Arthamulla Aanmeegam

Vamana Avatar Story in Tamil | வாமன அவதாரம் வரலாறு

Vamana Avatar Story in Tamil

தசாவதாரம் 5  – வாமன அவதாரம் வரலாறு (Vamana avatar story in tamil). பெருமாளின் அவதாரங்களில் இது 5 வது அவதாரமாகும்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம்.

தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார். பிரகலாதனுடைய பேரனாகிய பலி என்ற அசுரராஜன் ஆண்டு வந்த காலம் வாமன அவதார காலம் ஆகும்.

இந்திரனுடன் போர் செய்து பலி தோற்றான். மீண்டும் பலம் பெற்று எப்படியாவது தேவர்களை ஜெயிக்க வேண்டும் எனத் தனக்குள் ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொண்டான். பிருகு வம்சத்தில் தோன்றிய சுக்ராச்சாரியார் முதலி ய அந்தணர்களை அணுகி ஆலோசனை செய்தான்.

அவர்கள் பலிச் சக்கரவர்த்தியிடம் விக்ரஜித் என்ற ஒரு பெரிய வேள்வியை நடத்தும்படி உபதேசம் செய்தார்கள். அவ்வாறு அவர் வேள்வி செய்யவே அதில் இருந்து ஓர் பொன் ரதம் வெளிவந்தது. அந்த ரதத்தில் கணக்கற்ற வில்லும், அம்பும், கவசமும் இருந்தன. அதில் சிங்கத்துவஜம் கட்டப்பட்டு இருந்தது. அந்த சமயம் பலியினுடைய தாத்தாவாகிய பிரகலா தன் அவன் முன் தோன்றி அவனுக்கு என்றும் வாடாத தாமரை மலர் மாலையை கொடுத்தார்

சுக்கிராச்சாரியார் ஒரு சங்கைக் கொடுத்தார். பலிச்சக்கரவர்த்தி வேள்விக்கு வந்திருந்த அந்தணர்களை வணங்கினான். சுக்கிராச்சாரியரின் ஆசியையும் பெற்றான். இரதத்தில் ஏறினான். கவசத்தைத் தரித்துக் கொண்டான்.

ஒரு கையில் வில்லையும், மறுகையில் சங்கையும் தாங்கிக் கொண்டான். அசுர சேனைகள் புடைசூழ நேரே தேவலோகம் சென்றான்.

அமரர் உலகத் தலைநகர் ஆன அமராவதியை முற்றுகையிட்டான். அமராவதிப் பட்டணம் அழகுவாசம் செய்யும் இடம். இந்த எழிலார்ந்த நகரம் தனக்கு உடைமை ஆயிற்று என்ற உற்சாகத்தில் அசுரப்படைகளுடன் பலி இந்திர ப்பட்டணத்தைத் தாக்கினான்.

பலி எழுப்பிய யுத்த சன்னத்தமாகிய சங்கு ஒலி கேட்டதும் இந்திரனுக்கு அச்சம் ஏற்பட்டது. உடனே குல பிரகஸ்பதியாகிய வியாழ பகவா னைப் போய்க் கலந்து ஆலோசித்தான்.

தேவேந்திரன் பிரகஸ்பதியிடம், குருபகவானே பலி முன்பைவிட அதிக பராக்கிரமத்துடன் அசுர சேனைகளைத் திரட்டிக் கொண்டு நம்மை முற்றுகையிட்டிருக்கிறான். அவன் செய்த வேள்வியின் ஓமகுண்டத்திலிருந்து தோன்றிய ரதத்தில் ஏறி வந்திருப்பதைப் பார்த்தால் நாம் அவனை ஜெயிக்க முடியாது என்று கருதுகிறேன். ஆகவே, நான் தங்களிடம் அடைக்கலம் தேடி தேவசைன்யத்துடன் வந்திருக்கிறேன்.

இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? சரியான உபாயம் சொல்லுங்கள்! என்றான். தேவேந்திரனே! நீ பலிச் சக்கரவர்த்தியை இந்த நிலையில் மோதுவது என்பது உகந்தது அல்ல. அவன் பிருகு வம்சத்து மகரிஷியின் பரிபூரண ஆசியைப் பெற்று வந்திருக்கிறான். அளவிலாப் பராக்கிரமம் பெற்றிருக்கிறான்.

