நாட்கள் கடந்தன. கிருஷ்ணருக்கு ஒரு வயதானது. இந்த நிகழ்வை யசோதா மிக சிறப்பாகக் கொண்டாடினாள். வாத்தியங்கள் முழங்கின. ஆயர்குல மக்கள் ஒருவர் விடாமல் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். பிராமணர்கள் வேத பாராயணம் செய்தனர். யசோதா மகனை அன்போடு நீராட்டினாள். வேத மந்திரங்கள் ஒலித்துக் கொண்டிருந்த போது, கிருஷ்ணர் அப்படியே கண்ணயர்ந்தார்.
யசோதை குழந்தையை மடியில் வைத்திருந் தாள். குழந்தை உறங்கி விட்டதால், ஒருபட்டு மெத்தையை தரையில் விரித்து ஒரு வண்டியி ன் கீழே நிழலில் குழந்தையை படுக்க வைத்தாள். பின்னர், மற்ற வேலைகளைக் கவனிக்க வீட்டுக்குள் போய்விட்டாள். சற்று நேரத்தில் கிருஷ்ணர் விழித்து விட்டார். சாதாரண குழந்தைக்குரிய இயல்புடன் அழ ஆரம்பித்தார். கால்களை உதைத்தார்.
அவை பார்ப்பதற்கு பிஞ்சுக்கால்கள், ஆனால், அதன் சக்தி தாளாமல், அருகில் இருந்த வண்டியே நொறுங்கி விட்டது. சப்தம் கேட்டு வெளியே வந்த யசோதையும் மற்ற ஆயர்குல பெண்களும் இது என்ன விந்தை என்று மூக்கின் மீது விரலை வைத்தனர்.
யசோதைக்கு பயம் வந்துவிட்டது. வேதம் ஓத வந்த அந்தணர்களிடம், ஐயன்மீர், இந்தக் குழந்தை பிறந்தது முதல் இப்படித்தான் அற்புதமான செயல்களைச் செய்கிறான். ஓர் அரக்கியையே கொன்றான். இப்போது, உங்கள் கண்முன்னால் வண்டியை நொறுக்கி விட்டான். எனவே குழந்தையின் மீது எதுவும் அண்டாமல் மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்ய வேண்டும் என வேண்டினாள். அவ்வாறே வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓதினர். அவர்களு க்கு நிறைய பரிசுகளை அள்ளிக் கொடுத்தார் நந்தகோபர். பூதனாவை கிருஷ்ணர் கொன்று விட்டார் என்பதையறிந்து கம்சன்,த்ருணாவர்த்தன் என்ற கொடிய அரக்கனை அனுப்பினா ன். இவன் பறக்கும் வல்லமையுள்ளவன்.
இவன் வேகமாக மூச்சுவிட்டால் சூறாவளியாக மாறிவிடும். அந்த கொடுமைக்காரன் கோகுலத்துக்குள் புகுந்தானோ இல்லையோ, கோகுலத்தில் பெரும் புயல் வீசியது. எங்கும் புழுதி மண்டலம். ஒருவருக்கொருவர் முகத்தையே பார்க்க முடிய வில்லை. இதைப் பயன்படுத்தி, கிருஷ்ணரை தூக்கிக் கொண்டு உயரே பற ந்து விட்டான் அசுரன். யசோதை கிருஷ்ணரை காணாமல் அழுதாள். ஐயோ, என் மகன் புழுதி புயலில் சிக்கிக் கொண்டானோ, அவன் எங்கே?.. என அரற்றினாள்.
த்ருணாவர்த்தன் உயரே சென்று குழந்தையை தூக்கி வீச எத்தனித்தான். குழந்தை அவனை விட்டால் தானே, குழந்தையின் கைகள் விஸ்தாரமாக விரிந்தன. வர்த்தனின் கழுத்து அதன் பிடியில் சிக்கியது. அப்படியே கழுத்தை இறுக்கிய குழந்தை அவனை வதம் செய்தது. அவன் கீழே விழுந்தான். புயல் அடங்கியது. கீழே விழுந்து கிடந்த அசுரனை கோகுலவாசிகள் பார்த்தனர்.
கிருஷ்ணர் அவன் உடல் மீது விளையாடிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இது தெய்வ குழந்தையாக இருக்குமோ என எண்ணினர். இதை நிரூபிக் கும் வகையில், அடுத்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நாள் கிருஷ்ணர் மணலை அள்ளி தின்று கொண்டிருந்தார்.
யசோதை அவரைக் கண்டித்தாள். கண்ணா என்னிடம் நீ ஓடோடி வந்தால், நான் பால் தரு வேனே, ஏன் மண்ணைத் தின்கிறாய்? என்று செல்லமாய் கண்டித்தாள். அன்று கிருஷ்ணர் அவளது கண்களுக்கு பூரண லட்சணமாய் தெரிந்தார். அதுகண்டு பூரித்த அவளது மார்பு களில் பால் நிறைந்தது. அதை அன்போடு ஊட்ட முயன்றாள். கிருஷ்ணர் வாய் திறக்க மறுத்தார்.
அவரது வாயை கட்டயாப்படுத்தி திறந்தாளோ இல்லையோ, வாய்க்குள் அண்ட சராசரமும் சுழன்று கொண்டிருந்தது. நந்தகோபரிடம், இந்த அதிசய நிகழ்ச்சியை எடுத்துச் சொன் னாள் யசோதை. நந்தருக்கும் குழந்தையைப் பற்றிய கவலை அதிகரித்தது. குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்தால் என்ன என்று தோன் றியது. ஜாதகம் கணிப்பதில் மிகச்சிறந்த ஞானியாக திகழ்ந்தவர் கர்கமுனிவர். அவரை வரவழைத்து உபசரித்து பின்பு நந்தகோபர், கிருஷ்ணரின் ஜாதகத்தை மட்டு மின்றி, ரோ கிணியின் மகனான பலராமனின் ஜாதகத்தை யும் கொடுத்தார்.
