கண்ணன் கதைகள் – 13

மோதிரம்

பூந்தானம் நம்பூதிரி என்பவர் சிறந்த பக்தர். அவர் தினமும் தனது ஊரிலிருந்து காட்டு வழியே தொலைதூரம் நடந்து குருவாயூருக்குச் சென்று அப்பனைத் தரிசனம் செய்வார். அவ்வாறு செல்கையில் ஒரு நாள் வழியில் சில கொள்ளைக்காரர்கள் அவரைத் தடுத்துத் தாக்கினர். அவரிடம் என்ன பொருள் இருக்கிறது என்று ஆராயத் தொடங்கினார்கள். அவர் மனமோ, தன் விரல்களில் உள்ள மோதிரத்தை அவர்கள் பார்த்துவிடக் கூடாது என்று பயந்தது. ஆபத்தினை உணர்ந்த அவர், கண்களை மூடி “குருவாயூரப்பா குருவாயூரப்பா,” என்று உரத்துக் கூறினார். சிறிது நேரத்தில் புதியதான மலரின் மணம் காற்றில் வீசியது. கண் திறந்து பார்த்தபொழுது மாங்காட்டச்சன் என்ற திவான் குதிரைமேல் வேகமாக வாளைச் சுழற்றிக் கொண்டு வந்தார். அவரைக் கண்டதும் கொள்ளையர்கள் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். மனம் நெகிழ்ந்த பூந்தானம் உமக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் என்று வினவ, அவரும் உன்னுடைய கையில் இருக்கும் மோதிரத்தை எனக்குக் கொடு என்று கூறினார். மோதிரம் களவு போய்விடக் கூடாது என்று பயந்த பூந்தானம் இப்போது தயங்கி, திகைத்து, செய்வதறியாது அந்த மோதிரத்தை திவானுக்குப் பரிசாக அளித்தார். திவான் அவரைத் தன் குதிரையில் ஏற்றிக் கொண்டு குருவாயூர் எல்லையில் விட்டுவிட்டுச் சென்றார்.

அதே நேரம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அப்பன், “அர்ச்சகரே! என் கையில் ஒரு மோதிரம் இருக்கும், அதைப் பூந்தானத்திடம் கொடுத்துவிடுங்கள், கொள்ளையர்களிடம் இருந்து அவரைக் காப்பாற்ற மாங்காட்டச்சன் உருவில் சென்று அவரிடம் இருந்து விளையாட்டாக மோதிரத்தைப் பெற்றேன்” என்று கூறினார்.

பூந்தானம் குருவாயூர்க் கோயிலை நெருங்கும்போது, அர்ச்சகர் ஓடி வந்து பூந்தானத்தின் காலில் விழுந்தார். தன் கனவில் அப்பன் சொன்னதைக் கூறி மோதிரத்தை அவரிடம் கொடுத்தார். மோதிரத்தைப் பார்த்த பூந்தானத்திற்குப் புல்லரித்தது. முந்தைய இரவு மாங்காட்டச்சனிடம் கொடுத்த அதே மோதிரம்தான் அது!! தன்னைக் காப்பாற்ற குருவாயூரப்பனே மாங்காட்டச்சனாக வந்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்.

அது சரி, பக்தியைத் தவிர வேறொன்றும் அறியாத, பொருட்களில் பற்றற்ற பூந்தானத்திற்கு மோதிரம் களவு போகக் கூடாது என்று
ஏன் தோன்றியது? தன்னைக் காப்பாற்றியவருக்கு அதைப் பரிசளிக்க ஏன் தயங்கினார்? நாளை வரை பொறுத்திருங்கள்.

Leave a Comment