கண்ணன் கதைகள் – 21
பாததூளி

ஒரு முறை துவாரகையில் கண்ணனுக்குத் தலைவலி என்று ருக்மிணியும், ஸத்யபாமாவும் செய்வதறியாது வருத்தமுற்றிருந்தனர். அப்போது நாரதர் அங்கே வந்தார்.  அனைவரும் வாட்டமடைந்து இருப்பதைக் கண்ட அவர், என்ன விஷயம் கண்ணா? என்று கேட்டார். கண்ணனும், ” எனக்குத் தலை ரொம்ப வலிக்கிறது” என்று சொன்னான்.  நாரதர், “இதற்கு ஏதாவது மருந்து இருந்தால் சொல் கண்ணா, எப்பாடு பட்டாவது கொண்டு வருகிறேன்” என்று சொன்னார்.

கண்ணனும்,  “நாரதரே! எங்கும் செல்ல வேண்டாம், இந்தத் தலைவலி என்னுடைய பக்தர்களின் காலடி மண்ணைத் தடவினால் சரியாகிவிடும். இங்கு யாரேனும் தம்முடைய காலடி மண் இருந்தால் கொடுங்கள், அதை என் நெற்றியில் தடவினால் என் வலி தீரும் என்று சொன்னான்.  ருக்மிணியும் ஸத்யபாமாவும்,”எங்கள் காலடி மண்ணை உம்முடைய நெற்றியில் தடவுவதா? நாங்கள் உம்முடைய பத்தினிகள் அல்லவா? மகாபாவம் வந்து சேருமே” என்று பதறினார்கள்.   நாரதர், மற்றும் அங்கு உள்ள அனைவரும், “அந்தப் பாவத்தை நாங்கள் சுமக்க முடியாது” என்று கூறி மறுத்துவிட்டனர். நேரம் ஆக ஆக, கண்ணனுக்குத் தலை வலி அதிகரித்தது.

கண்ணன், ” வலி பொறுக்க முடியவில்லை நாரதா!! நீ  உடனே பிருந்தாவனம் சென்று கோபிகைகளிடம் அவர்களது பாததூளியைக் கேட்டு வாங்கி வா, சீக்கிரம்” என்று சொன்னார். நாரதர், ருக்மிணி, ஸத்யபாமா ஆகியோர் மனதில் நம்மை விட  பக்தர்கள் யார் இருப்பார்கள் என்ற எண்ணம் தோன்றியது. இருப்பினும், நாரதர் உடனே பிருந்தாவனம் சென்று இடைப்பெண்களிடம் கண்ணனுடைய தலைவலியைப் பற்றியும், அதற்கான தீர்வையும் கூறினார். அதைக் கேட்ட உடனேயே, ஒரு கோபிகை தனது மேலாக்கை அவிழ்த்துத் தரையில் போட்டாள். எல்லா கோபிகைகளும் மண்ணில் குதித்து, தங்களது காலில் ஒட்டியிருந்த மண்ணை அந்த மேலாக்கில் ஏறி நின்று உதிர்த்தனர். இவ்வாறு ஒரு சிறு மண் மூட்டையை செய்து நாரதரிடம் கொடுத்தனர். கண்களில் நீர் வழிய , “நாரதரே! சீக்கிரம் சென்று கண்ணனுடைய நெற்றியில் இதைத் தடவுங்கள்” என்று சொன்னார்கள். நாரதர் அவர்களிடம், இது  பெரிய பாவமென்று உங்களுக்குத் தெரியாதா என்று கேட்க,  கோபிகைகள், “கண்ணனுடைய தலைவலி தீர்ந்தால் போதும், நாங்கள்  எந்தப் பாவத்தைப் பற்றியும் கவலைப்படவில்லை” என்று கூறினார்கள்.

நாரதரும் துவாரகை சென்று கண்ணனிடம் அந்த மூட்டையைக் கொடுத்தார். கண்ணன், மூட்டையிலிருந்த கோபிகைகளின் பாததூளியை எடுத்துத் தன் நெற்றியில் தடவ , தலைவலியும் சரியாகிவிட்டது.  நாரதர், ருக்மிணி, ஸத்யபாமாவிற்கும் உண்மையான பக்தியைப் பற்றிப் புரிந்தது. கண்ணன் ஒரு விஷமச் சிரிப்புடன், “தலையில் இருந்து ஒரு சுமையை இறக்கி வைத்தாற்போல் உள்ளது, தலைவலி சரியாகிவிட்டது” என்று சொன்னான். கண்ணனின் தலைச்சுமை மட்டுமா? மற்றவர்களின் தலைக்கனமும் அல்லவோ இறங்கியது?!!!

இவ்வாறு, உண்மையான, தன்னலமற்ற பக்தியின் பெருமையை மற்றவர்க்கு உணர்த்த விரும்பிய கண்ணனின் தலைவலி நாடகமும் இனிதே முடிந்தது.

Leave a Comment