நரசிங்க முனையரைய நாயனார்.

நடுநாடு என்பது பண்டைய தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி. அதில் திருமுனைப்பாடி நாடு என்பது ஒரு பகுதி.கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் திருகோவலூரில் இருந்த தெய்வீகன் என்ற அரசனுக்கு ஒளவையார் திருமணம் செய்து வைத்ததார். தெய்வீகனின் வழித்தோன்றலில் அவதரித்தவர் நரசிங்க முனையரையர் என அவரது வரலாற்றில் அறியமுடிகிறது. திருகோவலூரை உள்ளடக்கிய திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி செய்தவர் நரசிங்க முனையரையர்.

நரசிங்க முனையரையர்
சிவனார் மீது பெரும்பக்தியும், திருவெண்ணீறு அணிந்த சிவனடியார்கள் மீது பெருமதிப்பும் கொண்டிருந்தார். தம் நாட்டில் இருந்த சிவாலயங்களில் வழிபாடுகள் ஏதும் குறைவின்றி நடைபெற்று வருமாறு கவனித்துக் கொண்டார்.
வீரத்திலும் சிறந்த இவர் பல மன்னர்களைப் போரில் வென்றது மட்டுமல்லாமல், சிவனடியார்களை வணங்கி தொண்டுகள் பல புரிவதைப் பெரும் பேறாகக் கருதி வந்தார்.

திருவாதிரை திருநாளன்று இறைவனைப் போற்றி வழிபட்டு, சிவனடியார்களுக்கு உணவும் உடையும் அளிப்பார். அவற்றுடன் அவர்களுக்கு நூறு பொன்னையும் கொடுத்து மகிழ்வார்.
திருநீறு அணியும் சிவனடியார்களுக்கு விரும்பிய‌தைக் கொடுத்து, வழிபாடு செய்து பெரும் பொருள் கொடுத்தமையால் அவரை நாடி வரும் அடியார்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.

ஒருமுறை திருவாதிரைத் திருநாளில் அடியார் வழிபாட்டின் போது, வந்திருந்த அடியார்கள் கூட்டத்தில் ஒருவர் தொழுநோயால் தாக்கப்பட்டு எல்லோரும் வெறுக்கத் தக்க மேனியைக் கொண்டவராய் இருந்தார். ஆனாலும் அவர் வெண்ணீறு அணிந்து இருந்தார்.
அவரைக் கண்டதும் அங்கிருந்தோர் எல்லோரும் அவரை விட்டு சற்று விலகி நின்றனர். அவர் மட்டும் அக்கூட்டத்தில் தனித்து விடப்பட்டார்.
அதனைக் கண்ட நரசிங்க முனையரையர், ‘எத்தன்மையானாராலும், திருநீறு அணிந்திருந்தால் அவர்களை இகழக் கூடாது’ என்று கூறியவாறு அவரை எதிர்கொண்டு அழைத்து வணங்கினார்.
முறைப்படி அவரை வரவேற்று உபசரித்து வேண்டுபவற்றை அளித்து அத்துடன் மற்றவர்களுக்கு வழங்கியதைவிட இருமடங்காக அதாவது இருநூறு பொன்னை தானமாக வழங்கினார். இத்தகைய சிறப்பினுக்கு உரியவர் நரசிங்க முனையரையர்.

ஒருமுறை நரசிங்க முனையரையர் திருநாவலூர் வீதியில் செல்லும்போது அங்கு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சுந்தரரைக் கண்டார். சுந்தரரை தம்முடைய வளர்ப்புப் பிள்ளையாகக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உதித்தது.
சுந்தரரின் தந்தையான சடையனாரைச் சந்தித்து தம்முடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார் நரசிங்க முனையரையர். சடையனாரும் நரசிங்கரின் விருப்பத்திற்கு உடன்பட்டு சுந்தரரை தத்துக் கொடுத்தார்.
சுந்தரர் தம்முடைய திருமணப் பருவம் வரை நரசிங்க முனையரையரின் வளர்ப்பில் திருநாவலூரில் இருந்து பின்னர் இறைவனாரால் ஆட்கொள்ளப்பட்டார். அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஒருவராக அருளப்பட்டார்.

நரசிங்க முனையரைய நாயனார் குருபூசை புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

நரசிங்க முனையரைய நாயனார் திருவடிகள் போற்றி

அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.