கண்ணப்ப நாயனார்.
கண்ணப்ப நாயனார் வரலாறு.நாம் சிவபெருமானை பற்றி முதலில் முழுமையாக அறிவோம். சிவபெருமான் நமக்குள்ளே நம் இதயத்தில் உயிர்,அன்பு,அறிவு என்ற மூன்று வடிவில் குடிகொண்டு இருக்கிறார். இதனை முழுமையாக அறிந்து நமக்கும் அதனை கூறியவர்கள் மணிவாசக பெருமான் மற்றும் சிவபெருமான் இருவரும் ஆவர்.முதலில் நாம் உயிராக இருக்கும் சிவத்தை அறிய வேண்டும். அப்போதுதான் நாம் பிற உயிர்களில் உயிராக உள்ள சிவத்தினை நம்மால் அறியமுடியும். பிறஉயிர்கள் மீது அப்போதுதான் நம்மால் அன்பு செலுத்த முடியும்.அன்பே சிவம் என்ற தத்துவமும் விளங்கிக்கொள்ள முடியும்.ஆறறிவு பெற்ற உயிராக, நன்மை தீமையை ஆராயும் நிலைக்கு சிவபெருமான் மனித இனத்தை படைத்தார்.அந்த அறிவையும்,மனிதன் விலங்கு குணத்திலிருந்து மனிதகுணத்திற்கு மாறி சைவசமயம் காட்டும் கொல்லாமை நெறியில் தன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து, திருமூலர் சொன்னதுபோல் உயிர்களை கொன்ற பாவத்திற்கு அரும்பாசற் கயிற்றால் கட்டி ஏழு நரகத்தில் தள்ளப்படாமல் ஈசன் திருவடி பேறுபெற வழிகாட்டுவதே சைவசமய கொல்லாமை காட்டும் நெறியாகும்.
இப்படி வேற்று நெறியாகிய கொல்லாமையை விடுத்து சைவநெறி சார்ந்து ஈசன் திருவடிபேறுபெற்ற ஒரு நாயன்மாராகிய கண்ணப்பர் வரலாற்றை சற்று விரிவாக காண்போம்.
உயிரினங்களை வேட்டையாடி கொல்லும் தொழில் புரிந்த அடியார் திண்ணனார். கண்ணப்பன் மிக்கதோர் அன்பு இல்லை என சிவபெருமானால் சிறப்பிக்கப்பட்டு சிவனது திருவடிபே ைறயும் பெற்ற வரலாற்றை இங்கு காண்போம்.உயிரின் மதிப்பையும் அதில் உயிராய் உறைந்துள்ள சிவத்தையும் அறியாது விலங்குகளை கொல்லும் தொழில் புரிந்து வாழ்ந்து வந்த வேடுவர் தலைவரான நாகன் என்பவருக்கு மகனாக பிறந்த அடியார்.திண்ணன் என்பது அடியவரின் இயற்பெயர். செல்லமாக வளர்க்கப்பட்டு விற்பயிற்சி போர்பயிற்சி போன்ற பயிற்சிகள் முறைப்படி கற்று வாலிப பருவம் அடைகிறார். தந்தை மூப்பின் காரணமாக வேட்டையாடும் தொழிலுக்கு செல்ல இயலாத காரணத்தால் திண்ணரை வேட்டையாடும் தொழிலை தலைமையேற்று நடத்துமாறு தந்தை வேண்டுகிறார். அதனால் அப்பொறுப்பை திண்ணர் ஏற்று மூறைப்படி செம்மையாக வேட்டைத்தொழிலைசெய்து வருகிறார்.
ஒருமுறை காட்டில் இருக்கும் குடுமித்தேவர் என்றழைக்கப்படும் சிவலிங்கத்தை பார்க்கிறார்.ஏதோ இனம்புரியாத பற்று ஏற்படுகிறது. சைவசமய மகிமை தெரியாது.அன்பே சிவம் என்ற தத்துவம் தெரியாது. உயிரினங்கள் அனைத்திலும் உயிராய் உறைந்திருப்பது சிவனே. எனவே எந்த உயிரையும் கொல்லகூடாது என்பதையும் அவர் அறியார்.ஆனால் இறைவனை வணங்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. இறைவனுக்கு நிவேதனம் செய்யவேண்டும் என்று ஆவலும் ஏற்படுகிறது. எப்படி பூசிப்பது என அறியார்.எதை நிவேதனம் செய்ய வேண்டுமென்பதையும் அறியார்.
