சிவலிங்கங்கள் 96 வகை பற்றிய ஓர் மிக பெரிய கண்ணோட்டம் | 96 Types Sivalingam
*96 வகை சிவலிங்கங்கள்96 வகை பற்றிய ஓர் மிக பெரிய கண்ணோட்டம்*…..
*(சிவாகமங்களில் சிவபெருமானே அன்னை பார்வதிக்கு சொன்ன அதி உன்னத வழிபாடு இந்த பார்த்திப லிங்க பூஜை. கலியுகத்திலே மணலிலே சிவலிங்கம் செய்து வழிபடுவது தான் உயர்ந்த வழிபாடு. அனைத்து பேறுகளையும் கேட்கின்றவரங்களையும் உடனே வழங்க கூடிய வழிபாடு என பரமேஸ்வரனே அன்னை பார்வதிக்கு சொல்கிறார்.
இந்த வழிபாட்டை செய்து தான் அன்னை பார்வதி தேவி முத்தி பேரு அடைகிறார். அன்று முதல் ராமபிரான் ராவனேஸ்வரனை கொன்ற ப்ரமகத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் இதே வழிபாட்டை செய்து தான் தன் தோஷங்களை போக்கினார். இதே போல் சூரபத்மனை அழித்த போது முருக பெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடிக்கிறது. அப்போது திருச்செந்தூரில் கடற்கரையில் பஞ்ச லிங்கங்களை மணலிலே பிடித்து வழிபாடு செய்து தோஷங்கள் நீங்க பெறுகிறார்.
இதே வழிபாடை தான் திருகோணமலையில் மணலிலே 1,008 சிவலிங்கங்கள் செய்து இலங்கை வேந்தன் ரராவனேஸ்வரன் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் செய்து இலங்கை வளநாட்டையே மாபெரும் சிவ பூமியாக ஸ்வர்ண பூமியாக மாற்றினான் என பல மிக பழமையான கிரந்த நூல்களில் சொல்பட்டுள்ளது.
ஓம் நம சிவாய! என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் சிலா ரூபமாக இல்லாமல் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார்? என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது.
ஒருமுறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அக்னிகோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம்.
அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று. லிங்கோத்பவம் என்றால் லிங்கம் தோன்றுதல் என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயேதான் வழிபடப்பட்டு வருகிறார்.
*சிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் மூன்று வகைப்படும்.*
*ஷணிக லிங்கம் … இஷ்ட லிங்கம் … ஆத்ம லிங்கம்*
*ஷணிக லிங்கம்:*
நாள்தோறும் சிவ வழிபாடு நடத்தி பின்பு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.
1. புற்றுமண் லிங்கம் ….. மோட்சம் தரும்
2. ஆற்றுமண் லிங்கம் ….. பூமிலாபம் தரும்
3. பச்சரிசி லிங்கம் ….. பொன், பொருள் தரும்
4. அன்ன லிங்கம் ….. அன்ன விருத்தி தரும்
5. பசுவின் சாண லிங்கம் ….. நோய்கள் தீரும்
6.வெண்ணெய் லிங்கம் ….. மன மகிழ்ச்சி தரும்
7. ருத்ராட்ச லிங்கம் ….. அகண்ட அறிவைத் தரும்
8. விபூதி லிங்கம் ….. அனைத்து செல்வமும் தரும்
9. சந்தன லிங்கம் ….. அனைத்து இன்பமும் தரும்
10. மலர் லிங்கம் ….. ஆயுளை அதிகமாக்கும்
11. தர்ப்பைப்புல் லிங்கம் ….. பிறவியிலா நிலை தரும்
12. சர்க்கரை லிங்கம் ….. விரும்பிய இன்பம் தரும்
13. மாவு லிங்கம் ….. உடல் வன்மை தரும்
14. பழ லிங்கம் ….. சுகத்தைத் தரும்
15. தயிர் லிங்கம் ….. நல்ல குணத்தைத் தரும்
16. தண்ணீர் லிங்கம் ….. எல்லா மேன்மைகளும் தரும்
www.agathiyarjanachithar.in
+91-98428 46104
+91-93818 46104
Email: astrologyiyer@gmail.com
*இஷ்ட லிங்கம்:*
மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு தினமும் தாம் செல்லுமிடமெல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் இஷ்ட லிங்கம் எனப்படும்.
