ஆதிசங்கரர் பற்றிய முழு வாழ்க்கை வரலாறு | Aadhi Sankarar History in Tamil

(சற்று நீண்ட பதிவு பொறுமையாக முழுவதும் படித்து சங்கரரின் வரலாற்றை தெரிந்து கொள்வோம்.)

கி.பி. நான்காம் நூற்றாண்டில், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் கடவுள் பக்தி கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது புத்திர பாக்கியத்திற்காக திருச்சூர் வடக்குநாதரிடம் வேண்டி கடுமையான விரதங்களை மேற்கொண்டனர். ஒரு நாள் சிவகுருவின் கனவில் தோன்றிய சிவன், குறைந்த ஆயுளுடன் எல்லா நற்குணங்களும் ஞானமும் கொண்ட புத்திசாலிப் பிள்ளை வேண்டுமா? அல்லது நீண்ட ஆயுளை உடைய சாதாரண மகன் வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு சிவகுரு, புத்திசாலி குழந்தைதான் வேண்டும் என்றார். சிவகுருவின் கனவைக் கேட்ட ஆர்யாம்பாள் மனமகிழ்ந்து ஒரு ஞானக்குழந்தை தன் மகனாகப் பிறப்பான் என்று எண்ணி ஆனந்தம் அடைந்தாள்.

வைகாசி மாதம் பஞ்சமியன்று சூரியன், செவ்வாய், சனி, குரு ஆகிய நான்கு கிரஹங்கள் உச்சத்தில் இருக்கும் சுபவேளையில் இறைவனின் அருளால் தெய்வீகக் குழந்தை இந்த பூமியில் அவதரித்தது. பிள்ளையில்லா தசரதனுக்கு மகாவிஷ்ணுவே ராமராக அவதரித்தது போல, சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு ஈசுவரனே குழந்தையாகப் பிறந்தது பெரும் பாக்கியமே. பிள்ளை பிறந்த மகிழ்ச்சியில் சிவகுரு தானஷ தருமங்கள் செய்து சான்றோர்களுக்கு விருந்தளித்து கொண்டாடினார். ஜோதிடர்கள் இவன் ஒரு பெரிய ஞானியாவான் என்று கூறினார்கள்.

இளம் குழந்தையைச் சுற்றி நாகமொன்று சிறிது நேரம் விளையாடிய பின், விபூதியாகவும் ருத்ராட்சமாகவும் மாறியதாலும், உடலில் சிவச்சின்னங்கள் இருந்ததாலும் குழந்தைக்கு சங்கரர் என்று பெயர் சூட்டப்பட்டது. குறும்புக் கண்ணனைப் போலவே, குட்டிச் சங்கரரும் குழந்தை பருவத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம், ஏராளம். இரண்டு வயதிலேயே சங்கரர் எழுத்துக்களை வாசிக்க வல்லவரானார். படிக்காமலேயே காவியம் முதலியவற்றை அறிந்தார்.

குழந்தைக்கு மூன்று வயது ஆகும்போதே தந்தை சிவகுரு காலமானார். மிகவும் துக்கமடைந்த தாய் ஆர்யாம்பாள் உறவினர்களின் உதவியுடன் அவருக்கு பூணூல் போட்டு, தகுந்த குருவிடம் வேதம், சாஸ்திரம் முதலியவைகளை பயில சேர்த்து விட்டார். இவர் சிவனின் அவதாரமானதால் குருவால் கூறப்பட்டதை எல்லாம் ஒரு தடவையிலேயே புரிந்து கொண்டார். அத்துடன், அறிய வேண்டிய சகல முக்கிய சாஸ்திரங்களையும், இரு வருடங்களுக்குள்ளேயே கற்றுக் கொண்டார்.
————————————————————————————————————————————
கனகதாரா ஸ்தோத்திரம் – இரண்டு…

குருகுலவாசம் செய்யும் காலத்தில் தினந்தோறும் பிட்சை எடுத்து குருவிற்கு அர்பணித்து விட்டு பிறகு உண்பது சங்கரரது வழக்கமாக இருந்தது. ஒருநாள் ஒரு ஏழை அந்தணர் அயாசகன் வீட்டு வாசலில் நின்று கொண்டு சங்கரர், பவதி பிக்ஷாம் தேஹி என்றார். ஒளிவீசும் முகத்துடன் திகழும் இந்த சிறுவனுக்கு கொடுக்கக் கூடியதாக தன்னிடம் ஏதுமில்லையே என்று அந்த ஏழையின் மனைவி வருந்தினாள். பின் வீடு முழுவதும் தேடி, உலர்ந்து போன நெல்லிக்கனி ஒன்றை சங்கரருக்கு தானமாக அளித்தாள்.

