மச்ச அவதாரம் வரலாறு | Macha Avatharam Story in Tamil – உலகத்தில் தருமம் அழிந்து அதர்மம் ஓங்குகிற சமயம் நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லுகிறார்.
வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்பிடுவர்.
பெருமாள் எடுத்த பத்து அவதாரங்களை பற்றி சுகர், பரீட்சித்து மகாராஜனுக்கு உபதேசம் செய்தார். சுகரைப் பார்த்து பரீட்சித்து மகராஜா ஒரு கேள்வி கேட்டார்.
ரிஷிவேந்தே! எதற்காக ஹரிபகவான் ஒரு சாதாரண கர்மவசியனான புருஷனைப் போல, உலகத்தாரால் நிந்திக்கப்படக் கூடியதாகவும், தாமசப் பிரகிருதியாகவும், சகிக்கக் கூடாததாகவும் இருக்கிற மச்சரூபம் தாங்கி அவதாரம் செய்தார்.
அதற்கு சுகபிரம்மர் மகாவிஷ்ணு எடுத்த முதல் அவதாரம் இது. மச்சாவதாரத்தை மத்ஸ்யாவதாரம் என்றும் கூறுவார்கள்.
இந்த அவதாரம் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்த சோமுகாசுரனைக் கொன்றது. வேதங்களை மீட்டது.
இந்த அவதாரத்திலேயே மகாப் பிரளயம் வர ஏழாவது மனுவும், சப்த ரிஷிகளும் மீன் உருக் கொண்டு தம் உயிர் பிழைத்திருக்க, மற்ற எல்லா உலகங்களும் அழிந்து ஒழிந்தன. பொங்கிப் பெருகும் கடலில் மூன்று உலகங்க ளும் மூழ்கின.
ஹயக்கிரீவன் என்ற அசுரன் அங்கே வந்தான். அவனுக்கு கழுத்திற்கு மேல் குதிரை உருவம். அதனால் அப்பெயர் அவனுக்கு வந்தது.
பிரம்மா சோர்ந்து தூங்கும் போது அவர் வாயிலிருந்து வேதங்கள் தாமே வெளிவந்து கொண்டிருந்தன. இதைப் பார்த்த ஹயக்ரீவன் தனது யோக சித்தியினால் அந்த வேதங்களை ததிருடிக் கொண்டு போய் விட்டான். பிறகு அதை ஒளித்து மறைத்து விட்டான்.
வேதங்கள் இருந்தாலன்றிப் பிரும்ம சிருஷ்டி இயங்காது. உலகத்தில் அறம் ஒழுங்காக நிறைவேற வேதத்தின் துணை அவசியம். எனவே ஹயக்ரீவனால் திருடி மறைக்கப்பட்ட வேதங்களை மீட்பதற்காக பரந்தாமன் மீனாக அவதரித்தான்.
ஸ்ரீமந் நாராயணன் எடுத்த மச்சாவதாரத்தில் சத்யவிரதன் என்ற பெயருடைய ராஜரிஷி இருந்தான் அவன் நாராயணன் மீது அளவிலா பக்தி கொண்டவன்.
அந்த ஹரிபக்தன் வேறு உணவு எதுவும் அருந்தாமல் தண்ணீரை மட்டும் உட்கொண்டு ஒரு நோன்பு நோற்று வந்தான். இப்போது நடக்கும் கல்பத்தில் மனுவாக விளங்கும் விவஸ்வரன் இவனே.
அந்தக் காலத்தில் திராவிடத் திருநாட்டின் தேசாதிபதியாக இருந்தான். அவன் ஒருநாள் கிருதமாலா என்ற ஆற்றங்கரையில் அமர்ந்து தன் மூதாதையர்களுக்கு தண்ணீர் இறைத்து அர்க்கியம் கொடுத்துக் கொண்டு இருந்தான்.
அர்க்கியம் செய்யும் பொழுது இரு கைகளிலு ம் தண்ணீரை எடுத்தான். அங்கே கைக்குள் தேங்கிய நீரில் ஒரு குஞ்சு மீன் அழகுற நீந்திக் கிடப்பதைப் பார்த்தான். பேரழகுமிக்க அந்த மீன் பேசியது: ” ராஜனே என்னை மீண்டும் தண்ணீரில் தள்ளிவிடாதீர்கள். குட்டி மீனான என்னைப் பெரிய மீன்கள் விழுங்கி விடும். அச்சம் என்னை பிடுங்கித் தின்கின்றது…” என்றது.
இதைக் கேட்டு அகமகிழ்ந்து அந்த மச்சத்தின் வேண்டுகோளை நிறைவேற்ற நினைத்தான். ஆற்றுக்குத் தன்னுடன் எடுத்து வந்த கமண்ட லத்திற்குள் மீனைப் போட்டான். அதைத் தன் வழிபாட்டு ஆஸ்ரமத்திற்கு எடுத்து போனான்.