1. இந்திரன் ….. மரகத லிங்கம்
2. குபேரன் ….. ஸ்வர்ண லிங்கம்
3. யமன் ….. கோமேதக லிங்கம்
4. வருணன் ….. நீல லிங்கம்
5. விஷ்ணு ….. இந்திர நீல லிங்கம்
6. பிரம்மன் ….. ஸ்வர்ண லிங்கம்
7. அஷ்ட வசுக்கள், வசுதேவர்கள் ….. வெள்ளி லிங்கம்
8. வாயு ….. பித்தளை லிங்கம்
9. அசுவினி தேவர்கள் ….. மண் லிங்கம்
10. மகா லட்சுமி ….. ஸ்படிக லிங்கம்
11. சோம ராஜன் ….. முத்து லிங்கம்
12. சாதுர்யர்கள் ….. வஜ்ஜிர லிங்கம்
13. பிராம்மணர்கள் ….. மண் லிங்கம்
14. மயன் ….. சந்தன லிங்கம்
15. அனந்தன் முதலான நாகராஜர்கள் …. பவள லிங்கம்
16. தைத்தியர்கள், அரக்கர்கள் ….. பசுஞ்சாண லிங்கம்
17. பைசாசங்கள் ….. இரும்பு லிங்கம்
18. பார்வதி …. வெண்ணெய் லிங்கம்
19. நிருதி ….. தேவதாரு மர லிங்கம்
20. யோகிகள் ….. விபூதி லிங்கம்
21. சாயா தேவி ….. மாவு லிங்கம்
22. சரஸ்வதி ….. ரத்தின லிங்கம்
23. யட்சர்கள் ….. தயிர் லிங்கம்
*ஆத்ம லிங்கம்:*
தூய மனத்துடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் ஆத்மலிங்கம் ஆகும். இவ்வகை லிங்கத்திற்கு மனப்பூர்வமான வழிபாடே போதுமானது. வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடு எனப்படும்.
1. மண் ….. காஞ்சிபுரம் ….. ஏகாம்பர லிங்கம்
2. நீர் ….. திருவானைக்கா …… ஜம்பு லிங்கம்
3. நெருப்பு ….. திருவண்ணாமலை ….. அருணாசல லிங்கம்
4. வாயு ….. திருகாளத்தி ….. திருமூல லிங்கம்
5. ஆகாயம் ….. சிதம்பரம் ….. நடராச லிங்கம்
*அவ்வாறு வழிபாட்டுக்குரிய லிங்கங்கள் பலவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை:*
*சுயம்பு லிங்கம்* – தானாகவே இறைவனின் இச்சைப்படி தோன்றிய லிங்கம்.
*தெய்வீக லிங்கம் -* தேவர்களால் பூஜிக்கப்பட்டு ரிஷிகள் மூலமாக பூமிக்கு வந்த லிங்கம்.
*அர்ஷ லிங்கம் -* ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் வழிபாட்டுக்கென உருவாக்கிய லிங்கம்.
*மனுஷ்ய லிங்கம் -* சாதாரண மனிதர்களால் உருவாக்கப்பட்ட லிங்கம். இந்த லிங்கம் மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. குறைந்தது 96 வகை மனுஷ்ய லிங்கங்கள் இருக்கலாம் என்று மகுடாகமம் என்னும் ஆகம நூல் கூறுகிறது.