ஜாதகத்தைப் பார்த்த முனிவர் அதிர்ந்தே போய்விட்டார். நந்தகோபரும், யசோதையும் இதுவரை கிருஷ்ணன் தங்கள் பிள்ளை தான் என எண்ணி கொண்டிருந்தனர். தனக்கொரு பெண் குழந்தை பிறந்ததும், அது கூடையில் சுமக்கப்பட்டு கம்சனின் மாளிகைக்கு சென்ற தும், சிறையில் பிறந்த கிருஷ்ணன் தன்னரு கே படுக்க வைக்கப்பட்டதையும் யசோதையும் அறியமாட்டாள்.
தான் பெற்ற மகன் என்றே அவள் எண்ணியி ருந்தாள். ஆனால், கிருஷ்ணர் தேவகியின் வயிற்றில் பிறந்தவர் என்பதை உணர்ந்து விட்டார் கர்கமுனிவர் பலராமனும் தேவகியின் வயிற்றில் கருவாகி,ரோகிணியின் கர்ப்பத்தி ற்கு மாற்றப்பட்டவன் என்பது தெரிந்தது. எப்படியாயினும் குழந்தைகளுக்கு தந்தை வாசுதேவர் என்பதை புரிந்து கொண்டு விட்டார் கர்கமுனிவர். இதை நந்தகோபரிடம் தெரிவித்தும் விட்டார்.
நந்தகோபரே, இக்குழந்தை சாதாரண பிறவி யல்ல. அந்த விஷ்ணுவின் அம்சம். ஒரு பிறவி யில் சிவப்பாக இன்னொரு பிறவியில் மஞ்ச ளாகவும், இப்போது கருப்பாகவும் பிறந்திருக் கிறார். மனிதர்களுக்குள் நிறபேதம் இருக்கக் கூடாது. என்பது அவரது எண்ணமாக இருக்க லாம். ஆனால், அவர் தேவகியின் வயிற்றில் பிறந்தவர் என்று ஜாதகம் சொல்கிறது. உம் மனைவி யசோதைக்கு ஒரு பெண் குழந்தை தான் பிறந்திருக்கிறது. அவள் துர்க்கை என்னும் தெய்வமாக மாறிவிட்டாள். பெற்ற பிள்ளையே தன்னுடையது இல்லை என்பதும், தனக்கு பிறந்த குழந்தை தெய்வமாகி விட்டது என்பதையும் அறிந்தபிறகும் எந்த சலனத்தை யும் அவர் காட்டவில்லை.
மாறாக விஷ்ணுவே, தன் மகனாய் வளர்வதில் மிகுந்த மகிழ்ச்சியைத் தான் அடைந்தார். பலராமரும், கிருஷ்ணரும் இப்போது தங்கள் பால்ய லீலைகளைத் துவங்கி விட்டார்கள். கோபியரின் வீடுகளுக்குள் நுழைவார்கள். பசுக்கள் பால் பொங்கும் மடுவுடன் காட்சி தருவதை பார்த்து மகிழ்வார்கள. கன்றுகளை யாருக்கும் தெரியாமல் அவிழ்த்து விடுவார்கள். அவை மகிழ்ச்சியுடன் ஓடிச்சென்று தாயில் மடியில் சுரந்து நிறைந்திருக்கும் பாலைக் குடிக்கும். அதுகண்டு கைகொட்டி ஆனந்தமடைவார்கள்.
பின்பு, கோபியரின் வீட்டுக்குள் புகுந்து வெண்ணெயைத் திருடுவார்கள். அதை குரங்குகளுக்கு கொடுப்பார்கள்.கோபியர்கள் அவர்களின் புத்திசாலித்தனத்தை ரசிப்பார்கள் அதே நேரம், திருடுவது தவறு என கண்டிப்பார்கள். யசோதையிடம் ஒருத்தி சென்றாள். அம்மா யசோதா, உன்மகன் என் வீட்டில் வெண்ணெய் திருட வருகிறான் என்று பானையை இருளில் ஒளித்து வைத்தேன். அவன் என்னடா வென்றால், தன் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளின் ஒளியிலேயே அந்தப் பானையை கண்டுபிடித்து விடுகிறான். பானை காலியாகி விட்டது, என்றாள். சரி… சரி… அவன் கழுத்தில் அணிந்திருக்கும் நகையை இனி கழற்றி விடுகிறேன், என்றவள் கிருஷ்ணரைக் கண்டிப்பதற்காக கையை ஓங்கினாள். பால் வழியும் முகத்துடன் அந்த சிங்காரக்கண்ணன், அவளை ஒரு அன்பு பார்வை பார்க்கவே, கை தானகவே கீழே வந்து விட்டது. வசுக்களில் ஒருவரான துரோணர் (இவர் மகாபாரத துரோணர் அல்ல) என்பவர் தரா என்ற தன் மனைவியுடன் வசித்தார். அவர் களிடம் பிரம்மா, நீங்கள் இருவரும் உலகத்தை விருத்தி செய்யனும் என உத்தரவிட்டார்.
