கண்ணன் கதைகள் – 11

நிவேதனம்

யசோதை கண்ணனை வெளியே எங்கும் போகக் கூடாது என்று சொல்லிவிட்டுத் தயிர் கடையச் சென்றுவிட்டாள். சிறிது நேரம் சாதுவாக இருந்த கண்ணன்., நண்பர்கள் விளையாடுவதைக் கண்டவுடன் மெதுவே வீட்டை விட்டு வெளியேறினான். அவனைக் கண்ட நண்பர்கள் மிக மகிழ்ந்து, “கண்ணா, வா வழக்கம்போல் வெண்ணை தின்னச் செல்லலாம்” என்று கூப்பிட்டார்கள்.

கோபிகைகள் அனைவரும் கூடிப்பேசி, கண்ணன் வெண்ணை திருட வருவான் என்பதால் உரியில் வெண்ணைப் பானையை வைத்துவிட்டு, தொட்டால் சத்தம் வரும்படியாக மணியைக் கட்டியிருந்தார்கள். பிறகு நிம்மதியாக வேலை செய்யச் சென்றுவிட்டார்கள். கண்ணனும் நண்பர்களும் மெதுவே ஒரு வீட்டில் நுழைந்தனர். உரியில் வெண்ணை இருப்பதைப் பார்த்த கண்ணன், அதில் மணி கட்டியிருப்பதையும் பார்த்து விட்டான். அக்கம்பக்கம் பார்த்துவிட்டு அந்த மணியிடம்,“மணியே! நாங்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அடிக்காதே” என்று சொல்ல மணியும் சம்மதித்தது.

கண்ணன், உரியிலிருந்து ஒவ்வொரு பானையாக இறக்கி நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, கடைசியாக இருந்த பானையில் கை விட்டு வெண்ணையை எடுத்து வாயருகே கொண்டு சென்றான். அதுவரை சப்திக்காமல் இருந்த மணி, இப்போது கணகணவென்று ஒலிக்கத் துவங்கியது. கண்ணன் வேகமாகக் கீழே குதித்துவிட்டு மணியிடம், “ஏ மணியே! ஒலிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு இப்போது நான் உண்ணும்போது ஏன் ஒலிக்கிறாய்?” என்று கேட்டான். மணியோ,“கண்ணா, மணிவண்ணா, பலப்பல யுகங்களாக, உனக்கு நிவேதனம் செய்யும்போது நான் ஒலி எழுப்புவது வழக்கம்தானே, இன்று நீ உண்ணும்போது எப்படி ஒலிக்காமல் இருப்பேன்?” என்றது. சத்தம் கேட்டு கோபிகை வரவே அனைவரும் ஓடிச் சென்றார்கள். மெதுவே அடுத்த வீட்டில் நுழைந்தார்கள். அங்கும் உரியில் மணி கட்டியிருந்தது. இப்போது கண்ணன் ஒரு கையால் மணியின் நாக்கை ஒலிக்காதவாறு பிடித்துக் கொண்டு மறு கையால் வெண்ணை உண்டுவிட்டு ஓடினான். இடையர்கள் அனைவரும் ஓடுவதைக் கண்ட கோபிகைகள், தங்களுடைய யோசனையால் பயந்து கண்ணன் ஓடுவதாக நினைத்தனர். பிறகு உள்ளே சென்று பார்த்தபோது வெண்ணையைக் காணாமல், கண்ணனின் லீலையை நினைத்து வியந்து மகிழ்ந்தனர்.

Leave a Comment