Pancha aranya Kshetram
சிவபெருமானின் தரிசனம் ஐந்து கோவில்களில் (Pancha aranya kshetram) , அதுவும் ஒரே நாளில்…. அதன் பெயர் காரணம் தான் பஞ்ச ஆரண்ய தலங்கள்….
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் கிழக்குக் கரையிலே அமைந்து இருப்பதுடன், ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின்போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும்படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்கள்:
1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) -விடியற்கால வழிபாட்டிற்குரியது.
2. அவளிவநல்லூர் (பாதிரி வனம்) – காலை வழிபாட்டிற்குரியது.
3. ஹரித்துவாரமங்கலம் (வன்னிவனம்)- உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.
4. ஆலங்குடி (பூளை வனம்)- மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.
5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) – அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.
இந்த வரிசைப்படி முதலில்
திருக்கருகாவூர்
கர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர், மாதவிவனேஸ்வரர் ஆகிய பெயர்களில் இறைவனும், கர்ப்பரக்ஷாம்பிகை, கருக்காத்தநாயகி எனும் பெயர்களில் அம்பிகையும் ஒருசேர அருள்புரியும் தலம் திருக்கருகாவூர். தல விநாயகர், கற்பக விநாயகர். தலமரம், முல்லை. க்ஷீரகுண்டம், பிரமதீர்த்தம் இரண்டும் தல தீர்த்தங்கள். பிரம்மன், கௌதமர், சந்திரன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற திருத்தலம் இது. ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் – கருகாவூர் என்று பெயர் பெற்றது. முல்லைவனம், மாதவிவனம், கர்ப்பபுரி என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள். கருச்சிதைவுற்றோ அல்லது மகப்பேறின்றியோ வருந்துவோர் இத்தலத்திற்கு வந்து கர்ப்பரட்சாம்பிகையின் சந்நதியில் வழிபட்டு நற்பலன் பெற்று மகிழ்ச்சியடைகிறார்கள். இத்தலத்தை வழிபடுவோர்க்கு குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை. பிரசவகால வேதனையும் மிகுதியாவதில்லை. கருவைத் தருவதும், அதைக் காப்பதுமாகிய அருள் வழங்குபவளாக அம்பாள் திகழ்கிறாள். காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் இதுவுமொன்று.
இக்கோயிலில் ரதவடிவிலான சபா மண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூஜித்த சிவலிங்கமும் உள்ளன. மூலவர் சுயம்பு மூர்த்தி. மேற்புறம் பிருதிவிபாகம் – புற்று மண்ணாலாகியது. சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி சுற்றிய வடு உள்ளது. இங்குள்ள நந்தி, உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர். இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. கருவுற்ற பெண்களுக்குச் சுகப்பிரசவம் உண்டாகும் பொருட்டு, கர்ப்ப ரக்க்ஷாம்பிகையின் திருவடியில் வைத்து, மந்திரித்த விளக்கெண்ணெய் தரப்படுகிறது. பிரசவ காலத்தில் இதை வயிற்றில் தடவிவர, சுகப்பிரசவமாகும். கும்பகோணம் – ஆவூர் – மெலட்டூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது இக்கோயில். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இரண்டாவது,
திருஅவளிவநல்லூர்
இறைவன் சாட்சிநாதராகவும், இறைவி சௌந்தர நாயகி, செளந்தர்யவல்லி எனும் பெயர்களிலும் அருளும் தலம் திருஅவளிவநல்லூர்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பெற்ற தலம் இது. பண்டைநாளில் இத்தலத்தில் இறைவனைப் பூஜித்து வந்த ஆதி சைவ அந்தணர் ஒருவருக்கு இரு மகள்கள் இருந்தனர். மூத்த பெண்ணை மணந்தவர் சிறிது காலங்கழித்து, காசியாத்திரை சென்றார். அவர் சென்றிருந்த காலத்தில் அவர் மனைவி அம்மை நோய் கண்டு, அவள் உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழித்து, காசி யாத்திரை சென்றிருந்த மூத்த மருமகன் வீடு திரும்பினார். நோய்ப்பட்ட தன் மனைவியின் உருவ மாற்றத்தைக்கண்டு திடுக்கிட்டார். தன் மனைவியின் சாயலில் இரண்டாவது பெண்ணும் இருக்கவே “இவள் என் மனைவியல்ல; இளையவளே என் மனைவி” என்று வாதிட்டார். இதனால் தந்தையார் ஆதிசைவர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் காட்சி தந்து மனந்தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே அவர் மனைவி என்னும் பொருளில் “அவள் இவள்” என்று சுட்டிக் காட்டி மறைந்தார்.
