கண்ணன் கதைகள் – 30
த்ருணாவர்த்த வதம்
ஒரு நாள் யசோதை குழந்தையான கண்ணனை, மடியில் வைத்திருந்தாள். குழந்தையின் எடை அதிகமாக இருந்ததால், அவளால் அதிக நேரம் மடியில் வைத்திருக்க முடியவில்லை. உடனே கண்ணனைப் படுக்கையில் கிடத்திவிட்டு, வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தாள்.
அப்போது, கம்ஸனால் அனுப்பப்பட்ட, த்ருணாவர்த்தன் என்ற மற்றொரு அசுரன் காற்று ரூபத்தில், புழுதி பறக்க, பெரும் சத்தத்துடன் வந்தான். குழந்தையையும் எடுத்துச் சென்றான். கோகுலம் முழுவதும் புழுதியால் இருண்டது. எதையும், பார்க்க முடியாத அந்த இருளில், யசோதை குழந்தையைக் காணாமல் கதறி அழுதாள். அவள் அழுத சத்தம் எங்கும் பரவியது. யசோதையின் அழுகையைக் கேட்ட இடையர்கள், நந்தகோபனின் வீட்டிற்கு வந்தனர். குழந்தையைக் காணாமல் அனைவரும் அழுதனர்.
அதே சமயம், த்ருணாவர்த்தன் கண்ணனைத் தோளில் சுமந்து கொண்டு வானில் உயரப் பறந்தான். அப்போது கண்ணன், தன்னுடைய எடையை மிகவும் அதிகமாக்கிக் கொண்டான். அவனுடைய பாரம் தாங்க முடியாமல், த்ருணாவர்த்தன் வேகம் குறைந்தவனானான். அவனுக்குக் கண்ணன் மலையைப் போல் கனத்தான். புழுதியும், சத்தமும் ஓய்ந்தது. இப்போது அசுரன் குழந்தையை விட்டுவிட நினைத்தான். ஆனால் கண்ணன் அவனை விடவில்லை. அவனுடைய கழுத்தை இறுகப் பிடித்தான். அசுரன், உயிரிழந்து பூமியில் விழுந்தான். அவனுடைய உடல் ஒரு பாறை மீது விழுந்தது. அழுதுகொண்டு வந்த அனைவரும், அசுரனுடைய உடல் மேல், சிரித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டனர்.
அசுரன் கல்லின்மீது விழுந்து உயிரிழந்து கிடந்தான். குழந்தையான கண்ணனோ, தன்னுடைய தாமரைக் கைகளினால் அவனை அடித்து விளையாடிக் கொண்டிருந்தான். இவ்வாறு, சூறாவளிக் காற்றாய் வந்த அசுரனையும் அழித்தான். மலைமேல் இருக்கும் ஒரு நீலமணியைப் போல் இருந்த குழந்தையைத் தூக்கி எடுத்து வந்தார்கள்.
நந்தகோபனும், மற்றவர்களும் சந்தோஷமடைந்தனர். அனைவரும் குழந்தையை அணைத்து முத்தமிட்டனர். தன்னைத் தூக்க வேண்டும் என்ற கோபியர்களின் எண்ணத்தை அறிந்து, கண்ணன் தானாகவே தாவிச் சென்று அவர்களுடைய கைகளில் விளையாடினான். யசோதையும், நந்தனும், மற்றவர்களும், “ஸ்ரீ ஹரியே! எங்கள் குழந்தையைக் காப்பாற்று” என்று வேண்டிக் கொண்டார்கள். மேலும், “நாம் பூர்வ ஜன்மத்தில் நிறைய புண்ணியங்கள் செய்திருக்கிறோம், அதனால்தான் அந்த பகவான் நம் குழந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். குழந்தையை அசுரன் எடுத்துச் சென்றும், எந்த ஆபத்துமில்லாமல் தங்களுக்குக் கிடைத்ததை எண்ணி, குழந்தையை உச்சி மோர்ந்து புளகாங்கிதமடைந்தனர்