குங்கிலியக்கலய நாயனார்.
குங்கிலியக்கலய நாயனார் சோழ நாட்டில் அமைந்திருந்த திருக்கடவூர் என்னும் ஊரில் பிறந்தார். திருக்கடவூர் இன்றைக்கு திருக்கடையூர் என்று அழைக்கப்படுகிறது. இது மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
திருக்கடவூரில்தான் சிவபெருமான் தன்னுடைய பக்தனான மார்க்கண்டேயன் என்னும் சிறுவனைக் காக்க எமதர்மனை காலால் உதைத்து காலசம்கார மூர்த்தியாக வெளிப்பட்டார். அட்டவீரட்டான திருத்தலத்தில் இதுவும் ஒன்றாகும்.
திருக்கடவூரில் அருளும் அபிராமி அன்னை தன்னுடைய பக்தரான அபிராமிப் பட்டரைக் காப்பதற்காக அமாவாசை அன்று முழுநிலவைத் தோன்றச் செய்தார். அபிராமிப்பட்டர் இங்கு அருள்புரியும் அபிராமி அம்மைப் போற்றி புகழ்மிக்க அபிராமி அந்தாதியைப் பாடியுள்ளார்.
பெருமைமிக்க திருகடவூரில் தோன்றி வசித்து வந்த குங்கிலியக்கலய நாயனாரின் இயற்பெயர் கலயனார் என்பதாகும்.
இவர் திருக்கடவூரில் அருள்புரியும் அமிர்தக்கடேஸ்வரரின் மேல் பேரன்பு கொண்டு,தினமும் குங்கிலியத்தால் தூபம் காட்டி வழிபாடு நடத்தி வருவதைத் தொண்டாகச் செய்து வந்தார். ஆதலால் இவரை எல்லோரும் குங்கிலியக் கலயனார் என்று அழைத்தனர்.
குங்கிலியம் என்பது சாம்பிராணியைப் போன்றே தணலில் இடப்படும் வாசனைப் பொருள். தணலில் குங்கிலியம் இடப்படும் போது அது நறுமணப் புகையை வெளியேற்றும்.
சிவபெருமான் குங்கிலியக்கலய நாயனாருக்கு அருள்புரிந்து அவரது பெருமையை உலகறியச்செய்ய சித்தம் கொண்டார். கலையனாருக்கு வறுமையை பரிசாக வழங்கினார். கலயனாரும் வறுமையை பரிசாக வழங்கிய இறைவனுக்கு பிரதிபலனாக தன்னுடைய உடைமைகளான நிலங்கள், கால்நடைகள், வீடு முதலியவற்றை விற்று குங்கிலிய தூபவழிபாட்டால் நன்றியை தெரிவித்தார்.
காலப்போக்கில் அவருடைய செல்வவளம் முழுவதும் கரைந்தது. அவருடைய குழந்தைகள், மனைவியும் உண்ண ஆகாரமின்றி பட்டினி கிடந்தனர்.
குழந்தைகளின் நிலைமைக் கண்டு மனம் நொந்த மனைவியார், தன்னுடைய பொன்னாலான திருமாங்கல்யத்தை கணவரிடம் தந்தார். திருமாங்கல்யத்தை விற்று அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கி வருமாறு கூறினார்.
கலயனாரும் திருமாங்கல்யத்தைப் பெற்றுக் கொண்டு வீதியில் செல்கையில் ‘இன்றைய தூப வழிபாட்டிற்கு குங்கிலியம் இல்லையே என்ன செய்வது?’ என்று யோசித்துக் கொண்டே சென்றார்.
அப்போது வணிகன் ஒருவன் பொதிமூட்டை ஒன்றுடன் வந்தான். அவன் அருகே சென்ற கலயனார் பொதிமூட்டையில் என்ன பொருள் உள்ளது என்று விசாரித்தார். அது குங்கிலியப்பொதி என்று வணிகன் கூறியதும் பேரானந்தம் கொண்டார்.
பொன்னை கையில் கொடுத்து குங்கிலியத்தையும் அனுப்பி வைத்த இறைவனின் கருணையை எண்ணிப் பேரானந்தம் கொண்டார் கலயனார்.
அவர் பசியோடிருக்கும் குழந்தைகள், மனைவியையும் மறந்தார். மனைவி எதற்காக தன்னுடைய திருமாங்கல்யத்தை தந்து அனுப்பினார். என்பதையும் மறந்து, வணிகனிடம் பொன்னைப் பெற்றுக் கொண்டு குங்கிலியத்தை கொடுக்க வேண்டினார். வணிகனும் பொன்னைப் பெற்றுக் கொண்டு குங்கிலியத்தைக் கொடுத்தான்.
நேராக அமிர்தகடேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று சேமிப்பறையில் குங்கிலியத்தைப் பத்திரப்படுத்தினார். கோவிலிலேயே தங்கிவிட்டார்.
கலயனாரின் மனைவி மற்றும் குழந்தைகள் அவரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். இரவுதான் வந்தது. கலயனார் இல்லம் திரும்பவில்லை. பசி மயக்கத்தால் குழந்தைகளும், மனைவியும் உறங்கினர்.