இந்த கருணைச் செயல் சங்கரரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. வறுமையில் வாடும் போதே தானம் கொடுக்கும் எண்ணம் கொண்ட இவளிடம் செல்வம் இருந்தால் அது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைத்த சங்கரர், அக்குடும்பத்தின் வறுமை நீங்க லட்சுமி தேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடித்துதித்தார்.

19வது ஸ்லோகம் பாடி முடித்த போது அந்த ஏழையின் வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனியை நிரப்பி மஹா லக்ஷ்மி பொன் மழை பொழிந்தாள். இந்த நிகழ்ச்சி ஒரு அட்சய திரிதியை நாளில் நடந்தது.

[இதன் அடிப்படையில் தான் இப்போதும் கூட அட்சய திரிதியை நாளில் காலடி கிருஷ்ணன் கோவிலில் கனகதாரா யாகம் நடைபெறுகிறது.] சங்கரர் ஏழு வயதிற்குள் எல்லா வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்று முடித்து குருகுலத்திலிருந்து தன் இல்லம் வந்து தன் தாய்க்கு பணி விடை செய்து வந்தார்.
————————————————————————————————————————————
பால லீலை – மூன்று

தினந்தோறும் சங்கரரின் தாய் ஆர்யாம்பாள் குளிப்பதற்கு வெகு தொலைவில் உள்ள பூர்ணா நதி சென்று நீராட வேண்டியிருந்தது. இதனால் மிகவும் சிரமப்படுவதாக எண்ணிய சங்கரர் நதி தேவதையைப் பிரார்த்தித்தார். உடனே அந்த நதி பராசக்தியின் உத்தரவின் பேரில் தன் திசையை மாற்றிக் கொண்டு சங்கரரின் வீட்டிற்குப் பக்கத்தில் ஓட ஆரம்பித்தது. [இந்த நதி தான் தற்போது காலடியருகில் ஓடும் பூர்ணா நதி.] இதைக் கண்ட மக்கள் அனைவரும் வியப்புற்று தங்களுக்கு ஒரு ம ழான் கிடைத்து விட்டதாக எண்ணி ஆனந்தம் அடைந்தனர்.

சங்கரரின் பெருமையை கேள்விப்பட்ட கேரள தேசத்து அரசன் ஒரு சமயம் யானை முதலிய காணிக்கைகளுடன் தன் மந்திரியை சங்கரரிடம் அனுப்பினார். இது கண்ட சங்கரர் பிரம்மச்சாரியான தனக்கு இது ஒன்றும் தேவையில்லை என்று கூறி காணிக்கைகளைத் திருப்பி அனுப்பிவிட்டார். இதைக் கேட்ட அரசன் தானே சங்கரரின் இருப்பிடத்திற்கு வந்து அவரை வணங்கி சந்தோஷம் அடைந்தான்.

பதினாராயிரம் பொன்களையும், தான் இயற்றிய மூன்று நாடகங்களையும் சங்கரருக்கு சமர்ப்பித்தார். நூல்களின் பெருமையைப் பாராட்டிய சங்கரர் அரசனைப் பார்த்து இந்த பொன் எனக்கு அவசியமில்லை. உன் ராஜ்யத்தில் உள்ளவர்க்கே கொடுப்பாய் என்று சொன்னார். தனக்கு நற்குணங்கள் நிறைந்த புதல்வன் பிறக்க வேண்டும் என்று அரசன் வரம் கேட்க, புத்திரகாமேஷ்டி யாகம் செய்து புத்திரனை பெறுவாய் என்று சங்கரர் அனுக்ரஹித்தார்.

