கண்ணன் கதைகள் – 53

கோபிகைகளுக்கு உத்தவர் சேதி சொல்லுதல்

குருவாயூரப்பன் கதைகள்

பிறகு கிருஷ்ணர் பலராமனுடன், ஸாந்தீபனி முனிவரிடம் அறுபத்து நான்கு நாட்களிலேயே பல வித்தைகளையும், கல்விகளையும் கற்றார். குருதக்ஷிணையாக, இறந்த அவரது மகனை யமலோகத்திலிருந்து மீட்டு, அவரிடம் கொடுத்தார். பின்னர் மதுரா நகரத்தை அடைந்தார்.

பிருந்தாவனத்தில் கோபிகைகள், கிருஷ்ணரை நினைத்து மிகவும் துயரம் அடைந்தார்கள். அதனை அறிந்த கிருஷ்ணர், அவர்கள் மீது கருணை கொண்டு, தனது நண்பரும், சிறந்த பக்தருமான உத்தவரை அவர்களிடம் சேதி சொல்ல அனுப்பினார். எவ்வுலகிலும் காண முடியாத கோபிகைகளின் அன்பையும், பக்தியையும் உத்தவருக்குக் காண்பிக்க நினைத்து, அவரை அங்கு அனுப்பினார். உடனே உத்தவர் புறப்பட்டு, கோகுலத்திற்கு மாலையில் சென்றார். கிருஷ்ணனைப் பற்றிய செய்திகளைக் கூறி நந்தகோபரையும், யசோதையையும் சந்தோஷமடையச் செய்தார். நந்தனுடைய வீட்டின் அருகில் தேர் நிற்பதைப் பார்த்த கோகுலத்துப் பெண்கள், உத்தவர் வந்திருப்பதை அறிந்து, எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு நந்தனின் வீட்டை அடைந்தனர். கண்ணனுடைய பல்வேறு செயல்களையும் விளையாட்டுக்களையும் மீண்டும் நினைத்துப் பேச முடியாமல் ஆனார்கள். தடுமாற்றத்துடன் தயங்கிக் கொண்டு உத்தவரிடம் பேச முயன்றார்கள். “உத்தவரே! இரக்கமற்ற அந்தக் கண்ணன், தன் பெற்றோரைப் பார்ப்பதற்காக உங்களை அனுப்பினானா? நகரத்துப் பெண்களால் கவரப்பட்ட அவன் எங்கிருக்கிறான்? நாதனே! காக்க வேண்டும். உமது முத்தங்களையும், தழுவல்களையும், பேச்சுக்களையும், அழகிய விளையாட்டுக்களையும் யாரால் மறக்க முடியும்?” என்று அரற்றினார்கள். இவ்வாறு பலவிதமாய்ப் புலம்பிய கோபிகைகளிடம், உத்தவர் தத்துவங்கள் பொதிந்த கண்ணனின் சேதியைக் கூறி, சமாதானம் செய்தார். அதனைக் கேட்ட கோபியர்கள் மகிழ்ந்தனர். உத்தவர், அவர்களோடு கிருஷ்ணனின் செய்கைகளையும், விளையாட்டுக்களையும் பற்றிப் பேசிக்கொண்டு சில தினங்களை அங்கே கழித்தார். கோகுலத்தில், எப்பொழுதும், எல்லாரும் கிருஷ்ணனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டு வேலைகள் செய்யும்போது கூட, அவருடைய லீலைகளையே பாடிக் கொண்டிருந்தார்கள். தூக்கத்திலும் கிருஷ்ணனைப் பற்றியே பேசினார்கள். அவர்களது செய்கைகள் யாவும் கிருஷ்ணனை அனுசரித்தே இருந்தன. அனைத்து செயல்களும் கிருஷ்ணமயமாக இருந்தது. இதைக் கண்ட உத்தவர் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தார்.

உத்தவர் ராதையிடம், “ராதையே! உன் கிருஷ்ணன் பூக்களைக் கண்டால், இது என் ராதைக்கு மிகவும் பிரியமானது என்பார். நான் பேசினால் ராதையும் இவ்வாறுதான் பேசுவாள் என்றும், நான் பேசாவிட்டால், கோபம் கொண்ட ராதையைப் போல் என் பேசாமல் இருக்கிறாய்? என்றும் என்னைக் கேட்பார்” என்று கூறி, தாமரைக்கண்களுடைய ராதையை ஆனந்தமடையச் செய்தார். “ நான் சீக்கிரமே திரும்பி வருவேன். மிகுந்த கார்யங்களினால் வரமுடியவில்லை. பிரிவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். என்னைப் பற்றிய நினைவுகள் எப்போதும் உங்களுக்கு இருப்பதால் வெகு விரைவில் உங்களுக்கு பிரும்மானந்த சுகம் கிட்டப் போகிறது. அப்போது உங்களுக்கு பிரிவும், சேர்க்கையும் சமமான ஆனந்தத்தை அளிக்கும்” என்று கிருஷ்ணன் கூறியதை, உத்தவர் கோபிகைகளிடம் கூறி சமாதானப் படுத்தினார். இவ்விதமான அன்பையும், பக்தியையும் எந்த உலகிலும் கண்டதில்லை, கேட்டதில்லை. தவம் செய்வதாலோ, வேதங்களைக் கற்பதாலோ என்ன பயன்? கோபிகைகளை நமஸ்கரித்துத் தொழுதாலே போதும் என்று எவ்வுலகிலும் காண முடியாத கோபிகைகளின் அன்பையும், பக்தியையும் மெய்மறந்து, ஆனந்தத்துடன் கூறிக்கொண்டு உத்தவர் கோகுலத்திலிருந்து மதுரா திரும்பினார்

