Simple Pooja Tips in Tamil

எளிய முறையில் தினசரி பூஜை செய்வது எப்படி? Simple pooja tips

தினசரி பூஜை செய்ய வேண்டும் எனப் பலருக்கு ஆசையிருக்கும். ஆனால் நேரமின்மை காரணமாக பூஜைகள் செய்ய முடிவதில்லை. மிக குறுகிய நேரத்தில் கீழ்க்கண்ட முறையில் சிறப்பாக பூஜை செய்ய முடியும்.

 அபிஷேகம் .  மந்திர புஸ்பம் .  தூபம் .  தீபம் .  நைவேத்தியம் .  ஆராதனை

அபிஷேகம் .

இரண்டொரு துளி தண்ணீரினை ( பச்சை கற்பூரம், கிராம்பு பொடி கலந்த தூய பன்னீர் சிறப்பானது. ) நாம் பூசை செய்யப் போகும் தெய்வத்தின் உருவச் சிலையின் பாதத்தில் அல்லது அந்த தெய்வத்தின் படத்தில் அதன் பாதத்தில் சேர்ப்பிக்க வேண்டும். உருசச் சிலை, படம் இல்லாதவரகள் மானசீகமாக தெய்வத்தின் பெயரைக் கூறி நீரினை தூய பாத்திரத்தில் சேர்க்கலாம்.

மந்திர புஸ்பம்.

அந்தந்த தெய்வத்திற்கு உகந்த பூவினை அல்லது பூக்களைக் கொண்டு அந்த தெய்வத்தின் பதினாறு திருநாமங்களை (குறைந்த பட்சம்) சொல்லி ஒரு நாமத்திற்கு குறைந்தது ஒரு பூவாக உருவச் சிலையின் பாதத்தில் அல்லது அந்த தெய்வத்தின் படத்தில் அதன் பாதத்தில் சேர்ப்பிக்க வேண்டும். உருவச் சிலை, படம் இல்லாதவர்கள் மானசீகமாக தெய்வத்தின் பெயரைக் கூறி தூய பாத்திரத்தில் சேர்க்கலாம். பதினாறு பெயர் தெரியாதவர்கள் தாங்கள் எந்த பெயரை சொல்லி தெய்வத்தை வணங்குகிறார்களோ அதே பெயரை மீண்டும் மீண்டும் 16 தடவை கூறி பூ சேர்க்கலாம். முடிந்தவர்கள் 108 தடவை பூ சமர்பிக்கவும். இறுதியில் தங்களை வணங்கி பூ சேர்க்கிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

பூ கிடைக்காதவர்கள் மந்திரம் மட்டும் சொல்லி வணங்கலாம். மந்திரம் என்றதும் ஏதோ மிகப் பெரிய விஷயமாக எண்ண வேண்டாம். ஓம் அதனைத் தொடர்ந்து தெய்வத்தின் பெயர் இறுதியில் போற்றி. இது எளிமையான மந்திரமாகும். உதாரணமாக வினாயகருக்கு என்றால் ஓம் வினாயகப் பெருமானே போற்றி போதுமானது. முருகனுக்கு என்றால் ஓம் முருகப் பெருமானே போற்றி ஆகும்.

தூபம்

தூய சாம்பிராணி தூபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி வாசனை தூபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும். தூய சாம்பிராணி கிடைக்காதவர்கள் நல்ல வாசனையுள்ள பத்தி காட்டலாம்.

தீபம்.

நெய் தீபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி காட்டி தீபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும்.

நைவேத்தியம்

உலர்திராட்சை அல்லது டயமண்ட் கல்கண்டு வைத்து முதலில் நீரினால் 3 முறை சுற்றி அந்த நீரை வலது புறம் விட்டு விட்டு ஒரு இரண்டு பூக்களை எடுத்து நீரில் பூவினை நனைத்து நைவேத்தியத்தை 3 முறை சுற்றி தெய்வத்திற்கு ஊட்டி விடுவது போல் பாவனை செய்த படி நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். பூ இல்லாதவர்கள் நீரினை கொண்டு செய்யலாம்.

ஆராதனை

ஆராதனை என்று சொல்லும் போது அது கற்பூர தீப ஆரத்தியையே குறிக்கிறது. கற்பூர தீபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி காட்டி கற்பூர தீபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும். பின்னர் சிறிது பூவினை எடுத்து நீரில் நனைத்து கற்ரபூ தீபத்தினை 3 முறை சுற்றி ஏதோ எனக்கு தெரிந்த முறையில் முடிந்த அளவில் பூஜை செய்தேன். எனது பூஜையில் இருக்கும் குற்றம் குறைகளை மன்னித்து எனது பூஜையை ஏற்றுக் கொள்ளுங்கள் என மனதார வேண்டிக்கொண்டு பாதத்தில் சமர்பிக்க வேண்டும். ஓரிரு நிமிடங்கள் கண்ணை மூடி நாம் வணங்கிய தெயவத்தின் உருவத்தை மனக்கண்ணில் கொண்டு வந்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

கற்பூர தீப ஆராத்தியினை தொட்டுக் கும்பிட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளவும்.

நம் வீட்டில் பூ,சூடம் இல்லை .தீர்ந்து விட்டது என்றால் அதற்காக கவலைப்பட தேவையில்லை.நம்மிடம் எது இருக்கிறதோ அதைக் கொண்டு பூஜை செய்தாலே இறைவன் ஏற்றுக் கொள்வார்.ஒரு விளக்கை ஏற்றி ,பால்,பழம்,க ல்கண்டு ,பேரீச்சம் பழம்,உலர்ந்த திராட்சை இதில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாக வைத்து தீபம் காட்டி, மணி அடித்து நம் இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள்.உங்கள் வாழ்வில் வளம் உண்டாகும்.

கடவுளுக்காக ஒரு நிமிடம் செலவழித்து வாழ்ந்தால் என்றென்றும் இன்பங்கள் அடையலாம்.உங்கள் அன்றாட பூஜையை வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து,அவர்களை நல்ல வழியில் கூட்டி செல்லுங்கள்.

அனைத்து தெய்வங்களின் 108 போற்றிகள்

Leave a Comment