ஏழுவயதுக்குள்ளாகவே இவ்வளவு ஞானமும், வைராக்கியமும், தவமும் பெற்ற சங்கரர், உலகத்தை ரக்ஷிக்க அவதரித்த பரமேஸ்வரரின் அவதாரம் தான் என்பதை நாம் அறியலாம்.
————————————————————————————————————————————
பகுதி நான்கு துறவறம்: ஒரு நாள் உபமன்யு, ததீசி, கௌதமர், அகஸ்தியர் முதலிய மாமுனிவர்கள் சங்கரரின் இல்லத்திற்கு வந்தனர். அவர்களை தகுந்த மரியாதையுடன் உபசரித்த ஆரியாம்பாள், எனது குழந்தை மிகச் சிறுவயதிலேயே மிகப்பெரிய வித்வானாகவும், செயற்கரிய செய்கை உடையவனாகவும் திகழக் காரணம் என்ன என்று அம்முனிவர்களிடம் கேட்டாள். அகத்தியர் சிவபெருமானே இந்த திருக்குழந்தையாக அவதாரம் செய்திருப்பதாகவும், பதினாறு வயதே இவன் ஆயுள். ஆனால் சில காரணங்களுக்காக வியாசரின் அருளால் மீண்டும் 16 ஆண்டு கிடைக்கும் என்று கூறி மறைந்தனர்.

இதைக்கேட்ட ஆர்யாம்பாள் மிகுந்த வருத்தம் அடுந்தாள். சிறுவயதில் இருந்தே சங்கரருக்கு, உலகைத் துறந்து சன்னியாசி ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்குத் தம் அன்னையின் அனுமதியைக் கேட்டார். ஆனால் அதற்கு ஆர்யாம்பாள் அனுமதி தர மறுத்து விட்டாள்.

ஒருநாள் குளிப்பதற்காக தாயுடன், சங்கரர் பூர்ணா நதிக்குச் சென்றார். அப்பொழுது ஒரு முதலை சங்கரரின் காலைப் பற்றிக் கொண்டது. சங்கரர் உரத்த குரலில், அம்மா! முதலை என்னை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. சன்னியாசி ஆக எனக்கு அனுமதி கொடு. அப்பொழுது தான் முதலை என் காலைவிடும் என்று சொன்னார். செய்வதறியாது தவித்த ஆர்யாம்பாள் சங்கரர் சன்னியாசி ஆகலாம் என்று அனுமதி கொடுத்தார். உடனே சங்கரர் அதற்குரிய மந்திரங்களை சொல்லி துறவறம் மேற்கொண்டார். இதனால் முதலை சங்கரரின் காலை விட்டு விட்டது.

பிரம்மாவின் சாபத்திற்கு உட்பட்ட ஒரு கந்தர்வன் தான் அந்த முதலையாக மாறியிருந்தான். சங்கரரின் கால்பட்டதும் சாபவிமோசனம் பெற்ற கந்தர்வன் சங்கரரை வணங்கி வாழ்த்தி விட்டு தன் இருப்பிடம் சென்றான். கரைக்கு வந்த சங்கரர் வீட்டிற்கு வராமல், துறவியாய் உலக சஞ்சாரம் செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் உன்னை கவனித்துக் கொள்வார்கள் என்றும் தாயிடம் கூறினான். அதற்கு தாய், என் கடைசிக்காலத்தில் நீயே வந்து எனக்கு இறுதிக் கடன்களை செய்ய வேண்டும் என்று கேட்க, அதற்கு சங்கரர் ஒப்புக் கொண்டு சன்னியாசம் புறப்பட்டார்.

அதற்கு முன் தாயார் வழிபாடு செய்வதற்காக பூர்ணாநதியின் கரையில், தன் கைகளால் ஒரு கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தார். இதுவே தற்போது காலடியில் உள்ள திருக்காலடியப்பன் கோவிலாகும். இந்த சிலை குருவாயூர் கிருஷ்ணர் சிலையைப் போலவே “அஞ்சனா என்ற உலேகாத்தால் ஆனது.