அப்போது அவர்கள், தந்தையே, நீங்கள் கூறும் உத்தரவின்படி நடக்கிறோம். எங்களுக்கு நீங்கள் ஒரு வரம் தரவேண்டும். மகா விஷ்ணு வை நாங்கள் நேசிப்பது தங்களுக்கும் தெரிந்த ஒன்றுதான். அவர் குழந்தையாக இருந்தால் எப்படி இருப்பார்? என்னென்ன சேஷ்டைகள் செய்வார் என்பதை நாங்கள் கண்குளிரக் காண வேணடும். பிற்காலத்தில், அவரது இந்த சேஷ்டைகளையெல்லாம் படிப்போரும், கேட்போரும் பாவ விமோசனம் பெற வேண்டும், என்றார்.
அந்தப் பிறவியில் அப்படி நடக்காதென்றும், மகாவிஷ்ணு பூலோகத்தில் நடக்கும் அநியா ங்களை தடுத்து நிறுத்த, மானிட ரூபத்தில் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் போது, அந்தப் பாக்கியம் உங்களுக்கு கிடைக்குமென்றும் சொன்னார் பிரம்மா. அதன்படி இப்பிறவியில் அந்த தம்பதியர் நந்தகோபர் – யசோதையாக கோகுலத்தில் அவதரிக்க, அவர்களிடத்தில் கிருஷ்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்து பால்ய பருவத்தை கழிக்க வந்திருக்கிறார்.
யசோதையின் வீட்டில் பல வேலைக்காரிகள் உண்டு. அதில் வீட்டு வேலை செய்பவளுக்கு, அன்று கடுமையான வேலை இருந்தது. எனவே, வெண்ணெய் கடையும் பொறுப்பை யசோதை எடுத்துக் கொண்டாள். அவள் மன மெல்லாம் கிருஷ்ணன் நிறைந்திருந்தான். கிருஷ்ணன் செய்யும் சேஷ்டைகளை பாடிய படியே அவனது நினைவில் மூழ்கிப்போனாள்.
அப்போது, அவளையறியாமல் அவளது மார் பில் பால் சுரந்தது. அந்நேரத்தில் கிருஷ்ணர் வந்தார். தாயிடம், வெண்ணெய் கடைவதை நிறுத்தி விட்டு, தனக்கு பாலூட்ட வேண்டுமெ ன்ற தன் ஆசையை குறிப்பால் தெரிவித்தார். இதை உணர்ந்த யசோதையும் கிருஷ்ணருக்கு பால் புகட்டினார்.
அந்த நேரத்தில் அவள் அடுப்பில் வைத்திருந்த பால் கொதித்து வழிய ஆரம்பிக்கவே, குழந்தையை ஒதுக்கி விட்டு அடுப்பை நோக்கி ஓடினாள் யசோதா. எனவே, கிருஷ்ணருக்கு கோபம் வந்துவிட்டது. அவரது முகம் கோவைப் பழமாகச் சிவந்து விட்டது. ஒரு கல்லை எடுத் தார். எறிந்தார்; அம்மா விட்டுச் சென்றிருந்த வெண்ணெய் தாழி உடைந்தது. சிந்திய வெண்ணெய் ஒரு கை நிறைய அள்ளிக் கொண்டார்.
ஒரு தனியிடத்திற்கு போனார். தலைகுப்புற கவிழ்த்தப்பட்டிருந்த ஒரு உரலில் அமர்ந்து வெண்ணெய்த் தின்ன ஆரம்பித்து விட்டார். பசி பொறுக்க மாட்டார் போலும் நம் சின்னக் கண்ணன். பகிர்ந்துண்ணும் குணம் அவரை விடுமா. அங்கே வந்த குரங்குகளுக்கும் கொடுத்தார். யசோதா பால் பானையை இறக்கி வைத்து விட்டு திரும்பினான். பானை உடைந் திருந்தது. கிருஷ்ணன் தான் இதைச் செய்திருப்பான் என்பதை அவள் அறிவாள்!
அந்தப் பொல்லாதவனைத் தேடினாள். தூரத்தில் உரல் மீது அமர்ந்திருந்தான். அவனைப் பிடிக்க ஓடினாள். அவன் அவளுக்கு போக்கு காட்டிவிட்டு ஆங்காங்கே மறைந்து கொண்டான். அவள் மீது கொண்ட அன்பு காரணமாக அவனே அவளது பிடியில் சிக்கிக் கொண்டான்.
மாயனே, வசமாக சிக்கினாயா?,
வெண்ணெயை எவ்வளவு சிரமப்பட்டு கடைந்தேன். நீயோ, அதை எவ்வளவு எளிதாக உடைத்து விட்டாய். உன்னைக் கட்டிப்போட்டால் தான் சரி வருவாய் போலும், என்றவள் கயிறை எடுத்தாள். அவனை இழுத்து வந்து கட்டிப் போட முயற்சித்தாள். கயிறு போதவில்லை. இன்னும் சில கயிறுகளை எடுத்து வந்து சேர்த்து கட்டினாள். என்ன அதிசயம், எப்படி கட்டினாலும் கயிறின் நீளம் கூடவே இல்லை. அவள் சோர்ந்து விட்டாள். இப்போதும் கிருஷ்ணர் அவள் மீது கிருபை வைத்தார். அவளது அன்புக்கு கட்டுப் பட்டார். கயிறு நீளமானது. யசோதைக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும், அந்தக் குறும்புக் காரரை கட்டிப்போட்டாள். வேலையைப் பார்க்க போய் விட்டாள். அங்கே இரண்டு அர்ஜுன மரங்கள் இருந்தன. கண்ணனை வணங்கி அவை பேச ஆரம்பித்தன.