மேலும் இறைவன் அருளியவாறு மூத்தவளும் இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப் பழைய உடல்நலமும், கண்களும் மீளப்பெற்றாள். பிறகு கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். ‘அவள் இவள்’ என்று சாட்சி கூறியதால் இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று. இவ்வாலயத்திற்கு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நதி தெற்கு நோக்கியுள்ளது. நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் அம்பாளை வழிபட்டுச் சென்றால் முகப்பில் விநாயகர் தரிசனம் தருகிறார். உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில், கிழக்கு நோக்கி அருள்கிறார். கருவறை வாயிலின் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி இருவரும் காட்சி தருகின்றனர். உள்சுற்றில் விநாயகர், நால்வர், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் தனியே பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
நடரார் சந்நதிக்குப் பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் பேரெழிலுடன் திகழ்கின்றன. எதிரில் நவகிரக சந்நதி. கால பைரவர், சூரியன் போன்றோரும் சந்நதிகள் கொண்டுள்ளனர். கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகியோரை தரிசிக்கலாம். எதிரில் சண்டேஸ்வரர் சந்நதி. சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் கருத்து வேறுபாடு, மற்றும் விவாகரத்துவரை போகக கூடிய பிரச்னை உள்ள தம்பதியர் இத்தலத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் உளமாற வேண்டிக்கொண்டால் அவர்கள் இல்லறம் நல்லறமாக அமையும் கும்பகோணம்-அம்மாபேட்டை மற்றும் தஞ்சாவூர்-அரித்துவாரமங்கலம் வழிகளில் செல்லும் பேருந்துகளும் அவளிவநல்லூருக்கு அழைத்துச் செல்கின்றன. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அவளிவநல்லூர் செல்லலாம். மூன்றாவதாக
ஹரித்துவாரமங்கலம்
ஆக்கல் தொழிலை செய்யும் பிரம்மாவுக்கும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவுக்கும் யார் புரியும் கர்மா பிரதானமானது என்பதில் விவாதம் உண்டானது. அந்த விவாதத்தின் மத்தியில் ஒளியொன்று ஊடுருவியது. நெருப்பு ஸ்தம்பம் எனும் அனல் தூணாக ஈசன் வானையும், பூமியையும் ஊருடுவி நின்றார். பிரம்மாவும், விஷ்ணுவின் பிரமிப்போடு பார்த்தார்கள். எங்கெல்லாம் அகங்காரம் முற்றுகிறதோ அங்கெல்லாம் ஞானப்பிழம்பாக ஈசன் வந்திறங்குவது வாடிக்கையாக இருந்தது. ஞானம் எனும் சிவத்திற்கு அன்னியமாக வேறெதுவும் இல்லையெனக் காட்டுவதுதான் இங்கு தத்துவார்த்தம். அக்னியிலிருந்து குரல் வெளிப்பட்டது: ‘என்னுடைய இந்த அக்னி ரூபமான உருவின் அடியையோ, முடியையோ முதலில் யார் காண்கிறார்களோ, அவரே பெரியவர்.’ உடனே பிரம்மா பறவையாகப் பறந்தார். பெருமாள், மீண்டும் வராக அவதாரம் எடுத்து பூமியை குடைந்தார்.
