திருமூலர் நாயனார்.
நந்திதேவரின் உபதேசத்தைப் பெற்ற சிவயோகி ஒருவர் சிவபுரத்தில் வாழ்ந்துவருகிறார். அங்கு இறைவனை இனியதமிழில் தினமும் பாடி துதிப்பதை வழக்கமாக கொண்டவர்.அவர் அட்டமா சித்தி பெற்றவர்.அந்த சிவயோகியரை சிவபெருமான் தமக்காகவும் தம்மை வணங்கும் தமிழர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை நெறிபடுத்தவும், தமிழில் அறம் பொருள் இன்பம் வீடு எனும் நான்மறையை உள்ளடக்கிய பாடல்களை இயற்றி தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டு புரியும்படி இறைவன் பணிக்கிறார்.
சிவயோகியரும் சிவனது ஆணையை சிரம்மேற்கொண்டு அவ்வண்ணம் செய்தருள ஆயத்தமாகிறார்.
தமிழ் என்றதும் சிவயோகிக்கு சட்டென அகத்தியர் நினைவுக்கு வரவும்
பொதியமலை நோக்கி பயணிக்கின்றார். திருவாவடுதுறையை அடைந்தார். அங்கு இறைவனை வணங்கினார். அத்திருத்தலத்தை கடந்து செல்லும்போது காவிரியாற்றின் கரையில் பசுக்கூட்டம் ஒன்று அம்மா என கதறுவதை பார்க்கின்றார். அப்பசுக்களை மேய்க்கும் மூலன் என்பவன் இறந்து கிடக்கின்றார். சிவயோகியார் அப்பசுக்களின் துன்பத்தைப் போக்க எண்ணினார். தாம் பயின்ற சித்தியினால் அம்மூலன் என்பவனின் உடலில் தம் உயிரைப் புகுத்தினார். பசுக்கள் மகிழ்ந்தன. மாலையில் அப்பசுக்கூட்டங்களைக் கொண்டுபோய் ஊரின் எல்லையில் விட்டுவிட்டு எல்லையிலேயே தங்கிவிட்டார். அவைகள் பழக்கம் காரணமாகத் தம் வீடுகளுக்கு தாமாகவே சென்றன. திருமூலர் ஊரின் எல்லையில் ஓரிடத்தில் நின்றார்.
மூலனின் மனைவி தன் கணவன் இன்னும் வரவில்லையே என்று தேடிக் கொண்டு சென்றாள். தன் கணவன் போல நின்ற யோகியாரைப் பார்த்தாள். தம் கணவருக்கு ஏதோ நேர்ந்து விட்டது என்று எண்ணி அவரைத் தம் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றாள். முடியவில்லை. அதனால் மன வருத்தம் கொண்ட அம்மை இல்லம் திரும்பினாள். அன்று இரவு கழிந்தது. மறுநாள் பொழுது புலர்ந்தது.அம்மை தனது கணவனின் நிலையை தம் உறவினரிடம் உரைத்தாள். அவர்கள் திருமூலரிடம் சென்றனர். அப்போது திருமூலர் யோகத்தில் இருக்கக் கண்டு அவரை மாற்ற இயலாது என்று மூலனின் மனைவியிடம் உரைத்தனர். அவள் பெரிதும் துன்பம் அடைந்தாள். யோகத்தினின்று எழுந்து யோகியார் தாம் மறைத்துவைத்திருந்த தமது உடலைத்தேடிப் பார்த்தார். அது கிடைக்கவில்லை. தம் யோகவன்மையால் இறைவரின் உள்ளத்தை உணர்ந்தார். சிவாகமப் பொருளைத் திருமூலர் வாக்கால் செந்தமிழில் செப்புதல் வேண்டும் என்பது இறைவனாரின் திருவுள்ளம்.
அதனால் தம் உடல் இறைவனால் மறைக்கப்பட்டது என்பதை திருமூலர் உணர்ந்தார். திருமூலர் சாத்தனூரிலிருந்து சென்றபோது மூலரின் உறவினர் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களுக்கு அவர் உண்மையை உரைத்து தாம் மூலனின் மனைவியுடன் வாழ்வது முறையள்ள என்பதையும் தாம் தமிழுக்கும் சைவத்திற்கும் பணி செய்யவே இறையாசி பெற்று வந்ததை விளக்கமாக கூறி அங்கிருத்து கிளம்பினார்.
பின்னர் திருவாவடுதுறை திருத்தலத்தை அடைந்து இறைவனை வணங்கிக் கோயிலுக்கு மேற்கில் உள்ள அரசமரத்தின் கீழ் சிவயோகத்தில் மூழ்கியவாறு இருந்து மூவாயிரம் ஆண்டுகளில் மூவாயிரம் பாடல்களை இயற்றினார்.
பன்னிரு திருமுறைகளில் திருமூலர் எழுதிய திருமந்திரம் 10ம் திருமுறையாகும். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டது..
திருமூலர் நாயனார் குருபூசை ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் கொண்டாடப்படு கிறது.
திருமூலர் நாயனார் திருவடிகள் போற்றி
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.