உலவாக்கோட்டை அருளிய படலம் | Ulavakottai story in tamil – Thiruvilaiyadal

உலவாக்கோட்டை அருளிய படலம் (Ulavakottai story) , இறைவனான சொக்கநாதர் தன்னுடைய பக்தனான அடியார்க்கு நல்லான் என்பவனுக்காக அள்ள அள்ளக் குறையாத உலவாக்கோட்டை என்னும் தானியக் களஞ்சியத்தை அருளியதைக் கூறுகிறது. உலவாக்கோட்டை என்பது 24 மரக்கால் அளவு கொண்ட கொள்கலன் ஆகும். 1 மரக்கால் என்பது 4 படி ஆகும்.

அடியார்க்கு நல்லானின் சிவனடியார் தொண்டு, அடியார்க்கு நல்லானுக்கு இறைவன் ஏற்படுத்திய சோதனை, அடியார்க்கு நல்லானின் குறையைத் தீர்க்க உலவாக்கோட்டை இறைவனார் அருளியது ஆகியவை இதில் விளக்கப்பட்டுள்ளன.
உலவாக்கோட்டை அருளிய படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பத்தி எட்டாவது படலமாக அமைந்துள்ளது.

அடியார்க்கு நல்லானின் சிவதொண்டு
மதுரையில் அடியார்க்கு நல்லான் என்னும் வேளாளன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி தரும சீலை. இப்பெண்மணி கற்பில் சிறந்து அறவழியில் செல்லுதலுக்கு கணவனுக்கு உதவினாள். அடியார்க்கு நல்லான் பெயருக்கு ஏற்றாற்போல் சிவனடியார்களிடத்தில் பேரன்பு கொண்டவன். தன்னுடைய வேளாண்மையில் விளைந்த பொருட்களில் ஆறில் ஒரு பகுதியை அரசுக்கு வரி செலுத்தி மீதி உள்ளதை சிவனடியார்களுக்கு திருவமுது செய்விதல் என்னும் சிறப்பான சேவையை செய்து வந்தான்.

தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் அடியார்களுக்கு திருவமுது செய்விக்க பயன்படுத்தினான். இதனால் நாளடைவில் அடியார்க்கு நல்லானிடம் திருவமுது உண்ணும் சிவனடியார்களின் கூட்டம் பெருகியது.
இந்நிலையில் இறைவனார், அடியார்க்கு நல்லான் தன்னுடைய செல்வம் குறைந்தபோதிலும் சிவனடியார்க்கு செய்யும் திருவமுது செய்வித்தலை குறையாக‌க் கொள்ளமாட்டான் என்ற உயர்ந்த பண்பினை உலகுக்கு உணர்த்த விரும்பினார்.

சொக்கநாதரின் சோதனை
நாளடைவில் அடியார்க்கு நல்லானின் விளைநிலங்களில் விளைச்சல் குறையத் தொடங்கியது. இதனால் அவனிடம் இருந்த செல்வவளம் குன்றியது.
எனினும் அடியார்க்கு நல்லான் பிறரிடம் கடன் வாங்கி சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்தான். ஒரு கட்டத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்காததால் அடியார்க்கு நல்லானுக்கு யாரும் கடன் தரவில்லை. அடியார்க்கு நல்லானும், தரும சீலையும் வறுமையால் சிவனடியார்களுக்கு திருவமுது செய்யவும் இயலாமல் பலநாட்கள் பட்டினி கிடந்தனர்.
இறுதியில் அடியார்க்கு நல்லான் தன்னுடைய மனைவியான தரும சீலையுடன் சொக்கநாதரின் சந்நிதிக்குச் சென்றான். “அப்பனே, என்னுடைய விளைநிலங்களில் விளைச்சல் இல்லை.
எனவே பிறரிடம் கடன்வாங்கி அடியார்களுக்கு திருவமுது செய்வித்தேன். இப்போது எனக்கு கடன் கொடுப்பார் யாரும் இல்லை. தயவுகூர்ந்து தாங்கள் கடன் தருவார் யாரேனும் உள்ளரேல் அவரைக் காட்டுங்கள்.

அவரிடம் கடன்பெற்று அடியார்களுக்கு திருவமுது செய்விப்பேன். இல்லையேல் எங்களுடைய உயிரினை விட்டுவிடுவோம்” என்று மனமுருகி வழிபட்டான்.

சொக்கநாதர் உலவாக்கோட்டையை அருளல்
அடியார்க்கு நல்லானின் வழிபாட்டினைத் தொடர்ந்து வானில் இறைவனார் “வேளாளனே, அஞ்சற்க. உன் வீட்டில் செந்நெல்லாகிய வெள்ளிய அரிசிக் கோட்டை ஒன்றைச் சேர்த்துள்ளோம்.
அஃது எப்பொழுது எடுத்தாலும் அள்ள அள்ளக் குறையாதது. அதனைக் கொண்டு அடியவர்களுக்கு திருவமுது செய்விக்கும் தொண்டினையும், பிற தருமங்களையும் செய்து வருவாயாக. இறுதியில் யாம் வீடுபேற்றினை அளிக்கின்றோம்” என்று திருவாக்கு அருளினார்.
அதனைக் கேட்ட அடியார்க்கு நல்லான் மகிழ்ந்து இறைவனாரை பலவாறு துதித்து வழிபாடு மேற்கொண்டு தன்னுடைய மனைவியுடன் தன்வீடு திருப்பினான்.

அங்கு இறைவனாரின் அருட்கொடையினால் அரிசிக்கோட்டையைக் கண்டான். நாள்தோறும் தன் மனைவியுடன் அதனை முறைப்படி வழிபட்டு அதிலிருந்து உணவுக்குத் தேவையானவற்றைப் பெற்று அடியார்களுக்கு திருவமுது செய்துவித்து நல்ல முறையில் வாழ்ந்து வந்தான். இறுதியில் இறையருளால் வீடுபேறு பெற்றான்.

உலவாக்கோட்டை அருளிய படலம் கூறும் கருத்து
தானத்தில் சிறந்தது அன்னதானம். அதற்கு இறைவனார் அருள்புரிவார் என்பதே உலவாக்கோட்டை அருளிய படலம் கூறும் கருத்தாகும்.