அப்படி ஹரியான விஷ்ணு, வராகராக பூமியை துவாரமிட்டு குடைந்த தலமே அரி துவார மங்கலம் எனும் தலமாகும். ஈசனின் அடியைக் காண பூமியைத் தோண்டி தோல்வியோடு மீண்டும் விஷ்ணு வெளிவந்த தலம் இது தேனொழும் தமிழில் நாயன்மார்கள் திரு அரதைப் பெரும்பாழி என்று இத்தலத்தை அழைத்தனர். சோழர்கள் காலத்தில் நிறைய திருப்பணிகள் கண்ட இந்தக் கோயில் தொன்மையில் மிளிர்கிறது. கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் கம்பீரத்தோடு நிமிர்ந்திருக்கிறது. எதிரேயே பழமையான திருக்குளம். கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலப்புறத்தில் ஒரு மண்டபம். ஈசனுக்கும், அம்பாளும் தனித்தனி சந்நதிகள். ராஜகோபுரத்திலிருந்து நேரே மூலவராம் பாதாளேஸ்வரர் சந்நதி நோக்கி நகர்கிறோம்.
வராகரின் பாதாளப் பிரவேசத்திற்கு சாட்சிபோல ஈசன் இத்தலத்தில் லிங்க உருவில் அருட்பாலிக்கிறார். அதனாலேயே ஈசனுக்கு முன்பு பாழி என்றழைக்கப்படும்
பள்ளம் உள்ளது. இதற்குள்தான் வராகராக திருமால் திருவடியை தேடிச் சென்றதாக ஐதீகம். வராகர் அதல, விதல, சுதல, விதல, பாதாளம் என்று ஊடறுத்து சென்ற இடம் இதுதான். இத்தல ஈசனை சரணாகதி அடைந்தால் அண்ணாமலையானின் நிஜ தரிசனம் கிடைக்கும் என்பது இத்தலம் கூறும் ரகசியமாகும். கருவறையை விட்டு அம்பாள் சந்நதியை நோக்கி நகர்கிறோம். அம்பாள் தனி அழகோடு மிளிர்கிறாள். நேற்றுதான் திருமணம் முடித்த பெண்போல பேரழகோடு நின்றகோலத்தில் அருள்பரப்புகிறாள். அருளையும், ஆனந்தத்தையும் பொழியும் கண்கள், எப்போதும் மெல்லிய புன்னகையில் கவலைகளை விரட்டும் அநாயாசத் தோற்றம் நம்மை நகரவிடாது செய்கிறது. ஜகத்தின் அழகே இவளாததால் அலங்கார அம்மை என்று இத்தலத்தில் அழைக்கப்படுகிறாள்.
திருமணமாகாத பெண்கள் அம்பாளிடம் வேண்டிக் கொண்டு கல்யாண அலங்காரத்திற்கு தகுதியாகி வருவது இங்கு சகஜமாக நிகழ்கிறது. அம்பாளை தரிசித்தபின் அருகேயே உள்ள வன்னிமர நிழலில் அமரலாம். மரத்தடியிலேயே பிள்ளையார் சிலைகள். ஓய்வெடுப்பதை விட தவம் செய்ய சிறந்த இடமாக இது விளங்குகிறது. மரம் தரும் நிழல் மற்றும் தென்றல் சுகம் தூக்கத்தை விரட்டி விழிப்பை தருகிறது என்பது அனுபவ உண்மை. கோயில் பிராகாரத்தை சுற்றி வந்தால் தெற்கே தட்சிணாமூர்த்தியையும், மேற்கே லிங்கோத்பவரையும், வடக்கே பிரம்மாவையும் தரிசிக்கலாம். இப்படி வலம் வரும்போதே சோழர்களின் கலைநுணுக்கத்தை கண்டு வியக்கலாம். ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கலைத்திறனை மெய்மறந்து உணரலாம். ராஜகோபுரத்தின் இடப்பக்கத்தில் உள்ள மண்டபத்தின் நீண்ட மேடைபோன்ற அமைப்பில் பிள்ளையார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சூரியன், சந்திரன், சுந்தரர், சம்பந்தர் மற்றும் பைரவரை தரிசிக்கலாம்.
