மகரம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Magaram sani peyarchi palangal 2017-20
சிறு கண்ணோட்டம்:
மகர ராசிகாரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி பல சிக்கல்களை தரும். இறை வழிபாடு மிகவும் அவசியமானது. இந்த சனி பெயர்ச்சியில் இவர்களுக்கு விரய சனி ஆரம்பமாகிறது, இது ஏழரை சனியின் ஒரு பகுதி. இந்த சமயங்களில் செய்யும் தொழிலில் முடக்கம் ஏற்படலாம், தொழில் நஷ்டம் வர வாய்ப்புள்ளது. தொழிலில் பெரும் முதலீட்டை தவிர்ப்பது நல்லது, பணம் கொடுக்கல் வாங்குதல் நல்லது இல்லை. யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். சொந்த பந்தங்கள் விலகி செல்வார்கள், நபர்களுக்குள் பகைமை ஏற்படும். நடப்பது விரய சனி என்பதால் மருத்துவ செலவு ஏற்படும், பெற்றோர்கள் உடல் நிலையில் அக்கறை செலுத்தவும். வேலை செய்யும் இடத்திலும் வீட்டிலும் மரியாதை குறைவு ஏற்படலாம். வேலை விஷயமாக வெளியூர் செல்ல வாய்ப்புள்ளது, அலைச்சல் அதிகரிக்கும். சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வரவும். ஒரு முறை திருநள்ளாறு சென்று நீராடி வருவது நல்லது. இதன் மூலம் சனியின் தாக்கம் குறையும்.
உத்தராடம் 2, 3, 4,ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2,ம் பாதங்கள்)
(போ, ஜ, ஜி, ஜூ, ஜே, க, கா, கீ) ஆகிய எழுத்துக்கள் பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களும் தை மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தும்.
வான மண்டலத்தில் 10வது ராசியாக சஞ்சரிக்கும் சனிபவகானே உங்களது ராசியின் அதிபதி ஆவார். மனதில் உறுதியும், உழைப்பில் நேர்மையும், செயலில் சற்று வேகமும், எதையும் செய்து முடிக்க வேண்டும் என்ற ஆற்றலும் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயலாற்றும் ஆற்றலும் உடையவர்கள். நீங்கள் எண்ணியதை எண்ணியபடி செயலாற்ற வேண்டும் என்ற எண்ணமும் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையும், தெய்வ சிந்தனையும் உடையவர்கள்.
எதையும் கண்டு அஞ்சாத நெஞ்சமும், ஆர்ப்பரிக்காமல் எதையும் அமைதியாகச் செய்து முடிக்கும் விவேகமும் உங்கள் தனிச் சிறப்பாகவும் மற்றவர்களின் சொத்துக்கும் பொருளுக்கும் ஆசைப்படாத ஆன்மா நீங்கள். உழைப்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் உள்ளவர்கள் நீங்கள். எதிலும் நிதானமும், நடு நிலையுடனும் செயல்படும் உங்கள் ராசிக்கு இதுவரை 11ம் இடமான ஸ்தாபனத்தில் சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது 12ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார்.
12ம் இடம் என்பது விரயஸ்தானம் மட்டுமல்ல அது முதலிட்டு ஸ்தானமும் கூட, உங்கள் மகர ராசியின் அதிபதி சனி ஆவார். அவரே உங்கள் ராசியின் 2ம் இடமான குடுமபஸ்தானத்திற்கும் அதிபதியாகி அவர் 12ம் இடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் அடிக்கடி பிரயாணங்கள் செல்ல வாய்ப்பு அமையும்,இடமாற்றம் அமையும். குடியிருக்கும் வீடு, தொழில் ஸ்தாபனம், பணிபுரியும் இடம், அலுவலகம் இவற்றில் மாற்றங்கள் வர வாய்ப்பு அமையும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்கள் செல்ல வாய்ப்புகள் வந்து அமையும். அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் உடல் அசதியும், சோர்வும் அதிகரித்துக் காணப்படும்.