குரு கோவிந்தபாதர்…

காலடியிலிருந்து சன்னியாசிகளுக்கு உரித்தான காவி உடையில் இருந்த சங்கரர் ஒரு குருவைத் தேடிப் பாதயாத்திரை சென்றார். பல மாதங்களுக்குப் பின்னர் சங்கரர் நர்மதைக் நதிக் கரைக்கு வந்தார். அங்கிருந்த ஒரு குகையில் மிகப்பெரிய ஞானியான கோவிந்தபாதர் வசித்து வந்தார். ஆதிசேஷனின் அவதாரமாகிய அவரை சங்கரர் வணங்கி, தம்மை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார்.

கற்று உணர்ந்ததை எல்லாம், அனைவரும் ஏற்கும் அளவுக்கு, எளிமையாக எடுத்துக் கூறும் திறனைப் பெற்றதோடு, மாற்றுக் கருத்துக்களுக்கும், முழுமையடையாத சித்தாந்தங்களுக்கும், முதிர்ச்சி பெறாத போதகர்களுக்கும் எதிராக வாதமிட்டு அத்வைத தத்துவத்தை நிலைப்பிக்கும் திறமையையும், குருவருளால் ஆதிசங்கரர் விரைவிலேயே பெற்றார்.
————————————————————————————————————————————
முதல் சீடர் பத்மபாதர்: குருவின் விருப்பபப்படி சங்கரர் காசிக்குச் சென்று கங்கையின் புனித நதிக்கரையில் தங்கினார். வேதங்களையும், உபநிடதங்களையும் கற்க எத்தனையோ சீடர்கள் இவரை வந்தடைந்தனர். சில காலம் காசியில் தங்கியிருந்து விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்குவதும், சீடர்களுக்கு வேதபாடம் சொல்லிக் கொடுப்பதுமாக இருந்தார். இவரை அடைந்த சீடர்களில் சனந்தனன் என்ற ஒரு சீடரும் இருந்தார். மிகச் சிறந்த அறிவாளி.

ஒருநாள் இவர் கங்கையின் எதிர்க்கரையில் இருந்தார். வகுப்பு நேரம் நெருங்கி விட்டது, ஆற்றைக் கடக்க எண்ணிக்கொண்டிருக்கையில் கங்கையில் திடீரென்று வெள்ளம் ஏற்பட்டது. வகுப்பைத் தவறவிட்டு விடுவோமோ என்று கவலைப்பட்ட அவர், தன் குருவை மனதில் நினைத்துக் கொண்டு ஆற்றில் இறங்கினார். இவரின் குருபக்தியைப் பார்த்த கங்கா தேவி, இவரின் பாத அடிகளை தாமரை மலரால் (பத்மத்தால்) தாங்கிக் கொள்கிறது. அன்று முதல் இவர் பத்மபாதர் ஆனார்.

இவர் தான் சங்கரரின் முதல் சீடர். காசியில் இருந்த போது சங்கரர் முக்கிய இறை நூல்களான பகவத்கீதை, பிரம்ம சூத்ரம், உபநிடதங்கள் போன்றவற்றுக்கு பாஷ்யங்கள் (விளக்கவுரை) எழுதினார்.
————————————————————————————————————————————
விஸ்வநாதரின் திருவிளையாடல்

ஒரு நாள் கங்கையில் நீராடி விட்டு, காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு, சங்கரர் தம் சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சிவ பெருமான், சங்கரரிடம் திருவிளையாடல் புரியத் தொடங்கினார். நான்கு வேதங்களையும், நான்கு நாய்களாக அழைத்துக் கொண்டு ஒரு சண்டாளன் [தீண்டத்தகாதவன்] உருவில் அவர் முன் தோன்றினார். அவனைப் பார்த்து சங்கரர், சண்டாளனே! விலகிப் போ என்றார். அதற்குச் சண்டாளன் சிரித்துக் கொண்டே, எதை விலகிப்போகச் சொல்கிறீர், இந்த சரீரத்தையா அல்லது அதன் உள்ளிருக்கும் ஆன்மாவையா. தாங்களோ எல்லோருக்கும் இரண்டும் வேறல்ல என்ற அத்வைதக் கொள்கையை போதித்து வருகிறீர்களே! வேற்றுமை இல்லாத உங்களுக்கு இப்போது எப்படி இந்த வித்தியாசம் தோன்றியது? என்று வினவினார்.

