முருக நாயனார்

சோழநாட்டிலே திருப்புகலூர் எனும் அற்புத திருத்தலத்திலே அவதரித்தவர் முருகனார். சைவசமய நெறியின் தலை நின்ற இப்பெருமானார், இறைவன் திருவடி ஒன்றே தம் பிறவிப்பேறு என்றெண்ணி இறைத்தொண்டை சிரம்மேற்கொண்ட சிவனடியார் ஆவார்.நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து நீரில் மூழ்கி மலைமலர், கொடிமலர், நீர்மலர், நிலமலர் எனப்படும் நால்வகை மலர்களைக் கொய்து மலர்க்கூடைகளில் கொண்டுவந்து தனியிடத்தில் வைப்பார்.கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் எனப் பலவகைப்பட்ட மலர்மாலைகளாகத் தொடுப்பார்.

இறைவனின் ஆறுகாலப் பூசைக்கும் அவ்வவ்வேளை பூசைக்கேற்ப தொடுத்த அவற்றை திருப்புகலூரில் உள்ள வர்த்தமானீச்வர திருக்கோயிலில் உள்ள சிவபெருமானுக்குச் சாற்றி தமிழ்மறையால் அருச்சனை செய்தும், திருவைந்தெழுத்து ஓதியும் வழிபாடு செய்து வந்தருளினார்.

திருஞானசம்பந்த பெருமானார் புகலூருக்கு எழுந்தருளிய போது பெருமானை எதிர்கொண்டு அழைத்து வந்தார். சிலநாட்கள் பெருமானுடன் கூடிச்சென்று வர்த்தமானீசுவர ஆலயத்துள் குடிகொண்ட பெருமானை ஞானசம்பந்த பெருமானோடு தமிழ்மறையால் வழிபடும் பாக்கிய மும் பெற்றார். திருநாவுக்கரசு சுவாமிகள் புகலூருக்கு வந்த வேளையில் சம்பந்த பெருமானுடன் சென்று அவரை எதிர்கொண்டு வரவேற்ற புண்ணியமும் பெற்றார். அவர்தம் திருமடத்திலே நாவுக்கரசரும் சம்பந்தபெருமானும் சிலநாட்கள் தங்கி அருளினர்.

அந்நாளில் நீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகிய பெருமக்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடெல்லாம் அளவளாவி மகிழ்ந்திருந்தார்.
திருஞானசம்பந்த பெருமானுக்கு நண்பராம் பெருமைபெற்ற முருகனார், திருநல்லூர்ப் பெருமணத்தில் நிகழ்ந்த ஞானசம்பந்த பெருமான் திருமணவிழாவில் கலந்துகொண்டு தாங்களும் பெருமானடி நீழலில் தங்கும் நிலைபெற்றார். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகும் அருளும் பெற்றார்.

முருகநாயனார் குருபூசை வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

முருக நாயனார் திருவடிகள் போற்றி

அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.