திருநீலநக்கர் நாயனார்.
சோழநாட்டில் திருசாத்தமங்கை என்னும் நீர்வளம் உள்ளிட்ட பலவளங்களைக் கொண்ட இயற்கை எழில் சூழப்பெற்ற திருத்தலம் ஒன்று இருந்தது.
இத்தலத்தில் எப்போதும் நீர் பாயும் ஒலியானது கேட்டுக் கொண்டே இருக்கும் என்பதை ‘ஒலி புனல் சூழ் சாத்தமங்கை’ என்று சுந்தரர் பெருமான் தம் பதிகத்தில் சிறப்பித்து இருப்பார்.
இக்காலத்தில் இத்திருத்தலம் திருசாத்தமங்கை என்ற பெயர் மாற்றம்கண்டு சீயாத்தமங்கை என்று வழங்கப்படுகிறது. இது நன்னிலத்திற்கு அருகே அமைந்துள்ளது. இத்தலத்தில் அயன் எனப்படும் பிரம்மன் ஈசனை வழிபட்டமையால் அயவந்தி என்று சிவாலயத்திற்கு பெயர் உருவாயிற்று.
இத்திருத்தல இறைவன் திருநாமம் அயவந்தீச்வரர், இறைவி இருமலர்க்கண்ணம்மை என்ற திருநாமங்களில் அழைக்கப்படுகின்றனர்.
இத்தகைய சிறப்புமிக்க சாத்தமங்கையில் திருநீலநக்கர் அவதரித்தார். இளமையிலேயே சிவன்மீது தீவிர பக்தி கொண்டமையால் அவர் சிவ வழிபாடும்,
சிவனடியார் தொண்டுமே நான்மறையின் உட்பொருள் என்பதாகக் கருதினார்.
ஆகையால் சிவனாரின் மீது பக்தியும், பேரன்பும் கொண்டிருந்தார். சிவனடியார்களை முறைப்படி உபசரித்து திருவமுது செய்தும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியும் தொண்டுகள் செய்து வந்தார். நான்மறை ஒதுதல் இல்லத்தில் இறைவனுக்கு வேள்வி வழிபாடு மேற்கொள்ளுதல் அயவந்திநாதருக்கு மக்களநீராட்டல், அலங்கரித்தல், பூசனை தீபாராதனை போன்ற அத்துனை வழிபாடுகளையும் தாம் ஒருவரே மேற்கொள்வார். கருவறைக்குள் துணைக்குகூட தம் குடும்பத்தார் யாவரையும் அனுமதிக்கமாட்டார். தம்மைத்தவிர தம் இறைவனை பிறர் நெருங்கலாகாது என்ற கொள்கையில் உறுதியோடு இருந்தார். இறைவன் மீது அடியார் வைத்திருந்த அன்பின் வெளிப்பாடு இது.
இது சிறுபிள்ளை விளையாட்டு போன்று இருந்தாலும் அந்த நிலையில் இருந்து அனுபவிப்பவர்க்கே அந்த அனுபவம் புரியும். அடியார் நிலை இங்ஙனம் என்றால் அடியாரது இல்லத்தரசியாரின் நிலையும் இதற்கு சற்றும் குறைவிலாதது. அம்மைக்கு இறைவனை அருகில் சென்று அகங்குளிர கண்டுமகிழ்ந்து தம் திருக்கரங்களால் தொட்டு மகிழ வேண்டும் என்பதை தம் பிறவிப்பயனாக நினைத்து தம் மனத்தே ஆசையை வளர்த்துகொண்டார். அம்மையின் ஆசையை இறைவன் நிறைவேற்றாமல் விடுவாரா? அதற்கான காலமும் கனிந்தது.
திருநீலநக்கர் அயவந்திநாதர் ஆலயத்து இறைவர்க்கு மக்கள நீராட்ட ஆயத்தமாகி அம்மையிடம் பூசைக்குரிய பொருட்கள் மலர்மாலைகள் நிவேதன பிரசாதம் அத்துனையும் தம்முடன் கொண்டுவருமாறு பணித்தார்.
அம்மை ஆலயத்துள் சென்று கருவறைக்கு வெளியில் அமர்ந்த வண்ணம் பூசைக்குரிய பொருட்களை அடியாரிடம் அளித்த வண்ணம் இருந்தார்.
அனைத்தும் சுமுகமாக நடைப்பெற்றது. இறைவனின் திருவிளையாடல் ஆரம்பமானது.திருவானைக்காவலில் தமக்கு பந்தல் அமைத்து வழிபட்ட சிலந்தியை அழைத்தார். அச்சிலந்தி இறைவனின் திருமேனிக்கு மிக அருகே வந்து எம்மை அழைத்த காரணம் யாது ஐயனே என கேட்டபடி இறைவன் திருமேனியை நெருங்கியது. இதனைக்கண்ட அம்மை சிலந்தி ஐயனை தீண்டவே நெருங்குவதாக நினைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கருவறையுள் புகுந்து இறைவனை தொடுவதை அடியார் அனுமதிக்கமாட்டார் என்பதை உணர்ந்து பூ என தம் திருவாயால் சிலந்தியை ஊதி புறம் தள்ளினார். அக்கணம் அம்மையின் உமிழ்நீரும் இறைவன் திருமேனியில் விருந்துவிட்டது. அடியார்பெருமான் அதனை நோக்கிவிட்டார்.