*இந்த 96 வகை லிங்கங்கள்* அவற்றின் அமைப்பு அதாவது பீடத்தின் அளவு பாணத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேலும் பிரிக்கப்படுகிறது. கீழே இருக்கும் சதுரப் பகுதி பிரம்ம பாகம் எனவும், நடுப்பகுதி விஷ்ணு பாகம் எனவும் மேற்பகுதி ருத்ர பாகம் எனவும் வழங்கப்படுகின்றன.
க்ஷணிக லிங்கம் : தற்காலிக வழிபாட்டுக்குப் பயன்படுவது. அந்தக் காலத்தில் நீண்ட தூரம் பயணம் செல்பவர்கள் தங்களுடன் லிங்கத்தை எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே கிடைக்கும் தெய்வீகப் பொருட்களைக் கொண்டு அன்றைய பூஜைக்காக உருவாக்கும் லிங்கமே க்ஷணிக லிங்கம் எனப்படுகிறது.
இத்தகைய லிங்கங்கள், மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படலாம். அவை உருவாக்கப்படும் பொருட்களுக்கேற்றவாறு பெயர் பெறுகின்றன. உதாரணம், பூக்களால் உருவாக்கப்பட்ட லிங்கம் க்ஷணிக புஷ்ப லிங்கம் எனப்படுகிறது.
வர்த்தமானக லிங்கம் : வழிபாட்டுப் பெருமைக்குரியது. பிரம்ம பாகமும், விஷ்ணு பாகமும் ஒரே அளவு இருந்து ருத்ர பாகம் மட்டும் அதைப்போல இரு மடங்கு இருப்பதே வர்த்தமானக லிங்கம் எனப்படும். இத்தகைய லிங்கம் வழிபடுவோருக்கு முக்தி அளிக்கவல்லது.
ஆத்ய லிங்கம் : இதில் மூன்று பாகங்களும் சமமான அளவு இருக்கும். இவை தவிர புண்டரீகம், விசாலா, வத்சா மற்றும் சத்ரு மர்த்தனா என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
புண்டரீக வகை லிங்கத்தை வழிபட்டால் பெரும் புகழும், விசாலா வகை லிங்கம் பெரும் பொருளும், வத்சா லிங்கம் எல்லா வளங்களும், சத்ரு மர்த்தனா எல்லாவற்றிலும் வெற்றியையும் தருவன என்கிறது ஆகம சாஸ்திரம். ஏக முக லிங்கம், சதுர் முக லிங்கம், பஞ்ச முக லிங்கம் என முகங்களின் அடிப்படையிலும் லிங்கங்கள் பகுக்கப்படுகின்றன. இதில் பஞ்ச முக லிங்கம் என்பது சிவனுடைய தத் புருஷ, அகோர, சத்யோஜாத, வாமதேவ, ஈசான முகங்களைக் குறிக்கும்.
சதுர்முக லிங்கம் என்பது ஈசான முகம் தவிர மற்ற நான்கும் கொண்டது. பஞ்சபூத லிங்கங்கள் என்றும் ஒரு வகை இருக்கிறது. அவை ப்ரித்வி லிங்கம் (பூமி), வாயு லிங்கம், ஜலலிங்கம், ஆகாச லிங்கம், தேஜோ லிங்கம் (அக்னி). இவை எல்லாமே மனுஷ்ய லிங்க வகைகள்தான்.
களிமண், உலோகம் அல்லது கற்களாலும் லிங்கங்கள் செய்து வழிபடலாம் என்று காமிக ஆகம நூல் கூறுகிறது. களி மண்ணிலேயே இரண்டு வகை லிங்கங்கள் செய்யப்படுகின்றன.
சுட்ட களிமண் லிங்கம், சுடாத பச்சைக் களிமண் லிங்கம், சுட்ட களி மண் லிங்கம் பொதுவாக அரசர்களால் நாட்டின் தோஷங்கள் நீங்கி சர்வ வல்லமைகளையும் பெற வணங்கப்படுகிறது. இவை தவிர நவரத்தினங்களால் ஆன லிங்கங்களும் உண்டு. அவை பன லிங்கங்கள் எனப்படுகின்றன. சில முக்கியமான வகை லிங்கங்களையும் அவை தரும் பலன்களையும் பார்ப்போம்.
