தைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்
அனைவருக்கும் இனிய தை திருநாள் நல் வாழ்த்துகள்
*பொங்கல் பண்டிகையின் பூஜைக்கான நேரம் பற்றிய பதிவுகள் :*
சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் காலம் தை மாதம், இதை மகர சங்கராந்தி என அழைக்கப்படுகிறது.
தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தை பொங்கல் பண்டிகை. தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும், மகர சங்கராந்தி அல்லது சங்கராந்தி, உத்தராயண, லோரி என கொண்டாடப்படுகிறது.
*தைப் பொங்கல் 2022 எப்போது?*
• ஜனவரி 13 (மார்கழி 29) வியாழக் கிழமை – போகி பண்டிகை
• ஜனவரி 14 (தை 1) வெள்ளிக் கிழமை – தைப் பொங்கல்
• ஜனவரி 15 (தை 2) சனி கிழமை- மாட்டுப் பொங்கல். திருவள்ளுவர் தினம்
• ஜனவரி 16 (தை 3) ஞாயிறு – காணும் பொங்கல்
*பொங்கல் வைக்க நல்ல நேரம்:*
தை 1ம் தேதி வெள்ளிக்கிழமை எனும் மகாலட்சுமியின் அம்சமான நாளில் வருகிறது. அன்றைய தினம் காலை 6 மணி முதல் 9 மணி வரை சுப ஹோரைகள் இருப்பதோடு, அன்று வரக்கூடிய நல்ல நேரமான காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை இருப்பதால், காலை 6 மணி முதல் 10 மணி வரை சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து படைத்து பூஜை செய்ய உகந்த நேரமாகும்.
*சூரிய வழிபாடு:*
சூரியன் மகர ராசிக்குள் பிரவேசித்துச் சஞ்சரிக்கக்கூடிய காலத்தை தை மாதம் என குறிப்பிடப்படுகிறது. இதனால் தான் மகர சங்கராந்தி என கொண்டாடப்படுகிறது.
தைப் பொங்கல் பண்டிகை விவசாயத்திற்கு தன் ஒளியால் உதவிய, நல்ல கால சூழலை ஏற்படுத்திக் கொடுத்த சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், வரவேற்கும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதம் முதல் பகல் பொழுது அதிகரிக்கக்கூடிய காலம் தொடங்கும்.
சூரிய பகவானை வழிபடும் பண்டிகை என்பதோடு, விவசாயத்திற்கு உதவிய மாடுகள், கால்நடைகளைப் போற்றும் விதமாக மாட்டுப் பொங்கல், தைப் பொங்கல் தினத்திற்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் பொங்கலுக்கு முந்தைய தினத்தில் பழையன கலைந்து, புதியதைப் புகுத்தும் விதமாக போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
*சங்கராந்தியின் பெருமை:*
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்த்தப்படும் கும்பமேளா, மகர சங்கராந்தி தினத்தில் தான் துவங்குகிறது.
வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் மஞ்சள் கொத்து கட்டிய பானையை கையில் எடுத்து, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வழிபட்டு, அதன்பிறகு அடுப்பினை மூன்று முறை சுற்றி அந்தப் பானையை வைக்க வேண்டும்.
பானையில் வண்ணமயமான கோலமிட்டிருப்பது நல்லது. பானை வைக்கும் பொழுது சங்கு ஊத வேண்டும். பின்னர் பால் பொங்கும் பொழுதும், இறைவனுக்கு பொங்கல் படைக்கும் பொழுதும் சங்கு ஊத வேண்டும். மனையில் மங்கலம் பொங்க, பால் பொங்கும் பொழுது ‘பொங்கலோ பொங்கல்.. மகர சங்கராந்திப் பொங்கல்’ என்றும் சொல்லிப் பலவிதமான காய்கறிகளை குழம்பு வைத்துப் படைத்து வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கலும், வெள்ளைப் பொங்கலும் வைப்பது நம்மவர்களின் மரபு.
கூட்டாக ஒற்றுமையுடன் வாழ கூட்டுக்குழம்பு வைக்க வேண்டும். வாழ்க்கை இனிக்க, கரும்பாக அமைய, கரும்பும் வைத்து வழிபட்டால் பொங்கும் பொங்கலைப் போல் இன்பம் பொங்கும். சோறு படைக்கும் பொழுது, சூரியன் இருந்து சாப்பிடும் விதத்தில் இலையின் நுனிப்பகுதியும், அடிப்பகுதியும் அமைவது சிறப்பாகும். கதிரவன் வழிபாடு கனிவான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்…