இப்போது யுத்தம் செய்ய வேண்டாம். நீங்கள் எல்லோரும் சுவர்க்கத்தை விட்டுப் போய் விடுங்கள். அவனுக்கு எப்படியாவது சொர்க்கத்தை தான் கட்டி ஆள வேண்டும் என்ற ஆசை. அந்த குறிக்கோளை அவன் அடைவது உறுதி.

இருந்தாலும் காலப்போக்கில் அவனே தன்னை அழித்துக்கொள்வான். எந்த மகரிஷி களினால் அளப்பரிய பலத்தைப் பெற்றானோ அந்த மகரிஷிகளுக்கு அர்ப்பணம் செய்து, அவர்களாலேயே அவன் அழிவைத் தேடிக் கொள்வான். கவலை வேண்டாம். நீயும், உன் ஆட்களும் ஸ்ரீமந்நாராயணனைத் தேடி சரண் அடையுங்கள். அவர்தான் பலிக்கு அழிவைத் தரக்கூடியவர் என்று பிரகஸ்பதி அறிவுரை செய்தார்.

குருதேவருடைய வார்த்தைகளைத் தட்டாமல் இந்திரன் தேவர்களுடன் தேவலோகத்தை விட்டு வெளியேறினான் அசுரருக்கு தெரியாத இடம் ஒன்றில் போய் மறைந்து கொண்டான். பலி இதனால் தேவலோகத்தை எளிதில் கைப்பற்றினான். அமராவதியிலேயே தங்கி மூன்று உலகங்களையும் கட்டி ஆண்டான்.

தவிர அந்தணர்களும் மகரிஷிகளும் தத்தம் கர்மாவை குறைவின்றி நடத்திக் கொள்ளவும் பலி வழி செய்து கொடுத்தான். அதனால் ஜீவ ராசிகளும் அவனைப் போற்றிப் புகழ்ந்தன. பிருகு வம்ச அந்தணர்கள் தங்கள் சீடனுக்கு வந்த இந்திர பதவியைப் பார்த்து மகிழ்ந்தனர். அவன் இந்தப் பதவியில் இருந்து நழுவாமல் இருக்கும்படியாக நூறு அசுவமேத யாகங்க ளைச் செய்யுமாறு அவனிடம் கூறினார்கள். பலியும் அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான். இதனால் மூவுலகிலும் இவன் புகழ் ஓங்கி நின்றது.

தேவர்கள் தட்சன் மகளாகிய அதிதி என்பவளு க்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவர்கள். இதனால் தன் மக்களுக்கு ஏற்பட்ட எளிய, இழி நிலை வாழ்க்கையை எண்ணி அதிதி மிகவும் வருந்தினாள். இதைக் கண்ட கச்யபர், அதிதி! உன் முகம் வாடி இருக்கிறதே, ஏதோ மனவருத்தம் அடைந்ததாக நினைக்கிறேன். மேலும் உனக்குத் தெரியும், அந்தணர்களுக்கும் சாதுக்களுக்கும் எந்தவிதத் துன்பமும் ஏற்பட நியாயம் இல்லை என்றார்.

மகரிஷியே! நீங்கள் சொல்வது உண்மையே. சாதுக்களுக்கும் அந்தணர்களுக்கும் துன்பம் நேருவது இல்லைதான். ஆனால் அதில் தாங்கள் கொஞ்சம் வித்தியாசம் ஆனவர். தேவர்களும் உமது புத்திரர்கள், அசுரர்களும் உமது புத்திரர்கள். இருவரும் உமக்கு சமமே! எனினும் எனக்குக் கண் கண்ட தெய்வமாகிய உங்களிடம் ஒன்றை வேண்டுகிறேன்.

தேவ லோகத்தில் எனது புத்திரர்களான தேவர்கள் பதவி, சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து தவிக்கிறார்கள். அவர்கள் மீண்டும் பழைய நிலையை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாகக் கூறுங்கள் என்றார். அதிதியின் வார்த்தைகளைக் கேட்டு சிரித்தார் கச்யபர். பிரியே! உன் விருப்பம் நிறைவேற வேண்டுமானால் நீ பரந்தாமனை தியானம் செய். அவர் உனக்கு வழியைத் தந்தருள்வார்.

