புகழ்சோழன் நாயனார்.
இமயமலையில் புலிக்கொடியைப் பொறித்து உலகையே தமது வெண் கொற்றக் குடையின்கீழ் அடிபணியச் செய்த மங்காத புகழ்கொண்ட சிறப்பிற்குறிய மூவேந்தரில் ஒருவர் சோழர் ஆவர். இச்சோழமன்னர் வம்சத்தில் தோன்றிய மனுநீதி சோழன், தேர்ச்சக்கரத்தை ஏற்றி பசுவின்கன்றினை அறியாமல் கொன்ற தம் மகனையும் நீதி வழுவாமல் இருக்க அதே தேர்ச்சக்கரத்தை தம்மகன் மீது ஏற்றிக்கொன்று நீதியை காத்த பெருமையும் பெற்றவர் ஆவார்.
திருமுறைகள் தொகுத்த பெருமைக்குரிய இராசராசனும் சோழ வம்சமே.
பெரியபுராணம் உருவானதன் பெரும்பங்கு அநபாயசோழன் எனும் சோழ மன்னனை சாரும்.இத்தகு சிறப்புடைய சோழப்பேரரசில் உரையூரில் தோன்றிய சோழவம்ச முற்றோன்றலே புகழ் சோழன் ஆவார்.
புகழ்சோழன் மிகச் சிறந்த சிவபக்தர் மற்றும் சிறந்த சிவனடியாரும் ஆவார்.இவர் தம் அரசை விரிவுபடுத்த தம் தலைநகரை கருவூருக்கு மாற்றம் செய்விக்கின்றார். அங்கு ஆனிலை என்ற ஆலய கோட்டத்துள் குடிகொண்டு அருள்புரிகின்ற பசுபதிநாதர் மீது மிகுந்த பற்றுகொண்டு வலம் வந்து தொழுது பசுபதிநாதரின் அன்புக்கு பாத்திரமாகிறார். மற்ற சிற்றரசர்கள் செலுத்தும் கப்பத்தால் பொன்னும் பொருளும் நவமணிகளும் அரண்மனையில் குவிந்தவண்ணம் இருந்தது.
அவற்றைகொண்டு ஆலய திருப்பணிகள் செவ்வனே செய்யப்பட்டு வந்தன.சிவனடியார்களுக்கு வேண்டிய உதவிகளும் செய்யப்பட்டு வந்தது.
அதிகன் எனும் ஒரு சிற்றரசன் மட்டும் கப்பம் செலுத்தாமல் ஏமாற்றிவந்தான். புகழ் சோழன் அந்நாட்டின் மீது போர் தொடுத்தார். போரில் வெற்றியும் கண்டார். பின் போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த தம் நாட்டு வீரர்களுக்கு இறுதிசடங்கு செய்விக்க உடல்களை அடையாடம் சுண்டு வந்தார்.
அடியார்களின் அன்பிற்குக் கட்டுப்பட்ட புகழ்ச்சோழ மன்னர் ஆவார்.
மன்னர் போரில் துண்டிக்கப்பட்ட ஒரு தலையில் சடைமுடியிருக்கக் கண்டார். சடைமுடி கண்டு அரசர் உடல் நடுங்கியது. உள்ளம் பதைபதைத்தார். அவர் கண்களில் நீர் நிறைந்தது. பெரும் பிழை நடந்துவிட்டதாக மனம் வருந்தினார். கதறினார். புகழ்சோழ மாமன்னர்.உள்ளம் உருக அமைச்சர்களிடம், என் ஆட்சியில் சைவ நெறிக்குப் பாதுகாப்பில்லாமற் போய் விட்டதே ! திருமுடியிலே சடை தாங்கிய திருத்தொண்டர் என்னால் கொல்லப்பட்டிருக்கிறாரே! என் ஐயனுக்கு எவ்வளவு பெரும் பாவத்தைச் செய்து விட்டேன். சைவ நெறியை வளர்க்கும் வாள்வீரர் சிரசைக்கொன்ற நான் கொற்றவன் அன்று; கொடுங்கோலன். இனியும் நான் உலகில் உயிருடன் இருப்பது நியாயமன்று என்றெல்லாம் பலவாறு சொல்லி மனம் வேதனைப்பட்டார்.
மன்னர் அரசாட்சியைத் தமது மகனுக்கு அளித்துவிட்டு எரிதழலினுட்புகுந்து உயிர் துறக்கத்துணிந்தார். திருச்சடையையுடைய தலையை ஓர் பொற்தட்டில் சுமந்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் தியானித்தவாறே எரிதழல்குண்டத்தை வலம் வந்தார் மன்னர்.
பொற்றாமரைக் குளத்தில் குளிப்பதைப்போன்று பேரானந்தத்தோடு எரிதழலினுள்ளே புகுந்தார் மன்னர். சிவனடியார்கள் புகழ் சோழரின் சிவபக்திக்கு உள்ளம் உருகினர்.புகழ் சோழரின் பெருமையை அவரது குடிமக்கள் புகழ்ந்து பாடினர்.
எம்பெருமான் ஈசன்திருவடி நீழலை அடையும் பெரு வாழ்வைப் பெற்றார் புகழ்சோழர். அறுபத்து மூன்று நாயான்மார்களில் ஒருவராகும் வாய்ப்யையும் இறைவன் அருளும் பெற்றார்.
புகழ்சோழன் நாயனார் குருபூசை ஆடிமாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகின்றது.
புகழ்சோழ நாயனார் திருவடிகள் போற்றி
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.