சிறுதொண்ட நாயனார்.

திருசெங்கோட்டாங்குடியில் அவதரித்தவர் சிவனடியார் சிறுதொண்டர். மிகச்சிறந்த சிவனடியார். அடியார்களுக்கு அமுது அளிக்கும் தொண்டு செய்த உத்தமர்.நரசிம்ம பல்லவனிடம் சேனாதிபதியாக இருந்து இரண்டாம் புலிகேசியை வென்றவர்.யானை ஏற்றம்,குதிரை ஏற்றம்,வாள் பயிற்சி போன்றவற்றில் சிறந்து விளங்கியவர். மேலும் தமிழ்மறைகள் மற்றும் கலைத்துறையிலும் சிறந்து விளங்கியவர். சிவனடியார்க்கு செய்யும் தொண்டே பெரும்தொண்டு என உணர்ந்து அடியார்களுக்கு தம் இல்லத்தரசியுடன் சேர்ந்து அமுது அளிப்பதை செவ்வனே செய்து வந்தார்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு சிவனடியாருக்காவது அமுது அளிப்பதை கட்டாயமாக வழக்கத்தில் வைத்திருந்தார்..

சிறுதொண்டர் ஓர்நாள் அமுதுசெய்ய அடியார் யாரும் வராமையால் ஊர் முழுதும் அடியாரை தேடி அலைகிறார். சிவனும் பொங்கு கங்கையும் பிறை நிலவையும் மறைத்து மாறு வேடங்கொண்டு சிறுதொண்டர் இல்லம் நாடி அமுதளிக்க சொல்கிறார்.சிறுதொண்டரின் இல்லத்தரசியர் வெண்காட்டு நங்கையர் அவ்வண்ணமே அமுதளிப்பேன் இல்லம் புகுக என்கிறார். சிறுதொண்டர் இல்லத்தில் இல்லாததை கண்டு அடியாரும் யாம் ஊருக்கு வெளியில் உள்ள அத்திமரத்தடியில் தங்கி இருப்போம்.
சிறுதொண்டர் வந்தால் அனுப்பிவையுங்கள் அவர் வந்து அழைத்தால் யாம் வந்து அமுதுசெய்வோம் என்கிறார்.அதுபடியே அன்னையும் சிறுதொண்டர் இல்லம் வந்ததும் நடந்தவற்றை கூறி அடியாரை அமுதுசெய்ய இல்லத்திற்கு அழைத்துவரும்படி கூறுகிறார்.

சிறுதொண்டரும் அதுபடியே அடியாரை அழைக்க அடியாரோ அடியேன் பதினைந்து நாட்களுக்கு ஓருமுறை மட்டுமே உணவருந்துவேன்.அதுவும் நரபசுமாமிசம்.ஒரு இல்லத்தில் ஒரே பிள்ளையாய் பிறந்து ஐந்துவயது மட்டுமே நிரம்பியுள்ள அப்பிள்ளையை தந்தை சிரசை பிடிக்க தாய் அரிந்து கறிசமைக்க அடியேன் உண்பேன் என கூறுகிறார்..

சிறுதொண்டரும் அடியாரின் ஆசைப்படியே தாம் பலகாலம் பிள்ளைபேறின்றி தவித்து வரம்வேண்டி பெற்ற ஒரே மகனான சீராளனை பள்ளிக்கு சென்று அழைத்துவந்து நீராட்டி சீவித்தலைமுடித்து பாசத்தின் மிகுதியால் முத்தமிடாமலும் சோகத்தின் மிகுதியால் கண்கள் கலங்காமலும் எவ்வித பதட்டமும் இன்றி அன்புடன் மகனை தாய் மடியில் அமர்த்தி தந்தை அரிந்து கறிசமைத்து அடியார்க்கு அமுதுசெய்ய தயார் செய்கின்றனர். அதேவேலையில் சந்தனதாதியர் தலைபாகத்தையும் கறிசமைத்து வைக்கிறார். அடியார் தலைபாகத்தை கேட்க அதை சந்தனதாதியர் தனியே சமைத்து வைத்ததாக கூறி அழுது செய்ய ஆயத்தம் செய்கிறார்.

அமுது உண்ண தன்னுடன் ஒரு சிவனடியார் இருந்தால் மட்டுமே அமுது உண்பேன் என அடியார் கூறுகிறார்.எங்கு தேடியும் வேறொரு அடியார் கிடைக்காமல் போனமையால் சிறுதொண்டரே நீறூபூசிய நெற்றியுடன் அடியார் கோலம்கொண்டு அமுதுண்ண அமர்கிறார். அப்போது அடியார் சிறுதொண்டரின் மகவை அழைக்கும்படி கட்டளையிட்டு, மகவு இல்லையெனில் அப்படிபட்ட இல்லத்தில் அமுதை ஏற்கமாட்டேன் என அடியார் கூற சிறுதொண்டரும் இல்லத்தின் பின்புறம் சென்று மகனை அழைக்க அவர் பெற்ற உண்மையான மகன் ஓடோடி வருகிறான்.பேரின்பமிகுதியோடு அடியாரை நோக்க அங்கே அடியார் இல்லை.

விடைமீது உமையவளுடன் ஈசன் திருகாட்சி தந்து சிறுதொண்டர் குடும்பமுடன் சந்தனதாதியரோடு திருவடிபேறு அளித்து திருகயிலை சேர்ந்து நீங்காத பேரின்பம் பெற்றுய்ய அருள்புரிகிறார் எந்தை ஈசன். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகும் அருளையும் சிவதொண்டருக்கு வழங்குகிறார் ஈசன்.

சிறுதொண்ட நாயனார் திருவடிகள் போற்றி

அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.