பரந்தாமனை அடையவேண்டுமானால் எத்தகைய விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என அதிதி வினவினாள். பயோவ் விரதம் எனப்படும் விரதத்தை பங்குனி மாதம் சுக்ல பட்சம் பிரதமை திதி வரும் நாளில் ஆரம்பித்து தொடர்ந்து பன்னிரெண்டு நாள்கள் கடைபிடி த்து ஸ்ரீஹரி நாராயணனை சந்தோஷப்படுத் துவாயாக என்றார் கச்யபர்.

அதிதியும் அதை மேற்கொண்டாள். விரதத்தை தவறாமல் கடைபிடித்தாள் கடைசி நாள் அன்று பகவான் சங்கு சக்ரதாரியாக அவளுக்கு காட்சி கொடுத்தார். அப்போது அவள் மனம் மிக மகிழ்ந்தது.

தேவ மாதா! அதிதி தேவியே! உன் விரதத்தை கண்டு மகிழ்ந்தேன். நீ எதனால் இந்த விரதத்தை அனுஷ்டித்தாய் என்பதை நான் அறிவேன். இப்போது உன் தேவகுமாரர்கள் பதவியிழந்து கதியிழந்து நின்கின்றனர் அவர் களை மீண்டும் சொர்க்க லோக ஆட்சிக்கு ஆளாக்க வேண்டும். உன் புதல்வன் தேவேந்திரன் மீண்டும் அமராவதி நகரில் ஆட்சி செய்ய வேண்டும் என நீ ஆசைப்படுகிறாய்.

ஆனால் தற்சமயம் அது இயலாது. அசுரர்கள் யாரும் வெல்ல முடியாதபடி பராக்கிரமம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் நல்ல காலம், அந்தணர்கள் பராமரிப்பில் ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

எனவே போர் செய்து பயன்பெற முடியாது. ஆயினும் நீ என்னை வழிபட்டதற்குரிய பலன் உனக்கு நிச்சயம் உண்டு. ஆகவே உன் விருப்பத்தை வேறொரு விதத்தில் நிறைவேற்றித் தருகிறேன். நானே உனக்குப் புத்திரனாகப் பிறக்கவேண்டும் என்று மனத்திலே எண்ணி தியானம் செய். அதன்படியே பிறந்து தேவர்களை காப்பாற்றுகிறேன். இது தேவரகசியம்.

எவரிடமும் வெளியிடாதே. உன் ஆசை நிறை வேறும் அதிதியும் பகவான் திருவார்த்தைப்படி, தனக்கு திருமாலே மகனாகப் பிறக்க வேண்டும் என்று எண்ணி மகிழ்ந்தாள். வரம் கொடுத்தது போல பரந்தாமனும் அவளுடைய கர்ப்பத்தை அடைந்தார்.

புரட்டாசி மாதம், சுக்கி ல பட்சம், திருவோண (சிரவண) நட்சத்திரத்தில் முதல் அம்சமான அபிஜித் பாதத்தில், சூரியன் நடுப்பகலில் பிரகாசிக்கும் சமயம் பரந்தாமன் கச்யபர் அதிதியிடம் புத்திரராக அவதாரம் செய்தார். இதற்குப் பெரியோர் விஜய துவாதசி என்று பெயர் இட்டனர்.

அப்போது தேவ துந்துபி முழங்கியது. வித்தியாதரர், சித்தர், கிம்புருடர் போன்ற வானவாசி கள் பகவானை மங்களகரமான துதிகளால் போற்றினர். பிறக்கும்போது அவர் தந்த காட்சியை கச்யபரும் அதிதியும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்கள்.

சியாமள மேனி, சிரசிலே கிரீடம், காதிலே மகர குண்டலங்கள், சங்கு சக்கரம், கதை, தாமரை தாங்கிய நான்கு கரங்கள், நெஞ்சிலே ஸ்ரீவத்சம் கைவளை தோள்வளை, இடையிலே மேகலை, மஞ்சள் பட்டாடை, கழுத்திலே வண்டு சூழ் வனமாலையும், கௌஸ்தூப மணியும், திருவலங்கார பூஷிதராக பெருமாள் காட்சி கொடுத்தார். பெற்றோர்கள் முன்பு இப்படிக் காட்சிக் கொடுத்த பெருமாள், நாடகத்தில் ஏற்படும் காட்சி மாற்றம் போலத் தன் உருவத்தைக் குட்டையான ஓர் அந்தணச் சிறுவனாக மாற்றி விட்டார்.