மதுராவில், ஸைரந்திரி கிருஷ்ணரைப் பற்றியே நினைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் அவருடைய வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். தன் இல்லத்தையும், தன்னையும் நன்கு அலங்கரித்துக் கொண்டு காத்திருந்தாள். கிருஷ்ணன் உத்தவருடன் அவளது இல்லத்திற்குச் சென்றார். அவளது நீண்டநாள் எண்ணம் நிறைவேறியது. அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த அவள், கிருஷ்ணனைப் பலவிதமாகப் பூஜித்தாள். கிருஷ்ணன் அவளிடம் வேண்டிய வரம் கேள் என்று கூற, அவளும், பல இரவுகள் கண்ணனோடு கழிக்கும் விஷய சுகத்தையே வரமாக வேண்டினாள். பிறகு, சில இரவுகள் அவளுடன் தங்கி அவளுக்கு ஆனந்தத்தை அளித்து அவளுக்கு உபஶ்லோகன் என்ற புத்திரனையும் அளித்தார். அந்த உபஶ்லோகன், நாரத முனிவரிடம் இருந்து பாஞ்சராத்ர ஆகமத்தை உபதேசம் பெற்று அதில் பிரசித்தனாக விளங்கினான். பின்னர், கிருஷ்ணர் பலராமருடனும், உத்தவரோடும் அக்ரூரரின் வீட்டை அடைந்தார். அவருடைய வரவால் மிகவும் மகிழ்ந்த அக்ரூரர், அவர்கள் அனைவரையும் நன்கு வரவேற்று உபசரித்து, பூஜித்துத் துதித்தார். அவரை நகரத்திற்கு அனுப்பி, குந்தியின் புத்திரர்களான பாண்டவர்கள் காட்டிலிருந்து நகருக்குத் திரும்பி வந்ததைப் பற்றியும், திருதராஷ்ட்ரனின் கெட்ட செயல்களைப் பற்றியும் அறிந்தார்கள்.

ஜராஸந்தன் என்பவன், தன் நண்பனும், மாப்பிள்ளையுமான கம்ஸனின் வத

ம் பற்றிக் கேள்விப்பட்டு, மிகுந்த கோபம் கொண்டு, மதுராநகரத்தை அழித்தான். சிறிய படையையுடைய கிருஷ்ணர், தேவலோகத்திலிருந்து பலராமனுக்குக் கிடைத்த தேர் முதலியவற்றால், அவனது இருபத்திமூன்று அக்ஷௌஹிணிப் படைகளை முறியடித்தார். பலராமன் ஜராஸந்தனைக் கட்டி வைத்தார். அவனோடு யுத்தம் செய்ய ஆசைகொண்ட கிருஷ்ணன் அவனை விடுவித்தார். ஏனெனில், அனைத்து அரசர்களையும் வென்று, அவர்களது சேனைகளையும் அடைந்த ஜராஸந்தனைப் போன்ற வீரன் அப்போது யாரும் இல்லை. தோல்வியடைந்த ஜராஸந்தன், மற்ற அரசர்களின் உதவியுடன் பதினாறு முறை கண்ணனோடு யுத்தம் செய்தான். அவனது முன்னூற்று தொண்ணூற்று ஒன்று அக்ஷௌஹிணிப் படைகளையும் கிருஷ்ணர் அடித்துக் கொன்றார். அவனுடன் பதினெட்டாவது முறை யுத்தம் ஆரம்பிக்கும்முன், மூன்று கோடி யவனர்களுடன் ஒரு யவனன் படையெடுத்து வருவதை அறிந்த கண்ணன், உடனே, விஸ்வகர்மாவைக் கடலின் நடுவில் ஒரு நகரை உருவாக்கச் சொல்லி, அதில் மக்கள் அனைவரையும் குடியேறச் செய்தார். பிறகு, தாமரை மாலையணிந்து, நகரத்திலிருந்து வெளியே வந்தார். யவனர்களின் தலைவன் பின்தொடர்ந்து வந்தான். உடனே கிருஷ்ணர் ஒரு மலைக்குகையில் மறைந்தார். தொடர்ந்து வந்த யவனன், கிருஷ்ணன் என்று நினைத்து, குகையில் தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தன் என்ற அரசனைக் காலால் உதைத்தான். விழித்த முசுகுந்தன், அந்த யவனனை, தன் பார்வையால் சாம்பலாக்கினான். அப்போது கிருஷ்ணன், குகையில், பக்தனான முசுகுந்தனுக்கு காட்சி கொடுத்தார். “எனக்கு அரச வாழ்வில் விருப்பம் இல்லை. தங்கள் அனுக்ரஹம் ஒன்றே வேண்டுகிறேன்” என்று முசுகுந்தன் துதித்ததைக் கேட்ட கிருஷ்ணன் மகிழ்ந்து, எல்லா துக்கங்களையும் போக்கும் பக்தியையும், அதன்பின் முக்தியையும் அவனுக்கு வரமாக அளித்தார். வேட்டையாடி உயிரினங்களைக் கொன்ற தோஷம் நீங்க அவனைத் தவம் செய்யச் சொன்னார்.

பிறகு கிருஷ்ணர் மதுராநகரம் சென்றார். யவனன் அழைத்து வந்த சேனைகளை அழித்தார். வழியில், ஜராஸந்தன் தடுத்தான். அவனுக்குக் கடைசியான வெற்றியைக் கொடுத்து, ஓடி ஒளிந்து கொள்வதுபோல் பாவனை செய்து, கடலின் நடுவே உள்ள துவாரகா நகரை அடைந்தார்.

Leave a Comment