அதேபோல பாதாளேஸ்வரர் சந்நதிக்கு அருகில் கஜலட்சுமியையும், மாரியம்மனையும் தரிசிக்கலாம். அம்பாள் சந்நதிக்கும், இறைவன் சந்நதிக்கும் இடைப்பட்ட சுவரில் மிகவும் மங்கலான வராகம் போன்ற புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. அதேபோல மேற்குப் பிராகாரத்தில் அம்மன் சந்நதிக்கும், சுவாமி சந்நதிக்கும் இடையில் சோமாஸ்கந்த மூர்த்தியின் சந்நதி அமைந்துள்ளது. கும்பகோணம், தஞ்சாவூர் என்று இருவழிகளிலும் இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தொலைவு. நான்காவதாக
ஆலங்குடி
ஆலங்குடி என்று தற்போது அறியப்படும் இத்தலத்தின் ஆதிகாலைப் பெயர் திருஇரும்பூளை. இறைவன், ஆபத்ஸகாயேஸ்வரர்; இறைவி ஏலவார் குழலியம்மை. இத்தலத்தின் கிழக்கே ‘பூளைவள ஆறு’ பாய்கிறது. ஐப்பசியில் இதன் தீர்த்தத்தைக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள். குரு பரிகாரத் தலமாக விளங்கும் ஆலங்குடி, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமையுடையதாகும். இத்தலத்தில் சாயரட்சை பூஜைகாலத்தில் இறைவனை தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது. அமுதோகர் என்பவர் சிறந்த சிவபக்தர். முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சர். ஒருமுறை மன்னர் அமுதோகரிடம் அவரது புண்ணியத்தில் பாதியை தனக்கு தத்தம் செய்து தரவேண்டும் என்று கேட்டார். அமைச்சர் மறுக்க அவரின் தலையை வெட்டிவிடும் படி முசுகுந்தன் கூறினார். கொலையாளி அமுதோகர் தலையை வெட்டியவுடன் அமுதோகர் என்ற சப்தம் அந்தத் தலம் முழுவதும் ரீங்காரமிட்டது. தனது தவறை உணர்ந்த முசுகுந்த சக்கரவர்த்தி இத்தலத்து இறைவன் ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றார் என்பது வரலாறு.
மற்றுமொரு புராணச் செய்தியில் தேவர்கள் அமிர்தம் பெற வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை இறைவன் சிவபெருமான் குடித்த தலம் இது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனாலேயே இத்தலம் ஆலங்குடி என்றானது. இத்தலத்தில் பாம்பு தீண்டி யாரும் இறப்பதில்லை என்கிறார்கள். திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கப் பெருமானுக்கு உரியதான ஒன்பது பரிவாரத் தலங்களுள் ஒன்றான ஆலங்குடி, தட்சிணாமூர்த்தி தலமாக விளங்குகிறது.
நான்கு புறங்களிலும் நீண்ட மதில்களையுடைய ஆலயம் இது. ராஜகோபுரம் 5 நிலைகளை உடையது. கோபுர வாயிலில் உள்ள இத்தல விநாயகர் ‘கலங்காமற் காத்த விநாயகர்’ என்று பெயர் பெற்றவர். ஈசன் ஆலகால விஷத்தை அருந்தியதால் கலங்கிய தேவர்களைக் காத்து அருளியவர். உள்ளே முதல் பிராகாரத்தில் அம்பாள் ஏலவார் குழலியம்மை சந்நதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் சூரிய பகவானின் சந்நிதி உள்ளது. இதற்குத் தென்புறத்தில் சுந்தரருக்கு ஒரு சந்நதி. உட் பிராகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தலிங்கங்கள், நால்வர் ஆகியோரை தரிசிக்கலாம்.
