கண்ணன் கதைகள் – 66
குருதக்ஷிணை
மேப்பத்தூர் நாராயண பட்டத்திரி ஸ்ரீமன் நாராயணீயத்தை இயற்றியவர்.
கேரளாவில் மேப்பத்தூர் என்ற ஊரில், ப்ராம்மண குடும்பத்தில் பிறந்த அவர், வேதம், தர்க்கம், மீமாம்சை என்று அனைத்தையும் கற்றார். அவருக்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் இருந்தனர். அக்காலத்தில் நம்பூதிரி குடும்பத்தில் மூத்தவர் நம்பூதிரியை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும். மற்றவர் எந்த சமூகத்திலும் திருமணம் செய்யலாம் என்ற ஒரு கோட்பாடு இருந்தது.
நாராயண
பட்டத்திரிக்கு பிஷாரடி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சம்பந்தம் ஏற்பட்டது. பிறகு அந்தப் பெண்மணியைத் திருமணம் செய்து மணவாழ்க்கையே இன்பம் என்று அனுபவித்து வந்தார்.
அந்தப் பெண்ணின் குடும்பத்தில் அச்சுத பிஷாரடி (அச்சுத பிஷாரடியின் தமக்கை மகள்
பட்டத்திரியின் மனைவி) என்ற ஒரு பண்டிதர் இருந்தார். சிறந்த பக்திமான். ஒரு நாள் அவர் தியானத்தில் இருந்தார். அப்போது வீட்டின் உள்ளிருந்து அவரைக் கடந்து சென்ற பட்டத்திரியைப் பார்த்து, உயர்ந்த குடும்பத்தில் பிறந்து, அழிந்துபோகும் உணர்ச்சிகளுக்குப் பலியாகி, உன் வாழ்க்கையை ஏன் வீணாக்கிக் கொள்கிறாய் என்று கேட்டார். இந்த வார்த்தை பட்டத்திரியின் வாழ்க்கையை மாற்றியது. பிஷாரடியிடமே சிஷ்யனாக சேர்ந்து, சம்ஸ்க்ருதமும் கற்று பண்டிதரானார். வாலிபத்தில் தவறு செய்த அவர் சிறந்த பக்தரானார். பல நூல்கள் இயற்றினார்.
அந்த சமயம், அவரது குருவான அச்சுத பிஷாரடிக்கு முடக்குவாதம் ஏற்பட்டது. அது கண்டு வருந்திய
பட்டத்திரி, தன் குருவுக்குத் தர வேண்டிய குருதக்ஷிணைக்குப் பதிலாக, அவருடைய நோயை ஆவாஹனம் செய்து ஏற்றுக் கொண்டார். குருவின் நோய் நீங்கியது. பட்டத்திரிக்கு முடக்குவாதம் ஏற்பட்டது. அதனால் மிகவும் அவதிப்பட்டார். பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லை. அதைக் கண்ட துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர், நோய் நீங்க குருவாயூருக்குச் சென்று (மீன் தொட்டுக் கூட்டுக) அதாவது, “நாவிலே மச்சம் தொட்டு உண்” என்று பணித்தார். அறிவற்றவர்களாய் இருந்தால், மீனை உண்ணச் சொல்கிறார் என்று நினைத்திருப்பார்கள். ஆனால், பட்டத்ரிக்கு மச்சாவதாரம் தொடங்கி பகவானை வர்ணிக்கச் சொல்கிறார் என்று புரிந்தது.
பட்டத்திரியும் உடனேயே, குருவாயூர் சென்று அங்குள்ள புண்யதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, சன்னிதியிலேயே அமர்ந்து, அவன் பெருமையைக் காவ்யமாக எழுத ஆரம்பித்தார். அந்தக் காவ்யமே “ஸ்ரீ நாராயணீயம்”.
ஸ்ரீமன் நாராயணீயத்தில் மொத்தம் 1034 ஸ்லோகங்கள் உள்ளன. 100 தசகங்கள் கொண்டது . ஒவ்வொரு தசகத்திலும் 10 ஸ்லோகங்கள் உள்ளன. சில தசகங்களில் 10 ஸ்லோகங்களுக்கு மேல் உள்ளன. ஸ்ரீமன் நாராயணீயத்தில் ஒவ்வொரு தசகமும் தமது நோயை குணமாக்கும்படி வேண்டுவது போல் அமைந்துள்ளது. படிப்பவர்களுக்கும் தங்கள் நோயை குணமாக்கும்கும்படி வேண்டுவதுபோல் அமைந்திருப்பது விசேஷம்.
பட்டத்திரியின் வாழ்வில் நிகழ்ந்த வேறொரு சம்பவத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்.
நாராயண! நாராயண !