Arthamulla Aanmeegam

Balarama Avatharam Story in Tamil | பலராம அவதாரம் வரலாறு

Balarama Avatharam Story in Tamil

பலராம அவதாரம் (Balarama avatharam story) – பெருமாளின் அவதாரங்களில் 8வது அவதாரம் !!

கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதே வருக்குப் பிறந்த பலராமன் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம். ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றார். பலராம அவதாரம் கலைப்பையுடன் காணப்படுகிறார். இது மனித நாகரீகத்தில் விவசாய அபிவிருத்தி ஏற்பட்டதைக் காட்டுகிறது.

பலராம அவதாரத்தில், பகவான் கலபபையை தாங்கி இருந்தாலும் போரில் கௌமோதகி என்ற கதாயுதத்தையே பிரதானமாக கொண்டார். பலராமன், பீமனுக்கும் துரியோதனனுக்கும் கதாயுத ஆசானாவார்.

பலராம அவதாரம் வரலாறு

பலராம அவதாரத்திருநாள்

வைகாசி மாத சுக்கிலபட்ச திருதியை திதியில் கிருஷ்ணருக்கு மூத்தவரான ஹலாயுதன், சம்கர்ஷணன் (பலராமன்) தோன்றினார். ( ஹலாயுத = கலப்பை ஏந்தியவன்.)

யுகந்தோறும் அவதாரம்

ஒவ்வொரு சதுர் யுகம் முடிந்து, முதல் யுகமான கிருத யுகம் தோன்றும். பகவான், பல சதுர் யுகங்களில், பல முறை அவதாரம் எடுத்து உள்ளார். நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலை நாட்டவும், நான் யுகந்தோறும் பிறக்கிறேன் என்று சொல்லி உள்ளார்

கம்ஸன்

சூரசேனன் மத்ரா (மதுரையை) ஆண்டு வந்தான். சூரசேனனுக்கு தம்பி உக்கிரசேனன். அவன் மகன் கம்ஸன். தேவகிக்கும், வசுதேவர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. தம்பதியர் ஊர்வலமாக தேவகியின் சிற்றப்பா மகனும் அண்ணனுமாகிய கம்ஸன் குதிரைகளின் கடிவாளத்தைக் கையில் பிடித்தான். ஊர்வலம் சீரும் சிறப்புமாக மங்கள வாத்தியங்கள் முழங்க வந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு அசரீரி, “கம்ஸா, உன் தங்கை தேவகியின் எட்டாவது குழந்தை உன் உயிரை வாங்கப் போகிறது..” என்று சொல்லியது….

கம்ஸன் தேவகியைக் கொன்று விட்டால் தன் மரணப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும் என்று வாளை உருவி அவளைக் கொல்லப் போனான். அப்போது தேவகியை மணந்த வசுதேவன் கம்சனிடம் நல்ல வார்த்தை சொல்லி, நீ என் மனைவியாகிய புதுமணப் பெண்ணை, மணக்கோலம் கலையாது இருக்கும் கன்னியைக் கொல்லும் பாவம் மிகவும் கொடியது.

மேலும் அசரீரி இவளுக்கு பிறக்கும் குழந்தைகளால் தானே உனக்கு மரணம் வரும் எனச் சொல்லியது? நான் இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன். நீ அவற்றை உன் இஷ்டப்படி வதம் செய்துக்கொள், என்று தன் மனைவிக்கு வந்த ஆபத்தை நீக்கி கொண்டார்.

சினம் தணிந்த கம்ஸன் வசுதேவரையும், தேவகியையும் சிறையிட்டான். அவர்களுடன் தன் தந்தை உக்கிரசேனனையும் சிறையில் அடைத்து ராஜியத்தையும் தான் ஏற்று தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான்.

ரோகிணி

ஏழாவது சிசுவை தேவகி கருத்தரித்தாள். அந்தக் கருவில் ஆதிசேஷனே உருவானான். அச்சமயம் மகாவிஷ்ணு தனது யோக மாயை தேவியை வரவழைத்து, தேவி! வசுதேவருக்கு ரோகிணி என்ற வேறு ஒரு மனைவி உண்டு தேவகியின் வயிற்றில் ஆதிசேஷன் கருக்கொண்டிருக்கிறான்.

