கும்பம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Kumbam sani peyarchi palangal 2017-20

சிறு கண்ணோட்டம்:

 

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி நன்றாக உள்ளது. இதன் மூலம் உங்களுக்கான நன்மைகள் தொடரும். புகழ் மற்றும் கவுரவம் கூடும். நண்பர்களின் உதவி கிடைக்கும், பண வரவு அதிகரிக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம், அதிக லாபம் பெறுவீர்கள். திருமண தடைகள் நீங்கி, திருமணம் கை கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதலர்களுக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. கடன் தொல்லைகள் தீரும். நினைத்த நன்மைகள் யாவும் கிடைக்கும் வகையில் இந்த சனி பெயர்ச்சி அமையும். சனி பகவானின் 8ஆம் பார்வையால் வாகனங்களில் செல்லும் போது மட்டும் கவனம் தேவை. நவகிரக வழிபாடும், குல தெய்வ வழிபாடும் உங்களுக்கு இன்னும் நன்மைகளை அதிகரிக்கும்.

(அவிட்டம், 3, 4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி, 1, 2, 3,ம் பாதங்கள்)

(கு, கெ, கோ, ஸ், ஸீ, ஸே, த) ஆகிய எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாகக் கொண்டவர்களும் தமிழ் – மாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தும்)

ராசி மண்டலத்தில் 11வது ராசியாகத் திகழ்வது கும்பராசி ஆகும். எதையும் சந்திக்கும் ஆற்றலும், நெஞ்சிலே உறுதியும் அனைவரையும் வசிகரிக்கும் ஆற்றலும் உடையவர்களாக திகழ்பவர் நீங்கள். தலைமைப் பணபும், எதையும் நன்கு சிந்தித்து செயல்படுவதில் வல்லவர்கள். நல்லது, கெட்டது, எது என்று பகுத்தாய்ந்து அதன் அடிப்படையில் செயல்படுவீர்கள். எப்பொழுதும் ஏதாவது ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற என்ணமும் சதா சிந்தித்து கொண்டும் சிந்தித்தை செயல்படுத்தவும் அதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறவும் என்ன வழிகள் என்பதை ஆராயும் திறமை உடையவர்கள்.

தெய்வ நம்பிக்கையும் ஆன்மீக சிந்தனையும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த உள்ளமும் மற்றவர்கள் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடாத உயர்ந்த பண்பாளர் நீங்கள். உண்மை பேசுவதையும் உள்ளதை பேசுவதையும் நல்லதே பேச வேண்டும் என்ற எண்ணம் உள்ள நீங்கள் சற்று சுய நலவாதிகளாகவும் விளங்குவீர்கள். உங்கள் மனதுக்கு சரி எனப்பட்டதை செய்யும் எண்ணம் உடையவர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் சஞ்சாரம் செய்த சனிபகவான் உங்கள் ராசிநாதனுமாகி அவர் 11ம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பானது என்று தான் கூற வேண்டும். உங்களது கௌரவம் அந்தஸ்து புகழ் கீர்த்தி அதிகரிக்கும், பேச்சில் நடை, உடை பாவனைகளில் மாற்றமும் ஒரு தன்னம்பிக்கையும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். இதுவரை மனதில் இருந்து வந்த பயம், பீதி, மனக் குழப்பம் நீங்கி ஒரு தெளிவு உண்டாகும். அதற்கான சரியான நபர்களை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டும். அக்கம் பக்கம் உங்களை பற்றிய பேச்சுக்கள் அதிகரிக்கும். உங்களை பற்றிய அறிமுகம் மற்றவர்களை சென்றடையும் காலமாகும்.

இதுவரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். கொடுத்த பணம் பொருள் நகைகள் இவைகல் எல்லாம் கைக்கு வந்து சேரும். பேச்சால், எழுத்தால் செயலால் ஒரு சிலருக்கு எதிர்பாராத தன வரவு பொருள் வரவு கிட்டும். உடன் பிறந்த சகோதர சகோதரர்களால் நன்மை ஏற்படும். அவர்களுக்கு சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். புதுப் புது உறவுகள் வந்து சேரும். அவர்களால் உங்களுக்கு நன்மைகள் கூடும். அதே சமயம் நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். அல்லது அவர்கள் உங்களை விட்டுப் பிரிவார்கள்.

மனை வீடு, வண்டி வாகனங்கள் நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். தாயாரால் எதிர்பாராத நன்மைகள் அமையும். அவர்கள் உடல் ஆரோக்யம் சீராக இருந்து வரும். இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற தூக்கம் குறைந்து இனி ஓரளவு நிம்மதியான தூக்கம் வந்து சேரும். உயர் கல்வி பயிலவும் அதனால் வேலை வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையும். பார்க்கும் வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை அமையும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டு விடுதல் கூடாது. நேரத்திற்கு உனவு அருந்துதல் வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும்.

குடும்பத்தில் புது வரவுகள் அதாவது மருமகன் மருமகள் பேரன் பேத்திகள் போன்றவர்களால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய படிப்பு அல்லது புதிய பயிற்சி இவற்றை மேற்கொள்ள வேண்டிய காலமிது. இதுவரை இருந்து வந்த தயக்கம் தடுமாற்றம் இவை விலகி உழைப்பு என்ற சொல்லே மேலோங்கி அதன் மூலம் பொருள் ஈட்ட உங்களுக்கு சரியான காலம் இதுவாகும்

காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். ஒரு சிலருக்கு காதல் வெற்றியாகி அது திருமணத்தில் நல்லபடியாக முடியும். இதுவரை இழுபறியாக இருந்து வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும். குழந்தைகளால் தேவையற்ற மனவருத்தங்கள் வேதனைகள் ஏற்படும். ஆன்மீக தெய்வீக தரிசனங்களும் ஆலய தரிசனங்களும் அடிக்கடி சென்று வருதல் வேண்டும்.

வேலையாட்களால் இதுவரை நடந்து வந்த பிரச்சனைகள் ஓய்ந்து நல்ல வேலையாட்கள் கிடைக்க வாய்ப்புகள் அமையும். மேலும் தேவையற்ற போட்டி எதிர்ப்பு, பகை, வம்பு வழக்கு கடன் விவகாரம் போன்றவற்றை முறியடிக்க கூடிய ஆற்றல்களும் அதிகரிக்கும். வேலையின் நிமித்தமாக பணியின் நிமித்தமாக தொழில் நிமித்தமாக வீடு, மாற வேண்டிய சூழ்நிலை ஒரு சிலருக்கு வந்து சேரும். வீடு வாடகை அல்லது ஒத்திக்கு விட வேண்டிய வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். தந்தையாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. வெளியூர், வெளிநாடு செல்வதில் சிறு சிறு தடைகள் ஏற்படும். மேலும் நண்பர்களால் உறவினர்களால் எதிர்பாராத தனப் பராப்தி அமையும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மை அமையும். வீட்டு வளர்ப்புப் பிராணிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை.

பரிகாரம்:திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூமாதேவி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாளை, ஏகாதசி திதி நடை பெறும் நாளில் சென்று வணங்குங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.

ஏகாதசி திதி நாளில் அருகில் உள்ள பெருமாள் கோயிலிற்கு சென்று பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். எப்போதெல்லாம் முடிகிறது அப்போதெல்லாம் கந்தனை வழிபட்டு வாருங்கள். ” ஓம் சரவணபவ” என்று மந்திரத்தை தினமும் ஜபித்து வாருங்கள், நன்மைகள் அதிகரிக்கும்.

Leave a Comment