இயற்பகை நாயனார்.
சோழநாட்டிலே காவேரிசங்கமம் என்னும் புனித தீர்த்தத்தினால் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்) அவதரித்த மகான் இயற்பகையார். யான் எனது என சுயநலம் மிக்க இப்புவியில் இயற்கை விதிக்கு மாறாக எமதென்று ஏதுமில்லை,எல்லாம் அடியார்களுக்கே என கொள்கை பூண்டு வாழ்ந்த காரணத்தால் இயற்பகையார் என்ற திருநாமம் அடையப்பெற்றார். வணிக குலத்தினரான அவர் தம் வணிகத் திறத்தால் பெரும் செல்வந்தராக விளங்கினார். இல்லறத்தின் பெரும்பேறு இறையடியார் தம் குறைதீர்த்தல் என்பது அடியவரது கொள்கையாக கொண்டிருந்தவர். ஆதலால் சிவனடியார் யாவரெனினும் அவர் வேண்டுவதை இல்லையெனாது கொடுக்கும் இயல்பினராக வாழ்ந்து வந்தார். அவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் அவர் பெருமையை உலகினுக்கு உணர்த்த சிவபெருமான் சித்தம் கொண்டார்.
சிவபெருமான் தூய வெண்நீர்றை பொன்னார் மேனியில் அணிந்து சிவனடியார் கோலத்தினராய் திருவேடம் பூண்டு இயற்பகையாரது இல்லந்தனை அடைந்தார்.
இயற்பகையனார் அவ்வடியாரை உளம் நிறைந்த அன்புடன் எதிர்கொண்டு, அடியவர் இங்கு எழுந்தருளியது என் பெருந்தவப் பயனென்று திருவடி தொழுது வழிபட்டு அன்புடன் வரவேற்றார். சிவனடியார் அன்பரை நோக்கி சிவனடியார்கள் வேண்டியனவற்றை எல்லாம் ஒன்றும் மறுக்காத உம்மிடத்திலே ஒரு பொருளை விரும்பி இங்கு வந்தேன். அதனை நீர் தருவதற்கு இணங்குவீராயின் யான் இயம்புவேன் எனக் கூறினார்.
அது கேட்ட இயற்பகையார், என்னிடமிருக்கும் எப்பொருளாயினும் அது எம்பெருமானாகிய சிவனடியாரது உடைமை. இதில் சிறிதும் சந்தேகமில்லை. நீர் விரும்பியதனை அருளிச் செய்வீராக என்றார். அது கேட்ட சிவனடியார், “உன் மனைவியை விரும்பி வந்தேன்” எனச் சொன்னார்.
நாயனார் ஆனந்தம் பெருக்கெடுக்க முன்னைவிட மகிழ்ச்சியடைந்து, “எம்பிரான் என்னிடம் உள்ள பொருளையே வேண்டியது எனது புண்ணியப் பயனாகும்” எனக் கூறியவாறு விரைந்து இல்லத்தினுள் புகுந்து கற்பிற்சிறந்த தம் இல்லத்தரசியாரை நோக்கி, “பெண்ணே! இன்று உன்னை இச்சிவனடியாருக்கு அடியேன் கொடுத்துவிட்டேன்” என்றார்.
அதுகேட்ட மனனவியார், மனங்கலங்கிப் பின் தெளிவுற்று, தன் கணவரை நோக்கி “என் உயிரினும் மேலானவரே! என் மணாளனாகிய நீர் எமக்கு இட்ட கட்டளை இதுவாயின் அடியவள் தாங்கள் கூறியதொன்றை செய்வதன்றி எமக்கு வேறு வழியொன்றுமில்லை என்று சொல்லித் தன் மணாளனாகிய இயற்பகையனாரை வணங்கினார். இயற்பகையாரும் இறைவனடியார்க்கெனத் தம்மால் அளிக்கப் பெற்றமை கருதி அவ்வம்மையாரை வணங்கினார்.