நீ அந்தக் குழந்தையை ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றி விடு. அத்துடன் நீ நந்தகோபன் மனைவி யசோதையிடம் பெண்ணாக பிறக்க வேண்டும். நான் தேவகியின் வயிற்றில் திரு அவதாரம் செய்யப் போகிறேன்.

ஈஸ்வரியாக காளி, வைஷ்ணவி என்று பின்னர் மக்கள் உன்னை வழிபடுவார்கள் என்றார். பரந்தாமன் கட்டளைப்படி மாயாதேவி தேவகியின் கர்ப்பத்திலிருந்து குழந்தையை ரோகிணி கர்ப்பத்திற்கு மாற்றினாள். தேவகியின் கர்ப்பம் அவள் சிறையில் வாடும் வேதனையிலும் கம்ஸன் தரும் தொல்லைகளாலும் சிதைந்து போயிற்று என அனைவரும் கம்சனை ஏசினார்கள்.

இச்சமயம் ரோகிணியின் மைந்தனாக ஆதிசேஷன் பிறந்தான். அவனுக்கு யதுகுல குருவாகிய கர்கர் மிகவும் ரகசியமாகப் பசுமடத்தில் சடங்குகளை செய்து இவன் நல்ல பலசாலியாக இருப்பான் என்பதால் இவனை பலராமன் எனப் பெயரிட்டு அழைப்போம் என்றார்.

கோவர்த்தன கிரியில் பலராமன் கண்ணனுடன் மாடு மேய்த்து வந்தான். அப்போது ஸ்ரீதாமன் என்ற சிறுவன் பலராமன், கண்ணனிடம் ஓடி வந்தான்.

தேனுகன்

இந்த மலைச்சாரலைக் கடந்து நாம் மலைக்காட்டிற்குள் போனால் அங்கே அநேக பனைமரங்களைக் காணலாம். அந்த பனைமரத்தின் அடியில் பழங்கள் உதிர்ந்து கிடப்பதைப் பார்க்க முடியும். ஆனால் அங்கே தேனுகன் என்ற அரக்கன் அந்த வனத்தைக் காத்து வருகிறான். அவன் கழுதை வேடம் போட்டு அவன் பக்கத்தில் போனவர்களை அடித்துக் கொன்று தின்றுவிடுவான்.

அந்த பழங்களை எப்படியாவது எடுத்து வந்து எங்களுக்கு கொடுப்பாயா? என்று ஸ்ரீதாமன் கேட்டான். இதைக் கேட்ட பலராமனும் கண்ணனும் கோகுலச் சிறுவர்களும், சேர்ந்து அங்கே போனார்கள். தேனுகன் வேகமாக ஓடிவந்து பலராமனைத் தாக்க ஆரம்பித்தான். கழுதையாகிய அவன் தன் பின்னங்கால்களால் பலராமனை உதைத்தான்.

பலராமனோ கழுதையின் காலைப் பிடித்து இழுத்து உயரே தூக்கி சுழற்றினான். இப்படி பலமுறை சுற்றிச் சுழல் விட்டு அவன் சடலத்தை பனைமரத்தின் மீது வீசினான். பலராமனும், கிருஷ்ணனும் அரக்கர் கூட்டத்தை அழித்து ஒழித்தனர்.

பிரலம்பன்

ஒரு சமயம் பலராமனும் கண்ணனும் தட்டா மாலை சுற்றி விளையாடிக் கொண்டிருக்கும் போது பிரலம்பன் என்ற அரக்கன், கோகுலச் சிறுவனைப் போல் உருமாறி அவர்களுடன் விளையாட வந்தான். இவனுடைய சூழ்ச்சியை கண்ணன் தன் சகாக்களை அழைத்து நாம் இப்போது இரண்டு கட்சிகளாகப் பிரிவோம்.

ஒரு கட்சிக்குப் பலராமன் தலைவன், மற்றொரு கட்சிக்கு நான் தலைவன். யார் ஜெயிக்கிறார்களோ அவனைத் தோல்வி அடைந்தவன் தூக்கி சுமக்க வேண்டும் என்றான். ஓட்டப்பந்தயத்தில் பிரலம்பன் பலராமனிடம் தோற்றான். ஆகவே அவன் பலராமனைத் தூக்கி சுமந்து கொண்டு ஓடினான். ஓடியவன், பலராமனைக் இறக்காமல் ஓடிக்கொண்டே இருந்தான். ஆனால் ஓடஓட பலராமன் பாரம் அரக்கனாகிய பிரலம்பனுக்கு அதிகரித்துக் கொண்டே போனது. அரக்கன் சுமை தாங்க மாட்டாமல் பலராமனைத் கீழே போட்டான்.