பரந்தாமா, நாங்கள் நிதிகளுக்கு அதிபதியான குபேரனின் மக்களான நளகூவரன், மணிக்ரீவன். எங்களை நாரத மகரிஷி சபித்து விட்டார். எங்களின் இந்த ரூபத்தைக் மாற்றி சுயரூபம் தர வேண்டும், என வேண்டிக்கொண் டன அந்த மரங்கள். உலகத்து செல்வம் அனைத்தையும் குவித்து வைத்திருக்கும் குபேரனின் பிள்ளைகள் செய்த அட்டகாசம் கொஞ்ச நஞ்ச மல்ல .
பணமுள்ளவனிடம் மூன்று பழக்கங்கள் பிரதா னமாக இருக்கும். மது, மாது, சூது ஆகியவையே அவை. இதில், முதல் இரண்டிலும் ஊறிக் கிடந்தார்கள் கூவர க்ரீவர்கள். ஒருமுறை, பல பெண்களுடன் ஒரு குளத்தில் ஜலக்ரீடையில் ஆழ்ந்திருந்தனர். அந்தப் பெண்களும் ஆடை கலைந்து போதையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த நாரதரை மதிக்கவில்லை. இதை கண்ட நாரதர், இருவரையும் அர்ஜுன மரமாகும் படி சபித்து விட்டார்.
மேலும் இருவரும் தேவர்கள் என்பதால், அவர் களுக்கு விஷ்ணுவின் தரிசனம் மூலம் விமோ சனம் கிடைக்க வேண்டும் என்பதே நாரதரின் விருப்பம். அவர்களை மரமாக மாறும்படி சபித்துவிட்டார். பகவான் நாராயணன், கிருஷ் ணாவதாரம் எடுத்து பூமிக்கு வரும்போது தான், உங்களுக்கு சுயரூபம் கிடைக்கும் என சொல்லி விட்டார்.
கிருஷ்ணர் உரலை இழுத்துக் கொண்டு நெருங்கி நின்ற மரங்களுக்கிடையே சென்றார். அவரது ஸ்பரிசம் பட்டதோ இல்லையோ, அந்த தேவர்கள் உயிர் பெற்று பகவானை வணங்கி, இனி தவறு செய்வதில்லை என உறுதியளித்து விடை பெற்றனர். பின்னர் உயிரற்ற அந்த மரங்களை இழுத்துச் சாய்த்தார் கிருஷ்ணர். மரங்கள் சாயும் சப்தம் கேட்டு நந்தகோபரும் மற்றவர்களும் ஓடி வந்தனர்.
குழந்தை காயமின்றி தப்பியதைப் பார்த்து ஆனந்தம் கொண்டனர். இந்த அதிசயம் நிகழ்வுகளும், கிருஷ்ணர் அதில் இருந்து தப்பித்து வருவதும் நந்தகோபரின் சகோதர ரான உபநந்தருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி யது. அவர் கோபாலர்களின் சபைக்கூட்டத்தை கூட்டினார்.
கோபாலர்களே ! கிருஷ்ணன் அரக்கர்களிட மிருந்து பலமுறை தப்பிவிட்டான். ஆனால், எப்போதுமே இப்படி தப்பமுடியும் என சொல்ல முடியாது. நம் குழந்தைகளுக்கு பலமுறை ஆபத்து வந்து விட்டது. இனியும், நாம் கோகுலத்தில் வசிப்பது உசிதமல்ல. மனிதர்களுக்கு இறைவன் அவ்வப்போது சில எச்சரிக்கைக ளைத் தருவான். அதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப நம் செயல்களை மாற்றி கொள்ள வேண்டும். எனவே, நாம் யமுனை நதிக்கரை யிலுள்ள விருந்தாவனத்திற்கு சென்று விடுவோம். அங்கு கோவர்த்தனம் என்ற மலை இருக்கிறது. அந்த மலையில் நம் பசுக்களுக்கு தேவையான புல் செழித்துக் கிடக்கிறது. புறப்படுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுங்கள் என்றார். உபநந்தரின் கருத்தை மக்கள் ஏற்ற னர்.அவர்கள் விருந்தாவனத்தை அடைந்தனர்.
குழந்தைகள் கிருஷ்ணருக்கும், பலராமருக்கும் மாடுகளை மேய்க்கும் பயிற்சி அளிக்கப்பட் டது. கோபாலர் இல்லப் பிள்ளைகளுக்கு மாடு மேய்க்க கற்றுக் கொடுப்பது தான் தலையாய பணி. தொழிலில் எதுவுமே கேவலமல்ல. கோபாலர்கள் வசித்த கோகுலம், விருந்தாவனம் போல் செழிப்பான பகுதியை பூமி இதுவரை பார்த்ததில்லை. கன்றுகளுக்கு போக எஞ்சிய பாலும், நெய்யும், வெண்ணெயுமே அவர்களி ன் வாழக்கைத் தரத்தை உயர்வாக வைத்திரு ந்தது.
மாடு மேய்க்கும் சிறுவர்களுக்கு கல்வியறிவு இல்லை. ஆனால், என்ன ஆச்சரியம். ஒவ்வொ ருவர் வீட்டிலும் செல்வம் கொட்டிக் கிடந்தது. சிறுவர்களெல்லாம், ஏராளமான நகைகளை அணிந்திருப்பார்கள். அவற்றை அணிந்தபடி தான் மேய்ச்சல் நிலங்களுக்கும் செல்வார்கள். கிருஷ்ணரும், பலராமரும் மாடுகளை ஓட்டிக் கொண்டு கோவர்த்தன மலைக்குச் செல்வார்கள்.