1. கந்த லிங்கம் : சந்தனம், குங்குமம், மற்றும் கஸ்தூரி ஆகியன கலந்து உருவாக்கப்படுவது. இது க்ஷணிக லிங்க வகையைச் சார்ந்தது. நம் தேவைக்கேற்ற அளவில் இதை உருவாக்கிக் கொள்ளலாம். வழிபடுவதால் சிவசாயுஜ்ய மோட்சம் எனப்படும் பிறப்பில்லாத நிலை சித்திக்கும்.
2. புஷ்ப லிங்கம் : பலவகையான வாசனையுள்ள மலர்களாலும், பல நிறம் கொண்ட அழகிய மலர்களாலும்,உருவாக்கப்படுவது. வழிபடுவதால் நில சம்பந்தமான பிரச்னைகள் தீரும், நல்ல சொத்தும் சேரும்.
3. கோசாக்ரு லிங்கம் : பழுப்பு நிறத்தில் உள்ள பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும் லிங்கம் இது. இதை வணங்கினால் வளம் பெருகும். இதுவும் க்ஷணிக லிங்க வகையே ஆகும்.
4. வாலுக லிங்கம் : சுத்தமான மணல் கொண்டு உருவாக்கப்படும் இதை வணங்கினால் கல்வியும் ஞானமும் உண்டாகும்.
5. யவாகோதுமாசாலிஜ்ஜ லிங்கம் : இந்த லிங்கம் யவை, சோளம், கோதுமை போன்ற தானியங்களின் மாவினால் உருவாக்கப்படுகிறது. இது குழந்தை பாக்கியத்தை அருளும்.
6. சீதாகண்ட லிங்கம் : இனிப்புகளால் உருவாக்கப்படும் இது, நல்ல உடல் ஆரோக்கியத்தை அளிக்க வல்லது.
7. லவண லிங்கம் : உப்போடு மஞ்சள் மற்றும் திரிகடுகம் எனப்படும் சித்த மருந்து கலந்து செய்யப்படுகிறது. இது மற்றவர்களை வசீகரிக்கும் சக்தியை அருள்கிறது.
8. திலாப்சிஷ்த லிங்கம் : எள்ளை அரைத்து செய்யப்படும் இது, எல்லா ஆசைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும்.
9. பாம்ச லிங்கம் : சாம்பல் கொண்டு செய்யப்படும் இது, எல்லா நற்குணங்களையும் வளர்க்கும்.
10. கூட லிங்கம் அல்லது சீதா லிங்கம் : வெல்லத்தால் செய்யப்படும் இது, மன நிம்மதியை அருளும்.
11. வன்சங்குர லிங்கம் : மென்மையான மூங்கில் இலைகளால் ஆனது இந்த வகை லிங்கம். வழிபடுவோருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளைத் தரும்.
12. பிஷ்டா லிங்கம் : அரிசிமாவினால் செய்யப்படும் இந்த லிங்கம், நல்ல கல்வியறிவைத் தரும்.
13. ததிதுக்த லிங்கம் : பாலிலிருந்தும் தயிரிலிருந்தும் முழுவதுமாக தண்ணீரை நீக்கிய பிறகு இந்த லிங்கம் உருவாக்கப்படுகிறது. வணங்கியோருக்கு மன மகிழ்ச்சியையும் வளங்களையும் அருளும் தன்மையது.
14. தான்ய லிங்கம் : நவ தானியங்களால் உருவாக்கப்படும் இந்த லிங்கம், விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலைத் தரும்.
15. பழ லிங்கம் : பல்வகையான பழங்களால் உருவான இது, பழத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
16. தாத்ரி லிங்கம் : நெல்லிக்காயைக் கொண்டு உருவாக்கப்படும் இது, மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு அந்த வாழ்விலிருந்து விடுதலையைத் தரும்.