சுயரூபம் எடுத்து ஆகாயம் வரை உயர்ந்து நின்றான். பலராமன் விண்ணுயரம் நின்ற அரக்கன் தலையில் ஓங்கி குத்து விட்டான். அந்த இடத்திலேயே பிரலம்பன் மலையெனச் சாய்ந்தான்.

சங்கசூடன்

ஒரு நாள் இரவில் கண்ணனும், பலராமனும் ஆயர்பாடி பெண்களுடன் பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த நேரம் குபேரனுடைய சேவகன் சங்கசூடன் வந்தான். அவன் கோபிகளை வடதிசை நோக்கித் துரத்தினான். பலராமனை மங்கையரைக் காத்து நிற்கும்படி கண்ணன் சொல்லி விட்டு, கண்ணன் சங்கசூடனைத் துரத்திச் சென்றான். அவனை வதம் செய்து அவன் கிரீடத்தில் அணிந்திருந்த ரத்தினத்தை எடுத்து கண்ணன் பலராமனுக்கு கொடுத்தான்.

பலராமரும்-ரேவதியும்

பலராமர் ககுத்மி என்ற அரசனின் மகள் ரேவதியை மணந்ததில் ஒரு விசித்திரம் உள்ளது. ககுத்மியும் ரேவதியும் தோன்றியது வைவஸ்வத மன்வந்தரத்தின் முதல் மகாயுகத்தில். பலராமர் தோன்றியது அதே மன்வந்தரத்தில் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் 28-வது மகாயுகத்தின் துவாபர யுகத்தில். இடையில் 27 x 43,20,000 மனித ஆண்டுகள் உள்ளன. இந்தப் புராணக்கதை ஸ்ரீமத்பாகவதத்தில் 9-வது ஸ்கந்தம் மூன்றாவது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது.

வைவஸ்வத மன்வந்தரத்தின் முதல் மகாயுகத்தின் முதல் யுகமான கிருதயுகத்தில் இச்சம்பவம் நடந்தது. அரசன் ககுத்மி வைவஸ்வத மனுவின் பேரனுடைய பேரன். ககுத்மி தன் பெண் ரேவதிக்கு மணம் முடிப்பதில் ஒரு விசித்திரமான முறையைக் கையாண்டார்.

பூவுலகத்தில் உள்ள யார் சொல்லையும் கேட்பதில்லை என்று தீர்மானித்தார். எல்லோரையும் படைத்து எல்லாமறிந்த பிரம்மனையே கேட்டு தெளிவடைவது என்று பிரம்ம லோகத்திற்கே சென்றார். போகும்போது தன் பெண் ரேவதியையும் அழைத்துச் சென்றார். கிருதயுகத்தில் மேலுலகத்திற்கும் பூவுலகிற்கும் அரசர்கள் இப்படிப் போய்வருவது சாத்தியமாம்.

பிரம்மலோகத்துக்குச் சென்றவர் அங்கு சிறிது நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஏனென்றால் பிரம்மன் ஒரு சங்கீதக் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார். அது முடிந்தவுடன் ககுத்மி பிரம்மாவை சந்தித்து ‘என் மகளுக்குச் சரியான மணவாளன் யார்?’ என்ற தன் கேள்வியைக் கேட்டதும் பிரம்மா ‘நீர் இங்கு வந்து காத்திருந்த 20 நிமிடங்களில் பூவுலகில் உமக்குத் தெரிந்தயாவரும் அவர்களுடைய சந்ததிகளும் காலமாகி விட்டனர்.

உங்கள் மனதிலுள்ள யாரும் இப்பொழுது அங்கில்லை. நீர் இங்கு வந்தபிறகு அங்கு 27 மகாயுகங்கள் ஆகி முடிந்துவிட்டன. இப்பொழுதுள்ள மகாயுகத்தில் இறைவன் கண்ணன், பலராமன் என்ற இரு சகோதரர்களாக அவதரித்து லீலைகள் புரிந்து கொண்டிருக்கின்றனர் நீர் திரும்பிப் போய் உங்கள் பெண்ணை பலராவனுக்கு மணமுடியுங்கள்’ என்றார். ககுத்மியும் அப்படியே செய்தார்.

