அத்தி வரதரை தரிசிக்க ஆதார் கட்டாயம்!! வெளியூர் பக்தர்களுக்கு இரவு அனுமதியில்லை!!

காஞ்சி அத்தி வரதரை தரிசிக்கும் உள்ளூர் பக்தர்கள், மாலை, 5:00 முதல், இரவு, 8:00 மணி வரை, எப்போது வேண்டுமானாலும் கோவிலுக்கு வரலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியூர் பக்தர்களுக்கு, மாலை, 5:00 மணிக்கு மேல் தரிசனம் கிடையாது என, திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு, ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் ஜூலை முதல் நடைபெற உள்ளது.

லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை தரிசிக்க வருவார்கள் என்பதால், பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

உள்ளூர் பக்தர்களுக்கு, மாலை, 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, அத்தி வரதரை தரிசிக்க கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க படுவார்கள். மொத்தம் 48 நாள்களில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

பொது வழியில், காலை, 6:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணிக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் தரிசிக்கலாம்.

இரவு 8:00 மணிக்கு எவ்வளவு பக்தர்கள் கூட்டம் வந்தாலும், அவர்கள் தரிசனம் முடித்த பின், வெளியே அனுப்புவார்கள் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

ஜூலை, 4 முதல், 10 வரை கோடை உற்சவமும்,

ஜூலை, 11ல் ஆனி கருடசேவையும்,

ஜூலை, 25 முதல், ஆக.,4 வரை ஆடி பூரம் விழாவும்,

ஆகஸ்ட், 13, 14 ஆளவந்தார் சாற்றுமுறை உற்சவமும்,

ஆகஸ்ட், 15ல் ஆடி கருடசேவை உற்சவமும்

நடைபெறுவதால் அன்றைய தினங்களில், உள்ளூர் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

வெளியூர் பக்தர்களுக்கு, மாலை, 5:00 மணிக்கு மேல், அத்தி வரதர் தரிசனம் கிடையாது என்ற தகவல், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட பக்தர்களுக்கு முழுமையாக தெரியாது என்பதால், மாலையில் தரிசனம் செய்ய நுாற்றுக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு வெளியூர் பக்தர்கள் மாலையில் வந்தால், அவர்களுக்கு போதிய இட வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்து வருகிறது.

வசதி உள்ளவர்கள், விடுதியில் தங்குவர். ஆனால், வசதியில்லாத குடும்பத்தினர் தங்குவதற்கு, அன்னை அஞ்சுகம், திருமண மண்டபங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்களிடையே எழுந்துள்ளது.

அத்தி வரதரை தரிசிக்க, சிறப்பு பேக்கேஜ்(special package) என்ற பெயரில், தனியார் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், ஆறு பேருக்கு, 9 ஆயிரத்து, 999 ரூபாய்(9999/-) என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில், தனி விடுதி, ஆறு பேருக்கும், உணவு, கோவிலுக்கு சென்று வர வாகன வசதி, தரிசன டிக்கெட் ஆகியவை அடங்கும் என, தெரிவித்துள்ளது.

கோவிலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.இதுபோன்று, தனியார் நிறுவனங்கள் பக்தர்களை அழைத்து வரலாமா அல்லது வியாபாரம் செய்யலாமா என்ற, கேள்வியும் பக்தர்களிடேயே எழுந்துள்ளது

Leave a Comment