயே” என்று கூறி அவனுக்கு பல சிறப்புகளைச் செய்தான். பின்னர் சிறிதும் மனக்கவலை ஏதும்மின்றி மதுரையை ஆண்டு வந்தான்.

மெய்க் காட்டிட்ட படலம் கூறும் கருத்து
இறைவனார் தம் அடியவர்களுக்காக எந்த வேடத்திலும் வந்து அருள் புரிவார். அடியவர்களுக்காக எதனையும் ஏற்றுக் கொள்வார் என்பதே மெய்க் காட்டிட்ட படலம் கூறும் கருத்தாகும்.