அதிதியும், கச்யபரும் பல மகரிஷிகளை அழைத்து வரச்செய்து வைதீக கர்மாக்களைச் செய்து வாமனன் என்று பெயரிட்டனர். தேவர் கள் குழந்தை பிறந்திருக்கும் ஆசிரமத்திற்கு வந்து வணங்கினர். பின்னர் மகரிஷிகள் பெருமானுக்கு உபநயனம் செய்து வைத்தார்கள்.

அச்சமயம் கதிரவனே அவருக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்தான். பிரகஸ்பதி பிரம்ம சூத்திரத்தை (பூணூலை) கொடுத்தார். கச்யபர் முஞ்சியைக் கொடுத்தார். (முஞ்சி என்றால் தர்ப்பையால் செய்த அதை ஞாண் கயிறு) பூமாதேவி கிருஷ்ணா ஜனத்தை (மான் தோலை) கொடுத்தாள். சந்திரன் தண்டத்தை அளித்தான்.

அதிதி கௌபீனம் கொடுத்தாள். பிரம்மா கமண்டலம் வழங்கினார். குபேரன் பிச்சை பாத்திரம் கொடுத்தான். பார்வதி தேவி அதில் முதல் பிச்சை ஈந்தாள். இப்படி பலர் பல பரிசுக ள் நல்கி மகிழ்ந்தனர். பெருமான் திருவருளையும் வேண்டினர்.

இவ்வாறு நிகரற்ற பேரும் புகழும் பெற்ற அந்த ணச் சிறுவன் தனது வைதீக கர்மாக்களைத் தவறாது செய்து வந்தான். நர்மதா நதியின் வடகரையில் பலிச்சக்கரவர்த்தி ஒரு பெரிய யாகசாலை அமைத்தான். அந்த வேள்விக்கு மகரிஷிகளை எல்லாம் வரவழைத்திருந்தான். வாமனர் தன் பெற்றோரிடம் அந்த யாக சாலைக்குத் தான் போக வேண்டும் என்று அனுமதி கேட்டார். அவர்கள் அனுமதி தந்து ஆசி கூறி வழியனுப்பி வைத்தனர்.

யாகசாலைக்குள் இவர் நுழைந்ததும் இவருடைய அரும்பெரும் ஜோதியால் மற்ற இடம் எல்லாம் ஒளிமயமாகி விட்டது. இவர் என்ன கதிரவனோ, அக்கினி பகவானோ அல்லது சனக் குமாரனோ என்று அநேகரும் சந்தேகி த்தனர்.

அவரை பலிச்சக்கரவர்த்தி அன்புருக வரவே ற்றான். அர்க்கியம் கொடுத்து அவர் திருப்பாத கமலங்களைக் கழுவி அந்நீரைத் தன் தலையி ல் தெளித்துக் கொண்டான். பின்னர் அகமும், முகமும் மலர வாமனரிடம் பலி பேசினான்.

சுவாமி! தாங்கள் இந்த யாகசாலைக்கு எழுந்த ருளியது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் பாத துளிகள் பட்டதன் காரணமாக என் முன்னோர்கள் நல்ல பதவியை பெற்று விட்டார்கள் என்றே நினைக்கிறேன். தங்கள் பாதம் கழுவிய தீர்த்தத்தைத் தெளித்து நான் என் பாவங்களைப் போக்கிக் கொண்டேன்.

தங்களுக்கு ஏதாவது தேவை என்றால் அதை அடியேன் தரசித்தமாக இருக்கிறேன். தாங்கள் தம் தேவைகளைப் பெற்று மேலும் என்னை கிருதார்த்தன் ஆக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

பலியின் பிரார்த்தனையைக் கேட்ட பகவான், அசுரேந்திரா! நீ கூறிய வார்த்தைகளை கேட்டு நான் உண்மையில் புளகாங்கிதம் அடைகிறே ன். நீயோ பரம பாகவதனான பிரகலாதன் வம்சத்தில் பிறந்தவன். உனக்குக் கிடைக்காத சம்பத்தே இல்லை என்று சொல்லுவேன்.

மேலும் நீயோ மகரிஷிகளை மதித்து அவர்கள் வார்த்தைகளைத் தட்டாமல் கேட்டு அவர்கள் வழி நடக்கிறாய். அந்தணர்களுக்கு ஆவன செய்து ஆதரிக்கிறாய்.