இருவரும் புல்லாங்குழல் இசைத்தபடி இருப்பார்கள். மாடுகளும் மயங்கும், மேய்க்கச் சென்ற மற்ற சிறுவர்களும் அந்த இசையில் மயங்கிக் கிடப்பார்கள்.
ஒருமுறைகம்சனால் அனுபப்பட்ட வத்ஸாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான்.
அவன் கன்று குட்டியாக உருமாறி, கிருஷ்ணர் மேய்த்த கன்றுகளுடன் கலந்து நின்றான். கிருஷ்ணர் அதை அடையாளம் கண்டு கொண்டார். அதன்காலைப் பிடித்து தூக்கி மரத்தில் அடித்தார். வத்ஸாசுரன் மடிந்தான். அவனது சுயவடிவைக் கண்டு அனைவரும் அஞ்சினர். இன்னொரு முறை, ஒரு பெரிய வாத்தின் வடிவில் பகாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான். அதன் அலகுகளை பிளந்து, கிருஷ்ணர் கொன்றார்.
ஒருமுறை, அகாசுரன் என்பவன் விருந்தாவனத்திற்கு வந்தான். அவன் தேவர்களை தன் வலிமையால் மிரட்டுபவன். அவனைக் கண்டு தேவர்களுக்கு அச்சம். அவர்கள் அமிர்தம் பருகி, தங்கள் உயிர் போகாது என்று தெரிந்திருந்தாலும் கூட, பயந்த நிலையில் இருந்தனர். அகாசுரன், பூமியில் கிருஷ்ணர் செய்த செயல்களைப் பார்த்தான்.
கிருஷ்ணனும், அவரது நண்பர்களும் சந்தோ ஷமாக இருப்பது பிடிக்கவில்லை. இவன் பூதனாவின் சகோதரன். அவனுக்கு தன் சகோதரியைக் கொன்ற கிருஷ்ணனைக் கொலை செய்து விட என்ற எண்ணம் ஏற்பட்ட து. அவன் மஹிமா என்னும் யோகவித்தை அறிந்தவன். இந்த வித்தையின் மூலம், ஒருவர் தனது உருவத்தை மிகப்பெரிதாக்கிக் கொள்ள முடியும்.
அகாசுரன் தன் உருவத்தை 12 கிலோ மீட்டர் நீளத்துக்கு பெரிதாக்கி, ஒரு பாம்பின் வடிவெடுத்து
கிருஷ்ணரையும், அவரது நண்பர்களை யும் கொல்ல வந்தான். கிருஷ்ணரும், அவரது தோழர்களும் கன்று மேய்க்கும் இடத்தில் வாயைப் பிளந்தபடி படுத்துக் கொண்டான். கன்று மேய்க்க வந்த சிறுவர்கள், ஒரு சர்ப்பம் வாயைத் திறந்து படுத்திருப்பதைப் பார்த்து விட்டனர். அவர்களில் ஒருவன் சொன்னான்.
இன்னும் சிறிது நேரத்தில் கிருஷ்ணன் இங்கு வருவான். அவன் நம் இனிய நண்பன். அவனால் தான் விருந்தாவனத்தில் உள்ள மக்களெல்லாம் சுகமாக வாழ்ந்து கொண்டிரு க்கிறார்கள். அவனை இந்தப் பாம்பு விழுங்கி விட்டால் அவர்களின் நிலைமை என்னாவது? மேலும், கஷ்ட காலத்தில் நண்பனைக் காப்பா ற்றுபவனே உண்மையான தோழன். இந்த பாம்பின் வாய்க்குள் முதலில் செல்வோம். அது வாயை மூடிக் கொண்டு போய்விடும். கிருஷ்ணன் தப்பி விடுவான் என்றான். எல்லா தோழர்களும் ஆஹா… அருமையான யோசனை என்றனர். வேகமாக ஓடி பாம்பின் வாய்க்குள் சென்றுவிட்டனர்.
பின்னால் வந்த கிருஷ்ணர் இதைப் பார்த்து விட்டார். தன் நண்பர்களுக்காக வருத்தப்பட் டார். அவர் நின்ற நிலையிலேயே அந்த பாம்பைக் கொல்ல முடியும். ஆனால், மனுஷ ஜென்மாவாக பூமிக்கு வந்திருக்கிறாரே, அந்த எல்லையை அவ்வப்போது அவர் கடை பிடிக்கத்தான் செய்வார். தன் நண்பர்கள் சென்ற அதே வாய்க்குள் புகுந்து விட்டார்.
சதிகார பாம்பு வாயை மூடிவிட்டது வானத்து தேவர்களே இதைக்கண்டு கலங்கிவிட்டனர். கிருஷ்ணர் இல்லாவிட்டால் தங்கள் கதி என்னாவது என்று.. வயிற்றுக்குள் இருந்த நண்பர்களும் அலறினர். கிருஷ்ணர் அவர்க ளை தன் கருணைப் பார்வையால் அமைதிப்ப டுத்தினார். பெரிதாக்கிக் கொண்டே இருந்தார்.
அகாசுரப்பாம்புக்கு மூச்சடைத்தது. அதன் வயிறு கிழிந்தது. வலி தாளாமல் வாயைப் பிளந்தது. கிருஷ்ணரும், தோழர்களும் தப்பி வந்து விட்டனர். வயிறு கிழிந்த பாம்பு இறந்த து. கிருஷ்ணரின் பாதம்பட்ட காரணத்தால், அதன் உயிரொளி அவரிடமே கலந்தது. நண்பர்களைக் காத்த கண்ணன், தன்னைக் கொல்ல வந்தவனுக்கும் முக்தி கொடுத்தார்.