அன்று இரவே அந்த மச்சம் கிடுகிடுவென்று வளர்ந்து கமண்டலம் முழுவதும் பரவியது. அரசே இந்த இடம் எனக்கு வசிக்கப் போதாது என்றது மச்சம். சத்தியவிரதன் மீனைக் கமண்டலத்தில் இருந்து எடுத்து நீர் நிறைந்த வேறு ஒரு பாத்திரத்தில் போட்டான்.
இந்தப் பாத்திரமும் எனக்கு வசிக்கப் போத வில்லையே என்று திரும்பவும் கெஞ்சியது. மன்னவன் உடனே மீனை அங்கிருந்து எடுத்து ஒரு குளத்தில் விட்டான். வெகு சீக்கிரமாக வளர்ந்து அந்தக் குளத்தை நீக்கமற அடைத்து நின்றது. அடுத்து அந்த மீனை ஆழமானதும் விரிந்து பரந்ததுமான மடுக்களிலும், ஏரிகளிலும் போட்டான்.
அங்கும் அது பெரிதாக வளர்ந்து தனக்கு வாழ இடம் போதவில்லை என்று சொல்லியது. கடைசியாக அதை சமுத்திரத்தில் கொண்டு போடும் போது அந்த மச்சம் சொன்னது:
” ராஜரிஷியே…. இந்தப் பெரிய கடலில் திமிங்கலம் போன்ற பெரிய ஜந்துக்களின் நடமாட்டம் இருக்கிறது. ஆகவே என்னை நீ இங்கே விட்டு விட்டுப் போய் விடாதே” என்று அலறியது.
உடனே சத்யவிரதன் அந்த மீனைக் கரம் கூப்பித் தொழுது, ” பரம்பொருளே! ஒரு சாதாரண மீனாகத் தாங்கள் என்னிடம் வந்து மயங்க வைக்கிற மாயம் எனக்கு என்ன என்று தெரிந்து கொள்ள முடியவில்லையே? இப்படி தேவரீர் என்னை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன? நீர் வளர வளர நிச்சயம் ஸ்ரீ ஹரியேதான் தாங்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆகவே பெருமானாகிய தாங்கள் இந்த உருவத்தோடு இங்கு வந்த காரணத்தைத் தங்கள் தொண்ட னாகிய எனக்குத் தெரிவிக்கும்படி பிரார்த்தி க்கிறேன்..” என மச்சாவதார மூர்த்தியை வீழ்ந்து வணங்கிக் கேட்டான்.
மச்சம் பதில் சொல்லியது: ” ராஜரிஷியே… இன்று முதல் ஏழாம் நாள் இந்த பூமியும், விண்ணும், அதற்கிடைப்பட்ட வெளியும், பொங்கி எழுந்து வரும் கடலுக்கு இரையாகப் போகிறது. உலகங்கள் அழியும் நாள் வந்து விட்டது. அஞ்சாதே! நான் உனக்கு ஒரு பெரிய தோணியை அனுப்பி வைக்கின்றேன்…”
” நீ அந்தத் தோணியில் சமஸ்த மூலிகைகள் பற்பல வித்துகளையும் ஏற்றிக்கொண்டு சப்த ரிஷிகளுடன் சர்வபலம் கொண்டவனாக அந்தகாரமான சமுத்திரத்தில் மகா தீரனாக சஞ்சரிக்கப் போகிறாய். வாயுவால் அலைக் கழிக்கப்பட இருக்கும் அந்தத் தோணி கவிழ்ந்து விடாமல் எனது கொம்பில் சேர்த்த கட்டிவிடு…”
” அப்படிக் கட்டினால்நான் பிரம்ம தேவனுடைய இராப்பொழுது தீரும்வரை அந்த ஓடத்தோடு சஞ்சரித்துக் கொண்டு இருப்பேன். அப்போது சப்தரிஷிகளும் ஒளிமயமாக இருந்து உனக்கு வழிகாட்டுவார்கள். என் உடல் அப்போது திமிங்கலம் போலக் காணப்படும். அந்தப் படகை என் கொம்பில் கட்டச் சொன்னேன் அல்லவா?..”
” அப்படிக் கட்டுவதற்கு உரிய கயிறு வாசுகி என்ற பாம்பு என்பதை மறந்துவிடாதே. அந்த பாம்பை எனது சிதளில் கட்டிவிடு. அதன் பின்பு நீ எனது பெருமையைத் தெரிந்து கொள்வாய். உனக்கு சர்வமங்களமும் உண்டாகட்டும்..” என்றார்.
