Positive and Negative Thoughts Tamil

எண்ணங்கள் : நேர்மறை x எதிர்மறை எண்ணங்கள் (Positive Negative thoughts Tamil)

மனம் என்பது எண்ணங்களால் கட்டமைக்கப்படுகின்ற சூக்குமப் பொருள்.

சரி. மனம் என்பதற்கு உள்ளம் என்கிற தூய தமிழ் சொல் உள்ளது. அதாவது, உள்ளம் என்பது எண்ணம் ஆகும். உள்ளுதல் எண்ணுதல் எனில் உள்ளம் எண்ணம் என்றாகிறது. அதாவது எண்ணங்களில் தொகுதியே உள்ளம் ஆகும். பிறக்கும்போது நம்மிடம் ஒரு சில எண்ணங்கள் மட்டுமே இருக்கும். நாட்பட நாட்பட எண்ணங்கள் கூடிக் கொண்டே போகும். அதாவது, நமது மனம் விரிவடைகின்ற பொருள். அதே வேலை சுருங்குகிற பொருளும் கூட.. இதிதான் மனத்தின் சிறப்புப் பண்பு.

ஒரு நாளைக்கு 25000 முதல் 50000 வரை எண்ணங்கள் மனதில் தோன்றுகின்றன என்கிறது நவீன உளவியல்.

இவற்றில் *நேர்மறை எண்ணங்களும் (positive thinking) எதிர்மறை எண்ணங்களும் (negative thinking)* கலந்துள்ளன. ஆனால் அது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. எண்ணுகிறோம் என்பதுதான் நமக்குத் தெரியும். இதில்

*நேர்மறை எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்கள் என்று நாம் எப்படிப் பிரித்து உணர்வது?*

*மனதை ஆக்க நிலைக்கு இட்டுச் செல்கின்ற எண்ணம் நேர்மறை எண்ணமாகும்.*

மாறாக, *தீய விளைவுகளை ஏற்படுத்துகின்ற எண்ணம் எதிர்மறை எண்ணமாகும்.*

இவற்றில் எதிர்மறை எண்ணங்களை அக அழுக்குகள் எனலாம். இத்தகு எண்ணங்களை மனத்தில் இருந்து நீக்க அகத்தூய்மை ஏற்படும். அதற்கு *வாய்மை சிறந்த மருந்து என்பார் வள்ளுவர்* அகத் தூய்மை வாய்மையில் காணப்படும்’. உண்மை பேசுபவன் குற்றம் புரிய வாய்ப்பில்லை என்பது வள்ளுவர் நம்பிக்கை.

எதிர்மறை எண்ணங்கள் எவை என்கிற கேள்வி இங்கு எழுகின்றது. பஞ்சமா பாதகங்கள் என்று பௌத்தம் கூறுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். *கொலை, பொய், களவு, கள்ளூண்,குரு நிந்தை* ஆகியவை ஆகும். இத்தகு வரையறை மதத்துக்கு மதம் வேறுபடும். நவீன அறிவியல் வேறு கோணத்தில் நேர் மற்றும் எதிர் மறை எண்ணங்களை தரம் பிரிக்கின்றது. இதன்படி, ஒவ்வொரு நேர்மறை எண்ணங்களுக்கும் இணையான எதிர்மறை எண்ணம் உள்ளது. (உள்ளே.. வெளியே போல்)

*நேர்மறை எண்ணங்கள் x எதிர்மறை எண்ணங்கள்*

அன்பு………………………….வெறுப்பு
நட்பு……………………………..பகை
பாராட்டு……………………..பொறாமை
பொதுநலம்…………………சுயநலம்
மகிழ்ச்சி……………………..கவலை
நேர்வழி………………………குறுக்கு வழி
தேவை………………………..ஆசை
அசராமை…………………..துவண்டுபோதல்
துணிவு……………………….அச்சம்
புன்னகை……………………கடுகடுப்பு
விடாமுயற்சி………………மனமுறிவு
நம்பகம்……………………….ஐயம்
சுறுசுறுப்பு…………………..சோம்பல்
தன்னம்பிக்கை………….அவநம்பிக்கை
நெகிழ்ச்சி……………………பிடிவாதம்
பரவசம்……………………….மனஅழுத்தம்
மௌனம்…………………….வாயாடுதல்
எதிர்கால நோக்கம்……கடந்தகால லயிப்பு

