திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள், எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா? Tiruvannamalai ashtalingam
சிவலிங்கமே மலையாக அமைந்திருக்கும் திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் எட்டு லிங்கங்கள் அமைந்திருக்கின்றன. இந்திர லிங்கத்தில் தொடங்கி அக்னி லிங்கம், வாயு லிங்கம், வருண லிங்கம், நிருதி லிங்கம், குபேர லிங்கம், எம லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்கள் இங்கு உள்ளன. இந்த எட்டு லிங்கங்களுமே 12 ராசிகளோடு நெருங்கிய தொடர்புடையவையாகவும் உள்ளன. இந்த அஷ்ட லிங்கங்களும் மனித வாழ்வின் எட்டு கட்டங்களை பிரதிபலிப்பதாக உள்ளன என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். எட்டு லிங்கங்களையும் வேண்டிக்கொண்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அஷ்ட லிங்கங்கள் இங்கு இருப்பதால் எப்பொழுதும் ஆன்மீக விஷயங்களை எதிரொலித்துக்கொண்டுள்ளது. இதன் காரணமாகவே அதிக அளவில் சித்தர்களையும், யோகிகளையும் மகான்களையும், மலை தன்பக்கம் இழுத்து வருகின்றது என்று சொல்லலாம். பக்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வேண்டுதலோடு இந்த அஷ்டலிங்கங்களையும் வேண்டிக்கொண்டு கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுகிறார்கள்.
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் கோவில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில். இங்கு நாள்தோறும் திருவிழாக்களும், விஷேசங்கள் நடைபெறும். அதோடு நேரம் காலம் பார்க்காமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் 24 மணி நேரமும் கிரிவலமும் வருவதுண்டு. கிரிவலம் வரும் பாதையில் அஷ்ட லிங்கங்கள் எனப்படும் எட்டு லிங்கங்கள் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்கங்களும், மலையைச் சுற்றிலும் 14 கி.மீ சுற்றளவில், மலை அடிவாரத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்திர லிங்கம்!
கிரிவலம் வரும் பாதையில் முதலில் உள்ளது இந்திர லிங்கமாகும். அருணாச்சலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரத்திற்கு வெகு அருகில், கிழக்கு திசையில் அமைந்துள்ளது. தேவர்களின் தலைவனான இந்திரனே நேரடியாக இங்கு வந்து இந்த லிங்கத்தை வழிபட்டு செல்வதாக ஐதீகம். நவக்கிரகங்களின் நாயகனான சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆட்சி பெற்ற இந்த லிங்கத்தை வணங்கினால் நீண்ட ஆயுளும், பெருத்த செல்வமும், அரச போக வாழ்வும் கிடைக்கும். ரிஷபம் மற்றம் துலாம் ராசிக்காரர்கள் வணங்கவேண்டிய லிங்கமாகும்.
அக்னி லிங்கம்!
கிரிவலப்பாதையில் தென் கிழக்கு திசையில் அக்னி லிங்கம் அமைந்துள்ளது. சந்திரனுக்கு ஜோதி வடிவிலி காட்சியளித்த லிங்கமே, குளிர்ந்து அக்னி லிங்கமாக காட்சியளிக்கிறது. சேஷாத்திரி சுவாமிகளின் ஆசிரமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த லிங்கத்தை வழிபட்டு கிரிவலம் வந்தால், சஞ்சலங்கள் நீங்க மனம் தெளிவு பிறக்கும் என்பது ஐதீகம். சிம்ம ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கமாகும்.
எம லிங்கம்!
கிரிவலப்பாதையில் தென் திசையில் மூன்றாவதாக அமைந்துள்ளது எமலிங்கம். தென் திசையின் அதிபதியான எமனுக்கு சிவபெருமான் தாமரை மலரில் லிங்க வடிவில் தோன்றினார். எம லிங்கத்தை வழிபட்டால் ஆயுள் விருத்தியாகும். தேவையற்ற வீண் செலவுகள் குறைந்து பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. விருச்சிக ராசிக்காரர்கள் வணங்கவேண்டிய லிங்கம்.
நிருதி லிங்கம்!
கிரிவலம் வரும் பாதையில் அடுத்ததாக அமைந்துள்ளது நிருதி லிங்கம். இது தென் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. தென்மேற்கு திசையின் அதிபதியான நிருதி பகவானுக்கு ஈசன் நிருதீஸ்வரராக தோன்றி காட்சி கொடுத்த இடமாகும். சனி தீர்த்தம் என்ற குளம் இதன் அருகில் அமைந்துள்ளது. இவரை வழிபட்டால் குழந்தை வரம் கிட்டும். அதோடு மன நிம்மதியும் கிடைக்கும். மேஷ ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய தலமாகும்.
வருண லிங்கம்!
கிரிவலப் பாதையில் ஐந்தாவதாக உள்ளது வருண லிங்கம். வருண பகவானுக்கு ஈசன் நீர் வடிவில் லிங்கமாக தரிசனம் தந்தருளிய தலமாகும். இந்த லிங்கத்தை வணங்கினால் மேற்கு திசைக்கு அதிபதியான சனி பகவானின் அருளைப் பெறலாம். தீராத வினைகளையு தீர்த்து வைக்கும் தலமாகும். மேலும், இங்கு வருண தீர்த்தம் என்ற குளம் உள்ளது. மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய லிங்கமாகும்.
*வாயு லிங்கம்!*
கிரிவலப் பாதையில் அடுத்ததாக வரும் லிங்கம் வாயு லிங்கமாகும். இது வடமேற்கு திசையில் அமைந்துள்ளதாகும். வாயு பகவானால் உருவாக்கப்பட்டது. பஞ்ச கிருதிக்கா என்ற தேவலோக மலரின் வாசமாகத் தோன்றிய ஈசன் வாயு பகவானை இங்கு தான் ஆட்கொண்டார். கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய லிங்கமாகும். இந்த லிங்கத்தை வணங்கி கிரிவலம் வருவோர்க்கு, வடமேற்கு திசையின் அதிபதியான கேது பகவானின் பரிபூரண ஆசியும் சகல யோகங்களும் கிட்டும்.
குபேர லிங்கம்!
கிரிவலப் பாதையில் ஏழாவதாக அமைந்துள்ள லிங்கம் குபேர லிங்கமாகும். வட திசையின் அதிபதியான குபேரன், இந்த இடத்தில் இருந்து அண்ணாமலையாரை தரிசித்து வணங்கிய பிறகு, தான் இழந்த அனைத்து செல்வங்களையும் திரும்பவும் பெற்றார். பக்தர்கள் செல்வச் செழிப்புடன் வாழ குபேர லிங்கத்தை வழிபடவேண்டியது அவசியமாகும். இது குருபகவானின் ஆட்சி செய்யும் லிங்கமாகும். தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கமாகும்.
ஈசான்ய லிங்கம்!
சுமார் 14 கி.மீ சுற்றளவுள்ள கிரிவலப் பாதையில் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள லிங்கமாகும். நந்தீஸ்வரர் வணங்கிய லிங்கமாகும். எம்பெருமான் ஈசனைத் தவிர அனைத்துமே நிலையற்றது என்பதை உணர்த்தும் ஞான சன்னிதி இதுவாகும். புதன் கிரகம் ஈசான்ய லிங்கத்தை ஆட்சி செய்வதால், அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கலாம். மிதுனம் மற்றும் கன்னி ராசிக் காரர்கள் வழிபடவேண்டிய லிங்கமாகும்.