இதைக் கேட்ட சங்கரர் எவன் இப்படி ஆத்ம நிலையை அடைந்திருக்கிறானோ அவன் சண்டாளனாயிருந்தாலும் சரி, பிராமணனாக இருந்தாலும் சரி, அவனே என் குரு என்ற பொருள் பட “மனீஷா பஞ்சகம்” என்று போற்றப்படும் ஐந்து ஸ்லோகங்களைப் பாடி சாஷ்டாங்கமாக சண்டாளன் காலில் விழுந்தார். உடனே சண்டாளன் மறைந்து போய், ஜடை, மகுடம், சந்திரன் முதலியவைகளை அணிந்திருந்த காசி விஸ்வநாதர் நான்கு வேதங்களுடன் அவருக்கு தரிசனம் கொடுத்தார். வியாசமுனிவரின் பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கவுரை எழுதுக என்று கூறி விட்டு மறைந்தார்.
————————————————————————————————————————————
வேதவியாசரை சந்தித்தல்….

சங்கரர் எழுதியிருந்த பிரம்மசூத்ர பாஷ்யத்தைப் பற்றி வாதிடுவதற்காக அதன் மூலநூலான பிரம்ம சூத்ரத்தை எழுதிய வியாசரே வயதான அந்தணர் வடிவில் சங்கரரைக் காண வந்தார். சங்கரர் தன் சீடர்களுக்கு பிரம்மசூத்ர விளக்கவுரையை கற்பித்துக் கொண்டிருந்தார். தம்மோடு விவாதிக்கும் படி கூறிய முதியவர், மூன்றாவது பிரிவின் முதலாவது சூத்திரமான ததனந்தரப்ரதிபத்தைள என்ற சூத்திரத்திற்கு என்ன உரை எழுதியிருக்கிறாய் என்று கேட்டார். சங்கரர் கூறிய விளக்கத்தைக் கேட்டு திருப்தியடைந்தார் முதியவர். இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சங்கரரின் சீடரான பத்மபாதர், பிரம்ம சூத்திரம் எழுதிய வேத வியாசர் தான் வந்துள்ளது என்பதை உணர்ந்தார். உடனே பத்மபாதர் இருவரின் காலிலும் விழுந்து, சங்கரரோ சிவ பெருமானின் அவதாரம். வேதவியாசரோ சாட்சாத் நாராயணனே ஆகும். இந்த இருவரும் இப்படி விவாதித்தால் என்னைப் போன்ற வேலைக்காரன் என்ன செய்ய முடியும் என்று கேட்டார். வந்தவர் வியாசர் என்று தெரிந்ததும், சங்கரர் தம் விவாதத்தை நிறுத்தி, மிக்க மரியாதையுடன் அவர் காலில் விழுந்தார்.

வியாசர் அவரை மனம் குளிர ஆசிர்வதித்தார். என்னுடைய சூத்திரங்களுக்கு தகுந்த முறையில் அவைகளின் உட்கருத்தை நன்கு வெளிக்கொண்டு வரும் முறையில் உரை எழுதியிருக்கிறாய். எனவே நீ இந்த விளக்க உரையை உலகில் பிரசாரம் செய்வாயாக என்றும் கூறினார். அதை கேட்ட சங்கரர், தனக்கு ஏற்பட்ட ஆயுள் 16 ஆம் முடிந்து விட்டபடியால் கங்கையில் உள்ள மணிகர்ணிகா படித்துறையில் தம் உடலைத் தியாகம் செய்யப் போவதாக கூறினார். அதற்கு வியாசர் உலக நன்மைக்காக இன்னும் பல காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது எனவே மேலும் 16 ஆண்டுகள் நீ பூமியில் வாழ்வாயாக! என்று வரம் கொடுத்து மறைந்தார்.