சிவலிங்கத்தை நீராட்ட தன் திருவாயில் நீர் முகந்துகொள்கிறார்.மலர் சொத்துக்களை பறித்து இறைவனுக்கு சூட்ட தன் கூந்தலில் செருகி வைத்துக்கொள்கிறார்.தான் அம்பெய்தி குருதி கசிய வேட்டையாடிய விலங்குகளின் புலாலை தீயினிற்சுட்டு பக்குவப்படுத்தி இறைவனை தேடிச்செல்கிறார்.தம் வாய்நீரை சிவலிங்கத்தின் மீது உமிந்து மங்களநீராட்டி தம் கூந்தலில் செருகிவைத்திருந்த பூங்கொத்துக்களால் அலங்கரித்து,தாம் கொண்டுவந்த புலால் உணவை சிவலிங்கத்திற்கு நிவேதனம் செய்து சிவனை உண்ணும்படி கொஞ்சுகிறார், கெஞ்சுகிறார், கண்ணீர் மல்குகிறார்.சிவன் உண்ணவில்லை. இச்சம்பவம் ஓரிரு நாட்கள் நடைபெறுகிறது. மீண்டும் ஒருநாள் ஈசனிடம் புலால் உணவை வைத்து உண்ணசொல்லி தம் தலையை கல்லில் முட்டிக்கொள்ள இறைவன் அத்துனை புலால் உணவையும் மறைத்துவிடுகிறார்.
திண்ணரும் இறைவன் உண்டு விட்டதாக நினைத்து கிளம்பி விடுகிறார். உடனே நித்திய பூசனை செய்யும் சிவகோசரியார் அவ்விடம் வருகிறார்.அங்கு இறைவன் முன் புலால் உள்ளதை கண்டு யாரோ இத்தகைய கொடுஞ்செயல் புரிந்தது என நினைந்து தூய்மை படுத்தி மீண்டும் பூசனை செய்கிறார். மீண்டும் இச்சம்பவம் மறுநாளும் நடைபெறுகிறது. இறைவன் பூசை செய்யும் திருக்கோசரியாரிடம் திண்ணரை ஏதும் செய்யவேண்டாம் என ஆணையிடுகிறார்.
அன்று சிவனிரவு தினம். இறைவனுக்கு நிவேதனம் செய்யும் புலால் உணவை தயாரிக்க காட்டில் வேட்டையாடும்போது விலங்குகள் ஏதும் கிடைக்கவில்லை. அந்திநேரம் ஆனது.அச்சமயம் ஒரு புலி வருகிறது. திண்ணப்பரும் தன்னிடமிருந்த அம்புகளை எய்கிறார்.அம்புகள் தீர்ந்துவிட்டது. புலியை கொல்லமுடியவில்லை.புலி திண்ணப்பரை நெருங்குகிறது. அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அங்கிருந்த வில்வமரத்தில் ஏறிக்கொள்கிறார். புலி அங்கிருந்து செல்வதாக தெரியவில்லை. இரவுநேரமாகியும் புலி கிளம்புவதாக தெரியவில்லை.அந்த வில்வ மரத்தடியில் ஓர் சிவலிங்கம் புதைந்துள்ளது. அன்று சிவனிரவு நன்நாள்.
திண்ணப்பருக்கு உறக்கம் வரவும் உறக்கத்தில் மரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டால் புலி கொன்றுவிடுமே என பயந்து இரவு முழுதும் வில்வ இலைகளை ஒவ்வொன்றாய் பறித்து கீழே புதைந்த நிலையில் உள்ள சிவலிங்கத்தின் மீது எறிகிறார்.அதை ஈசனும் தனக்கு செய்யும் அருச்சனையாக நினைத்து ஆனந்தம் கொள்கிறார்.
இருப்பினும் திண்ணப்பர் சைவ நெறிக்குள் வரவில்லையே என காத்து கொண்டிருக்கிறார்.இறுதியில் திண்ணப்பர் பக்குவமடைந்து ஈசனே புலியிடமிருந்து என் உயிரை காப்பாற்றுங்கள். இனி எவ்வுயிரையும் யான் கொல்லமாட்டேன் என வேண்டுகிறார்.
இந்த நொடிக்காக காத்திருந்த இறைவன் புலியை மறையச்செய்கிறார்.