மகாபாரதத்தில் பலராமன்

பலராமருடைய மனைவியின் பெயர் ரேவதி. ரைவத நாட்டை ஆண்டு வந்த அரசன் ரைவதன் என்பவருடைய மகள் இவள். பிரம்மதேவர் விருப்பப்படி பலராமருக்கு ரேவதியை மணம் செய்து வைத்தான். அவள் வயிற்றில் பிறந்தவள் வத்ஸலா.

வத்ஸலாவை, துரியோதனன் தன் மகன் லெட்சுணனுக்கு திருமணம் செய்து விட்டால், பலராமனும், அவரது தம்பி கிருஷ்ணரும் தங்கள் பக்கம் சேர்ந்து விடுவார்கள் என்றும் இதனால் பாண்டவர்களை போரில் எளிதில் வென்று ராஜ்யத்தை அவர்களிடம் கொடுக்காமல் தாமே வைத்துக்கொள்ளலாம் என்றும் துரியோதனன் நினைத்தான்.

திருமணம் பேச தன் மாமா சகுனியை துவாரகைக்கு அனுப்பி வைத்தான் துரியோதனன். சகுனி பலராமனை சந்தித்தான். சாதுர்யமாக அவன் விஷயத்தை எடுத்துச் சொன்னான். பலராமனும் தன் மனைவி ரேவதியைக் கலந்து பதில் சொல்வதாகச் சொன்னான். ரேவதி சம்மதம் தந்ததும் பலராமன் தன் தம்பி கிருஷ்ணனைக் கலந்தான். வத்ஸலாவை லெட்சணன் திருமணம் செய்து கொள்வதில் தனக்கும் தன் மனைவி ரேவதிக்கும் மிக திருப்தி என்று பலராமன் கிருஷ்ணனிடம் சொன்னான்.

வத்ஸலா-அபிமன்யூ திருமணம்

முன்பு ஒருநாள் நம் தங்கை சுபத்திராதேவி தன் புதல்வன் அபிமன்யூவை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். அபிமன்யூவும் வத்ஸலாவும் சதிபதிகளாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

“அண்ணா! அருமை தங்காய் சுபத்திரை, இந்த இரண்டு பேரும் தம்பதிகளே இதில் என்ன சந்தேகம். மேலும் வத்ஸலையை அபிமன்யூவுக்கு கொடுப்பதில் நாம் ஏதாவது குலம் கோத்திரம் விசாரிக்க வேண்டுமா என்ன? என்றைக்கு இருந்தாலும் வத்ஸலையை உன் மகன் அபிமன்யூவுக்குப் பாணிக்கிரகணம் செய்து கொடுப்பது சத்தியமே, என்று வாக்குக் கொடுத்தீர்கள். அந்த நேரம் நம்மிடையே நாரத முனிவரும் எழுந்தருளி இருந்தார். அப்போது அவர், பலராம சக்கரவர்த்தியே, நீர் இப்போது வாக்குக் கொடுத்து நிறைவேற்றுவது தான் சத்தியம் செய்வதற்கு அழகு என்றார். நீ உடனே, நான் ஒரு நாளும் வாக்கு மாறமாட்டேன் என்று கூறிவிட்டு இப்போது உன் சத்திய வாக்கைக் காற்றில் பறக்க விடலாமா?..” என கிருஷ்ணன் வினவினான்.

அதைக் கேட்ட பலராமன் “கேசவா நான் சொல்லும் வேளையில் பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தில் பூபதிகளாக இருந்ததால் அவ்வ ண்ணம் சொன்னேன். இப்போதோ அவர்கள் தங்கள் ராஜ்யம், சொத்து, சுகம் இழந்து வனவாஸத்தில் அல்லவா இருக்கிறார்கள்? நமது சகோதரி மகன் அபிமன்யூவோ நம் சிற்றப்பா விதுரர் போஜனையில் வளர்ந்து வருகிறான். இந்த நிலையில் நம் மகள் வத்ஸலையை அவனுக்குக் கொடுக்க யார் சம்பதிப்பார்கள்?..” என்றான்.