இப்படிப்பட்ட உனக்கு என்ன குறை இருக்கப் போகிறது? அதுமட்டுமா, உன் தந்தையோ தேவதைகள் அந்தணர்களாக வந்து அவனு டை ய ஆயுளை யாசிக்கிறார்கள் என்று அறிந்தும் தெரிந்தும் யாசித்ததை அவன் கொடுக்கவில்லையா? அத்தகைய குலத்தில் உதித்த நீ யாசிப்பவர்கள் எது கேட்டாலும் இல்லை என்னாது கொடுக்கக் கூடியவன் என்பதை நான் அறிவேன் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, பின்னால் வாக்கு மாறுவது என்பது பெருத்த அவமானம் என்பதை நீ அறியாதவன் அல்ல. நான் உன்னிடம் விரும்புவது எல்லாம் எனது கால் அடியினால் மூன்றடி நிலமே. அதற்கு மேலே எனக்கு எதுவும் தேவை இல்லை. ஆக எனக்குத் தேவையான அந்த மூன்றடி நிலத்தை பெற்றுப் போகவே வந்திருக்கிறேன் என்றார்.

சுவாமி! என்னிடம் யாரெல்லாமோ எதை எதையோ கேட்டுப் பெற்றுச் செல்கிறார்கள். தாங்க ளோ மிகவும் இளைய வயதினராக திகழ்கிறீர். அப்படிப்பட்ட தாங்கள் தங்கள் காலடிகளால் மூன்றே மூன்று அடிகளே கேட்பதாக நினைக் கிறேன்.

பிரம்மச்சர்யத்தைக் கடைபிடிக்கும் உங்களுக் குப் பகவானைத் தியானிக்கச் சௌகர்யமாக நிறைய மலர்கள் பூத்து குலுங்கும் பூந்தோட்டத்துடன் பெரிய நிலத்தையே தருகிறேன், என்றான் மகாபலிச்சக்கரவர்த்தி.

அசுர சிரேஷ்டனே! நீ கூறிய வார்த்தைகளால் நான் மிகவும் திருப்தி பெற்றேன். ஆனால் எனக்கு நான் கேட்கும் மூன்றடி நிலம் மட்டும் போதும், வேறெதும் தேவையில்லை என்றார். பலிச்சக்கரவர்த்தி அவரை வணங்கி தங்கள் விருப்பப்படியே தருகிறேன் என்று சொல்லி விட்டு வாமனருக்கு தானம் செய்வதற்கு நீர் நிறைந்திருக்கும் கிண்டியை கையில் எடுத்தான்.

அந்நேரம் இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சுக்கிராச்சாரியார், பலியைத் தனியே அழைத்தார். பலியே! இதோ இங்கே குள்ளமான உருவில் வந்து நிற்பது வேறு யாருமில்லை, ஸ்ரீமந்நாராயணனே.

அவர் தேவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இங்கு வந்திருக்கிறார். எந்த காரியத்தையும் ஆராய்ந்து அவசரப்படா மல் சற்று நிதானமாகவே செய். நீ செய்யப் போகும் காரியத்தால் உனக்கு மட்டும் அல்ல, உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் உன்னை நம்பி இருக்கிற அசுரர்கள் அனைவருக்கும் அழிவு வந்திருக்கிறது என்பதை மறந்து விடாதே.

இப்பொழுதும் ஒன்றுமில்லை. வாக்கு கொடுத்து விட்டோமே, அதை நிறைவேற்ற வேண்டுமே என்ற தயக்கம் வேண்டாம். ஒரு சில இக்கட்டான நிலையில் வாக்குத் தவறுவதை சாஸ்திரங்கள் சம்மதிக்கின்றன.

அதுமட்டுமல்ல ஒருவர் பிரம்மச்சர்ய விரதம் பூண்டு பிறர் பொருளுக்கு ஆசைப்படும் போது நீ பொய் பேசுவது தவறில்லை. ஆகவே உன் வாக்குறுதியை மறந்து விடுவாயாக என்று விளக்கமாக குரு சுக்கிராச்சாரியார் எடுத்து உரைத்தார்.