பின்னர் அங்கு எழுந்தருளிய சிவனடியார் சேவடிகளைப் பணிந்து வணங்கி நின்றார். சிவனடியார் விரும்பிய வண்ணம் மனைவியாரைக் கொடுத்து மகிழும் மாதவராகிய இயற்பகையார், அம்மறையவரை நோக்கி, “இன்னும் யான் செய்வதற்குரிய பணி யாதேனும் உளதோ என்றார்.
அடியவராக வந்த இறைவன், “இந்நங்கையை யான் தனியே அழைத்துச் செல்லுதற்கு உனது அன்புடைய சுற்றத்தாரையும், இவ்வூரையும் கடந்து செல்ல நீ எனக்குத் துணையாக வருதல் வேண்டும்” என்றார். அதுகேட்ட இயற்பகையார் யானே முன்நின்று இப்பணியை விரைந்து செய்து எம்பெருமானாகிய இவர் இவ்வூரை விட்டுச்செல்ல துணைவருவோம் என்றார்.
வேறிடத்திற்கு சென்று போர்க்கோலம் பூண்டு வாளும் கேடயமும் தாங்கி வந்தார். அடியவரை வணங்கி மாதினையும் அவரையும் முன்னே போகச் செய்து, அவர்க்குத் அரணாக பின்னே தொடர்ந்து சென்றார்.
இச்செய்தியை அறிந்த மனைவியாரது சுற்றத்தாரும், வள்ளலாரது சுற்றத்தாரும், இயற்பகைப் பித்தனால் ‘அவன் மனைவியை மற்றொருவன் கொண்டு போவதா?’ என வெகுண்டனர். தம் குலத்தினுக்கு நேர்ந்த பழியைப் போக்குவதற்கு போர்க்கருவிகளைத் தாங்கியவராய் வந்து அடியவரை மறைத்துக்கொண்டனர். “துர்புத்தி கொண்ட அடியவரே போகாதீர். நற்குலத்தில் பிறந்த இப்பெண்ணை இங்கேயே விட்டுவிட்டு எமது குலப்பழிபோக இவ்விடத்தை விட்டுச் செல்லுங்கள்” எனக்கூறினார்.
அடியவரும் அதுகண்டு அஞ்சியவரைப்போன்று மாதினைப் பார்த்தார்.மாதரும் “இறைவனே அஞ்சவேண்டாம்; இயற்பகை வெல்லும்” என்றார். வீரக்கழல் அணிந்த இயற்பகையார் அடியேன் அவரையெல்லாம் வென்று வீழ்த்துவேன் என அடியவருக்கு ஆறுதல்கூறி, போருக்கு வந்த தம் சுற்றத்தாரை நோக்கி, “ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப்பிழையும். அன்றேல் என் வாட்படைக்கு இலக்காகி மடிவீர்” என்று அறிவுறுத்தினார்.
அது கேட்ட சுற்றத்தவர் நீ என்ன காரியத்தைச் செய்துவிட்டு இவ்வாறு பேசுகின்றனை.உன் செயலால் இந்நாடு அடையும் பழியையும் இது குறித்து நம் பகைவரானவர் கொள்ளும் இகழ்ச்சியையும் சிரிப்பினையும் எண்ணி நாணாது உன் மனைவியை வேறொருவனுக்கு கொடுத்து வீரம் பேசுவதோ! நாங்கள் போரிட்டு ஒருசேர இறந்தொழிவதன்றி உன்மனைவியை மற்றையவனுக்குக் கொடுக்க ஒருபொழுதும் சம்மதியோம்” என்று வெகுண்டு எதிர்த்தனர்.