17. நவநீத லிங்கம் : வெண்ணெயால் உருவான இது, பணமும் புகழும் தரும்.
18. கரிக லிங்கம் : விசேஷ வகைப் புல்லால் உருவாக்கப்படும் இது, துர்மரணத்தைத் தடுக்கும்.
19. கற்பூர லிங்கம் : கற்பூரத்தினால் இது உருவாக்கப்படுகிறது. சிறந்த ஞானத்தைத் தந்து மாயையை அழிக்கும்.
20. ஆயஸ்காந்த லிங்கம் : காந்தத்தால் உருவான இது, சித்தர்கள் வணங்கும் லிங்கம். அஷ்டமா சித்திகளையும் எளிதாக அளிக்க வல்லது.
21. மவுகித்க லிங்கம் : முத்துகளை எரித்த சாம்பலிலிருந்து உருவாக்கப்படும் லிங்கம். மங்களமும், செல்வ வளமும் அருளும் தன்மையது.
22. ஸ்வர்ண லிங்கம் : தங்கத்தால் உருவானது. முக்தி அளித்து பிறவா நிலைக்கு உயர்த்தும்.
23. ரஜத லிங்கம் : வெள்ளி லிங்கம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
24. பித்தாலா லிங்கம் : பித்தளையால் உருவாக்கப்படும் இது, பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்வது போன்ற பயமில்லாத மரணத்தைத் தரும்.
25. திராபு லிங்கம் : தகரத்தால் செய்யப்படும் இந்த லிங்கம், வணங்குபவருக்கு எதிரிகளே இல்லாமல் செய்து விடும் தன்மை உடையது.
26. ஆயச லிங்கம் : கந்தக அமிலத்தால் செய்யப்படும் இந்த லிங்கம் எதிரிகளின் தொந்தரவை அழிக்கும்.
27. சீசா லிங்கம் : வெள்ளீயத்தால் செய்யப்படுகிறது இந்த லிங்கம். இதை வணங்குபவர்களை எதிரிகளால் நெருங்கவே முடியாதவாறு செய்யும் தன்மையது.
28. அஷ்டதாது லிங்கம் : எட்டு வகையான தாதுக்களால் உருவாக்கப்படும் இது, சித்தி அளிக்கவல்லது.
29. அஷ்ட லோக லிங்கம் : எட்டு வகையான உலோகங்களால் செய்யப்படும் இதை வணங்கினால் தொழுநோய் குணமாகும்.
30. வைடூர்ய லிங்கம் : நவ ரத்தினங்களுள் ஒன்றான வைடூரியத்தால் உருவான இது, எதிரிகளின் எதிர்பாராத தாக்குதலிலிருந்து காப்பாற்றும்.
31. ஸ்படிக லிங்கம் : ஸ்படிகத்தால் ஆன இது, எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும்.
32. பாதரச லிங்கம் : பாதரசத்தால் ஆனது இந்த லிங்கம். அளவிட முடியாத செல்வத்தைக் கொடுக்கும்.
மேற்கூறிய 32 வகைகளில் முதல் 19 க்ஷணிக லிங்க வகையைச் சேர்ந்தவை.
மற்றவை மனுஷ்ய லிங்க வகையைச் சேர்ந்தவை. இந்திரன் மணி மாய லிங்கத்தையும், சூரியன் தாமரமய லிங்கத்தையும், சந்திரன் முக்தி லிங்கம் எனப்படும் முத்துகளால் ஆன லிங்கத்தையும், குபேரன் ஹேம லிங்கம் எனப்படும் தங்கத்தால் ஆன லிங்கத்தையும் அணிந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
நாமும் ஆகம சாஸ்திரங்கள் கூறும் பலவிதமான லிங்கங்களையும் வழிபட்டு எல்லா வளங்களும் பெற்று இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்வோம். வாழ்க மெய்அன்பர்கள் வளர்க சிவம் புகழ்.
அன்பே சிவம். அறிவே சக்தி… நன்றி….