நின்றசீர் நெடுமாறன்.
தமிழ் சங்கத்தில் கடைச்சங்கம்
(தமிழ்க்கழகம்) அமைத்து, சிவபெருமானை வீதிக்கே அழைத்து நான்மாட வீதியிலும், வைகைஆற்று மணலிலும் தம் மலர்சேவடிகளை அன்னை தமிழுக்காகவும் சைவத்திற்காகவும் நியந்தனில் பதியவைத்து, வைகை ஆற்று மணலை தம் மணிமுடிமீது சுமக்க வைத்த மதுரை பாண்டியர் வழிவந்த பெருமான் அவரது இயற்பெயர் தெரியவில்லை.
இவர் மதுரையை சீரும் சிறப்புமாக சொக்கநாதரின் அருளாசியுடன் ஆட்சி புரிந்துவந்த வேளையில் சொக்கனுக்கும் சைவத்திற்கும் தமிழுக்கும் தமிழருக்கும் மன்னனுக்கும் பிறநெறியாளர்கள் மூலம் சோதனை வந்தது. வளைந்தறியா செங்கோல் கொண்டு ஆண்டுவந்த மன்னனின் முதுகு வஞ்சக நெறியாளர்களால் கூனிவிட்டது. சொக்கன்,தமிழ், தமிழர்,சைவம் ஆகியவற்றின் புகழும் குறுகிவிட்டது. கூன்பாண்டியன் எனும் சிறப்பு பெயரை பெற்ற பாண்டியமன்னன் பிற நெறியாளர்கள் முன்பாக கூனி குறுகி அடிமையாக நின்றுவிட்டான்.
தாம் அடிமையானது மட்டுமன்றி சைவம், தமிழ்,தமிழர், சொக்கன் ஆகியவறையும் அடிமையாக இருக்கச் செய்து விட்டான்.தமிழை பேசுவதையும் தமிழரை பார்ப்பதும் நீரணிந்த நெற்றியை பார்ப்பதும் பாவம் என்றனர் பிறநெறியாளர்கள்.சொக்கனை வணங்குதலுக்கும் தடைவிதித்தனர். மீறுவோர் கழுவேற்றப்பட்டனர். சைவத்தையும் தமிழையும் சொக்கனையும் தம் உயிர்போல் பாவித்த உத்தம அடியார்களாகிய அரசி மங்கையர்கரசி அம்மையும் முதலமைச்சர் குலச்சிறையரும் நடக்கும் அக்கிரமங்களை காணமுடியாது இறைவன் சொக்கனிடம் முறையிட்டனர்.
இத்தகு ஈனச்செயல் புரியும் வேற்று நெறியாளர்களிடம் இருந்து மதுரை மண்ணையும் தமிழ் மற்றும் தமிழர்களை காத்து அருளும்படியாக விண்ணப்பம் வைத்தனர்.
தமிழை வளர்த்த மதுரை ஆயிற்றே.சொக்கன் கைவிடுவாரா? உடனே பண்ணிசையால் நாளும் தமிழ் வளர்த்த திருஞானசம்பந்த பெருமானை மதுரையம்பதி அழைத்துவர குலச்சிறயருக்கு ஆணை பிறப்பித்தார்.
இறைவன் ஆணையை சம்பந்த பெருமானிடம் கூறி பெருமானை மதுரையம்பதி எழுந்தருளச் செய்தார் குலச்சிறையர்.
அரசியர் மங்கையர்க்கரசியும் முதலமைச்சர் குலச்சிறையரும் ஞானசம்பந்த பெருமானை வரவேற்று உபசரித்து விருந்தினர் குடிலில் தங்கவைத்தனர். அன்று இரவு வேற்று நெறியாளர்கள் வந்திருப்பது மழலை எனவும் பாராமல் குடிசைக்கு தீயிட்டு கொளுத்தினர் காட்டுமிராண்டிகள். இதைக்கண்ட குலச்சிறையர் தம் பாதுகாவலர்களை கொண்டு தீயை அணைத்து ஞானசம்பந்தரை காப்பாற்றினார். இந்த கொடுங்செயல் புரிந்தோரை தம் வாளுக்கு இரையாக்குவதாக புறப்பட்ட குலச்சிறையரை சம்பந்தபெருமான் தடுத்தார்.மக்கள் செய்யும் பாவம் மன்னனுக்கே சேரும். எனவே இந்த தீயின் வெம்மை மன்னர் கூன்பாண்டியரையே சேரும் என்றார். அவ்வண்ணமே தீயின் வெக்கை மன்னனின் உடல் முழுதும்பரவி வெக்கைநோய் உண்டானது.
தாளாத துயருற்றார் மன்னர். பிற தெளியாளர்களின் சிகிச்சை பலன் கொடுக்காமற் போயிற்று. இறுதியில் ஞானசம்பந்தர் அந்நோயினை திருநீற்று பதிகம்பாடி குணமாகச்செய்தார். பெருமான் அருளால் நோயும் தீர்ந்தது. மன்னனின் கூனும் நிமிர்ந்தது. நின்றசீர் நெடுமாறன் என்ற திருநாமத்துடன் மன்னரும் ,சைவமும் தமிழும் தமிழரும் தலை நிமிர்ந்தனர்.
இதைக்கண்டு மேலும் பொறாமை கொண்ட பிறநெறியாளர்கள் சம்பந்த பெருமாளை அனல் மற்றும் புனல் வாதத்திற்கு அழைத்தனர்.
சம்பந்தபெருமானை அச்சுறுத்தும் நோக்கில் தோற்பவர்கள் கழுமரத்தில் ஏற்றி தண்டிக்கப்படுவார்கள் என மன்னர் மற்றும் மதுரை மக்கள் முன்னிலையில் தீர்மானமும் நிறைவேற்றினர். சம்பந்தபெருமானும் ஒப்புக்கொண்டு இருவாதத்திலும் சொக்கன் அருளாலும் தமது நேர்மையான பக்தியாலும் வெற்றிகண்டார். சம்பந்தபெருமானிடம் மன்னர் வாதத்தில் தோல்வியுற்ற பிற நெறியாளரை என் செய்ய என்றார். பெருமான் நீதிநெறி தவறா மன்னன் பணி எப்பணியோ அப்பணி செய்வீராக என பணித்துவிட்டு சென்றார்.
அதன் பின்னர் நின்றசீர் நெடுமாறன் சொக்கநாதர் அங்கயற்கண் அம்மையை போற்றி வணங்கி சைவத்தையும் தமிழையும் தலைநிமிரச்செய்து ஈசன் திருவடிபேறுபெற்று சிவபுரம் சாருகிறார். அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஒருவராகும் அருளும் பெருகிறார். இவரும் தம் இல்லத்தரசியின் முயற்சியால் சிவப்பேறு பெறுகிறார். மங்கையர்க்கரசிய ரும் குலச்சிறையரும் கூட அறுபத்துமூவர் வரிசையில் இடம் பெறுகின்றனர்.
நின்றசீர் நெடுமாறன் நாயனார் குருபூசை ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
நின்றசீர் நெடுமாற நாயனார் திருவடிகள் போற்றி
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.