இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால்.. பேராசைக்கு முன்னுரை அளித்தால் அதுவே பேரழிவுக்கு காரணமாகும்.
சிலருக்குத் தேவைக்கு அதிகமாகப் பணம் இருந்தும் மனக் கவலை, மன இறுக்கம், மன உளைச்சலுடன் இருப்பார்கள். இவர்கள் மனதளவில் எதைக் கண்டும் திருப்தியடைய மாட்டார்கள். ஆனால் மகிழ்ச்சி என்பது தேடித்தேடி சேர்க்கும் பொருட்களில் இல்லை. தேடிய செல்வம் அளவுக்கு அதிகமாக சேர்ந்தாலும் இறுதிக்காலத்தில் உடன் வராது.
வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள் முக்கியமான இன்பங்களை இழந்து விடுகிறார்கள்… பேராசைக்கு முன்னுரை அளித்தால் அதுவே பேரழிவுக்கு காரணமாகும்.
ஒர் ஊரில் ஒருவன் நன்கு வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான். அப்போது அந்த ஊரில் புதையல் இருக்கும் இடத்தைப் பற்றிய வதந்தி பரவிக் கொண்டிருந்தது.
ஆகவே அந்த ஊரில் உள்ளவர்கள், பாலைவனத்தில் நின்று தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நிற்கும் போது, நமது நிழல் விழும் இடத்தில் புதையல் இருப்பதாக பேசிக் கொண்டனர்.
இதனைக் கேட்ட அவன், உடனே வியாபாரத்தை விட்டு, புதையலைத் தேட பாலைவனத்திற்கு மறுநாள் காலையிலேயே சென்றான்..
தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நின்று, அவன் நிழல் விழம் இடத்தில் குழியைத் தோண்ட ஆரம்பித்தான்.
அதுவரை வியாபாரத்தின் மீது முழுக் கவனம் செலுத்திய அவன் புதையல் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தான்.
புதையலை பெறுவதற்காக காலையில் இருந்து நிழல் விழுந்த இடத்தில் தோண்டிக் கொண்டு இருந்தவனது நிழல், மாலையில் காலடிக்குள் வந்து விட்டது.
அதனால் ஏமாற்றம் அடைந்த அவன் அழுது புலம்பிக் கொண்டு இருந்தான்.
அப்போது அந்த வழியாக வந்த ஜென் துறவி ஒருவர், அவனது செயலைக் கண்டு சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார்.
பின் அவனிடம் உன்னிடம்,” இருப்பதை கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதை விட்டு, இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால் துயரம் தான்” ஏற்படும் என்றார்.*
ஆம்.,தோழர்களே..
பொருளாதாரம் மட்டுமே ஒரு மனிதனின் வாழ்வை நிறைவு செய்யாது.
குடிசையில் வாழ்ந்து கூழைக் குடிப்பவர்கள் மகிழ்வுடன் வாழ்கிறார்கள்.
அவர்கள் பொருளாதார நிறைவைப் பொருட்படுத்தாது மனநிறைவோடு வாழ்கிறார்கள்.
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால் அதுவே வாழ்வுக்கு சுகம் தரும் திறவுகோல்..✍🏼🌹