உடனே இயற்பகையார் உறவினரை எதிர்த்துப் போரிடுவதற்கு முந்தினார். உறவினர்கள் அடியவரை தாக்குவதற்கு முற்பட்டனர். அதுகண்டு வெகுண்ட இயற்பகையார், சுற்றத்தார் மேல் பாய்ந்து மாறிமாறி சுற்றிவந்து அவர்களுடைய கால்களையும் தலைகளையும் துண்டித்து வீழ்த்தினார். பலராய் வந்தவர் மீதும் தனியாய் அகப்பட்டவர் மீதும் வேகமாய்ப் பாய்ந்து வெட்டி வீழ்த்தினார். பயந்து ஓடியவர் போக எதிர்த்தவரெல்லாம் மாண்டொழிந்தனர். எதிர்ப்பவர் ஒருவருமின்றி உலாவித் திரிந்த இயற்பகையார், அடியவரை நோக்கி, “அடிகள் நீர் அஞ்சாவண்ணம் இக்காட்டினைக் கடக்கும் வரை உடன் வருகின்றேன்” என்று கூறித் துணைசென்றார். திருச்சாய்க்காட்டை சேர்ந்த பொழுதில், சிவனடியார் “நீர் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்” என்று கூறினார். இயற்பகையாரும் அவரை வணங்கி ஊருக்குத் திரும்பினார்.
மனைவியாரை உவகையுடன் அளித்து திரும்பியும் பாராது செல்லும் நாயனாரது அன்பின் திறத்தை எண்ணி இறைவன் மகிழ்ந்தார். மெய்ம்மை உள்ளமுடைய நாயனாரை மீளவும் அழைக்கத் தொடங்கி “இயற்பகை முனிவாஓலம்; ஈண்டு நீ வருவாய் ஓலம்; அயர்பிலாதானே ஓலம்; செயற்கருஞ்செய்கை செய்த தீரனே ஓலம் ஓலம்” என அழைத்தருளினார். அழைத்த பேரோசையினைக் கேட்ட இயற்பகையார், “அடியேன் வந்தேன்; வந்தேன்; தீங்கு செய்தார் உளராயின் அவர்கள் என் கைவாளால் மாண்டொழிவர்” என்றுகூறி விரைந்து வந்தார்.
மாதொருபாகனாகிய இறைவனும் தனது தொன்மைக் கோலத்தைக் கொள்ளுவதற்கு அவ்விடத்தைவிட்டு மறைந்தருளினார். சென்ற இயற்பகையார், அடியவரை காணாது, அவருடன் சென்ற மாதினைக் கண்டார். வான்வெளியிலே இறைவன் மாதொருபாகராக விடையின்மேல் தோன்றியருளி தெய்வக் கோலத்தைக்காட்டி அருளினார். இயற்பகையார் நிலத்திலே பலமுறை வீழ்ந்து தொழுதார்; எல்லையில்லாத இன்ப வெள்ளம் அருளிய இறைவன் உள்ளங்கசிந்து போற்றி வாழ்த்தினார்.
அப்பொழுது அம்மையப்பராகிய இறைவர் “பழுதிலாததாய் உன் அன்பின் திறங்கண்டு மகிழ்ந்தோம். உன் மனைவியுடன் நெடுங்காலம் நலமுடன் வாழ்ந்து நம்மில் வருக” எனத் திருவருள் புரிந்து மறைந்தருளினார். உலகியற்கை மீறிச் செயற்கருஞ் செய்கை செய்த திருத்தொண்டராகிய இயற்பகையாரும், தெய்வக் கற்பினையுடைய அவர் தம் மனைவியரும் ஞானமாமுனிவராகிய சிவபரம்பொருள் போற்ற நலமிகு சிவலோகத்தில் இறைவனைக் கும்பிட்டு திருவடிப்பேறும் பெற்று அம்மையப்பன் உடனுறையும் பெருவாழ்வு பெற்றனர்.அவர் தம் சுற்றத்தாராய் அவருடன் போர் செய்து உயிர் துறந்தவர்களும் திருவடிபேறுபெற்று சிவபுரத்தில் இன்புற்றனர்.
இயற்பகை நாயனார் திருவடிகள் போற்றி.
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.