கண்ணன் கதைகள் – 44

கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தல்

குருவாயூரப்பன் கதைகள்

ஒரு முறை, இடையர்கள் இந்திரனைப் பூஜிப்பதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள். இந்திரனுக்கு தான் மூவுலகங்களுக்கும் தேவன் என்ற மமதை அதிகரித்தது. அதனால் மும்மூர்த்திகளையும் வணங்காமல் அகம்பாவம் கொண்டிருந்தான். அவனுக்குப் பாடம் கற்பிக்க விரும்பிய கண்ணன், நந்தகோபரிடம், “தந்தையே! இந்த ஏற்பாடுகள் எதற்கு?” என்று அறியாதது போல் கேட்டான். நந்தனும், “மகனே! இந்திரன், மழை பொழியச் செய்து நம் பூமியைச் செழிப்பாக வைக்கிறார். அதனால் அவருக்கு ஒவ்வொரு வருடமும் பூஜை செய்ய வேண்டும். அனைவரின் பிழைப்பும் மழை மூலம் ஏற்படுகிறது. பசுக்களும் நீரையும் புல்லையும் நம்பி இருக்கின்றன” என்று கூறினார். தந்தையின் சொல்லைக் கேட்டு, “இந்திரனால் மழை கிடைக்கிறது என்பது உண்மையல்ல. நாம் முன் ஜன்மத்தில் செய்த தர்மத்தால் மழை பெய்கிறது. காட்டில் உள்ள மரங்கள் இந்திரனுக்கு என்ன பூஜை செய்கின்றன?” என்று கண்ணன் கேட்டான். மேலும்,”இந்தப் பசுக்கள் நம் இடையர்களின் சொத்து. அவைகளுக்குப் புல்லையும், நீரையும் கொடுப்பது கோவர்த்தன மலை. அதனால், கோவர்த்தன மலைக்கும், தேவர்களைவிடச் சிறந்த முனிவர்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்” என்று கூறினான். அதைக் கேட்ட இடையர்கள், முனிவர்களையும், கோவர்த்தன மலையையும் பூஜித்தனர். பிறகு மலையை வலம் வந்து நமஸ்கரித்தனர். அனைத்து பூஜைகளையும் திருமாலான கண்ணனே மலை வடிவில் பெற்றுக் கொண்டான். கண்ணனுடைய திருவிளையாடல் ஆரம்பமானது. சிரித்துக் கொண்டே இடையர்களிடம், “நான் சொன்னதுபோல் இம்மலை பூஜையை ஏற்றுக்கொண்டது. அதனால் இந்திரன் கோபித்துக் கொண்டாலும், இம்மலையே நம் எல்லோரையும் காக்கும்” என்று சொன்னான். அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடு சென்றனர்.

தனக்குச் சேர வேண்டிய பூஜையில் இடையூறு ஏற்பட்டதைக் கேட்ட இந்திரன் கோபம் கொண்டான். மிகுந்த அகங்காரத்தால் “இடையர்களின் சொத்துக்களை அழித்து நாசம் செய்கிறேன்” என்று இந்திரன் ஆர்ப்பரித்தான். ‘ஐராவதம்’ என்ற தன் யானையின்மீது ஏறிக்கொண்டு, வஜ்ராயுதத்தை எடுத்துக்கொண்டு, பிரளயகாலத்து மேகங்களை உருவாக்கி, இடையர்களின் இருப்பிடத்தை அழிக்கப் புறப்பட்டான்.

கண்ணனது திருமேனிக்கு ஒப்பான கார்மேகங்கள் வானத்தில் சூழ்ந்தன. இடிமுழக்கம் அனைவரையும் நடுங்கச் செய்தது. அம்மேகங்களைப் பார்த்து அனைவரும் நடுங்கினார்கள். ஆனால், கண்ணன் சந்தோஷித்தான். பெரிய ஆலங்கட்டிகளுடன் கூடிய மழை பெய்தது. பிருந்தாவனம் நீரில் மூழ்கத் தொடங்கியது. இடையர்கள் பயந்து, “கண்ணா, இந்திரனின் கோபத்திலிருந்து எங்களைக் காக்க வேண்டும்” என்று கூக்குரலிட்டனர். இந்திரனால் நமக்கு ஒரு கெடுதலும் நேராது. முனிவர்களும், கோவர்த்தன மலையும் நிச்சயம் நம்மைக் காப்பார்கள் என்று இடையர்களுக்கு சமாதானம் கூறினான் கண்ணன். இந்த கோவர்த்தனமலை இந்திரனின் கொடுமையிலிருந்து அனைவரையும் காத்து, அழிவை நிச்சயம் தடுக்கும் என்று சொல்லிக்கொண்டே, புன்சிரிப்புடன் தனது இளம் கரங்களால் அம்மலையை வேரோடு பிடுங்கி இழுத்தான். தாமரைக் கரங்களால் மலையைக் குடைபோல உயரே தூக்கி, அதன் கீழ் இடையர்களின் உடைமைகளையும், பசுக்களையும், மக்களையும் இருக்கச் செய்தான். ஒரு கையால் மலையை தூக்கிக் கொண்டும், மறு கையால்அருகே வந்த பசுக்களைச் சொறிந்து கொண்டும், நண்பர்களுடனும், கோபியருடனும் விளையாட்டாய்ப் பேசிக்கொண்டு இருந்தான். இடையர்கள், “இவ்வளவு பெரிய மலையைக் கண்ணன் சிறு கரங்களால் தூக்கிக் கொண்டிருக்கிறார். ஆச்சர்யம்! இது மலையின் பெருமையாய் இருக்குமோ?” என்று அறியாது கூறினார்கள். இந்திரன், “இச்சிறுவனுக்கு என்ன தைரியம்? சிறிது நேரத்தில் மலையைத் தூக்க முடியாமல், கீழே போட்டுவிடுவான்” என்று நினைத்து ஏழு நாட்கள் கடுமையாக மழை பொழியச் செய்தான். ஆனால் கண்ணன் சிறிதும் நகரவில்லை. நீர் முழுவதையும் சொறிந்த மேகங்களைக் காற்று வெகுதூரம் தள்ளிச் சென்றது. இந்திரனும் பயந்து ஓடினான். மழை நின்றுவிட்டது. கண்ணன் அனைவரிடமும், “இப்போது நீங்கள் எல்லாரும் வெளியே வரலாம், இந்திரனால் இனிமேல் ஆபத்து வராது” என்று கூற, இடையர்களும், தங்களது உடைமைகளையும், பசுக்களையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். கண்ணன், மலையை மீண்டும் அதன் இடத்திலேயே வைத்தான். சந்தோஷமடைந்த கோபர்கள் அவனைக் கட்டித் தழுவினர். பெரியவர்கள் அவனை ஆசீர்வதித்தனர்!!

கிருஷ்ணன் தனிமையில் இருக்கும்போது, இந்திரனும் தன் தவற்றை உணர்ந்து மன்னிக்க வேண்டினான். கண்ணனும், “இந்திரனே! உன்னுடைய கர்வத்தைப் போக்கவே இவ்வாறு செய்தேன், உனக்கு இடப்பட்ட பணிகளை கர்வமின்றி செய்வாயாக” என்று கூறி இந்திரனை மன்னித்தான். லக்ஷ்மிநாதனே! வராக அவதாரத்தில் பூமியையே தூக்கிக் கொண்டிருந்த தங்களுக்கு, கோவர்த்தன மலையைத் தூக்குவதில் என்ன கஷ்டம்? என்று தேவர்கள் துதித்தனர்.

Leave a Comment