கண்ணன் கதைகள் – 49

சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம்

குருவாயூரப்பன் கதைகள்

கோபியர்களுடன் ராஸக்ரீடை முடிந்தது. ஒரு நாள், கோபர்கள் அனைவரும் அம்பிகா வனத்தில் உள்ள சிவனைத் தொழுவதற்காகச் சென்றார்கள். சரஸ்வதி நதியில் நீராடிவிட்டு, அம்பிகையையும், சிவனையும் விரதமிருந்து தொழுதார்கள். தொழுது முடித்ததும் நதிக்கரையிலேயே கோபர்கள் கண்ணயர்ந்தார்கள். அப்போது ஒரு பெரிய மலைப்பாம்பு நந்தகோபனை விழுங்கியது. கொள்ளிக்கட்டைகளால் அடித்தும் அந்தப் பாம்பு பிடியை விடவில்லை. கோபர்கள் கதறினார்கள். அந்த சத்தத்தைக் கேட்டு அங்கே வந்த கிருஷ்ணன், அப்பாம்பின் அருகே சென்று அதைக் காலால் உதைத்தான். உடனே அப்பாம்பு, வித்யாதர உருவம் எடுத்தது. அந்த வித்யாதரன்,” சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தியவரே! என் பெயர் சுதர்சனன். நான் வித்யாதரனாய் இருந்தபொழுது, முனிவர்களைப் பழித்தேன். அவர்கள் என்னை மலைப்பாம்பாக ஆகும்படி சபித்தனர். தங்கள் பாதம் பட்டு சுய உருவத்தை அடைந்தேன்” என்று கூறி, நமஸ்கரித்து வானுலகம் அடைந்தான். கோபர்களும் மகிழ்ந்து வீடு சென்றனர்.

ஒரு சமயம், கிருஷ்ணன் பலராமனோடும், கோபியர்களோடும் பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். கண்ணனுடைய குழலோசையில் கோபியர்கள் லயித்திருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற குபேரனுடைய வேலையாளான சங்கசூடன் என்பவன் கோபிகைகளின் அழகில் மயங்கி அவர்களைக் கவர்ந்து சென்றான். கிருஷ்ணனும், பலராமனும் அவனைப் பின்தொடர்ந்தார்கள். அதைக் கண்ட அவன், கோபிகைகளை விட்டுவிட்டுத் தப்பி ஓடினான். பலராமன் பயத்திலிருந்த கோபிகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள, கிருஷ்ணன் சங்கசூடனைத் தொடர்ந்து சென்று, அவனுடைய தலையில் அடித்து அவனை வதம் செய்து, அவனுடைய தலையில் அணிந்திருந்த ரத்தின சூடாமணியை எடுத்து பலராமனிடம் கொடுத்தார்.

கிருஷ்ணன், பகலில் நண்பர்களுடன் காட்டில் விளையாடி, மனதைக் கவரும் திருமேனியுடன் குழலூதிக் கொண்டிருந்தான். அப்போது, கம்ஸனின் வேலையாளான அரிஷ்டன் என்ற அசுரன், காளைமாடு உருவம் எடுத்துக்கொண்டு, பயங்கரமாய் சத்தமிட்டுக்கொண்டு அங்கே வந்தான். அனைவரையும் நடுங்கச் செய்துகொண்டு, பெரிய உருவத்துடன் பசுக்கூட்டங்களை விரட்டினான். பிறகு, நீண்ட கொம்புகளால் மரங்களை முட்டித் தள்ளினான். சிறுவர்கள் பயந்து அலறினார்கள். பிறகு கிருஷ்ணனின் எதிரே வந்தான். உடனே கிருஷ்ணன் அந்த அரிஷ்டாசுரனின் கொம்பைப் பற்றிப் பிடித்து, ஒரு கொம்பைப் பிடுங்கி, சுழற்றி வீசி எறிந்து கொன்றார். தேவர்கள் மகிழ்ந்தனர். இடைச்சிறுவர்கள் கிருஷ்ணனைத் துதித்துப் போற்றினர். இடையர்கள் சிரித்துக்கொண்டு, “காளைகளே! வ்ருஷபாசுரனைக் கொன்ற கிருஷ்ணன் இங்கே இருக்கிறான், நீங்கள் வெகுதூரம் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்” என்று கூறினர். பிறகு, இடையர்கள் வீடு திரும்பினார்கள்.

கேசீ என்பவன் கம்ஸனுடைய உறவினன். எந்த முயற்சியிலும் அவன் தோல்வியடைந்ததில்லை. அந்த அசுரன் குதிரை வடிவில் பிருந்தாவனத்தை வந்தடைந்தான். அந்த அசுரன் குதிரை வடிவம் எடுத்து வந்தாலும், அவனது குரல் அனைவரையும் நடுங்கச் செய்வதாய் இருந்தது. ஆயர்பாடியில் உள்ள அனைவரையும் துன்புறுத்தினான். பிறகு கிருஷ்ணனிடம் வந்தான். கிருஷ்ணனுடைய மார்பில் குதிரை எட்டி உதைத்தது. அந்த அசுரனுடைய கால்களின் உதையிலிருந்து விலகி, கிருஷ்ணன் அவனை வெகுதூரத்தில் வீசி எறிந்தார். அதனால் அவன் மயக்கம் அடைந்தாலும், மயக்கம் தெளிந்தவுடன் மீண்டும் அதிகக் கோபத்துடன் கண்ணனிடம் ஓடி வந்தான். அந்தக் குதிரையைக் கொல்லத் தீர்மானம் செய்த கிருஷ்ணன், தன்னுடைய கைகளை அவன் முகத்தில் வைத்து அழுத்தினார். அதனால், அந்த குதிரை வடிவெடுத்த அசுரன் மூச்சுத் திணறி உயிரிழந்தான். கேசீ என்ற குதிரையைக் கொன்றதால், தேவர்கள் மகிழ்ந்து கிருஷ்ணனைக் ‘கேசவன்’ என்று பெயரிட்டுப் போற்றித் துதித்தனர். அங்கு வந்த நாரதர், அசுரனான கேசீ வதம் செய்யப்பட்டதும் கிருஷ்ணனைத் துதித்து நமஸ்கரித்தார். பின்னர், கம்ஸனின் முயற்சிகளை கண்ணனிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

ஒரு நாள் இடையர்களுடன் கண்ணன் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தேவர்களைத் துன்புறுத்துபவனும், அளவற்ற மந்திர சக்திகள் கொண்டவனும், மயனுடைய பிள்ளையுமான வ்யோமன் என்ற அசுரன், அங்கு வந்தான். திருடர்களும், காப்பாற்றுகிறவர்களும் என்ற விளையாட்டில் வ்யோமாசுரன் திருடனாய்க் கலந்து விளையாடினான். இடைச்சிறுவர்களையும், பசுக்களையும், திருடி குகையில் அடைத்து வைத்து, குகையின் வாயிலைப் பெரிய கல்லால் அடைத்து மூடினான். இதையறிந்த கிருஷ்ணர் அவனைப் பிடித்தார். வ்யோமாசுரன் மலையைப் போன்று தனது உருவத்தைப் பெரிதாக்கிக் கொண்டான். ஆனால் கிருஷ்ணன் அவனைத் தரையில் தள்ளி நொறுக்கிக் கொன்றார். கிருஷ்ணர், இவ்வாறு அதிசயக்கத்தக்க, நிகரற்ற பல விளையாட்டுக்களால் ஆயர்பாடி மக்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்தினார்.

Leave a Comment