Magara rasi guru peyarchi palangal 2017-18

மகர இராசி அன்பர்களே….

உங்கள் இராசிக்கு 10-ம் இடத்திற்கு 02.09.2017 அன்று குரு பகவான் பெயர்ச்சி ஆகி வருகிறார். 11, 4-க்குரிய செவ்வாய் சாரத்தில் அமர்வதால் நன்மைகளை நன்றாக தருவார். 10-ல் வந்த குரு பகவான், தனஸ்தானம், சுகஸ்தானம், ரோகஸ்தானம் எனும் 2, 4, 6-ம் இடங்களை பார்வை செய்வதால் தனலாபம் உண்டு. நினைத்தது நடக்கும். எதிர்பார்த்ததை விட அதிகமாக பணவரவு அமையும். தடைப்பட்ட கல்வியும், தொழிலும் புத்துயிர் பெரும். சிலருக்கு புதிய தொழிலும் அமையும். இத்தனை நாட்கள் இருந்த வழக்கு விவகாரங்கள் வெற்றி அளிக்கும். சொத்துக்கள் வாங்கும் பாக்கியம் ஏற்படும். வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டுக்கு குடியேறுவீர்கள். உறவினர்கள் உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். சகோதர – சகோதரிகளால் நன்மை ஏற்படும். சுபநிகழ்ச்சிகள் வீட்டில் அமர்களப்படும். பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். சரி, நீங்கள் எந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும் தெரியுமா? வாகன விஷயத்திலும், பெரியவர்களிடமும் கண்டிப்பாக உஷாராக இருக்க வேண்டும். கணக்கு வழக்கில் கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகள் வசம் பணிவு தேவை. பொதுவாக, இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் நன்மையே செய்வார். நல்வாழ்த்துக்கள்.

உத்திராடம் (2,3,4), திருவோணம், அவிட்டம் 1,2

நண்பர்களிடமும் விரோதிகளிடமும் சகஜமாகப் பழகக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே!

உங்கள் ஜென்ம ராசிக்கு 3,12-க்கு அதிபதியான ஆண்டுக் கோளான குரு பகவான் வாக்கியப்படி 2-9-2017 முதல் 4-10-2018 வரை தொழில் ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் தொழில், வியாபாரரீதியாக நெருக்கடிகள் நிலவும். போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். தொழிலில் மிகவும் மந்தமான நிலைகள் நிலவுவதால் லாபம் குறைந்து பொருள்தேக்கம் ஏற்படும். கூட்டாளிகளிடையே ஒற்றுமையற்ற நிலையே நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணியில் பிறர்செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். வேலைப்பளு அதிகரிக்கும். தேவையற்ற பழிச்சொல் ஏற்படும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாகநேரிடும்.

வாக்கியப்படி 19-12-2017 முதல் சனி 12-ல் சஞ்சரிக்க உள்ளதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி தொடங்கவுள்ளது. இதுவும் சாதகமற்ற அமைப்பு ஆகும். இதுமட்டுமின்றி ஜென்ம ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிவரும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச்செலவுகள் உண்டாகும். உடல் அசதி, சோர்வு போன்றவற்றால் எந்தவொரு காரியத்தையும் சரிவர செய்துமுடிக்க முடியாமல் மனநிம்மதி குறையும். கணவன்-மனையியிடையே உண்டாகக் கூடிய வாக்குவாதங்களால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உற்றார்-உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். மனசஞ்சலங்கள் அதிகரிப்பதால் அமைதிக்குறைவு உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமங்களையே சந்திப்பீர்கள். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் அமைவதில் இடையூறு ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றால் பெரிய சிக்கல்களையும், வம்பு வழக்குகளையும் சந்திப்பீர்கள். கொடுத்த கடன்களை வசூலிக்கமுடியாத சூழ்நிலை ஏற்படும். அரசியலில் மறைமுக எதிரிகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் எதிலும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. மேடைப் பேச்சுகளில் நிதானம் தேவை. கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் காப்பாற்றிக்கொள்வது உத்தமம். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கடன்கள் அதிகரிக்கும். உங்களுக்கு பிரதான கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணவிவகாரங்களில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச்செலவுகளை ஏற்படுத்தும். மனைவிக்கு வயிற்றுவலி, மாதவிடாய் தொடர்புடைய பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். முயற்சிகளில் தடைகள் நிலவுவதால் மனநிம்மதி குறையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சரியான நேரத்திற்கு உணவுண்ண முடியாத நிலை, உடல் சோர்வு, தூக்கமின்மை போன்றவற்றாலும் பாதிக்கப்பட நேரிடும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை

கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி மனநிம்மதி குறையும். உற்றார்-உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பொருளாதார நிலையில் ஓரளவுக்கு பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண்செலவுகளால் கடன்வாங்க நேரிடும். திருமண சுபகாரிய முயற்சிகளுக்கு நெருங்கியவர்களே தடையாக இருப்பார்கள். சிலருக்கு வீடு பழுதடைவதால் வீண்விரயங்களும் உண்டாகும். புத்திரர்களால் மனசஞ்சலங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதிக் குறையும். சேமிக்க முடியாமல் போகும்.

கொடுக்கல்வாங்கல்

கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியாமல் போகும். கொடுக்கல்-வாங்கலில் வீண் விரயமும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாத சூழ்நிலைகளும் ஏற்படும். பெரிய முதலீடுகளை கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது. சிலருக்குக் கொடுத்த பணத்தைத் திரும்பப்பெறுவதில் சிக்கல்கள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகளைச் சந்திக்க நேரிடும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளையும் சந்திக்க நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களைத் தள்ளிவைப்பது நல்லது. எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் அபிவிருத்தி குறையும். சிலருக்கு பொருட்தேக்கமும் உண்டாகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கைநழுவிப்போகும். தொழிலாளர்களுக்கு சம்பளப் பட்டுவாடா செய்வதில் தடைகள் ஏற்பட்டு அவர்களாலும் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிக நேரம் உழைக்க வேண்டி வரும். உடல்நிலை சோர்வடையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். எந்தப் பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியாமல் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். பிறர் செய்யும் குற்றங்குறைகளை நீங்கள் கண்டுபிடித்துக் கூறுவதாலும் உடனிருப்பவர்களிடம் வீண் பிரச்சினைகளும் வாக்குவாதங்களும் ஏற்படும். எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய நேரிடும்.

பெண்கள்

குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலைகளால் நிம்மதி குறையும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவும். பணவரவுகளில் பற்றாக்குறை நிலவுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் மனசஞ்சலங்கள் உண்டாகும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகளைப் பெறமுடியாமல் போகும். சிலருக்கு வீடு மாறக்கூடிய சூழ்நிலையும், பணிபுரியும் பெண்களுக்கு உடனிருப்பவர்களால் வீண்பிரச்சினைகள் ஏற்பட்டு வேலைப்பளு அதிகரிக்கும்.

அரசியல்

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள போராட வேண்டிய காலமாகும். புகழ், பெருமை யாவும் மங்கும். உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவார்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறமுடியும். மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் செயல்படுவது மிகவும் உத்தமம்.

விவசாயிகள்

விளைச்சல் நன்றாக அமைய கடும்முயற்சியினை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலையால் பயிர் வேலைகள் சரிவர நடக்காதுபோகும். அரசுவழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் தாமதப்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

கலைஞர்கள்

வரவேண்டிய படவாய்ப்புகள் தட்டிச்செல்லும். தனவரவில் தடைகள் உண்டாகி கடும்சோதனைகள் ஏற்படும். சம்பள பாக்கிகளும் இழுபறி நிலையில் இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலமான பலனை அடையமுடியாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.

மாணவமாணவியர்

எவ்வளவுதான் கஷ்டப்பட்டு படித்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண் களைப் பெறமுடியாது. இதனால் கல்விரீதியாக உங்களுக்கு உதவி செய்பவர்களும் திருப்தியற்ற நிலைகளை அடைவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பொழுதுபோக்குகளும் நண்பர்களின் சேர்க்கைகளும் வீண் பிரச்சினைகளை உண்டாக்கிவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 2-9-2017 முதல் 5-10-2017 வரை

ஜென்ம ராசிக்கு 3,12-க்கு அதிபதியான குரு பகவான் ஜீவன ஸ்தான மான 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சனி லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மனதில் அமைதியும், உற்சாகமும் பிறக்கும். மனைவி, பிள்ளைகளும் மகிழ்ச்சிகரமாக அமைவார்கள். அன்றாடப் பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடிக்க முடியும். தடைப் பட்ட சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் தற்போது கைகூடும். பணம் பலவழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தாராள மான தனவரவுகளால் குடும்பத்தேவைகள் அனைத்தும் கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். அசையும், அசையா சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. உத்தி யோக நிலையில் இக்காலத்தில் ஓரளவுக்கே உயர்வினை எதிர்பார்க்க முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் பணியில் திருப்திகரமான சூழ் நிலையை உண்டாக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புக்கள் தேடிவந்து கதவைத் தட்டும். சேமிப்புகள் பெருகும். அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 6-10-2017 முதல் 7-12-2017 வரை