இப்படிப்பட்ட கேடுகளை இறைவனுக்கு செய்வீர்கள் என நினைந்தே மற்றயரை கருவறையின் புறத்தே நிற்கச்செய்தேன். அவ்வளவு கட்டுப்பாடாய் இருந்தும் இன்று உம்மால் மன்னிக்க முடியாத தீங்கு நேர்ந்துவிட்டதே என பதறினார் அடியார். எங்ஙனம் இப்பாவத்தை கழுவி தீர்ப்பேன் என புலம்பினார். பின்னர் பூசனையை இடையிலேயே நிறுத்திவிட்டு இனி உம்முடன் யான் சேர்ந்து வாழுதல் முறையன்று என கூறிவிட்டு இனி எம் இல்லத்தில் உம்மை அனுமதியோம். உம்முடன் சேர்ந்தும் வாழோம் என கடும் சினத்துடன் கூறிவிட்டு ஆலயத்தினின்று அகன்று இல்லத்திற்கு சென்றார். இல்லம் சென்று அடியார் இறைவனுக்கு நடந்த நிகழ்வை நினைத்தவாறே தரையினில் படுத்தார்.
ஆலயத்தில் இருந்த அம்மை என்ன அப்பனே உம்மை ஒருமுறை தொட்டு பார்க்கவே நினைத்தேன். அதை தவறு என அறிந்து சிலந்தியைகூட ஊதத்தானே செய்தேன். தங்களை தொடக்கூட இல்லையே. அறியாமல் உமிழ்நீர் தங்கள் திருமேனிமீது விழுந்துவிட்டது. அதற்கு எமக்கு இப்பெரிய தண்டனையா என கண்கலங்கியவாறே நடைசாற்றி இல்லத்தை நோக்கி சென்றார். இறைவனுக்கு மனவேதனை உண்டாயிற்று.
என்ன செய்வது இறைவனும் அடியாரின் இல்லம் நோக்கி அம்மையை பின்தொடர்ந்தார். அடியாரின் வாயிற்கதவு தாழிட்டு இருந்தபடியால் அம்மை வீதியில் நின்றவாறு இருந்தார்.பதியை அழைக்கவும் அச்சம். காலைப்பொழுதில் இருந்து அடியார் உணவருந்தாமல் இருந்தமையால் மயங்கியவாறு இருந்தார். அம்மயக்கத்தில் இருந்த அடியாரின் மனதிற்குள் இறைவன் ஒரு காட்சியை காட்டி அருளினார். தம் திருமேனி முழுவதும் கொப்புளங்களாகவும் அம்மையின் உமிழ்நீர்பட்ட பகுதி மட்டும் நலமாக இருக்குமாறு காட்சி அருளினார். அரை மயக்கத்தில் இருந்த அடியார் அப்பனே என்ன இதுகோலம்.தங்கள் திருமேனி முழுவதும் இப்படி கொப்புளங்களாக இருக்கின்றனவே என கதறினார். இறைவனும் எமக்கு வலி தாளவில்லையே. உடல் முழுவதும் எரிச்சலாக உள்ளதே. அம்மையின் உமிழ்நீர் மருந்து போலும்.அது பட்ட இடம் மட்டும் நலமாக உள்ளது. ஏனைய இடம் எரிச்சலாக உள்ளதே. அன்னை எம் உடல் முழுமையும் மருந்திட்டால் நலமாக இருக்கும் என கதறினார். அடியாருக்கு என்ன செய்வதென விளங்கவில்லை. கதவின் தாழ்திறந்து வெளியேவந்து நேராக ஆலயம் சென்றார்.
அம்மையும் அடியாரை பின் தொடர்ந்தார். ஆலயத்தை அம்மை திறந்துவிட அடியார் கருவறை சென்று இறைவனை கண்டார்.திருமேனி முழுதும் திருக்காட்சியில் கண்டவாறே கொப்புளம். அடியார் அம்மையை அழைத்து உமது உமிழ்நீரே இறைவனுக்கு மருந்தாகும். அதனை இறைவன் திருமேனி முழுவதுமாக பூசி நலமாக்குதல் வேண்டும் என வேண்டினார். அம்மையும் இறைவன் நலமாக வேண்டும் என இறைவனிடமே வேண்டியவாறு இறைவன் திருமேனியை தம் திருக்கரத்தால் தீண்டி மருந்திட்டார். இறைவனும் நலமானார்.
திருநீலகண்டர் நாயனார் திருநீலகண்டர் யாழ்ப்பாணர் மற்றும் திருநீலநக்கர் ஆசிய மூவருக்கும் இறைவன் திருக்காட்சி தந்தது அம்மையர்களால் மட்டுமே.
அதன்பின்னர் திருநீலநக்கர் தம் இல்லத்தரசியுடன் இனிதே வாழ்ந்து திருஞானசம்பந்த பெருமானுக்கு திருமணம் நடத்தி வைத்து திருஞான சம்பந்தரோடு இறை சோதியில் அனைவரும் கலக்கின்றனர். அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஒருவராக இறைவன் அருள்கிறார்.திருநீலநக்க நாயனார் குருபூசை வைகாசி மூல நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
திருநீலநக்க நாயனார் திருவடிகள் போற்றி
மருந்தீசனுக்கு மருந்திட்ட அம்மையின் திருவடிகள் போற்றி
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.