தர்ப்பாசனத்தில் இருந்தபடி சத்தியவிரதன், உலகை அழிக்கப்போகும் பிரளயத்தை எதிர்நோக்கிக் கொண்டு இருந்தான். ஏழாம் நாள், ஆகாயம் அந்தகாரத்தில் மூழ்கியது. பெருமழை பெய்த வண்ணம் இருந்தது. கடல் கரைபுரண்டு வந்தது. பூமி இருக்கும் அடையாளமே தெரியவில்லை.
எங்கும் ஒரே தண்ணீர்க்காடு அந்த பொங்கும் நீர்ச்சுழிகளின் ஊடே பரந்தாமன் தங்கத் திமிங்கலத் தோற்றத்துடன் காணப்பட்டார். தகத்தகாயமாக ஜ்வலித்த அவர் உடம்பில் கொம்பு போல் ஒன்று நீண்டு இருந்தது.
சத்யவிரதன் அப்போது சப்தரிஷிகளுடன் மூலிகை விதைகள் சகிதம் ஏறி இருந்த ஓடத்தை பகவான் கூறியபடி அவரைத் தியானம் செய்தபடியே, தங்கத் திமிங்கிலக் கொம்பில் கட்டினான். அந்த அபூர்வ மச்சம் இவர்கள் ஏறிய படகைப் பற்றி இழுத்துக் கொண்டு வெள்ளத்தின் மத்தியில் பயமோ, அபாயமோ இன்றி அலைந்து கொண்டு இருந்தது.
அந்த சமயம் பரந்தாமன் ராஜரிஷி சத்திய விரதனுக்கு மச்சாவதார புராணத்தை உபதேசம் செய்தார். பிரம்மதேசன் நித்திரை காலம் முடிந்தது. உலகத்தை கவ்வி இருந்த அந்தகாரம் விலகி ஊடே ஊடே ஒளிப் படலங்கள் விரிசலிட்டன. ஓயாது பெய்த மழையும் நின்றது. பல்கிய, உலகில் பொங்கிப் பெருகிய தண்ணீர் வடிய ஆரம்பித்தது.
மச்சமூர்த்தி ஓடத்தை கரை சேர்த்தார். சத்திய விரதன் அந்நேரம் பிரம்மனைக் குறித்து பிரார்த்தனை செய்தான். நித்திரையிலிருந்து மீண்ட பிரம்மதேவன் அவன் முன்பு பிரத்யட்சம் ஆனார். மீண்டும் அவர் தம் சிருஷ்டியைத் தொடங்க நினைத்தபோது தான் வேதங்கள் மறைந்த விபரம் அவருக்குத் தெரிந்தது.
பிரம்மதேவர் ஸ்ரீ ஹரியை நோக்கி தியானம் செய்தார். அதுசமயம் மச்சமூர்த்தியாக இருந்த பகவான் வேதங்களை ஹயக்கிரீவன் ஒளித்து வைத்திருப்பதை அறிந்து வெள்ளத்திற்குள் புகுந்து போனார். ஹயக்கிரீவனை வெள்ளத் தில் கண்டு அவனுடன் போர் புரிந்தார்.
வேதங்களை மீண்டும் பிரம்மதேவரிடம் கொடுத்தார். மறுபடியும் சிருஷ்டியைத் தொடங்கும்படி சொன்னார். இப்படியாகப்பட்ட கல்பத்தில் சத்தியவிரதன் வைசதமனு என்ற பெயருடன் ராஜ்ய பரிபாலனம் செய்து வரலானான்.
இந்த மச்சாவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், அவர் சரித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்கும் சகல சம்பத்தும் ஞான யோகமும் உண்டாகும்…
Vinayaga 100 special information விநாயகர் சதுர்த்தி விரதம் சிறப்பு பதிவு. விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகள் .… Read More
Vinayagar Agaval Lyrics in Tamil விநாயகர் அகவல் (Vinayagar Agaval) - ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர்… Read More
ஓம் கணநாதனே போற்றி போற்றி ஓம் ஞான முதல்வனே போற்றி ஓம் வெள்ளை கொம்பனே போற்றி கணபதியே கணபதியே… கணபதியே… Read More
Vinayaka Chathurthi Pooja Procedure Tamil விநாயகர் சதுர்த்தி (7/9/2024) வழிபடும் முறைகள் (Vinayagar Chathurthi Pooja Procedure in… Read More
Vinayagar Statue directions வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்? ⭐ விநாயகர் சதுர்த்தி, விநாயகரின் முக்கியமான விழாவாகும்.… Read More
நினைப்பு ஸ்ரீ ரமண மகரிஷி. நேரம்ன்னா என்ன? அது கற்பனை. உங்களோட ஒவ்வொரு கேள்வியும் ஒரு நினைப்புதான். உங்களுடைய இயல்பே… Read More
Leave a Comment