அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் தந்தி மாரியம்மன் திருக்கோவில் நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னுரில் உள்ளது.

மூலவர் : தந்தி மாரியம்மன்

Address: Sri Thandhi Mariamman temple, Coonoor, The Nilgiris district.

Temple timings: 7.00 a.m. to 12.00 a.m.

4.30 p.m. to 8.00 p.m.

Contact Details: +91- 423 – 223 8686, 94430 50414

பழமை : 500 வருடங்களுக்கு முன்

ஸ்தல வரலாறு: அடர்ந்த காடாக இருந்த குன்னூரை சீரமைத்து அங்கே ஆங்கிலேயர்கள் குதிரை லாயங்களையும், சாரட் வண்டி கூடாரங்களையும் அமைத்தனர். இவற்றைக் கண்காணிக்க காவலாளிகளையும் நியமித்தனர். ஒரு முறை இரவு நேரத்தில் காவலாளி ஒருவர் வெளியே வந்தபோது, ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் வெள்ளையாக ஒரு உருவம் அமர்ந்து ஆடுவதைக் கண்டார். கூர்ந்து நோக்கிய போது, ஒரு சிறுமி பட்டாடையும், கண்களைப் பறிக்கும் நகைகளையும் அணிந்திருப்பதைப் பார்த்தார். மறுநாள், இத்தகவலை மக்களிடம் கூறினார். ஆனால், யாரும் நம்பவில்லை. மறுநாளும் இரவில் அவர் அதே காட்சியைக் கண்டு அதிர்ந்து மறுபடியும் ஊர் மக்களிடம் கூறினார். அவர் கூறியதை உறுதி செய்ய விரும்பிய மக்கள் அனைவரும் அன்றிரவு குதிரை லாயத்தில் தங்கினர். காவலாளி கூறியது உண்மை என அறிந்து கொண்டனர்.

அன்று இரவில் பக்தர் ஒருவரின் கனவில் மாரியம்மன் தோன்றி அந்த மரத்தின் அடியில், சிறுமி போல காட்சி தந்த இடத்தில், தான் சுயம்புவாக வீற்றிருப்பதாக கூறினாள். அதன்பின், மக்கள் அம்பிகைக்கு கோவில் எழுப்பி வழிபட்டனர். ஸ்தல பெருமை: அடர்ந்த காட்டுப்பகுதியை ஆங்கிலேயர்கள் திருத்திய போது, இது சிறிய ஊராக இருந்தது. எனவே இதை குன்னூர் என அழைத்தனர். குன்னூர் என்றால் சிறிய ஊர் என பொருள்படும். அம்பாளுக்கு கோவில் கட்டியபோது ஆங்கிலேயர்கள் தந்திக்கம்பம் ஒன்றினை இவ்விடத்தில் நட்டனர்.

இதனால், இங்கிருக்கும் அம்பாள் முதலில் தந்தி மாரியம்மன் என்ற திருப்பெயரில் அழைப்பட்டது. எனவே பிற்காலத்தில் அப்பெயரே நிலைத்து விட்டது. இன்று வரையிலும் கோவிலுக்கு அருகே ஆரம்பத்தில் வைக்கப்பட்ட தந்திக் கம்பம் உள்ளது. குன்னூரில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் போது தந்தி மாரியம்மனை மனமுருகி வணங்கிட மழை பெய்யும் என்கின்றனர்.

 

பொது தகவல்: இங்கு அம்பாள் ஊஞ்சலாடியதாகக் கூறப்படும் மரம் இப்போதும் இருக்கிறது. அம்மனுக்கு பூஜை நடக்கும் போது, தந்திக் கம்பத்திற்கும் கற்பூர தீபாராதனை காட்டப்படுகிறது. பிரகாரத்தில் முருகன், காத்தாயி அம்மன், கருமாரியம்மன், காமாட்சியம்மன், வனபத்திரகாளி, வனதுர்க்கை ஆகியோர் அருள்புரிகின்றனர்.

திருவிழா: சித்திரையில் 27 நாள் ஆண்டுத்திருவிழா, ஆடிவெள்ளி, நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை, தைப்பொங்கல், மாத அமாவாசை மற்றும் பௌர்ணமி. பிரார்த்தனை: திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்கவும், தொழில் விருத்தியடையவும், ஐஸ்வர்யம் பெருகவும், காலம் தவறாமல் மழை பெய்யவும், கல்வி மேன்மைக்கும், பதவி உயர்வு கிட்டவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்: வேண்டிக் கொண்டவை நிறைவேறிட அம்பாளுக்கு அவல், தேங்காய்ப்பு , சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் படைத்து புடவை சாத்தியும், பூக்குண்டம் இறங்கியும், பால்குடம், அக்னிசட்டி எடுத்தும், தந்தி கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றியும், அன்ன தானம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது

 

Leave a Comment