அப்போது இறைவனுடைய அருளால் அவ்வீட்டில் உணவுப்பொருட்களும், செல்வங்களும் குவிந்தன. இதனை கலயனாருடைய மனைவியின் கனவில் இறைவனார் தெரிவித்தார். கலயனாரின் மனைவி எழுந்ததும் இறைவனுடைய கருணையை எண்ணி வியந்தார்.
அதிகாலையில் உணவு தயாரிக்கும் பணியைத் தொடங்கினார். கலயனாரின் கனவில் தோன்றிய இறைவனார் ‘நீ உன் இல்லம் சென்று அறுசுவை உணவை உண்’ என்று கட்டளையிட்டார்.
இறைவனின் கட்டளையை ஏற்று கலயனார் தன் இல்லம் சென்றார். அங்கியிருந்த செல்வ வளங்கள் அனைத்தும் இறையருளால் கிடைத்தது என்பதை மனைவி மூலம் அறிந்ததும் பெரும் மகிழ்ச்சி கொண்டார்.
அதன்பின் கலயனாரும், மனைவியாரும் சிவனடியார்களுக்கு திருவமுது அளிக்கும் திருதொண்டையும், குங்கிலிய தூபத் திருத்தொண்டையும் தொடர்ந்து செய்து வந்தனர்.
திருப்பனந்தாள் என்னும் திருக்கோயிலில் சிவலிங்கத் திருமேனி சாய்ந்திருந்தது. அதற்கு காரணம் தாடகை என்னும் சிறுமி.(வேறொரு விதத்தில் இந்த புராணம் கூறப்படுகிறது. அதில் அடியேனுக்கு உடன்பாடு இல்லை.இறைவன் நம் அனைவருக்கும் அம்மையப்பன். அங்கே வெட்கமோ கூச்சமோ நானாமோ ஏதும் இருக்காதே.இது இறைவனையே தவறாக சித்தரிப்பதாக உள்ளது.) தாடகையின் தந்தை தினமும் திருப்பனந்தாள் சிவபெருமானுக்கு பூசனைகள் செய்வித்து வழிபட்டு வந்தார்.
ஒருநாள் தாடகையின் தந்தை வெளியூர் சென்றமையால் பெருமானுக்கு பூசனை செய்விக்க தாடகை செல்ல நேர்ந்தது. இறைவனுக்கு மங்களநீராட்ட தாடகைக்கு உயரம் போதவில்லை. குழந்தை இறைவனை நோக்கி அப்பனே எமக்கு உயரம் போதவில்லை. எனவே சற்று சாய்ந்து நில்லுங்கள் நீராட்டி விடுகிறேன் என்று சொல்லியது. இறைவனும் சாய்ந்து நின்றார்.நீராட்டு முடிந்ததும் நிமிர்ந்து கொண்டார்.
பின்னர் பொட்டிட்டு பூச்சூட்ட உயரம் போதவில்லை. குழந்தை மீண்டும் அப்பனே சற்று சாய்ந்து நில்லுங்கள். பொட்டிட்டு பூ மாலை சூட்டவேண்டும் எனவும் மீண்டும் சாய்ந்து நிமிர்ந்தார். இப்போது நிவேதனம் முடிவுற்றது. ஆராதனையும் முடிந்தது. தாம் கொண்டுவந்த அக்காரஅடிசலை உண்ண இறைவனை சாய்ந்து நிற்க சொல்ல இறைவன் சாய்ந்தவர் அதன் பின் நிமிரவே இல்லை.
குழந்தையின் மீது இறைவன் கொண்ட அன்பு எவர்க்கும் வணங்கி அறியாத ஈசனை சாயவைத்தது.இந்த சாய்ந்த இறைவன் திருமேனியை சீராக்க அந்நாட்டு அரசர் இரும்பு சங்கிலியின் ஒரு நுனியை இறைமேனியில் இறுககட்டி மறுநுனியை யானையோடு இணைத்து இழுக்கப்பட்டு சங்கிலி துண்டானது யானை மயக்கமுற்றது. திருமேனி நிமிரவில்லை.
இச்சேதி கலயனாருக்கு தெரியவர நேராக ஆலயம் செல்கிறார். பூசனை செய்து குங்கிலிய தூபம் காட்டி ஐந்தெழுத்து மந்திரம் ஓதியவாறு ஒரு கயிற்றின் ஒரு நுனியை இறைவனோடும் மறுநுனியை தம் கழுத்திலும் கட்டியவாறு இருக்கின்றார் பெருமான். இறைமேனி சீரானது.
பின்னர் ஓர்நாள் ஞானசம்பந்த பெருமானும் நாவரச பெருமானும் அடியாரது இல்லம் எழுந்தருளி இன்னமுது செய்து தாங்களும் சிறப்புற்று அடியாரையும் சிறப்புறச்செய்தனர்.கலயனார் குங்கிலியக் கலயனார் என்று அழைக்கப்படலானார்.குங்குலியக்கலய நாயனார் குருபூசை ஆவணி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
பின்னர் இறைவனால் திருவடிபேறும் சிவபுரம் சாரும்பேறும் பெற்றார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகும் வாய்ப்பினையும் இறையருளால் பெற்ற அருளாலர் ஆனார் குங்கிலியக்கலய நாயனார்.
குங்கிலியகலய நாயனார் திருவடிகள் போற்றி.
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.