ஆச்சாரியாரே! நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. இருந்தாலும் சற்று சிந்தித்துப் பாருங்கள். என் குலம் எப்படிப்பட்டது? நான் வாக்குத் தவறினால் பரமபாகவதனான என் பாட்டன் பிரகலாதனுக்கு அல்லவா இழிவு. இந்த தூர்த்தன் பிரகலாத வம்சத்தில் பிறந்தவன், வாக்குத் தவறிவிட்டான் என்று அவர் பெயரை நினைத்துத்தானே உலகம் பழிக்கும்.

கொடுத்த வாக்கைப் பூர்த்தி செய்வதைக் காட்டிலும் சிறந்த தர்மம் வேறு உண்டோ? தானம் செய்வதினால் நான் அனைத்தையும் இழந்தாலும் சரி, ஓர் அந்தணனுக்கு அளித்த பிராமணத்தை ஒரு போதும் மீற மாட்டேன். வந்திருப்பது பரந்தாமனே என்று சொன்னீர்கள். பகவானே வந்து யாசிக்கிறான் என்றால் என்னுடைய குலத்துக்கு ஏற்பட்ட பெருமையாகவே நினைக்கிறேன்.

அவருக்குத் தானம் கொடுப்பதால் வரும் விளைவு எதுவாயினும் நான் ஏற்றுக் கொள்ள சித்தமாகி விட்டேன். தயவுசெய்து என்னை மன்னியுங்கள். தங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்று கருத வேண்டாம். நான் கொடுத்த வாக்குறுதியை மீறப் போவதில்லை! என்றான் மஹாபலி.

அடே மூடா! நான் உனக்கு இப்படி விளக்கமாக கூறியும் என் பேச்சைக் கேட்காத நீ பதவி இழந்து பரிதாபகரமான நிலைக்கு தள்ளப் படுவாய் என்று சாபம் விட்டார் சுக்கிராச்சாரி யார். பலி அந்த நேரத்தில் தன் மனைவியை அழைத்து வாமனருக்கு நீர் வார்த்து கொடுக்க தயார் ஆனான். பிறகு வாமனருடைய திருப்பாத மலர்களைக் கழுவுவதற்கு ஒரு ஆசனத்தில் அமர்த்தினான்.

பலியின் மனைவி விந்தியாவளி நீர் முகர்ந்து கொடுத்தாள். பலி அவருடைய பாதங்களைக் கழுவினான். அந்த நீரைத் தன் சிரசிலும், உடலிலும் தெளித்துக் கொண்டான். அவருக்கு செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்தான். நிலத்தை தானம் செய்யும் பொருட்டு தாரை வார்த்துக் கொடுப்பதற்காக கிண்டிச் செம்பை எடுத்தான்.

அது சமயம் தன் அறிவுரையை ஏற்காமல் பலி தாரை வார்த்துக் கொடுத்து ஏமாந்து விடப் போகிறானே என்று எண்ணிய சுக்கிராச்சாரி யார் வண்டு உருவெடுத்து செம்பினுள் நுழைந்து நீர்த்துவாரத்தை அடைத்துக் கொண்டார்.

செம்பிலிருந்து நீர் வரவில்லை. இதை உணர்ந்த பகவான் அறுகம்புல் ஒன்றினால் துவாரத்தில் குத்தினார். அந்த அறுகம்புல் துவாரத்தை அடைத்துக் கொண்டிருந்த சுக்கிராச்சாரியாரின் கண்களில் ஒன்றைக் குருடாக்கியது. கிண்டிச் செம்பிலிருந்து நீர் வெளி வந்தது. மனைவி நீர் வார்க்க மகாபலி தாரை வார்த்தான்.

அந்தண குலத் திலகமே! உம் காலடி அளவில் மூன்று அடிநிலங்களை உமக்குத் தானம் செய்கிறேன்! என்று தெரிவித்தான். வாமன மூர்த்தியாகிய பகவான் முகம் மலர்ந்தபடி தன் இருக்கையிலிருந்து எழுந்தார். அப்போது அவருடைய உருவம் வானளாவி நின்றது. அவருடைய திருமேனி எங்கும் நீக்கமற நிறைந்து நின்றது. விண்ணும், மண்ணும், திசைகளும், மற்ற உலகங்களும் எழுகடலும் அத்தனையும் அவரிடம் அடங்கி இருந்தன.