வியாசரின் அருளால் சங்கரரின் வாழும் காலம் இரட்டிப்பாக்கப்படுகிறது. பிறப்பில் விதிக்கப்பட்ட வெறும் 16 வயதுடன், பரம்பொருளை உலகிற்கு உணர்த்துவிப்பதற்காக இன்னும் 16 வயது சேர்த்து சங்கரரின் வயது 32 வயதானது.
————————————————————————————————————————————
குமரில பட்டரும், மண்டன மிஸ்ரரும்: வியாசரின் அறிவுரைப்படி இமயம் முதல் குமரி வரை பல ஊர்களுக்கும் சென்று அத்துவைத தத்துவத்தை பிரசாரம் செய்தார். பிரயாகை என்னும் ஊரில் குமரிலபட்டர் என்னும் பெரிய அறிஞர் இருந்தார். இவர் வேதங்களை முழுவதும் கற்றறிந்தவர். யாகங்கள் செய்வதிலும் வல்லவர் என்பதை அறிந்த சங்கரர் இவர் இருக்குமிடம் வந்து சேர்ந்தார். பௌத்த மதத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக ஒரு பௌத்தரைப் போல வேஷம் போட்டுக் கொண்டு, ஒரு பௌத்த மடத்தில் சேர்ந்தார் குமரிலபட்டர். அங்கு பாடம் கற்றுக்கொண்டிருக்கும் போது, ஒரு பௌத்த குரு வேதங்களை கண்டனம் செய்வதைக் கேட்டு மனம் தாங்காமல் அழுதார். இதைக் கண்ட பௌத்த குரு, இவன் உண்மையான பௌத்தர் அல்லர் என்று அவரை ஓர் உயர்ந்த கட்டிடத்தின் மேல் மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டார்.

வேதம் உண்மையாகில் என் உயிர் காப்பாற்றப்படட்டும் என்று கூறி கீழே விழுந்தும் ஒரு கண்ணை மட்டும் இழந்து உயிர் பிழைத்துக் கொண்டார். பௌத்த மதத்தை கண்டித்து நூல்களை இயற்றி, பௌத்த குருவிற்கு துரோகம் செய்ததற்கு பிராயச்சித்தமாக உமித்தீயில் தன் உடலை தியாகம் செய்ய எண்ணி தீயில் இறங்கிக் கொண்டிருந்தார். இதை அறிந்த சங்கரர், வேதத்தை பழிப்பவர்களை கண்டிக்க அவதாரம் செய்த முருகப்பெருமானே நீர் என்று அறிந்து கொண்டேன். எனது நூல்களுக்கு நீ தான் உரை எழுத வேண்டும் என்றார். தனக்கு அதில் விருப்பமில்லை என்பதை உணர்த்திய குமரிலபட்டர், நர்மதை நதிக்கரையில் உள்ள மகிஷ்மதி நகரில் மண்டனமிஸ்ரர் என்னும் வேத விற்பன்னர் வசிப்பதாகவும், அவரோடு வாதிக்கும் படியும் கூறினார்.

குமரில பட்டருக்கு பிரம்ம தத்துவத்தை உபதேசம் செய்து விட்டு அவரிடம் விடைபெற்றுக் கொண்டு சங்கரர் மகிஷ்மதி நோக்கிச் சென்றார்.
————————————————————————————————————————————
சரஸ்வதி முன்னிலையில் வாதம் செய்தல்

சங்கரரும், அவருடைய சீடர்களும் நர்மதை நதியில் நீராடிவிட்டு, மண்டன மிஸ்ரரின் வீட்டை அடைந்தார். அவரது வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது. சங்கரர் தம் யோக சக்தியைக் கொண்டு உள்ளே நுழைந்தார். உள்ளே அவரது தந்தையாருக்கு திதி நடந்து கொண்டிருந்தது. திதி முடியும் வரை காத்திருந்த சங்கரர், மண்டன மிஸ்ரரை வாதத்திற்கு அழைத்தார். மண்டன மிஸ்ரரின் மனைவி உபயபாரதியும் மிகச்சிறந்த பண்டிதை.

உபயபாரதியை நடுவராக நியமித்து இருவர் கழுத்திலும் மாலை இடப்படுகிறது. யார் கழுத்தில் உள்ள மாலை வாடுகிறதோ அவர் போட்டியில் தோற்றவராவர் என முடிவு செய்யப்பட்டது. சங்கரர் தோற்றால் இல்லற வாழ்க்கையும், மண்டனமிஸ்ரர் தோற்றால் சன்னியாச வாழ்க்கையும் ஏற்க வேண்டும் என கூறப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ந்து வாதம் நடைபெற்றபின் மண்டனமிஸ்ரரின் மாலை வாடத் தொடங்கியது.