ஒரு சமயம் கிருஷ்ணர், யமுனை நதிக்கரை க்கு தனித்துச் சென்றார். அன்று பலராமன் உடன் வரவில்லை. அந்த ஆற்றில் காளிங்கன் என்ற நாகம் வசித்தது. அதற்கு நூறு தலைகள். அந்தக் கொடிய நச்சுப்பாம்பு, தன் விஷத்தை தண்ணீரில் பரப்பியது. கரைகளில் நின்ற பெரும்பாலான மரங்கள் அதன் விஷக் காற்று பட்டு கருகிவிட்டன.
காளிங்களின் இந்தப் போக்கு கிருஷ்ணருக்கு கோபத்தைத் தந்தது. ஆனாலும், கரையில் ஒரே ஒரு மரம் மட்டும் பச்சை பசேலென கிளைகளுடன் உயரமாக நின்றது. இந்த மரத்தில் கிருஷ்ணர் பிற்காலத்தில் ஏறுவார் எனத்தெ ரிந்து, கருடபகவான் அதன் மீது அமிர்தத்தை தெளித்து வைத்திருந்தாராம். அதனால் அது அழியவில்லை. அந்த மரத்தின் மீதேறிய கிருஷ்ணர் தண்ணீரில் குதித்தார்.
தண்ணீர் சிதறியது. அப்போது ஏற்பட்ட நீரலைகள், பல மிக்க காளிங்கனையே அசைத்தது. அது அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. யாரோ ஒரு சிறுவன் தண்ணீரில் குதித்து தன்னை இம்சை செய்ததைக் கண்ட காளிங்க ன், ஆத்திரத்துடன் கிருஷ்ணரை நோக்கி வந்தான். கிருஷ்ணரின் அழகு அவனைக் கவர்ந்து விட்டது. அப்படியே அதிசயித்து பார்த்தான். இருப்பினும், தன் ஆக்ரோஷத்தை காட்டி அவரை வளைத்தான். கிருஷ்ணர் தன் பலத்தைப் பிரயோகித்து விடுபட்டு, அவனது தலையில் ஏறி நர்த்தனமாடினார்.
அப்போது, அவரது பாதங்களின் வலிமையை உணர்ந்தான் காளிங்கன். ஆட்டத்தின் ஒவ்வொரு அசைவும் தாங்க முடியாத வலியைத் தர, ஒவ்வொரு தலையாக உயர்த்தி தாக்குப் பிடித்தான். ஒரு கட்டத்தில் வலி தாளாமல் மரண ஓலமிடத் துவங்கினான். அப்போது, காளிங்கனின் பத்தினியர் அவர் பகவான் நாராயணின் அவதாரம் என்பதைத் தெரிந்து ஓடி வந்தனர்.
இங்கே இப்படி இருக்க, கரையில் நின்ற நண்பர்கள், கிருஷ்ணர் நீரில் குதித்து காளிங்கனால் இழுத்துச் செல்லப்பட்டதை அறிந்து, யசோதையிடம் தகவல் சொன்னார்கள். அவள் பதறியடித்து வந்தாள். பலராமனுக்கு தெரியும், காளிங்கனின் கதை முடிந்து விடுமென்று. எனவே, அவன் பதட்டமின்றி வந்தான். யாசோதை தண்ணீரில் குதிக்க முயன்றாள். என் மகனை இழுத்திச் சென்ற அந்த பாம்பு என்னையும் இழுத்துச் செல்லட்டும், என்றாள். யசோதயை கரையில் நின்ற கோபியர்கள் பிடித்து இழுத்து வந்தனர். அவள் மூர்ச்சையா கி விட்டாள்.
காளிங்கனின் பத்தினிகள், கிருஷ்ணரிடம் சென்றனர்.
மகாபிரபு, உமது சக்தியை அறியாமல் எங்களது கணவர் உம்மிடம் தவறு செய்து விட்டார். அவரை ரட்சிக்க வேண்டும். எங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தர வேண்டும், என்றனர். கிருஷ்ணர் அதை ஏற்றார். காளிங்கன் அவரை தன் தலையில் உயர்த்தி நீர்மட்டத்துக்கு மேலே கொண்டு வந்து விட்டது. கிருஷ்ணர் கரைக்கு வந்த பின்னர் தான் எல்லாருக்கும் உயிர் வந்தது. காளிங்கனின் பத்தினியர் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
காளிங்கன் அவரிடம், முன்வினைப்பட்டது. நான் கொடுத்து வைத்தவன். கடிப்பதும், சீறுவ தும் எனது இயற்கை குணம். அது உம்மால் தரப்பட்டது. அதை உம்மால் தான் மாற்ற முடியும். எனவே நான் சீறியது குறித்து கவலை ப்பட வில்லை. இருப்பினும், மகாபிரபு தண்டிக்க நினைத்தாலும் அதையே ஏற்கிறேன் என்றது பணிவுடன்.
உடனே கிருஷ்ணர், காளிங்கா, நீ உனது மனைவி, குழந்தை மற்ற சகாக்களுடன் கடலு க்கு போய்விடு. யமுனையை அசுத்தப்படுத்தா தே. பசுக்களும், சிறுவர்களும் அதை குடிக்கி றார்கள். அதில் விஷத்தன்மை ஏற்படுவதை அனுமதிக்கமாட்டேன். நீ கருடனுக்கு பயந்தே இங்கு வந்தாய். இப்போது, நான் நடனமாடியா தால் ஏற்பட்ட குறிகள் உன் தலையில் உள்ளன. இதைப் பார்க்கும் கருடன் உன்னை ஏதும் செய்யமாட்டான், என்றார்.