இதைக்கண்ட அசுரேந்திரன் பிரமித்து நின்றா ன். இத்துடன் ஸ்ரீஹரியாகிய வாமனரின் ஒரு கையில் சுதர்சன சக்கரம் சுழன்றது. மற்றொரு கையில் சாரங்கம் என்ற வில்லும், இன்னொரு கையில் கௌமோதகி கதையும், வேறொரு கையில் வித்யாதரம் என்ற வாளும் பிடித்து நின்றிருந்தார்.

தேவர்களும், முனிவர்களும் பகவானுடைய திவ்ய தரிசனத்தை கண்டு அவரைத் துதி பாடி வணங்கினார்கள். வானளாவ நின்ற வாமனர் ஒரு காலால் பூமியை அளந்தார். மற்றொரு காலால் வானத்தை அளந்தார்.

ஆயினும் இரண்டாவது அடிக்கு ஆகாயம் போதவில்லை. இந்நிலையில் மூன்றாவது அடி வைக்க இடம் ஏது? என்று வினவினார். மீண்டும் தன் உடலைக் குறுக்கி வாமனராக நின்றார். அசுரேந்திரனே, நீ சகல தர்மங்களையும் அறிந்தவன். நீ இந்நேரம் என்னிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லையே! அதனால் நீ நரகத்திற்குப் போக வேண்டியதாகும் என்பதை நீ அறியாதவன் அல்லன். நான் என் காலால் ஓரடியில் பூமியை அளந்தேன். இரண்டாவது அடியால் விண்ணுலகம் முழுவதும் அளந்தும் இன்னும் என் கால் அடிக்கு இடம் தேவை என்றாகி விட்டது. மூன்றாம் அடிக்கு இடம் இல்லையே.

ஆக நீ அதற்காக என்ன தரப் போகிறாய்? மகாப்பிரபோ! இந்தப் மஹாபலிச்சக்கரவர்த்தியை நீங்கள் அறியாதவர் அல்ல. எப்போதும் நான் கொடுத்த வாக்குறுதியை மீற மாட்டேன். மூன்றாம் அடிக்குத் தங்களுக்கு இடம் வேண்டும். அவ்வளவு தானே! இதோ என் சிரசின் மீது தாங்கள் காலடியை வைக்கலாம். அதனால் ஏற்படும் எந்த விளைவுகளையும் நான் ஏற்றுக்கொள்ள சித்தமாகவே இருக்கிறேன். இச்சமயம் வருண பாசத்தால் மஹாபலி கட்டுப்பட்டான். அங்கே பிரகலாதன் வந்தான். வாமனரை வணங்கினான்.

அவனை சாஷ்டாங்கமாக பலியால் விழுந்து வணங்க முடியவில்லை. வருணபாசத்தினால் கட்டப்பட்டது தான் காரணம். ஆகவே தன் தலையைத் தாழ்த்தி தன் பாட்டனாகிய பிரகலாதனுக்கு அஞ்சலி செலுத்தினான். பிரகலாதன் தன் கரங்களை உயர்த்திப் பேரன் பலிக்கு ஆசி கூறிவிட்டு மகாவிஷ்ணுவிடம், பிரபோ மஹா பலிக்கு இந்திரபதவியை அளித்தவரும் தாங்களே, இப்போது அதைப் பரித்துக் கொண்டதும் தாங்களே. இவை அனைத்தும் உங்கள் திருவிளையாடல்கள். அனைத்தும் நன்மைக்கே என்பது எனது கொள்கை. மகாபலியின் மனைவியும் அறிவிலிகளாக இருந்தத் தங்களைக் காத்தருள வேண்டினாள்.

பிரம்மாவும், தயாநிதியே! தாங்கள் கருணை கூர்ந்து பலியின் விஷயத்தில் அவனுக்குப் பரிபூரண அனுக்கிரகத்தைத் தந்தருள பிரார்த்திக்கிறேன். அப்போது பகவான் திருவாய் மலர்ந்து பிரம்மதேவனே! நான் யாருக்கு என் அருளை அளிக்க விரும்புகிறேனோ அவனுடைய செல்வத்தைப் பறிப்பேன். அப்படிச் செய்யாவிட்டால் அவன் செருக்குற்று என்னை சிந்திக்காமல் போய்விடக் கூடும்.