உபயபாரதி, தன் கணவராகிலும் மண்டனமிஸ்ரரே தோல்வியுற்றார் என அறிவித்தார். தான் தோல்வியுற்றதாக மிஸ்ரரும் ஒப்புக்கொண்டார். சங்கரர், அவருக்கு சன்னியாச தீட்சை கொடுத்து சுரேஷ்வராச்சாரியார் என்ற பட்டத்தையும் கொடுத்தார். மண்டன மிஸ்ரர் பிரம்மாவின் அவதாரம், அவரது மனைவி உபயபாரதி சரஸ்வதியின் அவதாரம்.

சங்கரர் மிஸ்ரரை வென்ற பிறகு உபயபாரதி தான் சத்யலோகத்திற்குச் செல்வதாகக் கூறினாள். அதற்கு சங்கரர் வனதுர்கா மந்திரத்தால் அதை தடுத்து, தாங்கள் சித்ரூபிணியான பரதேவதை பக்தர்களின் நன்மைக்காக லக்ஷ்மி முதலான தேவதைகளாகவும் நீங்கள் விளங்குகிறீர்கள். நான் விரும்பும் சமயம் நீங்கள் போகலாம் என்று வேண்டவே அம்பிகையும் அதற்கு சம்மதித்தாள்.

சங்கரர் மீண்டும் சீடர்களுடன் யாத்திரையாகப் புறப்பட்டு மஹாராஷ்டிரம் சென்று அத்வைத தத்தவத்தை பிரசாரம் செய்தார்.

————————————————————————————————————————————

1. ஸ்ரீ ஆதிசங்கரர்

முதல் குருவாக ஆதிசங்கரர் [கி.மு. 509 – 477]

ஸ்ரீ சங்கரர் கேரளா காலடியில் பிறந்தார்.

ஸ்ரீ ஆதிசங்கரர் காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்ற ஷண்மதங்களை ஸ்தாபித்தவர். ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தை திரையிட்டுக் கொண்டு சொல்லும் போது திரை விலக்கிப் பார்த்த எல்லா சீடர்களும் நாகத்தின் விஷ மூச்சால் பொசுங்கிப் போனார்கள். வெளியே அனுப்பப் பட்டிருந்த கெளட பாதர் மட்டுமே பிழைத்திருந்தார். கௌடபாதரின் சீடர், ஸ்ரீ கோவிந்த பகவத் பாதர். இவரே ஆதிசங்கர பகவத்பாதரின் குரு. மேற்கில் துவாரகாவிலும், வடக்கே பத்ரியிலும், கிழக்கே பூரியிலும், மத்தியில் சிருங்கேரியிலும் தெற்கில் ஸ்ரீ காமகோடி பீடம் காஞ்சியிலும் பீடங்களை நிறுவிய ஸ்ரீ ஆதிசங்கரரின் தெற்கே வாசஸ்தலமும், சித்திஸ்தலமும் காஞ்சியே!

ஸ்ரீ ஆதிசங்கரர் ஜாதகம்….

புனர் பூச நக்ஷத்திரம் 2- ஆம் பாதம். கடக லக்னம், கடக ராசி, சூரியன், சுக்ரன், குரு, குஜன், சனி ஆகிய ஐந்து கிரஹங்கள் ஸ்ரீ ராமபிரான் ஜாதகத்தைப் போலவே உச்சம்.

சந்திரனும் ஸ்ரீ ராமர் ஜாதகத்தைப் போலவே ஆட்சி பெற்றிருக்கிறான் சுக்ரன், சூரியன், புதன், அதை போல் புதனும், சூரியனுடன் கூடியிருக்கிறான்.

குஜன் இருவருக்கும் ஒரே நக்ஷத்திரம். ஒரே மாதம் ராகு – கேதுக்கள் மட்டுமே இடம் மாறியிருக்கின்றன.