சகுனியை மீண்டும் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று பலராமன் அவர் கையில் தன் சம்மதத்துடன் வத்ஸலா லெட்சணன் திருமணத்திற்கு லக்கினப் பத்திரிக்கையைக் கொடுத்து அனுப்பினான்.

முகூர்த்த லக்னப் பத்திரிக்கையும் பார்த்து துரியோதனன் அதிக சந்தோஷம் கொண்டாடினான். உடனே தன் மனைவி பானுமதி, மகன் லெட்சணன், மாமா சகுனி மற்றும் உறவினர்களுடன் திருமணம் பேசி முடிப்பதற்காக பலராமன் இருப்பிடத்திற்கு சென்றான். செல்லும் வழியில் கிருஷ்ணரின் தங்கை சுபத்ரைக்கு இந்த விஷயத்தை ஒரு மடலில் எழுதி அனுப்பி விட்டான். இதை கேள்விப்பட்ட சுபத்ரையும், அவளது மகன் அபிமன்யுவும் ஒரு தேரில் பலராமனை தேடி சென்றனர்.

பின்னர் கடோத்கஜன் பீமனின் மகன் என்பது தெரியவந்ததும், இருவரும் கிருஷ்ணனின் மாளிகைக்கு சென்றனர். அவர்களுடன் கடோத்கஜனின் இஷ்ட தேவதையான ஜாங்கிலியும் சென்றது.

வாசுதேவன் அவர்களை வரவேற்று மகிழ்ந்து ஆசி கூறினார். என் அண்ணா பலராமர் அந்தபுரத்தில் ரேவதி தேவியின் அருகில் வத்ஸலா படுத்துக் கிடக்கிறாள். அவளை அங்கிருந்து எடுத்துக் கொண்டு சுபத்திரையிடம் சேர்த்து விடுங்கள். அரண்மனையில் அமைத்திருக்கும் திருமணப் பந்தலை உங்களைச் சேர்ந்த அரக்கர்களைக் கொண்டு அலாக்காகத் தூக்கி ரைவத மலைச்சாரலுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுங்கள். அப்புறம் என் சங்கல்பத்திற்கு விரோதமாக வந்திருக்கும் துரியோதனருக்கு உங்கள் இஷ்டம் போல்  அவர்கள் பாடம் கற்கும்படி, மானபங்கம் செய்து விடுங்கள். பின் தேவலோகத்திலிருந்து திருமண காரியங்களுக்குப் புரோகிதம், வேள்வி, மேள தாளங்கள் உள்பட அங்கு வரும்படி செய்கிறேன். அந்தத் தேவர் குழாம் வந்ததும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். நானும் ருக்மணி தேவியும் அங்கு வந்து யாகத்தை முடித்துக் கொடுக்கிறோம்… ” என்றார்.

வாசுதேவன் கூறியபடி காரியங்களை நிறைவேற்றி விட முனைந்தனர். வத்ஸலாவிற்கு இந்த நகைகளை அணிவித்து அவளை பானுமதி தங்கி இருக்கும் மாளிகைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறினார்கள். ரேவதி அதற்கு அனுமதி கொடுத்தாள். உடனே வத்ஸலை அந்தப்புரம் சென்று வந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி, அவளை அங்கிருந்து ரைவத மலை அடிவாரத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

தேவலோகம் சென்று யட்சர், தேவதேவியர், தெய்வ ரிஷிகளைத் திருமணம் நடக்க இருக்கும் இடத்திற்கு வரச்செய்து கல்யாண ஏற்பாடு செய்துவிட்டு கிருஷ்ண பகவானிடம் தெரிவித்தார்கள். அவர் ருக்மணி தேவியுடன் திருமணப் பந்தலுக்கு எழுந்தருளினார்.

வத்ஸலாவுக்கும் அபிமன்யூவுக்கும் விவாக சுபமுகூர்த்தம் நிறைவேறியது. உடனே பகவான் அங்கு தங்காமல் எதையும் தான் அறியாதர் போலத் தம் இருப்பிடம் சேர்ந்தார். பலராமன் தன் மகன் வத்ஸலையைக் காணாமல் தவித்து, கிருஷ்ணரின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். அதற்குப்பின் வத்ஸலா விவாகமான சேதியை நாரதர் மூலம் பகவான் பலராமருக்குத் தெரிவித்தார்.