இத்தலத்தில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமேனி மிக அற்புதமான ஒன்று. சோமாஸ்கந்தர் சந்நதியில் இருக்கும் இந்தத் திருஉருவம் மூன்றரையடி உயரம் கொண்டது. ஆண்டுதோறும் ஆருத்ரா உற்சவத்தின் போது இவர் வெளியே உலா வருகிறார். அடுத்துள்ள மகாமண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். விஸ்வாமித்திரர் இந்த இறைவனை வழிபட்டுள்ளார். இக்கோயிலில் உள்ள அகத்தியரை வழிபட்ட பிறகே இங்குள்ள முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்று ஒரு மரபு உள்ளது. இதனால் பேய், பிசாசு பற்றிய அச்சமும், பாதிப்புகளும் நீங்கும். இங்குள்ள நாகர் சந்நதியில் நிவர்த்திப் பரிகாரம் செய்துகொண்டால் நாகதோஷம் விலகி நன்மைகள் உண்டாகும் என நம்பிக்கை நிலவுகிறது. இத்தலத்தில் குரு தட்சிணாமூர்த்திதான் வரப்பிரசாதியாக அருளாட்சி புரிகிறார். ஒப்பற்ற குருபீடமாக இத்தலம் அமைந்துள்ளது. ஆலங்குடி தட்சிணாமூர்த்தியை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிபட்டு, பஞ்சாட்சர உபதேசம் பெற்று ஞானமுக்தி அடைந்தார். வியாழக்கிழமைகளில் குரு சந்நதி மிகவும் விசேஷமாக வழிபடப்படுகிறது. மகாலட்சுமி தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பேறு பெற்றாள். இந்த தட்சிணாமூர்த்திப் பெருமானின் புகழ்பாடிய மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி சமேதராய் வரதராஜப் பெருமாளாக இங்கு கோயில் கொண்டார். வருடா வருடம் குருபெயர்ச்சி நாளில் திரளான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து குருபகவானை வழிபட்டு சகலவித தோஷங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். கும்பகோணம்-நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. ஐந்தாவதாக
திருக்கொள்ளம்புதூர்
அனைத்து ஆலயங்களிலும் இரவு ஆலயத்தை மூடும் முன் அர்த்தஜாம பூஜையை செய்வது வழக்கம். ஆனால், தீபாவளி அன்று மட்டும் முந்தைய நாள் செய்யவேண்டிய அந்த பூஜையை அதிகாலையில் மேற்கொள்ளும் ஆலயம் திருக்கொள்ளம்புதூர். பிரம்மவனம், காண்டீபவனம் என்னும் பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. அர்ச்சுனன் வழிபட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இறைவன் வில்வாரண்யேஸ்வரர், வில்வவனநாதர் எனும் பெயர்களிலும் இறைவி – சௌந்தரநாயகி, அழகு நாச்சியார் எனும் பெயர்களிலும் அருளும் தலம். தலமரம், வில்வம். பிரம்மதீர்த்தம், அகத்திய தீர்த்தம் காண்டிப தீர்த்தம் (அர்ஜுன தீர்த்தம்), முள்ளியாறு எனப்படும் வெட்டாறு ஆகியன தலதீர்த்தங்களாக விளங்குகின்றன.
விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேஷன், இடைக்காடர், வரகுண பாண்டியன், கோச்செங்கட்சோழன், பிருகுமுனிவர், காஸ்யபர், கண்வர், அகத்தியர், வசிட்டர், வாமதேவர் முதலியோர் வழிபட்ட தலம் சுவாமி விபுலானந்தர் அவர்கள்- யாழ் நூலின் ஆசிரியர் பலகாலம் ஆராய்ந்து வெளியிட்ட யாழ்நூலை அரங்கேற்றிய இடம் இத்தலமேயாகும். (1947ல்) நகரத்தார் திருப்பணி பெற்றது. முகப்பு வாயிலின் மேற்புறத்தே ரிஷபாரூடர், விநாயகர், சுப்ரமணியர் சுதைத் திருமேனிகள் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. துவார விநாயகர் உள்ளார். கோயிலின் முன் பிரம்ம தீர்த்தம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் வலப்புறம் நந்தவனத்தின் மத்தியில் மகாலட்சுமி சந்நதியைக் காணலாம். இரண்டாம் கோபுரம் ஐந்து நிலைகளையுடையது.
வாயிலில் இருபுறமும் விநாயகர் மற்றும் தண்டபாணி சந்நதிகள் தனித்தனிக் கோயில்களாக உள்ளன. கோபுரத்துள் நுழைந்ததும் வலப்பக்க கற்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச் செல்லும் சிற்பத்தைக் கண்டு மகிழலாம். பிராகாரத்தில் வலம் வரும்போது நால்வர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், கஜமுத்தீசர், முல்லைவனநாதர், சாட்சிநாதர், பாதாளவரதர், மகாலிங்கர், விநாயகர், கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, விசாலாட்சி, சோழமன்னன்-அவன் மனைவி ஆகியோரை தரிசிக்கலாம். அடுத்து ஆறுமுகஸ்வாமி, மகாலட்சுமி, பைரவர், பள்ளியறை, நவகிரகங்கள், சனிபகவான், சூரியன் சந்நதிகள் உள்ளன. வலம் வந்து தரிசித்து, செப்புக் கவசமிட்ட கொடிமரத்தையும், கொடிமரத்து விநாயகரையும் வணங்கி, மண்டபத்துள் சென்றால் தெற்கு நோக்கி உள்ளது அம்பாள் சந்நதி. இதற்கு முன்னால் மண்டபத்தின் மேல்விதானத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்கள் உரிய கட்டிட அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலம். மண்டபத் தூண்களின் திருப்பணியைச் செய்வித்த நகரத்துச் செட்டியார் உருவங்கள் உள்ளன. துவாரபாலகர்களையும் துவார விநாயகரையும் முருகனையும் தரிசித்து மூலவர் மண்டபத்தை அடையலாம். வலப்புறம் திருமுறைக்கோயில் பக்கத்தில் நடராஜசபை. இம்மண்டபத்தில் விநாயகர், பிட்சாடனர், சந்திரசேகரர் முதலிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
நேரே மூலவர் தரிசனம். கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சண்டேஸ்வரருக்குத்தனி சந்நதி. இத்திருக்கோயிலில் நாள்தோறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. மூன்றாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கசோழன் காலத்திய கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. கல்வெட்டுக் குறிப்பில் சுவாமி ‘கொள்ளம்புதூர் உடையார்’ என்றும், தேவி ‘அழகிய நாச்சியார்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளனர். ஆலயத்தில் நந்தா விளக்கெரிக்கவும், நாள்வழிபாட்டுக்கும் நிவந்தங்கள்விட்ட செய்திகளை இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்தலத்தை ‘அருமொழிதேவ வளநாட்டுச் சோற்றூர்க் கூற்றத்துத் திருக்கொள்ளம்புதூர்’ என்று குறிப்பிடுகிறது ஒரு கல்வெட்டு. பல சிவத்தலங்களையும் தரிசனம் செய்தவாறே ஊர் ஊராக வந்து கொண்டிருந்த ஞானக்குழந்தை திருஞான சம்பந்தர், சம்பிரதாயப்படி முந்தைய நான்கு ஆலயங்களுக்கும் சென்று அந்தந்த பூஜைகளை தரிசித்துவிட்டு, ஐந்தாவது ஆலயமான திருக்கொள்ளம்புதூர் நோக்கி வந்துகொண்டிருந்தார். ஐப்பசி மாத அமாவாசை நாள் தீபாவளிப் பண்டிகையை எல்லோரும் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இருள் அடர்ந்த அந்த வேளையில் திருஞான சம்பந்தர் தம் அடியார்களுடன் முள்ளி ஆற்றைக் கடந்து செல்ல முயன்றார்.