எனினும் என்னைச் சரணடைந்தவர்களை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். இங்கே பலி தான் செய்யப்போகும் தான தர்மத்தால் தனக்குப் பதவி பறிபோகும், துன்பம் வரும் என்று அவனுடைய குலகுரு சுக்கிராச்சாரியார் சொல்லியும், தடுத்து நிறுத்த முயன்றும் பலி தன் உறுதியைக் கைவிடவில்லை.

எனது மாயைகளைத் தேவர்களும், முனிவர்க ளும்கூடத் தாண்டுவது அரிது. ஆக அவர்களாலும் அடைய முடியாத சிரேயஸ்ஸை பலி அடைந்து விட்டான். அடுத்து வரும் சாவர்ணி மனுவந்திரத்திலே பலியே இந்திரனாக விளங்கப் போகிறான். அதுவரை விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்ட சுதல லோகத்தில் சகல சம்பத்துகளும் பெற்று பலி அங்கு இருந்து வரட்டும் என்றார்.

பிறகு பகவான் பிரகலாதனை அழைத்து, அப்பா பாகவத சிரோன்மணியாகிய நீயும் சுதல லோகத்திற்கு போகக்கடவாய். நான் அங்கு உங்களுக்கு துவார பாலகராக இருந்து ரட்சிப்பேன் என்று அனுக்கிரகித்தார். உடனே பிரகலாதன், பிரபோதங்களால் அசுரகுலமே பெருமையடைந்தோம். அவர்களின் சார்பாக அடியேன் தங்களை நன்றியுடன் வணங்குகிறேன் என்றான்.

அடுத்து சுக்கிராச்சாரியாரை அழைத்த பகவான், ஆச்சாரியாரே! யாகத்தைப் பூர்த்தி செய்யாதவன் பாவத்தை அடைவான் என்பதை நீர் அறிவீர். ஆகவே பலியின் யாகத்தைப் பூர்த்தி செய்யவும் என ஆணையிட்டார். பின்னர் வருண பாசத்தால் கட்டுண்டிருந்த பலியை விடுவித்தார். பகவானுடைய ஆணைப்படி சுக்கிராச்சாரியாரும் யாகத்தைப் பூர்த்தி செய்தார். யாகம் நிறைவேறியதும் பலி எல்லோருக்கும் அஞ்சலி செய்தான். அனைவரும் அவனைப் பாராட்டினார்கள். அடுத்து பிரகலாதனோடும் தன் உற்றார் உறவினரோடும் சுதல லோகத்திற்குப் பலி போனான்.

வாமன மூர்த்தியான பகவான் பலியிடம் இருந்து பெற்ற மூவுலகங்களையும் இந்திரனிடம் ஒப்புக்கொடுத்து தேவானுக்கிரகம் செய்த வராய் அந்தர்த்தானமானார்.

திருமாலின் பத்து அவதாரங்கள்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord perumal
  • Recent Posts

    மகாளய பித்ரு பக்ஷ கேள்வி பதில்கள் | Mahalaya Patcham Questions

    மகாளய பித்ரு பக்ஷ கேள்வி பதில்கள் | Mahalaya Patcham Questions 18/09/24 - 03/10/24 - தர்ம சாஸ்த்ரம்… Read More

    4 hours ago

    முன்னோர்களின் ஆசியை பெற மகாளய அமாவாசை | மகாளய அமாவாசை சிறப்புகள்

    முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை | Mahalaya Amavasya 🌚 புரட்டாசி மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு… Read More

    1 day ago

    மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha

    மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha information *மஹாளய பட்சம்* (30.9.2023… Read More

    1 day ago

    Srardham procedure in tamil | சிராத்தம் விதிமுறைகள்

    Srardham procedure in tamil சிராத்தம் விதிமுறைகள் (Srardham procedure) பரலோகம் பித்ருலோகம்  பித்ரு கர்மா நாம் ஒரு விஷயத்தை… Read More

    1 day ago

    ஞான சரஸ்வதி கோவில் ஆதிலாபாத் தெலுங்கானா | basara saraswathi temple adilabad

    ஞான சரஸ்வதி கோவில் ஆதிலாபாத் தெலுங்கானா பஸாரா ஞான சரஸ்வதி கோயில் - Basara Saraswathi temple பஸாரா ஞான… Read More

    5 days ago

    சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil

    சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil சந்திரனுக்குக் கிடைத்த சாபம்! ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்தபோது,… Read More

    7 days ago