புலியிடமிருந்து தன்னை காப்பாற்றியமைக்காக திண்ணப்பர் தாம் வழிபாடு செய்யும் இறைவனுக்கு நன்றி செலுத்த செல்கிறார். அங்கு ஈசனின் லிங்க திருமேனியில் குருதி வடிகிறது. முன்பு தமது அம்பால் அடிபட்டு குருதி சிந்திய உயிர்களை கண்டபோது அன்பின் அர்த்தம் விளங்கவில்லை. இன்று சிவலிங்கத்தில் குருதி வடியும்போது திண்ணரின் நெஞ்சத்திலும் அன்பு சுரக்கின்றது. கொல்லும் அம்பு இன்று அன்பாய் மாறுகிறது.அம்பும் அன்பாகி,அன்பு சிவமாகிறது. ஈசனுக்கு கண்ணில் அடிபட்டுவிட்டதாக கருதிய திண்ணப்பர் தமது அன்பின்பால் தன் இரு கண்களில் ஒன்றை அம்பால் பெயர்த்து சிவலிங்கத்தில் வைத்து அப்புகிறார். சிவலிங்கத்தின் மறு கண்ணில் குருதி வழிகிறது.என்ன செய்வது என தெரியாமல் திண்ணப்பர் தனது மற்றொரு கண்ணையும் அம்பால் பெயர்க்க செல்ல ஈசன் திண்ணப்பரின் கரத்தை பற்றிக்கொண்டு நில்லு கண்ணப்ப என்கிறார். திண்ணப்பர் தம் கண்ணை பெயர்த்து இறைவனுக்கு அப்பியதால் கண்ணப்பர் என இறைவனால் சிறப்பித்து அழைக்கப்பட்டார்.
காட்டில் வேட்டையாடும் வேடுவ குலத்தே பிறந்தாலும் திருநாளைப் போவாரை போலவே சைவசமய கொல்லாமை நெறியை நோக்கி அவரது பாதை திரும்பியதால் ஈசன் திருகாட்சி தந்து கண்ணப்பருக்கு 63 நாயன்மார்களில் அவரும் ஒருவராகும் வாய்ப்பையும் நல்குகிறார்.பிற உயிர்களையும் தம் உயிர்போல் மதித்து அன்பொழுக வாழ்வோருக்கு ஈசன் அருள் எப்போதும் இருக்கும் என்பதே கண்ணப்ப நாயனார் வரலாறு மூலம் நாம் அறியும் உண்மை.
சிலர் கண்ணப்பர் நிவேதனம் செய்த புலாலை இறைவன் உண்டதாக கூறி நாமும் புலால் உண்ணலாம் தவறில்லை என்ற கருத்தை முன் வைப்பார்கள்.சிறுதொண்டர் இல்லத்தில் இறைவன் உண்ணாத பிள்ளைக்கறியை உண்டதாகவும் சிலர் கூறுவர்.இப்படி கூறுவது சைவ சமயத்தின் மாண்பையும் சிவத்தின் மாண்பையும் கெடுக்கும் செயல் என்பதை அறியாமல் கூறுவது வேதனை அளிக்கிறது.அப்படிபட்ட உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
அதில் உண்மை சிறிதளவும் இல்லை. இறைவன் உண்ட உணவும், உண்ட அடியாரும் யாதென காண்போம்.
தலைவாழை இலை விருந்து காரைக்கால் அம்மை இல்லத்தில் உண்டார்.சேந்தனார் பெருமான் இல்லத்தில் பெற்ற கலியை தில்லையம்பதியில் தம் கருவறையில் உண்டார். அரிவட்டாயர் கீழே நிலத்தில் சிதறவிட்ட மண்சோற்றை இறைவன் உண்டார். வந்தியம்மை இல்லத்தில் பிட்டும் உண்டார். இவ்வளவே இறைவன் உணவு உண்ட இடங்கள். வேறெங்கும் இறைவன் உணவு உண்டதாக ஆதாரம் ஏதுமில்லை.
பல் உயிர்கள் மீதும் அன்புகொண்டு கொல்லாமலும் பிறர் கொன்றதை உண்ணாமலும் வாழ்ந்து ஈசன் திருவடிபேறு பெறுவோமாக. மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
கண்ணப்ப நாயனார் திருவடிகள் போற்றி.
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.அறுபத்துமூன்று நாயன்மார்கள் வரலாறு.