பிறந்த கிழமை – ஞாயிறு
திதி: சுக்ல பக்ஷ பஞ்சமி [வளர் பிறை]
ஆண்டு: நந்தன வருடம்.
காலம் : கலி 2593 [கி.மு.509] இவ்வாறு ப்ருஹத் ”சங்கர விஜயத்தில்’’ கூறப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஆதிசங்கரரே அதன் முதல் குருவாக இருந்தார். ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ சக்ரப் பிரதிஷ்டை செய்து ஆலய நிர்மாணமும் செய்து வைத்தார். ஸ்ரீ காமகோடி பீடத்தில் தனக்கென்று கைலாயத்திலிருந்து கொண்டு வந்த ஐந்து ஸ்படிக லிங்கங்களில் ஒன்றான யோக லிங்கத்தை ஸ்தாபித்தார். தனக்குப்பின் ஆச்சார்யராக ஸ்ரீ சுரேஸ்வரரை நியமித்தார்.

ஆதிசங்கரர் சமயவியல் அறிஞர்களை வாதிட்டு வென்றதும் காஞ்சியில் தான்! திருவானைக்காவில் ஸ்ரீ சக்ர வடிவிலான தாடங்கப் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ ஆதிசங்கரர், காசி முதலான பிற க்ஷேத்திரங்களிலும் ஸ்ரீ சக்ரப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்.

“ஸ்வர்ண ஆகர்ஷண யந்திரத்தை ” திருப்பதியில் செல்வவளம் கொழிக்கும் படி பிரதிஷ்டை செய்து “விஷ்ணு பாதாதி கேசா’ந்த ஸ்தோத்திரத்தை”யும் அருளினார்.

கிழக்குக் கடற்கரை பூரி கோவர்த்தன மடத்தில் ”விமலா பீடத்தில்’’ முதல் ஆச்சார்யராக பத்ம பாதரை நியமித்தார் ஆதிசங்கரர். இதுவரை 145 பீடாதிபதிகள் அந்த பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

மேற்குக் கடற்கரை துவாரகா மடத்தில் மகாகாளிகா பீடத்தில் முதல் ஆச்சார்யராக நியமிக்கப்பட்டவர் ”ஹஸ்தாமலகர்”. இதுவரை 79 பீடாதிபதிகள் அதை வழி நடத்திச் சென்றிருக்கின்றனர்.

ஹிமாச்சலத்தின் பத்ரியில் ஜ்யோதிர் மடத்தில் ஜ்யோதிஷ்மதி பீடத்தில் முதல் ஆச்சார்யராக ஆதிசங்கரர் நியமித்தவர் தோடகர்.

கர்நாடக மாநிலத்தில் துங்கை – பத்ரை நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கும் திருத்தலம் சிருங்கேரி. ரிஷ்ய சிருங்கர் அங்கே தவமியற்றியதால் சிருங்க கிரி என அந்த க்ஷேத்திரம் புகழ் பெற்றது. ஸ்ரீசாரதாம்பிகையின் விருப்பப்படி, தேவியை அங்கே பிரதிஷ்டை செய்து ஸ்ரீமடத்தை நிறுவிய ஆதிசங்கரர் தன் சீடரான பிருத்வீதரரை அதன் ஆச்சார்யராக நியமனம் செய்தார். கைலாயத்திலிருந்து கொண்டு வந்த பஞ்ச லிங்கங்களில் ஒன்றான போக லிங்கத்தையும் அங்கே ஸ்தாபித்தார்.

கி.மு. 477 ரக்தாட்சி வருஷம், வ்ருஷப மாதம், வளர்பிறை ஏகாதசி அன்று காஞ்சியில் சித்தியடைந்தார். ஸ்ரீ சங்கரரின் வழிவந்த ஸ்ரீ காமகோடி பீடத்தில் குரு ரத்தினங்களாக விளங்கிய குருரத்னங்களைப் பற்றி இனி வரும் நாட்களில் தெரிந்து கொள்வோம்.

சங்கரர் 32 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.

காஞ்சி காமகோடி குரு பரம்பரா….

காஞ்சி காமகோடி பீடத்தில் இதுவரை எழுபது ஆசார்யர்கள் இந்த பீடத்தை அலங்கரித்துள்ளனர்.