அஷ்ட காளி தேவியர் வரலாறு!
*தொடர் பகுதி-5*
*5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி அன்னை இவளே நாகாத்தம்மனாகவும், நாகவல்லியாகவும் அழைக்கப்படுகிறாள் துலுக்கானத்தம்மன் என்ற அழகு நாச்சியம்மன் அஷ்ட காளியரில் ஐந்தாவதாக அவதரித்தவள் அழகு நாச்சியார். நெல்லை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக திகழும் குற்றாலம், தென்காசிக்கு இடையில் அமைந்துள்ளது சிந்தாமணி கிராமம். அங்கு தனது விவசாய நிலத்தை ஒட்டி இருந்த தென்னந்தோப்பின் ஒரு பகுதியை வெட்டி, திருத்தி அதிலும் பயிர் வைக்க எண்ணினார் குப்பாண்டி. அதன்படி ஐப்பசி மாதம் வளர்பிறையில் அந்த நிலத்தில் ஏர் கட்டினார். அந்த நிலத்தின் தென்பகுதியில் ஏர் வரும்போது கலப்பையின் கொழுவில் ரத்தம் படிந்திருந்தது. அதைக்கண்ட குப்பாண்டி பாம்பு ஏதாச்சும் கொழுவில் மாட்டி இறந்து விட்டதோ, என்று வருந்தினார். பின்னர் கம்பு ஒன்றை கொண்டு வந்து ரத்தம் படிந்திருந்த இடத்தை தட்டுகிறார். அங்கே ஒரு கல் ஒன்று தட்டுப்படுகிறது. உடனே அதை எடுக்க முயற்சிக்கிறார். ஆனால் முடியவில்லை. அவரது மனைவி பொன்னுத்தாயி அருகேயுள்ள வயலில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தநபர்களை அழைத்தாள்.வந்த நான்கு பேரும் குப்பாண்டியும் சேர்ந்து ஐந்து பேராக அந்த கல்லை சுற்றியிருந்த மண்ணை அப்புறப்படுத்தி வெளியே எடுத்தனர். அது அழகான ஒரு பெண் அமர்ந்த நிலையில் இருந்த சிலை. அம்மன் சிலையின் வலது தோளில் வெட்டுக்காயம் இருந்தது. அந்த காயத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்து கொண்டிருந்தது. குப்பாண்டி மனம் உருகி வேண்டினார். அப்போது ஒரு அசிரீரி கேட்டது. எனக்கு இந்த இடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டு வாருங்கள். எனது பெயர் அழகு நாச்சியார் என்றும் கிழக்கு திசை நோக்கி வைக்காதே, எனக்கு பிடித்த வட திசையை நோக்கி வைத்து பூஜை செய் என்றது. உடனே அம்மன் சிலையை அங்கிருந்த புளியமரத்தின் அடியில் வடக்கு நோக்கி வைத்து பூஜித்தனர். பூஜை முடிந்த மறுநிமிடம் சிலையிலிருந்து நிற்காமல் வந்து கொண்டிருந்த ரத்தம் நின்றது. மனமகிழ்ந்த விவசாயிகள். வயல் நடவு மற்றும் விதைப்பு நேரங்களிலும், அறுவடை நாட்களிலும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் ஒரு நாள் வழிபடும் அன்பர்களின் கனவில் தோன்றிய அம்மன், நான் மழையில் நனைந்து வெயிலில் காய்கிறேன். அது மட்டுமன்றி தனித் தனியாக வந்து பூஜை செய்து என்னை வணங்கி செல்லும் நீங்கள் ஒரு சேர நின்று பூஜித்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன் என்று கூறினாள். அதன் பின்னர் ஊரார்கள் ஒன்று கூடி கோயில் எழுப்பி கொடைவிழா நடத்தினர். அழகுநாச்சியம்மன் கோயில் தென்காசி மாவட்டம் குற்றாலம் செல்லும் வழியில் சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள சிந்தாமணி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த அம்மன் புல் கூட துளிர்க்காத வனத்தில் வந்தமர்ந்ததால் துளிர்க்காத வனத்து அம்மன் என்று அழைக்கப்பட்டாள். அதுவே மருவி துலுக்கானத்தம்மன் என்றானது.