சோதனையாக ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து ஓடியது. ஓடஞ்செலுத்த முடியாமையால் ஓடக்காரர்கள் தங்கள் ஓடங்களைக் கரையில் நிறுத்திவிட்டுப் போயிருந்தனர். அனைவரும் திகைத்து செய்வதறியாமல் நிற்க, திருஞான சம்பந்தர் தைரியமாக தாமே படகை செலுத்தத் தீர்மானித்து, கட்டியிருந்த படகை அவிழ்த்து அதில் ஏறி அமர்ந்து அடியவர்களையும் அமரச் செய்தார். அந்த அமாவாசை இரவால் பயந்துபோயிருந்த அடியார்களுக்கு ஆறுதல்கூறும் வகையில், ‘கொட்டமே கமழும்’ எனும் பதிகம் பாடினார். வெள்ளத்தை எதிர்த்து மெள்ள படகைச் செலுத்தி மறுகரையை அவர்கள் அடைந்தபோது அதிகாலை ஆகிவிட்டது. திருக்கொள்ளம்புதூர் அர்ச்சகர்கள் திருஞான சம்பந்தரை வரவேற்க ஆவலாக பூரண கும்பத்தோடு காத்திருந்தனர். அர்த்த ஜாம பூஜைக்கான நேரம் கடந்து விடிகாலையும் வந்துவிட்டது. என்ன ஆயிற்றோ சம்பந்தருக்கு என அவர்கள் கவலைப்பட்டனர்.
அப்போது தம் அடியவர்களுடன் திருஞான சம்பந்தர்ஆலயப் பிரவேசம் செய்தார். அவருக்காக அர்த்த ஜாம பூஜை, உஷத்காலத்தில் செய்யப்பட்டது. தீபாவளிக்கு அடுத்த நாள் நிகழ்ந்த அந்த சம்பவத்தை நினைவுறுத்தும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் இப்போதும் அந்த ஆலயத்தில் இவ்வாறு பூஜை நடத்தப்படுகிறது. திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்ததை நினைவுறுத்தும் வகையில் ஓடத்திருவிழா நடக்கிறது. திருஞான சம்பந்தரின் உற்சவத்திருமேனியை படகில் வைத்து ஓதுவார்கள் தேவாரம் ஓத, முள்ளி ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு படகு செல்லும். அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன் படகு கரைசேரும். அங்கே ரிஷபாரூடராய் வில்வவனநாதர் ஞான சம்பந்தரை எதிர்கொண்டழைத்து ஆலயத்திற்கு அழைத்துச் செல்வார். இந்த விழாவிற்காகவே இறைவன் திருவருளால் அன்று முள்ளியாற்றில் நீர் கரைபுரண்டோடும் அதிசயம் இன்றுவரை தொடர்கிறது! அன்று உஷத்காலத்தில் ஆலயத்தில் அர்த்தஜாம பூஜை நடக்கும். ஆண்டிற்கொருமுறை நடக்கும் அபூர்வத்திருவிழா என்பதால் அன்று சிவனடியார்கள் அதிக எண்ணிக்கையில் ஆலயத்தில் கூடுவர். அம்பாள் அழகு நாச்சியாரும், வில்வவனநாதரும் திருஞானசம்பந்தருக்கு மட்டுமல்லாமல் ஆலயம் நாடும் அடியார்களுக்கும் தம் அருளை வாரி வழங்கும் விழாவாக இது துலங்குகிறது