குரு பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டிவரும். மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச்செலவுகள் ஏற்படும். கணவன்-மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். பொருளாதாரநிலையிலும் பற்றாக்குறைகள் நிலவுவதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்து லாபங்கள் தடைப்படும். உங்களின் பலம் குறைந்து எதிரிகளின் பலம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளநிலை இருந்தாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தடைகள் ஏற்படும். பெண்கள் பிறரிடம் எந்தப்பொருளையும் இரவல் வாங்குவதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்குக் கௌரவமான பதவிகள் கிடைக்கும் என்றாலும் கூடுதல் பொறுப்புகளும் அதிகரிக்கும். கலைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்புகள் கைநழுவிப்போகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் தவிர்த்துவிடுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு குறையும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 8-12-2017 முதல் 13-2-2018 வரை

குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதாலும் வாக்கியப்படி 19-12-2017 முதல் சனி 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்ப தால் ஏழரைச்சனியில் விரயச்சனி தொடங்குவதாலும், எதிர்பாராத வீண்விரயங்கள் அதிகரிக்கும். உடல்நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மனைவி, பிள்ளைகளால் மனக்குழப்பங்கள் உண்டாகும். பணவரவுகளில் தடைகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே திண்டாட வேண்டிவரும். கடன் பிரச்சினைகள் மேலோங்கி சேமிப்புக் குறையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் இழுபறியான நிலையே நீடிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கக்கூடும். நெருங்கியவர்களே எதிரிகளாக மாறுவார்கள். கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்பதால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமற்ற பலனை சந்திப்பார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்குக் குறைவான பணியே அமையும். கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக்கொள்வது உத்தமம். மாணவர்கள் எதிலும் சுறு சுறுப்பு இல்லாது இருப்பார்கள். வியாழக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் அதிசாரமாக விருச்சிக ராசியில் 14-2-2018 முதல் 6-3-2018 வரை

குரு பகவான் அதிசாரமாக உங்கள் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணம் பலவழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகங்களும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமையும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெறும் என்றாலும் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கல் சரளமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகளும் கிடைக்கப்பெறும். உடல்நிலை சற்றே சோர்வாக அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். புத்திரவழியில் சில மனசஞ்சலங்கள் தோன்றும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் வக்ரகதியில் 7-3-2018 முதல் 3-7-2018 வரை

குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் இன்பமும் துன்பமும் கலந்தே இருக்கும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் நிலவினாலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் ஓரளவுக்கு லாபம் அடையமுடியும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டிகள் மறைந்து தேக்கமான நிலைகள் விலகும். சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு ஓரளவுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். சனி 12-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களாலும் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். புதிய வேலை தேடுபவர்களுக்குக் கிடைக்கும் வேலைகள் தொலை தூரத்தில் கிடைப்பதால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 4-7-2018 முதல் 4-10-2018 வரை

குரு பகவான் ஜீவன ஸ்தானத்திலும், சனி விரய ஸ்தானத்திலும், ஜென்ம ராசியில் கேது 7-ல் ராகுவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உற்சாகம் மறையும். முயற்சிகளில் தடைகளைச் சந்திப்பீர்கள். பொருளாதார நிலையிலும் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். வரவுக்குமீறிய செலவுகளால் கடன்கள் தோன்றும். உற்றார்-உறவினர்களாலும் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும். திருமண சுபகாரிய முயற்சிகளை சிறிது தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்தநிலை நிலவினாலும் பொருள்தேக்கம் உண்டாகாது. அரசுவழியில் வீணான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வேலையாட் களையும், கூட்டாளிகளையும் மிகவும் அனுசரித்துச்செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ள முடியும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கலில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். கிரகநிலைகள் சாதமற்று இருப்பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

பரிகாரம்

மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைதோறும் குருப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு நல்லெண்ணெயில் தீப மேற்றுவது நல்லது. ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் விநாயகர், அம்மன் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 5, 6, 8.
நிறம்: நீலம், பச்சை.
கிழமை: சனி, புதன்.
கல்: நீலக்கல்.
திசை: மேற்கு.
தெய்வம்: விநாயகர்.

Leave a Comment