காளிங்கனும் அதை ஏற்று, கடல்நோக்கி போய் விட்டது. கோகுலமக்கள் நிம்மதி பெற்றனர். கிருஷ்ணரின் உறுதியான மனம், வீரம், அலங் காரம் ஆகியவை கோபியர்களை பெரிதும் கவர்ந்திருந்து. பல சிறுமிகள் கிருஷ்ணன் தனக்கும் கணவனாக மாட்டானா என எண்ணத் துவங்கினர். அவரது புல்லாங்குழல் இசையால் ஈர்க்கப்படும் அவர்கள் தங்களை மறந்து நிற்பார்கள்.
சில சமயங்களில் அவர்களது ஆடைகள் விலகியோ, நெகிழ்ந்தோ இருக்கும். ஆனால், இசையிலும் கிருஷ்ணரின் அழகிலும் லயித்து போகும் அவர்கள் இவ்வாறு ஆடை நெகிழ்ந்த து கூட தெரியாமல் அவரையே கண்கொட்டா மல் பார்த்து கொண்டிருப்பார்கள்.
அப்பகுதியில் வசித்த பழங்குடி இனப்பெண்க ளும் கிருஷ்ணரை காதலித்தனர். கிருஷ்ணர் நடந்து செல்லும்போது, அவரது திருவடிப்பட்டு மண் சிவந்து போகும். அந்த சிவந்தமண்னை எடுத்து குழைத்து தங்கள் மார்பிலும், முகத்திலும் பூசிக்கொள்வார்கள் பழங்குடிப் பெண்கள்.
அவர்களுக்கு ஏற்கனவே காதலர்களே கணவர்களோ உண்டு. இருப்பினும் அவர்கள் தொட்டால் தீராத காம இச்சை, கிருஷ்ணரின் காலடிபட்ட மண்ணை எடுத்து மார்பில் தடவி னால் அடங்கிப்போகும். இது தவறில்லையா? பெண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உணர் வுடன் வாழ வேண்டாமா? என கேட்பீர்கள்.
அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உணர்வு டன் தான் வாழ்ந்தார்கள், ஆனாலும், காமம் குறையவில்லை. கிருஷ்ணரின் காலடி பட்டமண் உடலில் பட்டதும் காமஇச்சை தீர்ந்து விடுகிறது. அதாவது, காமம் மிகுந்தவர்கள் பகவான் கிருஷ்ணரின் பாதங்களில் சரணடைந்தால் போதும். காமம் என்ற பேய் உடலில் இருந்து பறந்து விடும் என்பதே இதன் தாத்பர்யம். மேலும், கோபியர் கிருஷ்ணரின் நினைவிலேயே மூழ்கிக்கிடந்தனர்.
கடவுளின் நினைப்பில் மூழ்கிக் கிடப்பது எவ்வகையிலும் தவறாகாது. இப்போதும், இது தொடரத்தான் செய்கிறது. திருமணத்துக்கு முன்னும், பிறகும் நம் பெண்கள் சிவனையோ, திருமாலையோ, முருகனையோ உள்ளன்போ டு வணங்கத்தான் செய்கிறார்கள். அது பக்தி என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறதே தவிர, ஒரு ஆணுடன் கொண்ட உறவாகக் கொள்ளப் படாது. காமம் என்ற உணர்வு கிருஷ்ணனை நினைத்தாலே போய்விடும். காமம் நீங்கிவிட் டால் உலகில் பிறப்புகளே இருக்காதே. மீண்டும் பிறக்கக்கூடாது. கிருஷ்ணனுடன் கலந்திருக்க வேண்டும் என்பதே கோபிகிருஷ ண காதல் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.
கிருஷ்ணர் யமுனையில் அதிகாலையில் குளிக்கும் பெண்களின் பின்னால் செல்வார். ஒரு மரத்தின் மீது அமர்ந்து கொள்வார். கோபி யர், தங்கள் ஆடைகளை முழுமையாகக் களை ந்து விட்டு, ஆற்றில் இறங்கி நீராடினார்கள். கோபியர் கரையில் கழற்றி வைத்திருந்த ஆடையை எடுத்து மரப்பொந்தில் ஒளித்து வைத்தார் கிருஷ்ணர். கரைக்கு வந்த கோபியர் ஆடையைக் காணாமல் தவித்தனர். எப்படி வீட்டுக்குச் செல்வது என தவித்த வேளையில், உங்கள் ஆடைகள் என்னிடம் உள்ளன என மரத்தின் மீதிருந்து குரல் கேட்டது.
கோபியர் நிமிர்ந்து பார்த்தனர். மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த கிருஷ்ணரை கண்டு வெட்கப்பட்டனர். கண்ணா, பெண்கள் குளிக்கும் இடத்தில் உனக்கு என்ன வேலை? போதாக்குறைக்கு எங்கள் ஆடைகளையும் கவர்ந்து கொண்டாய். இப்போது, நாங்கள் எப்படி மேலே வருவது? என்றாள். கிருஷ்ணர் கலகலவென சிரித்தபடியே, நானாகவே இந்து வந்தேன். நீங்கள் என்னை மனதில் நினைத்தீர்கள், என்னைப் பற்றி பாடினீர்கள். என்னையே அடைய வேண்டுமென மனதார வேண்டி னீர்கள். அது எனக்கு கேட்டது வந்தேன் என்றார். இது நிஜம் தானே. கோபிகைகளால் அவருக்கு பதிலளிக்க முடியவில்லை.