இப்படி இதன் பட்டியல் நீளும். மனநலம் என்பது நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதில் இருப்பதில்லை. மாறாக, எதிர்மறை எண்ணங்களைத் துறப்பதில் இருக்கிறது. இதில்தான் அகத்தூய்மையும் அடங்கி உள்ளது. அதற்குச் சிறந்த வழிகளை இந்தியத் தத்துவங்கள் வழங்கி உள்ளன. *குறிப்பாக, ஆன்மிகம் சிறந்த வழி.*

*மேலைத் தத்துவங்கள் புறத் தூய்மைக்கு முதன்மை தருபவை. அதனால் அறிவியல் வளர்ச்சி அங்கு இலகுவானது.*

*கீழைத் தத்துவங்கள் அகத்தூய்மைக்கு முதன்மை தருபவை. அதனால் ஆன்மிகம் வளர வாய்ப்பானது.*

*ஆத்திகம் வேறு. ஆன்மிகம் வேறு.*

*வெளியே கடவுளைத் தேடுவது ஆத்திகம்.*

*மனத்துள்ளே கடவுளைத் தேடுவது ஆன்மிகம்.*

நமது உடலுள் காற்று, நீர், உணவு ஆகியவை செல்கின்றன. அவற்றில் நல்ல, கெட்ட பொருட்கள் செல்லவதை நாம் அறிவோம். நல்லவற்றை ஏற்று கேட்டவற்றை கழிவுகளாக (வியர்வை, சிறுநீர், மலம்) உடல் வெளிப்படுத்தி விடும். அதேபோல், ஐம்புலன் வழியாக மனதுள் உட்புகுகின்ற நல்ல, கெட்ட உணர்வுகளில் கெட்டவற்றை கழிவுகளாகக் கனவுகளை மனம் வெளிப்படுத்தி விடுகின்றது. இதன் மூலம் மனம் தம்மைச் சுத்திகரிப்பு செய்துக் கொள்கின்றது. இது தற்காலிக ஏற்பாடே ஆகும்.

*அகத்தூய்மைக்கு நிரந்தரத் தீர்வு அட்டாங்க யோகம் எனப்படுகின்ற எட்டுப் படிநிலைகள் ஆகும்.*

இது உலகிற்குக் கீழை ஆன்மிகம் வழங்கிய கொடை. *இயமம் முதலான சமாதி வரை* நாம் கடந்து செல்ல வேண்டிய படிகள் எட்டு உள்ளன.

இயமம்.. கெட்ட எண்ணங்களை/ பழக்கங்களை அகற்றுதல்.

நியமம்.. நல்லவற்றை ஏற்றல்.

ஆசனம்.. உடலை அசையாதிருக்க வைத்து நம் கட்டுக்குள் கொண்டு வரல்.

பிராணயாமம்.. மூச்சை ஆளுதல்.

பிரத்தியாகாரம்.. ஐம்புலன்கள் பற்றை விலக்குதல்.

தாரணை.. ஒன்றில் (ஆக்ஞை) சிந்தையை நிலை நிறுத்த செய்தல்.

தியானம்.. மூடிய கண்களுடன் ஒரு கருத்தில் லயித்தல்.
சமாதி.. உள்ளிருக்கும் இறைநிலையை உணர்தல். இது ஆதிக்கு சமம் என்பதால் சமாதி.

சமாதி நிலையில் எண்ணம் ஒன்றுகூட எழாது. இந்த இடத்தில் சிந்தை குவிந்தால் அதுவே ஆன்ம சுத்தி. இதற்க்கு நிர்வாண நிலை என்று பௌத்தத்தில் பெயர். அம்பலம் என்று சைவம் சொல்கின்றது. உடையற்ற உடல் நிர்வாணம் போல் எண்ணமற்ற உள்ளம் நிர்வாணம். இந்த நிலை நல்வினை தீவினை (கர்மா) கடந்த எட்டாம்படி. அனைத்து ஆன்மாவில் இலக்கு சமாதி அங்கிறது இந்திய தத்துவம். இதுவே மெய். மெய்ஞானமும் ஆகும்.

சுருங்கச் சொல்லின், எதிர்மறை எண்ணங்களை விலக்க தியானம் ஒன்றே போதும். மனம் தூய சுய நிலையை அடைந்து விடும். இதுவே ஆத்ம சுத்தி. ஆன்மா சுத்தி அடைந்துவிட்டால் மனம் தூய்மை அடையும். தொடர்ந்து உடல் புனிதமடையும். தன்னை வெல்ல இதுவே சிறந்த வழி. தன்னை வென்றவரே மாவீரர்.

எளிய முறையில் தினசரி பூஜை செய்வது எப்படி?

ஆயுள் விருத்தி தரும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

Leave a Comment