அதனால் பலராமர் அகமகிழ்ந்து அபிமன்யூ வத்ஸலாவைத் தன் அரண்மனைக்குத் திருமண ஊர்வலமாக நாததுந்துபிகள் முழங்க வெகு விமர்சையாக அழைத்து வந்தான்….

சாம்பன்–லட்சுமளை திருமணம்

துரியோதனனுக்கு லட்சுமளை என்ற ஒரு பெண் இருந்தாள். அவள் திருமணத்தை முன்னிட்டு அவன் சுயம்வரம் ஏற்படுத்தினான். சுயம்வரத்துக்கு வந்த சாம்பன் லட்சுமளையை தூக்கிச் சென்றான். இந்த சாம்பன் கிருஷ்ணனுக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த புத்திரன்.

துரியோதனாதியரும் அவனைச் சேர்ந்தவர்களும் அவனுடன் யுத்தம் செய்தனர். சாம்பன் அனைவரையும் நன்கு தாக்கினான். எனினும் பீஷ்மரும் துரோணரும் கௌரவ சேனையில் இருந்ததால் அவனை சிறைப்படுத்தினார்கள்.

இதைக் கேள்விப்பட்டதும் பலராமன் அஸ்தினாபுரம் வந்து துரியோதனனைச் சந்தித்தான். துரியோதனா! ஒருவனாக நின்று போராடிய சாம்பனை வீரர்களுடன் நீ சுற்றிவளைத்துச் சிறைபடுத்திவிட்டாயே? இது என்ன நியாயம்? உனக்கு நாங்கள் உறவினர் என்பது மறந்து போயிற்றா? சாம்பனை விடுவித்து அவனுக்கு லட்சுமளையை விவாகம் செய்துகொடு, என்று பலராமன் சொன்னான்.

அவன் சொன்னைதைக் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் துரியோதனன் பலராமனையும் அவன் குலத்தையும் இழிவாக பேசினான். பலராமன் உங்களைக் கூண்டோடு துவம்சம் செய்கிறேன் என்று தன் கலப்பையால் அஸ்தினாபுரமே வேரோடு பெயர்ந்து கிளம்புவதுபோல் ஆட்டம் காண செய்தான். துரியோதனன் பலராமன் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அத்துடன் லட்சுமளையை சாம்பனுக்கு மணம் முடித்துக் கொடுக்கவும் சம்மதித்தான்.

பலராமன் தீர்த்த யாத்திரை

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே விரோதம் முற்றியது. இரு சாராரும் உறவினர்களே. ஆக அவர்கள் தம்மைப் போருக்கு உதவ கேட்கும் போது தாம் யாருக்கு உதவுவது என்ற தர்மசங்கடமான சூழ்நிலையை எண்ணிப் பலராமன் தீர்த்த யாத்திரைக்கு கிளம்பினான்.

பலராமன் நைமிசாரண்யத்திற்கு வந்தான். அனைவரும் பலராமனைக் கண்டதும் எழுந்து நின்று அவனை வரவேற்று நமஸ்காரம் செய்தனர். சூதர் மட்டும் எழுந்திருக்கவே இல்லை. இதைக் கண்டதும் பலராமனுக்குக் கோபம் வந்து விட்டது. பதினெட்டுப் புராணங் களையும் மற்றவர்களுக்குத் தாம் தானே உபதேசம் செய்தோம் என்ற கர்வத்தால் இப்படி எழுந்திராது இருந்தார் என்பதைப் பலராமன் உணர்ந்தான். கையில் ஒரு தர்ப்பையை எடுத்தான். மந்திரித்து அஸ்திரமாகப் பிரயோகம் செய்தான். அது சூதருடைய தலையைத் துண்டாக்கிச் சென்றது.

தாங்கள் அவர் பிழை பொறுத்து அவரை உயிர் பெற்று எழச் செய்ய வேண்டும் என மன்றாடினார்கள். அதனால் சூதருக்கு இரங்கி அவரை உயிர்த்தெழச் செய்தான் பலராமன்.

தீர்த்த யாத்திரை முடித்து குருஷேத்திர யுத்தம் முடிவடையும் நேரம் அங்கே பலராமன் வந்தான். பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையே கடும்போர் நடந்து கொண்டிருந்தது. துரியோதனன் தொடையில் பீமன் கதையால் ஒங்கி அறைந்தான்.