எவ்வளவு சம்பாதித்தாலும் அந்த பணம் அல்லது பொருள் கையில் தங்காது. ஒன்று விரயமாகும் அல்லது செலவாகும் அல்லது முதலீடாகும். எனவே தேவையற்ற விரயங்களைத் தவிர்த்தல் நலமாகும். மறைமுகமான எதிரிகளால் நமக்கு தேவையற்ற பிரச்சனைகளும், இடைஞ்சல்களும் வந்து சேரும். பணப்புழக்கம் தாரளமாக இருந்தாலும் சற்று பற்றாக் குறையாகவே இருந்து வரும். கொடுக்கல் வாங்கல்களில் சற்று கவனமுடன் செயல்படுதல் வேண்டும்.
எடுக்கும் காரியங்களில் சற்று தடை ஏற்பட்டாலும் அதனால் நன்மைகள் அதிகமாகும். புதிய முயற்சிகள் சற்று சுமாராகவே இருந்து வரும். இளைய சகோதர சகோதரிகளால் நன்மையும் அவர்களுக்கு வேலை திருமனம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் புது வரவுக்கான போராட்டம் இருந்தாலும் புது வரவால் மகிழ்ச்சி அமையும். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும். அல்லது வீடு மராமத்து வண்டி பழுது பார்ப்பு இவற்றில் தேவையற்ற செலவினங்கள் வந்து சேரும்.
வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும், வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும் ஒரு சிலருக்கு அமையும் தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுதல் அவசியம் காதல் விஷயங்கள் சந்தோஷமாக அமையும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். புது நண்பர்கள் வட்டாரம் உருவாகும். வீடு வாடகை அல்லது ஒத்திக்கு விடவேண்டியது வரும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைப்பதில் நிறைய தடைகளும், சிக்கல்களும் வந்து சேரும். உங்கலை பற்றிய வீண் வதந்திகள் உலவிய வண்னம் இருக்கும். அதிலும் தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதோ தேவையற்ற விஷயங்களை பற்றி பேசுவதோ கூடாது. எதிலும் நிதானம் தேவை. தொழில் ரீதியாக தேவையற்ற போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டியது வரும்.
உடன் பணிபுரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். அவர்களால் இதுவரை இருந்து வந்த நட்பும் பாசமும் போராட்டமாக மாறிவரும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் எப்பொழுதும் எச்சரிக்கை தேவை. கால்நடைகள், காலி நிலங்கள், மனைகள் வாங்குவதில் அதிக எச்சரிக்கை தேவை. பாஸ்போர்ட் விசா வருவதில் இருந்த தடைகள் விலகி அவைகள் நல்லவிதமாக வந்து சேரும்.
சுய தொழில்களில் ஏற்றம் இறக்கம் இருந்து வரும். லாபம்ம் வருவது போல் இருந்தாலும் அந்த லாபம் கைக்கு வருவதில் தடையேற்படும். வரவுகள் ஆறு போல் இருந்தாலும் செலவுகள் கடல் போல் ஆகிக் கொண்டே இருக்கும். இருப்பினும் தெய்வ அனு கூலத்தால் அவற்றை எளிதில் சமாளித்து விடுவீர்கள். கூட்டுத் தொழில்கள் செய்ய புது தொழில் கூட்டாளிகள் வந்து சேர்வர். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். உடல் ஆரோக்யத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களது நிரந்தர பழக்க வழக்கங்களை மேற் கொள்ளக் கூடாது. முக்கிய பொறுப்புகளைச் செயல்படுத்துவதில் தடையும் கடமைகளை சரிவர நிறைவேற்றுவதில் நிறைய தடைகளும் இருந்து வரும். சந்தேகம் அவநம்பிக்கை தடுமாற்றம் இவற்றை தூக்கி எறிந்து வெற்றி என்ற ஒன்றை மட்டும் இலக்காக கொண்டு செயல்படுதல் வேண்டும்.
பரிகாரம்: விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஸ்ரீவாலீஸ்வரர் கோயிலில் அருளும்… வாலியால் தென்முகமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனீஸ்வர பகவானை வணங்கி வாருங்கள். வளம் பெருகும். ஏழை பெண்களின் திருமண செலவிற்கு உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் என்னும் ஊரில் வாலியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனீஸ்வர பகவானை வணங்கி வாருங்கள். “ஓம் ஸ்ரீம்கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் கூறிவாருங்கள் வளம் பெருகும்.