வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் | Manickavasagar story tamil
வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் (Manickavasagar story tamil) இறைவனான சொக்கநாதர் வாதவூரடியாருக்கு ஞானத்தை உபதேசித்து நெஞ்சுருக்கும் பாடல்களைப் பாடச் செய்து வாதவூராரை மாணிக்கவாசகர் என்று அழைத்து பெருமைபடுத்தியதைக் குறிப்பிடுகிறது.
வாதவூரடிகள் அரிமர்த்தனபாண்டியனிடம் முதலமைச்சராக இருந்தது, குதிரைகள் வாங்கச் செல்கையில் இறைவனாரால் ஆட்கொள்ளப்பட்டு ஞானம் பெற்றது, இறைவனாரின் திருவாக்கின்படி குதிரைகளை எதிர்பார்த்து மதுரையில் தங்கியிருந்தது ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது.
வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்து எட்டாவது படலமாக அமைந்துள்ளது.
வாதவூரடிகள் குதிரை வாங்கச் செல்லுதல்
மதுரைக்கு அருகில் திருவாதவூர் என்றொரு திருத்தலம் உள்ளது. அவ்வூரில் இறைவனின் அருளால் வாதவூரார் என்றொருவர் பிறந்து வளர்ந்து வந்தார்.
அவர்தம் பதினாறு வயதினிலேயே ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத் தெளிந்தார். வாதவூரடிகளின் கல்வித் திறமையைக் அறிந்த அரிமர்த்தன பாண்டியன் வாதவூராரை தன்னுடைய அவைக்கு வரவழைத்து மந்திரியாக்கினான்.
நாளடைவில் அவரின் திறமை காரணமாக மந்திரிகளுக்கு எல்லாம் முதன்மை மந்திரியாக வாதவூரார் விளங்கினார். ஆயினும் அவர் இம்மை மறுமைகளில் வெறுப்புக் கொண்டு இவ்வுலக வாழ்வில் தன்னை உய்விக்க தகுந்த குருவினை எதிர் நோக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒருசமயம் அரிமர்த்தன பாண்டியன் தன்னுடைய படைகளின் பலத்தினைப் பற்றி அவையோரிடம் விவாதித்துக் கொண்டிருந்தான்.
குதிரைப் படையில் குதிரைகளின் எண்ணிக்கை குறைவாகவும், மூப்புடையவனாகவும் இருந்ததைக் கண்ட அரசன் வாதவூராரிடம் கருவூலத்தைத் திறந்து வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு கடல்துறையில் வந்திறங்கும் குதிரைகளில் சிறந்தவைகளை வாங்கி வருமாறு கூறினான்.
வாதவூரடிகளும் அரனின் ஆணையை ஏற்று கருவூலத்தைத் திறந்து வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு அரசனிடம் விடை பெற்று குதிரைகளை வாங்கப் புறப்பட்டார்.
இறைவனார் ஞானத்தைப் போதித்தல்
திருக்கோவிலில் சென்று இறைவனாரை வழிபட்டு “தந்தையே, இப்பொருட்கள் யாவும் அடியார்களுக்கு பயன்படும்பொருட்டு தாங்கள் எனக்கு அருளல் வேண்டும்” என்று மனமுருக வழிபாடு மேற்கொண்டார்.
பின்னர் குதிரைகளை வாங்க புறப்பட்டார். இந்நிலையில் இறைவனார் வாதவூரடிகளுக்கு ஞானத்தை உபதேசிக்க எண்ணினார். எனவே அவர் அந்தண வடிவில் குருவாகி பல மாணவர்களோடு திருப்பெருந்துறையில் வாதவூரடியாரை எதிர்நோக்கி இருந்தார்.
திருப்பெருந்துறையை நெருங்கியதும் வாதவூரடிகளின் உள்ளம் மகிழ்ச்சி கொண்டது. குருந்த மரத்தடியின் அடியில் அமர்ந்திருந்த இறைவனான வேதியரைக் கண்டதும் தன் கண்ணில் ஆனந்தக்கண்ணீர் வழிய அவரை நோக்கிச் சென்று வணங்கினார்.
இறைவனாரின் அருட்பார்வையால் வாதவூராரின் மும்மலங்களும் நீங்கின. பின்னர் இறைவான வேதியர் வாதவூராருக்கு ஞானத்தை வழங்கினார்.
இறைவனின் திருவருளால் வாதவூரடிகள் செந்தமிழ் பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டார்.
பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த இறைவனார் வாதவூரடிகளுக்கு மாணிக்கவாசகன் என்ற திருநாமத்தைச் சூட்டி “நீ இங்கே சில காலம் தங்கி இருப்பாயாக. இங்கு நீ செய்ய வேண்டிய காரியங்கள் சில உள்ளன.” என்று திருவாய் மலர்ந்தருளினார். பின்னர் அவ்விடத்தை விட்டு மறைந்தார்.
மாணிக்கவாசகர் இறைவனாரின் வருகை எதிர்நோக்கி இருத்தல்
இறைவனார் குருவாகி வந்து தனக்கு ஞானத்தை வழங்கிய இடத்தில் திருக்கோவிலைக் கட்ட எண்ணிய மாணிக்கவாசகர் குதிரை வாங்கக் கொண்டு வந்த பொருட்களை அதற்குப் பயன்படுத்த திட்டமிட்;டார்.
பின்னர் அரிமர்த்தன பாண்டியனுக்கு ஆடிமாதத்தில் குதிரைகளுடன் வந்து சேர்வதாக ஓலை அனுப்பி படைகளை திருப்பி அனுப்பினார். தான் எண்ணியவாறே திருக்கோவிலைக் கட்டி திருப்பணிகளை முடித்தார்.
ஆடிமாதமும் வந்தது. குதிரைகள் வராததைக் கண்ட அரிமர்த்தன பாண்டியன் “குதிரைகள் இன்னும் ஏன் மதுரையை அடையவில்லை?” என்று கேள்வி எழுப்பி ஓலை அனுப்பினான்.
பாண்டியனின் ஓலையைக் கண்டதும்தான் மாணிக்கவாசகருக்கு குதிரையைப் பற்றிய எண்ணம் வந்தது.
உடனே இறைவனிடம் “ஐயனே, பாண்டியன் குதிரை வாங்க கொடுத்த பணத்தை எல்லாம் கோவில் திருப்பணிகளுக்கு செலவிட்டுவிட்டேன். இனி நான் என்ன செய்வேன்” மனமுருகி வழிபட்டார்.
அப்போது “குதிரைகள் வரும் என்று பாண்டியனுக்கு செய்தி அனுப்பு” என்று திருவாக்கு கேட்டது. மாணிக்கவாசகரும் இறைவனின் ஆணையின்படி மாணிக்கவாசகர் பாண்டியனுக்கு ஓலை அனுப்பினார்.
பின்னர் சிறிது நாட்கள் கழித்து “யாம் குதிரைகளைக் கொண்டு வருகிறோம். நீ முன்னே சென்று மதுரையில் காத்திரு” என்று மாணிக்கவாசகரின் கனவில் இறைவனார் அறிவுறுத்தினார்.
மாணிக்கவாசகரும் மதுரை சென்று பாண்டியனைச் சந்தித்து குதிரைகள் பின்னே வந்து கொண்டிருப்பதாகக் கூறினார். இறைவனாரின் வரவினை எதிர்நோக்கி மதுரையில் காத்திருந்தார்.
வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் கூறும் கருத்து
அவனின்றி ஓரணுவும் அசையாது என்பதே வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் கூறும் கருத்தாகும்.