உடனே பலராமன் பீமா! கதை கொண்டு பகைவனை அவனது தொடையில் தாக்குவது எந்த யுத்த தருமத்தைச் சேர்ந்தது? இந்த அநியாயத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று சொல்லி பீமனைத் தாக்க பலராமன் கலப்பையைக் கையில் எடுத்தான்.

கண்ணன், அண்ணா நீங்கள் தீர்த்த யாத்திரை போகும் முன்பு இங்கு நடந்த நிகழ்ச்சிகளை நீங்கள் தெரிந்திருக்க முடியாது. துரியோதனன் ஆரம்பம் முதல் இன்று வரை தர்மத்திற்கு விரோதமாகவே நடந்து கொண்டு இருக்கிறான். திரௌபதையை அரசவைக்கு நடுவே இழுத்து வரச்செய்து அவள் சேலையை அவிழ்த்து அவமானப்படுத்தினான்.

நீங்கள் மட்டும் அந்த சபையில் அன்று இருந்திருந்தால் அப்போதே அவனை துவம்சம் செய்திருப்பீர்கள். அன்றைய தினம் தொடையிலே கைபோட்டுத் துரியோதனன் பேசியதால் அவனை அதே தொடையில் அடித்து அது முறிய அவனை பீமன் மாளச் செய்வான் என்று திரௌபதை சாபம் கொடுத்தாள். அந்த சாபத்திற்கு ஏற்ப இந்த மரணத்தைத் துரியன் ஏற்றான்! ஆகவே நீங்கள் இதில் தலையிட வேண்டாம்! என்றான் கண்ணன். பலராமனும் சாந்தம் ஆனான்.

“சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் – என்றும் புணையாம் அணி விளக்காம் பூம்பட்டாம்
புல்கும்அணையாம் திருமாற்கு அரவு..”

என்றாற் போல பெருமாளுக்கு பாற்கடலிலே படுக்கையாகவும், நடந்தால் குடையாகவும், இருந்தால் ஆசனமாகவும், நின்றால் பாதுகையாகவும், விளங்கும் அனந்தாழ்வார்,

திரேதா யுகத்திலே இராமாவதாரத்தின் போது இலஷ்மணனாக அவதரித்து இராமருக்கு சேவை செய்தார், துவாபர யுகத்திலே அவரே பலராமராக அவதரித்தார்.

இந்த கலியுகத்திலே நாம் எல்லோரும் உய்யவு ம் விசிஷ்டாத்வைதம் உலமெங்கும் பரவவும், எம்பெருமானின் கருணையினால், ஸ்ரீபெரும்புதூரில் 1017 ல் இராமனுஜராக அவதரித்தார்.

திருமாலின் பத்து அவதாரங்கள்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    மகாளய பித்ரு பக்ஷ கேள்வி பதில்கள் | Mahalaya Patcham Questions

    மகாளய பித்ரு பக்ஷ கேள்வி பதில்கள் | Mahalaya Patcham Questions 18/09/24 - 03/10/24 - தர்ம சாஸ்த்ரம்… Read More

    4 hours ago

    முன்னோர்களின் ஆசியை பெற மகாளய அமாவாசை | மகாளய அமாவாசை சிறப்புகள்

    முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை | Mahalaya Amavasya 🌚 புரட்டாசி மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு… Read More

    1 day ago

    மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha

    மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha information *மஹாளய பட்சம்* (30.9.2023… Read More

    1 day ago

    Srardham procedure in tamil | சிராத்தம் விதிமுறைகள்

    Srardham procedure in tamil சிராத்தம் விதிமுறைகள் (Srardham procedure) பரலோகம் பித்ருலோகம்  பித்ரு கர்மா நாம் ஒரு விஷயத்தை… Read More

    1 day ago

    ஞான சரஸ்வதி கோவில் ஆதிலாபாத் தெலுங்கானா | basara saraswathi temple adilabad

    ஞான சரஸ்வதி கோவில் ஆதிலாபாத் தெலுங்கானா பஸாரா ஞான சரஸ்வதி கோயில் - Basara Saraswathi temple பஸாரா ஞான… Read More

    5 days ago

    சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil

    சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil சந்திரனுக்குக் கிடைத்த சாபம்! ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்தபோது,… Read More

    7 days ago