பூசலார் நாயனார்.
திருநின்றவூரில் அவதரித்த அருளாலர்.வாயிலர் நாயனார் பெருமானை போன்றவர் பூசலார் பெருமானும். சாதாரண குடும்பத்தில் பிறந்து ஈசன்மீது மிகுந்த பற்றுகொண்டவர். தம்மால் ஈசனுக்கு ஏதாவது செய்யவேண்டும் என தினம்தினம் மனதில் நினைப்பார். இறுதியில் ஈசனுக்கு ஒரு ஆலயம் எழுப்பலாம் என முடிவு செய்கிறார். அதற்கான பொருள் வசதி அவரிடம் இல்லை. யாரிடமாவது யாசகம் பெற்று ஆலயம் எழுப்பலாம் என முடிவு செய்து யாசகம் கேட்டும் பொருள் கிடைக்கவில்லை.
மிகவும் மனம் நொந்தார் பூசலார்.வேதனை நெஞ்சத்தை வாட்ட இறுதியில் ஒரு முடிவுக்கு வருகிறார். ஈசனுக்கான ஆலயத்தை தானே தன் சொந்த முயற்சியில் தன் உள்ளத்தில் அதி அற்புதமான மிகப்பெரும் சிவாலயத்தை எழுப்புவது என தீர்மானிக்கிறார். அதன்படி தன் உள்ளத்தில் ஆலயத்தை எழுப்ப கற்களை செதுக்கி அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கின்றார், அந்த ஆலயத்தை நான்மாடவீதி, உயர்ந்த மதில்சுவர்கள், அழகியதிருக்குளம், அழகிய தேர், உயரமானநாற்புற நுழைவாயில், மற்றும் விண்ணை முட்டும் உயர்ந்த கோபுரம், உள்ளே கொடி மரம், ஆயிரம்கால் மண்டபம்,கருவறைகோபுரம், அழகிய கருவறை, அழகிய இறை திருமேனி என அனைத்தையும் உருவாக்கிவிட்டு ஆலயத்தின் அழகில் பேரின்பம் கொள்கிறார். இப்படி ஒரு ஆலயம் எழுப்பிய தம் அன்பரை கண்டு இறைவனும் பேரின்பம் கொள்கிறார்.
ஆலயத்தின் கருவறையின் உள்ளே ஈசனை குடியமர்த்த நல்லநாளும் நல்லநேரமும் பார்த்து ஒரு சுபதினத்தை குறிக்கிறார்.ஆனால் அவர் நெஞ்சத்தில் எழுப்பிய ஆலயத்தை ஈசனுக்கு பிடிக்குமா குடிபுகுவாரா என சந்தேகம். இருப்பினும் ஈசன் நெஞ்சக்கோயிலில் குடிபுக நாள் குறித்தாயிற்று. இந்நிலையில் காஞ்சி மாமன்னன் காடவர்கோன் ஈசனுக்கு கற்களால் ஆன சிவாலயத்தை உண்மையிலேயே எழுப்புகிறார்.பூசலார் தன் நெஞ்சக்கோயிலில் ஈசனை குடியமர்த்த குறித்த அதே நாளையே காடவர்கோனும் குடமுழுக்கு தினமாக குறிக்கிறார்.அன்று இரவு காடவர்கோன் கனவில் ஈசன் வந்தருளி காடவர்கோனே தாங்கள் நாளை உம் ஆலய குடமுழுக்கை மாற்றி வேறு நாளில் வைத்துகொள்ளுங்கள்.நாளை எம் பேரருளாளர் பூசலார் எமக்காக அமைத்த அற்புத ஆலயம் செல்ல சித்தம்கொண்டுள்ளதால் உம் ஆலய விழாவிற்கு தம்மால் வர இயலாது என்கிறார் ஈசன்..
.மறுநாள் காலை மன்னர் காடவர்கோன் திருநின்றவூர் சென்று ஈசனுக்கு பேராலயம் எழுப்பிய பூசலார் இல்லம் எதுவோ? அவர் எழுப்பிய ஆலயம் எங்குள்ளதோ? என வினவுகிறார். ஆனால் மக்களோ அப்படி ஏதும் சிவாலயம் எழுப்பப்படவில்லை என்று கூறி பூசலார் இல்லத்திற்கு செல்லும் வழியை மட்டும் காட்டுகின்றனர்.
மன்னர் பூசலாரின் இல்லம் சென்று தாம் கண்ட கனவை கூறி தாங்கள் எழுப்பிய பேராலயம் எங்குள்ளது என வினவுகிறார். பூசலாரிடம் மன்னர் தாம் கண்ட சொப்பணத்தை கூறியதை கேட்டதும் அளவிலா ஆனந்தம் கொண்டே இறைவா அடியேன் எழுப்பிய நெஞ்சக திருக்கோயில் தங்களுக்கும் பிடித்துவிட்டதா என் செய்வேன் அடியேன் பெரும்பாக்கியம் பெற்றுவிட்டேன். இன்று நெஞ்சக ஆலயத்துல் நிமலன் நீக்கமற ஆத்மநாதராய் குடிபுகபோகிறார் என பேரின்பம்கொண்டு தான் பொன்பொருள் ஏதும் இல்லாததால் தன் நெஞ்சத்தே எழுப்பிய ஆலயம் குறித்து மன்னரிடம் பூசலார் கூற,மன்னரும் யாம் எழுப்பிய கற்களால் எழுப்பிய ஆலயத்தைவிட தாங்கள் எழுப்பிய நெஞ்சக திருக்கோயிலே இறைவன் எழுந்தருள உத்தமமானது என கூறி பூசலாரின் திருவடியை தொழுகிறார்.ஈசனும் பூசலாரின் நெஞ்சககோயில் குடியேறி அனைவருக்கும் அருள்பாளிக்கிறார்.
இதைத்தான் காரைக்கால் அம்மையும் தமது அற்புததிருவந்தாதி பதிகத்திலே என் நெஞ்சத்தான் என்பன் யான் என்பார். தாயுமானவர், வாயிலர்,பூசலார் ஆகிய அடியார்கள் தம் நெஞ்சத்தே இறைவனுக்கு ஆலயம் எழுப்பி நித்திய பூசைசெய்து ஈசன் பேரருள்பெற்று ஈசன் நெஞ்சில் நீங்க இடம் பெற்றவர்கள். அடியார்களின் திருப்பாத கமலங்களை தொழுது ஈசன் மலரடிகளையும் தொழுது ஈசனருள் பெருவோமாக.
பூசலார் நாயனார் குருபூசை ஐப்பசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
பூசலார் நாயனார் திருவடிகள் போற்றி
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.