இருந்தாலும் உடைகளைப் பெறும் பொருட்டு, அதற்காக, நாங்கள் ஆடைகளை எப்படி மேலே வந்து பெற முடியும். நீயாக கீழே வைத்து விட்டு போய்விடு என்றனர். கோபியரே, ஒரு பெண் கணவனைத்தவிர பிறர் முன்னிலை யில் ஆடையின்றி இருக்கலாகாது. நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென துர்க்கையை வழிபட்டு விரதம் இருந்தீர்கள். உங்கள் கணவனாகிய என் முன்னால் வருவதற்கு என்ன வெட்கம்? வாருங்கள். வந்து பெற்றுக் கொள்ளுங்கள், என்றார். அவர்கள் தயங்கவே, பெண்களே, ஆடையின்றி தண்ணீரில் இறங்குவது குற்றம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் செயலால் வருணன் கோபமடைந்துள்ளான்.
எனவே, நீங்கள் வருணனை நினைத்து மன தார வணங்கி, இனி இவ்வாறு ஆடையின்றி குளிக்கமாட்டோம். எனச் சொல்லி அவனிடம் மன்னிப்பு கேளுங்கள். பிறகு மேலே வந்து ஆடையைப் பெற்றுக் கொள்ளுங்கள், என்றான். இப்படி கிருஷ்ணரின் லீலைகள் தொடர்ந்து கொண்டிருக்க நாரத முனிவர் கம்சனை அழிப்பதற்குரிய காலம் நெருங்கி விட்டதை அறிந்தார். அவர் நேராக கம்சனிடம் சென்றார்.
கம்சா, சவுக்கியமாக இருக்கிறாயா? உன் சவுக்கியம் நீண்டு நீடிக்க வேண்டும் என்ற ஆசையில் நான் இங்கே வந்திருக்கிறேன். ஆனால், நீயோ, உன்னை அழிக்கப்போகும் கிருஷ்ணனும், பலராமனும் பெரியவர்களாக வளர்ந்து விட்டதை அறியாமாலேயே இருக்கி றாய். அவர்களை சீக்கிரம் கொன்றுவிடு. இல்லாவிட்டால், உன் அழிவை யாராலும் தடுக்க இயலாமல் போய்விடும் நீ சுதாரிப்பாக இருக்க வேண்டும் என்பதாலும், உன்மீது நான் அக்கறை கொண்டவன் என்பதாலும் சொல்கிறேன்.
உன்மீது ஏமாற்றிய வசுதேவரையும், நந்தகோ பனையும் விட்டுவிடாதே, என்றார். கம்சனும் அவரது கருத்தை ஆமோதித்து, வேண்டிய ஏற்பாடுகளை உடனடியாகச் செய்வதாகச் சொன்னான். நாரதர் தன் கடமை முடிந்த திருப்தியுடன் சென்றார்.
கம்சன் கிருஷ்ணரைக் கொல்வதற்குரிய ஏற்பாடுகளைத் துவங்கினான். சிவசக்தியான காலபைரவருக்கு மிருகபலி கொடுத்தான். சில யாகங்களையும் செய்தான். கிருஷ்ணர் வளர்ந்து கொண்டிருக்கும் யது வம்சத்தைச் சேர்ந்த அக்ரூரர் என்பவரை அழைத்து, அன்பு நண்பரே, விருந்தாவனத்தில் வசிக்கும் கிருஷ்ணர், பலராமன், வசுதேவர், நந்கோபர், எனது தங்கை தேவகி, எனது தந்தை உக்கிர சேனன், சித்தப்பா தேவகன் ஆகியோரைக் கொல்லப் போகிறேன்.
எனது அரசியல் காரியங்களில், என் தந்தை தலையிடுவதால், அவரையும் கொல்ல வேண்டியுள்ளது. எதிரிகளே இல்லாத நிலை யில் இவ்வுலகை சிரமமின்றி ஆள்வேன். எனக்கு என் மாமனார் ஜராசந்தன், துவிவிதா என்ற குரங்கு அரசன், சம்பரன், நரகாசுரன், பாணாசுரன் என்ற எனது நண்பர்கள் உதவுவர் நீங்களும் உதவ வேண்டும், என்றான்.
அக்ரூரர் அவன் சொல்வதைக் கேட்டு, எம்மாதி ரியான உதவி என்றார். அக்ரூரரே, கிருஷ்ண பலராமர்களை இங்கே ஒரு மல்யுத்தப் போட்டி நடப்பதாகச் சொல்லி, அழைத்து வாருங்கள். அவர்கள் வரும் வழியில் குவலயாபீடம் என்ற யானையை அவிழ்த்து விடுவேன். அது அவர்க ளைக் கொல்லும். ஒருவேளை தப்பிவிட்டால், எனது மல்யுத்த வீரர்கள் கொல்வார்கள், என்றான். அக்ரூரர் கிருஷ்ணரின் பக்தர். அவருக்கு கம்சன் சொன்னது பிடிக்கவில்லை.
இருப்பினும், கம்சனே, உன் நண்பன் என்ற முறையில் சொல்கிறேன். திட்டம் தீட்டுவது மனித அறிவு. அதை வெற்றி பெற செய்பவன் இறைவனே, ஒருவேளை இவ்விஷயத்தில் நீ தோற்றுப்போகலாம். நல்லதைச் சொல்லவே ண்டியது நண்பனின் கடமை என்பதால் சொன்னேன். இருப்பினும், உனக்காக கிருஷ்ணரிடம் சென்று அவரை அழைத்து வருகிறேன், என்றார். சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்…
Leave a Comment